பிரதமர் அலுவலகம்
கேரளாவில் உள்ள ஆரிய வைத்திய சாலை அறக்கட்டளை மருத்துவமனையின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
28 JAN 2026 2:39PM by PIB Chennai
வணக்கம்!
கேரள ஆளுநர் திரு ராஜேந்திர அர்லேகர் அவர்களே, ஆரிய வைத்திய சாலையுடன் தொடர்புடைய அனைத்து பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே,
இன்றைய இந்த சிறந்த சந்தர்ப்பத்தில், உங்கள் அனைவருடனும் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு தருணமாகும். ஆயுர்வேதத்தைப் பாதுகாத்து, முன்னேற்றுவதில் ஆரிய வைத்திய சாலை குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளது. 125 ஆண்டுகால பயணத்தில், இந்த நிறுவனம் ஆயுர்வேதத்தை ஒரு சக்திவாய்ந்த சிகிச்சை முறையாக நிறுவியுள்ளது. இன்றைய இந்த சந்தர்ப்பத்தில், ஆரிய வைத்திய சாலையின் நிறுவனர் வைத்தியரத்னம் பி.எஸ். வாரியரின் பங்களிப்புகளை நான் நினைவு கூர்கிறேன். ஆயுர்வேதத்திற்கான அவரது அணுகுமுறையும், பொது நலனுக்கான அவரது அர்ப்பணிப்பும் இன்றும் நம்மை ஊக்குவிக்கிறது.
நண்பர்களே,
கேரளத்தின் ஆரிய வைத்திய சாலை, பல நூற்றாண்டுகளாக மனிதகுலத்திற்கு சேவை செய்து வரும் இந்திய சிகிச்சைப் பாரம்பரியத்தின் சின்னமாகும். இந்தியாவில், ஆயுர்வேதம் எந்த ஒரு காலகட்டத்திற்கோ அல்லது எந்த ஒரு பகுதிக்கோ மட்டுப்படுத்தப்பட்டு இருக்கவில்லை. ஒவ்வொரு சகாப்தத்திலும், இந்த பழங்கால மருத்துவ முறையானது, வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கும், சமநிலையை உருவாக்குவதற்கும், இயற்கையுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் வழி காட்டியுள்ளது. இன்று, ஆரிய வைத்திய சாலை 600-க்கும் மேற்பட்ட ஆயுர்வேத மருந்துகளை உற்பத்தி செய்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்த நிறுவனத்தின் மருத்துவமனைகள், ஆயுர்வேத முறைகள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன. இதில் உலகின் 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த நோயாளிகள் பயன்பெறுகின்றனர். ஆரிய வைத்திய சாலை அதன் பணி மூலம் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. மக்கள் துன்பத்தில் இருக்கும்போது, நீங்கள் அனைவரும் அவர்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கையாக மாறுகிறீர்கள்.
நண்பர்களே,
ஆரிய வைத்திய சாலையைப் பொறுத்தவரை, சேவை என்பது வெறும் பேச்சு அல்ல.வஇந்த உணர்வு அவர்களின் செயல், அணுகுமுறைகளில் தெரிகிறது. இந்த நிறுவனத்தின் அறக்கட்டளை மருத்துவமனை கடந்த 100 ஆண்டுகளாக தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்கிறது. 100 ஆண்டுகள் என்பது ஒரு சிறிய கால அளவு அல்ல. 100 ஆண்டுகளாக மருத்துவமனையுடன் தொடர்புடைய அனைத்து மக்களின் பங்களிப்பும் இதில் அடங்கும். வைத்தியர்கள், மருத்துவர்கள், செவிலியர் ஊழியர்கள், மருத்துவமனையின் மற்ற அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். அறக்கட்டளை மருத்துவமனையின் இத்தனை ஆண்டு பயணத்தை நிறைவு செய்ததற்காக நீங்கள் அனைவரும் வாழ்த்துகளுக்கு தகுதியானவர்கள். கேரள மக்கள் பல நூற்றாண்டுகளாக உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆயுர்வேத மரபுகளை, நீங்கள் பாதுகாத்து வளர்க்கிறீர்கள்.
நண்பர்களே,
நாட்டில் நீண்ட காலமாக, பழங்கால மருத்துவ முறைகள் தொடர்ந்து குறைவாக காணப்பட்டன. கடந்த 10 முதல் 11 ஆண்டுகளில், இந்த அணுகுமுறையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது சுகாதார சேவைகள் முழுமையான கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றன. ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, சித்தா, யோகா இவை அனைத்தையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்துள்ளோம். இதற்காக, ஆயுஷ் அமைச்சகம் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. நோய்த் தடுப்பு சுகாதாரத்தில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். இந்த சிந்தனையுடன், தேசிய ஆயுஷ் இயக்கம் தொடங்கப்பட்டது. 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுஷ் நல்வாழ்வு மையங்கள் திறக்கப்பட்டன. இந்த மையங்களில், யோகா, தடுப்பு பராமரிப்பு, சமூக சுகாதார சேவைகள் அனைத்தும் வழங்கப்படுகின்றன. நாட்டின் பிற மருத்துவமனைகளையும் ஆயுஷ் சேவைகளுடன் இணைத்தோம். மேலும் ஆயுஷ் மருந்துகளை தொடர்ந்து வழங்குவதில் கவனம் செலுத்தினோம். இதன் நோக்கம் தெளிவாக உள்ளது. இந்தியாவின் பாரம்பரிய மருத்துவம் பற்றிய இந்த அறிவின் நன்மைகள் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்களை சென்றடைகின்றன.
நண்பர்களே,
அரசின் கொள்கைகளின் தாக்கம் ஆயுஷ் துறையில் தெளிவாகத் தெரிகிறது. ஆயுஷ் உற்பத்தித் துறை வேகமாக முன்னேறி விரிவடைந்துள்ளது. இந்திய பாரம்பரிய நல்வாழ்வை உலகிற்கு எடுத்துச் செல்ல, அரசு, ஆயுஷ் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலை நிறுவியுள்ளது. ஆயுஷ் தயாரிப்புகளையும் சேவைகளையும் உலக சந்தைகளில் ஊக்குவிக்க வேண்டும் என்பதே எங்கள் முயற்சி. இதன் மிகவும் நேர்மறையான தாக்கத்தையும் நாம் காண்கிறோம். 2014-ம் ஆண்டில், சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுஷ் மூலிகை பொருட்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. அதேசமயம், தற்போது, 6500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுஷ், மூலிகை பொருட்கள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது நாட்டின் விவசாயிகளுக்கு மிகப் பெரிய நன்மையையும் அளிக்கிறது.
நண்பர்களே,
ஆயுஷ் அடிப்படையிலான மருத்துவ மதிப்பு பயணத்திற்கு இந்தியா இன்று நம்பகமான இடமாக வளர்ந்து வருகிறது. எனவே, ஆயுஷ் விசா போன்ற நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம். இதன் மூலம், வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் ஆயுஷ் சிகிச்சைக்கு சிறந்த வசதிகளைப் பெறுகிறார்கள்.
நண்பர்களே,
ஆயுர்வேதம் போன்ற ஒரு பழங்கால மருத்துவ முறையை ஊக்குவிக்க, அரசு அதை ஒவ்வொரு பெரிய தளத்திலும் பெருமையுடன் முன்வைத்து வருகிறது. பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாடாக இருந்தாலும் சரி, ஜி-20 நாடுகளின் கூட்டமாக இருந்தாலும் சரி, வாய்ப்பு கிடைத்த இடங்களில், நான் ஆயுர்வேதத்தை முழுமையான ஆரோக்கியத்திற்கான ஒரு சிகிச்சை முறையாக முன்வைத்தேன். குஜராத்தின் ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் (WHO) உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையமும் நிறுவப்படுகிறது. ஜாம்நகரில், ஆயுர்வேத கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் செயல்படத் தொடங்கியுள்ளது. ஆயுர்வேத மருந்துகளுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய, கங்கை நதிக்கரையில் மருத்துவ விவசாயமும் ஊக்குவிக்கப்படுகிறது.
நண்பர்களே,
இப்போது நான் நாட்டின் மற்றொரு சாதனையை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக ஒப்பந்தம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்திய பாரம்பரிய மருத்துவ சேவைகளுக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளில், விதிமுறைகள் இல்லாத நாடுகளில், நமது ஆயுஷ் மருத்துவர்கள் இந்தியாவில் பெற்ற தொழில்முறை தகுதிகளின் அடிப்படையில் தங்கள் சேவைகளை வழங்க முடியும். இது ஆயுர்வேதம், யோகாவுடன் தொடர்புடைய நமது இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஒப்பந்தம் ஐரோப்பாவில் ஆயுஷ் நல்வாழ்வு மையங்களை நிறுவுவதற்கும் உதவும். இந்த ஒப்பந்தத்திற்காக ஆயுர்வேத, ஆயுஷ் மருத்துவத்துடன் தொடர்புடைய உங்கள் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன்.
நண்பர்களே,
ஆயுர்வேதம் மூலம், இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக சிகிச்சைப் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், ஆயுர்வேதத்தின் முக்கியத்துவத்தை நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள மக்களுக்கு விளக்க வேண்டியிருப்பது ஒரு துரதிர்ஷ்டமாகும். இதற்கு ஒரு பெரிய காரணம், ஆதார அடிப்படையிலான ஆராய்ச்சி இல்லாததும், ஆராய்ச்சி ஆவணங்கள் இல்லாததும் ஆகும். ஆயுர்வேத முறை அறிவியலின் கொள்கைகளில் சோதிக்கப்படும்போது, மக்களின் நம்பிக்கை இன்னும் வலுவடைகிறது. எனவே, ஆரிய வைத்திய சாலை தொடர்ந்து ஆயுர்வேதத்தை அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையாக சோதித்துப் பார்ப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இது சிஎஸ்ஐஆர், ஐஐடி போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. மருந்து ஆராய்ச்சி, மருத்துவ ஆராய்ச்சி, புற்றுநோய் சிகிச்சை ஆகியவற்றிலும் உங்கள் கவனம் உள்ளது. ஆயுஷ் அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான ஒரு சிறந்த மையத்தை நிறுவுவது இந்த திசையில் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும்.
நண்பர்களே,
மாறிவரும் காலத்திற்கு ஏற்ப ஆயுர்வேதத்தில் நவீன தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு ஆகியவற்றை இப்போது நாம் அதிகரிக்க வேண்டும். நோய்களின் நோய்களைக் கண்டறியவும், பல்வேறு முறைகள் மூலம் சிகிச்சை அளிக்கவும், புதுமையான பலவற்றைச் செய்ய வேண்டும்.
நண்பர்களே,
பாரம்பரியமும் நவீனத்துவமும் ஒன்றாகச் செல்ல முடியும் என்பதையும், சுகாதார சேவை மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கையின் அடிப்படையாக மாற முடியும் என்பதையும் ஆரிய வைத்திய சாலை எடுத்துக் காட்டியுள்ளது. ஆயுர்வேதத்தின் பழைய புரிதலைப் பாதுகாக்கும் அதே வேளையில், இந்த நிறுவனம் நவீன தேவைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. சிகிச்சை ஒழுங்கமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சேவைகள் வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது. இந்த ஊக்கமளிக்கும் பயணத்திற்காக மீண்டும் ஆரிய வைத்திய சாலையை வாழ்த்துகிறேன். வரும் ஆண்டுகளில் இதே அர்ப்பணிப்புடனும் சேவை மனப்பான்மையுடனும் இந்த நிறுவனம் மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்.
மிக்க நன்றி.
வாழ்த்துகள்..
***
(Release ID: 2219561)
AD/PLM/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2230205)
வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam