பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் தொடங்கி வைத்தார்

இந்தியாவைப் பொறுத்தவரை, பகவான் புத்தரின் புனித நினைவுச்சின்னங்கள் வெறும் கலைப்பொருட்கள் அல்ல; அவை நமது மதிப்பிற்குரிய பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும், நமது நாகரிகத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும்: பிரதமர்

பகவான் புத்தர் காட்டிய ஞானமும் பாதையும் அனைத்து மனிதகுலத்திற்கும் சொந்தமானது: பிரதமர்

பகவான் புத்தர் அனைவருக்கும் சொந்தமானவர், நம் அனைவரையும் ஒன்றிணைக்கிறார்: பிரதமர்

பகவான் புத்தரின் போதனைகள் பாலி மொழியில் உள்ளன, பாலியை பெருவாரியான மக்களுக்கு எடுத்துச் செல்வதே எங்கள் முயற்சி, இதற்காக, பாலிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது: பிரதமர்

प्रविष्टि तिथि: 03 JAN 2026 1:48PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில், "ஒளி மற்றும் தாமரை: விழித்தெழுந்தவரின் நினைவுச்சின்னங்கள்" என்ற தலைப்பில், பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு  நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், நூற்று இருபத்தைந்து ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு, இந்தியாவின் பாரம்பரியம் திரும்பியுள்ளது, இந்தியாவின் மரபு மீண்டும் வந்துள்ளது என்று குறிப்பிட்டார். இன்று முதல் இந்திய மக்கள் புத்தரின் இந்த புனித நினைவுச்சின்னங்களைக் கண்டு அவரது ஆசிகளைப் பெற முடியும் என்று அவர் கூறினார்.  இந்த மங்களகரமான நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து விருந்தினர்களையும் திரு மோடி வரவேற்று வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே, இந்த மங்களகரமான கொண்டாட்டம் மிகவும் ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் தெரிவித்தார்.  புத்தரின் ஆசீர்வாதங்களுடன், 2026-ம் ஆண்டு உலகிற்கு அமைதி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தின் புதிய சகாப்தத்தை உருவாக்கட்டும் என்று அவர் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ள இடம் சிறப்பு வாய்ந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். கிலா ராய் பித்தோராவின் இடம் இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றின் ஒரு நிலம் என்றும், அங்கு கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் ஆட்சியாளர்கள் வலுவான மற்றும் பாதுகாப்பான சுவர்களால் சூழப்பட்ட ஒரு நகரத்தை நிறுவினர் என்றும் அவர் எடுத்துரைத்தார். இன்று அதே வரலாற்று சிறப்புவாய்ந்த நகரத்தில், வரலாற்றின் ஆன்மீக மற்றும் புனிதமான அத்தியாயம் சேர்க்கப்படுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இங்கு வருவதற்கு முன்பு, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்காட்சியைத் தாம் விரிவாகப் பார்வையிட்டதாக திரு. மோடி தெரிவித்தார். புத்த பகவானின் புனிதச் சின்னங்கள் நம்மிடையே இருப்பது அனைவரையும் பாக்கியசாலிகளாக்குகிறது என்று அவர் வலியுறுத்தினார். அவை இந்தியாவிலிருந்து வெளியேறியதும், பின்னர் மீண்டும் திரும்பியதும் இரண்டுமே  ஒரு குறிப்பிடத்தக்க பாடம் என்று அவர் குறிப்பிட்டார். அடிமைத்தனம் என்பது அரசியல் மற்றும் பொருளாதார ரீதியானது மட்டுமல்ல, அது நமது பாரம்பரியத்தையும் அழிக்கிறது என்பதே அந்தப் பாடம் என்று கூறிய திரு. மோடி, புத்த பகவானின் புனிதச் சின்னங்களுக்கும் அதுவே நேர்ந்தது என்றும், அவை அடிமைத்தனக் காலத்தில் எடுத்துச் செல்லப்பட்டு, ஏறக்குறைய நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் நாட்டிற்கு வெளியே இருந்தன என்றும் குறிப்பிட்டார். இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தச் சின்னங்கள் நமது வணக்கத்திற்குரிய தெய்வத்தின் ஒரு பகுதி, நமது நாகரிகத்தின் பிரிக்க முடியாத ஒரு பகுதி என்று பிரதமர் உறுதிபடக் கூறினார்.

“புத்த பகவானின் ஞானமும், அவர் காட்டிய வழியும் முழு மனிதகுலத்திற்கும் சொந்தமானது,” என்று கூறிய பிரதமர், இந்த உணர்வை கடந்த சில மாதங்களாக மீண்டும் மீண்டும் அனுபவித்திருப்பதாக எடுத்துரைத்தார். சமீப மாதங்களில் புத்த பகவானின் புனிதச் சின்னங்கள் எங்கு சென்றாலும், அங்கே நம்பிக்கையும் பக்தியும் அலைகளாகப் பெருக்கெடுத்தன என்று அவர் குறிப்பிட்டார். தாய்லாந்தில், அத்தகைய புனிதச் சின்னங்கள் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்தபோது, ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் நாற்பது லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர் என்று திரு. மோடி தெரிவித்தார். வியட்நாமில், பொதுமக்களின் உணர்வு மிகவும் வலுவாக இருந்ததால், கண்காட்சியின் காலத்தை நீட்டிக்க வேண்டியிருந்தது என்றும், ஒன்பது நகரங்களில் ஏறக்குறைய 1.75 கோடி மக்கள் அந்தச் சின்னங்களுக்கு அஞ்சலி செலுத்தினர் என்றும் அவர் கூறினார். மங்கோலியாவில், ஆயிரக்கணக்கான மக்கள் காண்டன் மடாலயத்திற்கு வெளியே மணிக்கணக்கில் காத்திருந்தனர் என்றும், பலர் புத்தரின் பூமியிலிருந்து வந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்தியப் பிரதிநிதிகளைத் தொட விரும்பினர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ரஷ்யாவின் கல்மிகியா பிராந்தியத்தில், ஒரே வாரத்தில் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் புனிதச் சின்னங்களைக் கண்டனர் என்றும், இது உள்ளூர் மக்கள் தொகையில் பாதியளவுக்கும் அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.  பல்வேறு நாடுகளில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில், சாதாரண குடிமக்கள் முதல் தலைவர்கள் வரை அனைவரும் சமமான மரியாதையுடன் ஒன்றுபட்டிருந்தனர் என்பதைச் சுட்டிக்காட்டிய  பிரதமர் மோடி, புத்தர் அனைவருக்கும் சொந்தமானவர் என்றும், அவர் அனைவரையும் இணைக்கிறார் என்றும் குறிப்பிட்டார். புத்தர் தனது வாழ்க்கையில் ஒரு ஆழமான இடத்தைப் பிடித்திருப்பதால், தான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக கருதுவதாகக் கூறிய பிரதமர், தனது பிறந்த இடமான வத்நகர் புத்த மதக் கல்வியின் முக்கிய மையமாக இருந்ததாகவும், புத்தர் தனது முதல் பிரசங்கம் செய்த சாரநாத் தான் தனது கர்மபூமி என்றும் நினைவு கூர்ந்தார்.

 எங்கு சென்றாலும், புத்தரின் மரபின் சின்னத்தை மீண்டும் கொண்டு வர முயற்சித்ததாக பிரதமர்  குறிப்பிட்டார். சீனா, ஜப்பான், கொரியா மற்றும் மங்கோலியாவில், போதி மரபின் மரக்கன்றுகளை அவர் எடுத்துச் சென்றதை அவர் நினைவுகூர்ந்தார்.

கடந்த பத்து முதல் பதினொரு ஆண்டுகளில், இந்தியாவும் பௌத்த தலங்களை நவீனத்துவத்துடன் இணைக்க முயன்று வருவதாக வலியுறுத்திய திரு மோடி, புத்த கயாவில் ஒரு மாநாட்டு மையம் மற்றும் தியானம் மற்றும் அனுபவ மையம் நிறுவப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

மத்திய அமைச்சர்கள் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத், திரு. கிரண் ரிஜிஜு, திரு. ராம்தாஸ் அத்வாலே, திரு. ராவ் இந்தர்ஜித் சிங், தில்லி துணைநிலை ஆளுநர் திரு. வினய் சக்சேனா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211039&reg=3&lang=1

****

AD/PKV/SH


(रिलीज़ आईडी: 2211115) आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam