பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அசாம் மாநிலம் கலியாபூரில் ₹6,950 கோடி மதிப்புள்ள காசிரங்கா உயர்த்தப்பட்ட வழித்தடத் திட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

காசிரங்கா தேசிய பூங்கா, இந்தியாவின் பல்லுயிர் பெருக்கத்தின் விலைமதிப்பற்ற ரத்தினம்: பிரதமர்

இயற்கை பாதுகாக்கப்படும்போது, அதனுடன் வாய்ப்புகள் செழித்து வளர்கின்றன; கடந்த சில ஆண்டுகளில், காசிரங்கா சுற்றுலாவில் நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளது: பிரதமர்

வடகிழக்குப் பகுதி இப்போது தில்லிக்கும் நெருக்கமாக உள்ளது: பிரதமர்

प्रविष्टि तिथि: 18 JAN 2026 12:49PM by PIB Chennai

அசாம் மாநிலம் கலியாபூரில் 6,950 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள காசிரங்கா உயர்த்தப்பட்ட வழித்தடத் திட்டத்திற்கு (தேசிய நெடுஞ்சாலை-715-ன் கலியாபோர்-நுமலிகார் பிரிவின் 4-வழித்தடம்) பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.01.2026) அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, அசாமுக்கு வருகை தருவது எப்போதும் தமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்.  அசாமின் கலியாபோரின் வரலாற்று முக்கியத்துவத்தை பிரதமர் சுட்டிக் காட்டினார். இது காசிரங்கா தேசிய பூங்காவின் நுழைவாயிலாகவும், மேற்கு அசாமுக்கு இணைப்பு மையமாகவும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கலியாபோரிலிருந்துதான் சிறந்த போர்வீரர் லச்சித் போர்புகான் முகலாய படையெடுப்பாளர்களை விரட்டியடித்தார் என்றும், அவரது தலைமையில் அசாம் மக்கள் துணிச்சல், ஒற்றுமை, உறுதி ஆகியவற்றுடன் முகலாய படையெடுப்பாளர்களைத் தோற்கடித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார். இது வெறும் ராணுவ வெற்றி மட்டுமல்ல எனவும், அசாமின் பெருமையின் அடையாளம் என்றும் திரு நரேந்திர மோடி கூறினார்.  இப்பகுதி இப்போது வளர்ச்சிக்கான முக்கிய மையமாக மாறி வருவதில் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

நாடு முழுவதும் வாக்காளர்கள் முன்னேற்றம், பாரம்பரியம் இரண்டிலும் கவனம் செலுத்தி நல்லாட்சியையும் வளர்ச்சியையும் விரும்புகிறார்கள் என்பதை சமீபத்திய தேர்தல் முடிவுகள் காட்டுவதாக பிரதமர் கூறினார்.

இந்தத் தேர்தல்கள் மற்றொரு செய்தியையும் தெரிவிக்கின்றன எனவும் நாடு தொடர்ந்து எதிர்மறை அரசியலை நிராகரித்து வருகிறது என்பதே அந்த செய்தி என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

காசிரங்காவின் அழகை வர்ணித்த பாரத ரத்னா டாக்டர் பூபேன் ஹசாரிகாவின் வார்த்தைகளை பிரதமர் நினைவு கூர்ந்தார். அவரது வரிகள் காசிரங்காவின் மீதான அன்பையும், அசாமிய மக்களின் இயற்கையுடனான பிணைப்பையும் பிரதிபலிப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டார். காசிரங்கா ஒரு தேசிய பூங்கா மட்டுமல்ல, அசாமின் ஆன்மாவும், இந்தியாவின் பல்லுயிர் பெருக்கத்தின் விலைமதிப்பற்ற ரத்தினமும் ஆகும் எனவும் அவர் கூறினார். இது யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

காசிரங்கா, ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களின் தாயகம் என்பதை எடுத்துரைத்த பிரதமர், வெள்ளத்தின் போது வனவிலங்குகள் உயர்ந்த இடங்களைத் தேடி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க வேண்டியிருக்கும் போது எதிர்கொள்ளும் சவால்களை விளக்கினார். வனப்பகுதியைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் அதே வேளையில், சீரான போக்குவரத்தை உறுதி செய்வதே அரசின் முயற்சி என்று அவர் கூறினார். இந்தத் தொலைநோக்குப் பார்வையின் கீழ், கலியாபோரிலிருந்து நுமாலிகர் வரையிலான 90 கிலோமீட்டர் தூர பாதை சுமார் 7,000 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இதில் 35 கிலோமீட்டர் வனவிலங்கு பாதையும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். காண்டாமிருகங்கள், யானைகள், புலிகளின் பாரம்பரிய வழித்தடங்களை மனதில் கொண்டு இதில் வனவிலங்குகள் தடையின்றி செல்ல முடியும் என்று அவர் கூறினார். இந்த பாதை மேற்கு அசாம் - அருணாச்சலப் பிரதேசம் இடையேயான இணைப்பையும் மேம்படுத்தும் என்றும், புதிய ரயில் சேவைகளுடன், மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்த முக்கியமான திட்டங்களுக்கு அசாம் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

இயற்கை பாதுகாக்கப்படும்போது, வாய்ப்புகளும் உருவாகின்றன என்பதைக் குறிப்பிட்ட பிரதமர், சமீபத்திய ஆண்டுகளில் காசிரங்கா சுற்றுலாவில் நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். தங்குமிடங்கள், வழிகாட்டி சேவைகள், போக்குவரத்து, கைவினைப்பொருட்கள், சிறு வணிகங்கள் மூலம், உள்ளூர் இளைஞர்கள் புதிய வருமான ஆதாரங்களைப் பெற்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

2013, 2014-ம் ஆண்டுகளில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டன என்பதை அவர் நினைவு கூர்ந்தார். இது தொடராமல் தங்களது அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தியதாகவும் வனத்துறைக்கு நவீன வளங்களை வழங்கியதாகவும்,  அவர் கூறினார். இதன் விளைவாக 2025-ம் ஆண்டில் காண்டாமிருக வேட்டையாடுதல் தொடர்பான ஒரு சம்பவம் கூட பதிவாகவில்லை என்றும் அவர் என்றும் அவர் எடுத்துரைத்தார்.

நீண்ட காலமாக இயற்கையும் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று எதிரானவை என்று நம்பப்பட்டு வந்த நிலையில், இப்போது பொருளாதாரமும் சூழலியலும் ஒன்றாக முன்னேற முடியும் என்பதை இந்தியா உலகிற்குக் காட்டுகிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். கடந்த பத்து ஆண்டுகளில், காடுகள், மரங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளது என அவர் கூறினார். தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் இயக்கத்தின் கீழ் 260 கோடிக்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். 2014 முதல் புலிகள், யானைகள் சரணாலயங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

ஈரநிலப் பாதுகாப்பு தொடர்பாக இந்தியா தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றி வருவதாகவும், ஆசியாவின் மிகப்பெரிய ராம்சார் கட்டமைப்பாக இந்தியா மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ராம்சார் தளங்களின் எண்ணிக்கையில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ளது என்றும் அவர் கூறினார். பாரம்பரியப் பாதுகாப்பும், இயற்கையைப் பாதுகாப்பும் வளர்ச்சியுடன் எவ்வாறு கைகோர்த்துச் செல்ல முடியும் என்பதை அசாம் உலகிற்குக் காட்டுகிறது என்று பிரதமர் கூறினார்.

வடகிழக்கின் மிகப்பெரிய வலி எப்போதும் தூரம்தான் என அவர் தெரிவித்தார். இதயங்களின் தூரமும் இடங்களின் தூரமும் அடங்கும் என திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.  மத்திய, மாநில அரசுகள், வடகிழக்கின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் தற்போது இந்த உணர்வு மாறியுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். சாலைகள், ரயில்கள், விமானப் பாதைகள், நீர்வழிகள் மூலம் அசாமை இணைக்கும் பணிகள் ஒரே நேரத்தில் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.  வடகிழக்குப் பகுதி தில்லிக்கு நெருக்கமாகவும் உள்ளது என்ற நம்பிக்கையை இத்தகைய போக்குவரத்து இணைப்பு விரிவாக்கம் உருவாக்குகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அசாமின் வளர்ச்சி முழு வடகிழக்குப் பகுதி முன்னேற்றத்திற்கும் புதிய கதவுகளைத் திறந்து வருவதாகவும், கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கைக்கு வழிகாட்டுவதாகவும் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். அரசின் திட்டங்களால் இந்தப் பகுதி புதிய உயரங்களை எட்டு என்று கூறி பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் அசாம் ஆளுநர் திரு லட்சுமண பிரசாத் ஆச்சார்யா, அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர்கள் திரு சர்பானந்த சோனோவால், திரு பபித்ரா மார்கெரிட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.    

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215778&reg=3&lang=1

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2215826) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Nepali , Assamese , Manipuri , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam