பிரதமர் அலுவலகம்
அசாம் மாநிலம் நம்ரூப்பில் உரத் தொழிற்சாலைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
வளர்ச்சியில் அசாம் மாநிலம் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளது: பிரதமர்
விவசாயிகளின் நலனை தமது அரசு முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறது: பிரதமர்
प्रविष्टि तिथि:
21 DEC 2025 2:57PM by PIB Chennai
அசாம் மாநிலம் திப்ரூகரில் உள்ள நம்ரூப்பில், அசாம் பள்ளத்தாக்கு உர- வேதியியல் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும் அமோனியா-யூரியா உரத் தொழிற்சாலைத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.12.2025) அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் உரையாற்றிய திரு நரேந்திர மோடி, இது சாவோலுங் சுகபா, மகாவீர் லச்சித் போர்புகான் போன்ற சிறந்த வீரர்களின் பூமி என்று குறிப்பிட்டார். பீம்பர் டியூரி, ஷாஹீத் குஷால் குன்வர், மோரன் மன்னர் போடோசா, மாலதி மேம், இந்திரா மிரி, ஸ்வர்கதேவ் சர்பானந்த சிங் மற்றும் வீரம் மிக்க சதி சாதனி ஆகியோரின் பங்களிப்புகளையும் அவர் எடுத்துரைத்தார். அசாம் புனித மண்ணுக்கு தலைவணங்குவதாக பிரதமர் கூறினார்.
அசாமுக்கும் முழு வடகிழக்கு பகுதிக்கும் இன்று ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்று கூறிய திரு நரேந்திர மோடி, நம்ரூப், திப்ரூகர் பகுதிகளின் நீண்டகால கனவு நனவாகியுள்ளது என்றும், இப்பகுதியில் தொழில்துறை முன்னேற்றத்தின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார். அசாம் இப்போது வளர்ச்சியின் புதிய வேகத்தை அடைந்துள்ளதாக பிரதமர் கூறினார். அசாம் இன்னும் முன்னோக்கிச் செல்லும் என்றும் அவர் தெரிவித்தார். புதிய தொழில்களின் தொடக்கம், நவீன உள்கட்டமைப்பை உருவாக்குதல், குறைக்கடத்தி உற்பத்தி, விவசாயத்தில் புதிய வாய்ப்புகள், தேயிலைத் தோட்டங்கள், தொழிலாளர்களின் முன்னேற்றம், சுற்றுலாவில் வளர்ந்து வரும் ஆற்றல் ஆகியவற்றை அவர் சுட்டிக் காட்டினார், அசாம் ஒவ்வொரு துறையிலும் முன்னேறி வருவதை எடுத்துரைத்தார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில், நாட்டின் விவசாயிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்பதை எடுத்துரைத்த பிரதமர், விவசாயிகளின் நலன்களை முதன்மையான முன்னுரிமையாகக் கொண்டு தமது அரசு செயல்பட்டு வருவதாகவும், விவசாயிகளுக்கான திட்டங்கள் விரிவுபடுத்தப்படுவதாகவும் கூறினார். விவசாயிகளுக்கு தொடர்ந்து உரங்கள் வழங்கப்படுவதை உறுதி செய்வது அவசியம் என்பதை அவர் எடுத்துரைத்தார். வரும் காலங்களில், புதிய யூரியா ஆலை இந்த விநியோகத்தை உறுதி செய்யும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஆண்டுதோறும் 12 லட்சம் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான உரங்களை உற்பத்தி செய்யும் உரத் திட்டத்தில் சுமார் ₹11,000 கோடி முதலீடு செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். உள்ளூரில் உற்பத்தி நடைபெறுவதால், விநியோகம் வேகமாக இருக்கும் என்றும், போக்குவரத்துச் செலவுகள் குறையும் என்றும் அவர் கூறினார்.
நம்ரூப் பிரிவு ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்பையும் சுயதொழில் வாய்ப்புகளையும் உருவாக்கும் என்பதை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, இந்த ஆலை செயல்பாட்டுக்கு வந்தவுடன், பலருக்கு உள்ளூரில் நிரந்தர வேலை கிடைக்கும் என்று குறிப்பிட்டார். பழுதுபார்ப்பு, விநியோகம், பிற தொடர்புடைய நடவடிக்கைகள் போன்ற பணிகளும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் என்று அவர் மேலும் கூறினார்.
முந்தைய அரசுகளின் அக்கறையின்மையால் நம்ரூப் ஆலையின் பல பிரிவுகள் மூடப்பட்டதாகவும் இதனால் வடகிழக்கு விவசாயிகள் துயரமடைந்தனர் என்றும் அவர் தெரிவித்தார். முந்தைய ஆட்சியால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகளை இப்போதைய, மத்திய, மாநில அரசுகள் தீர்த்து வருவதாக பிரதமர் கூறினார்.
அசாமைப் போலவே, பல மாநிலங்களிலும் உரத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டதாக பிரதமர் குறிப்பிட்டார். யூரியாவுக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்த்தாகவும், விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய நிகழ்வுகளும் நடைபெற்றதாகவும் பிரதமர் நினைவு கூர்ந்தார். தற்போதைய அரசு அவற்றை சரிசெய்து வருவதாகவும் அவர் கூறினார். முந்தைய ஆட்சி காலத்தில் உரத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வந்த நிலையில், தற்போதைய அரசு கோரக்பூர், சிந்திரி, பராவ்னி, ராமகுண்டம் ஆகிய இடங்களில் பல ஆலைகளைத் தொடங்கியுள்ளதையும் அவர் எடுத்துரைத்தார். இந்தத் துறையில் தனியார் துறையும் ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த முயற்சிகளின் விளைவாக, யூரியா உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை நோக்கி நகர்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
2014-ம் ஆண்டில் நாடு 225 லட்சம் மெட்ரிக் டன் யூரியாவை மட்டுமே உற்பத்தி செய்தது எனவும் ஆனால் இன்று உற்பத்தி கிட்டத்தட்ட 306 லட்சம் மெட்ரிக் டன்களை எட்டியுள்ளது என்றும் பிரதமர் எடுத்துரைத்தார். இந்தியாவிற்கு ஆண்டுதோறும் சுமார் 380 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவைப்படுகிறது என்றும், இந்த இடைவெளியைக் குறைக்க அரசு விரைவாகச் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். வெளிநாடுகளில் இருந்து அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்படும் யூரியாவை மானியங்கள் மூலம் குறைந்த விலையில் மத்திய அரசு வழங்குவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
விதை முதல் சந்தை வரை, விவசாயிகளுடன் தங்கள் அரசு ஆதரவாக நிற்கிறது என்று பிரதமர் கூறினார். பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதித் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு கிட்டத்தட்ட ₹4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு மட்டும், விவசாயிகளுக்காக ₹35,000 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று பிரதமர் தெரிவித்தார்.
விவசாயிகளின் ஒவ்வொரு தேவையையும் மனதில் கொண்டு அரசு செயல்பட்டு வருவதாக கூறிய அவர், பாதகமான வானிலை காரணமாக பயிர்கள் சேதமடைந்தால், பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைப்பதை உறுதி செய்வதற்காக கொள்முதல் ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதை எடுத்துரைத்தார். விவசாயிகள் வலுவாக இருக்கும்போதுதான் நாடு முன்னேற முடியும் என்று அரசு உறுதியாக நம்புகிறது என்றும், இதற்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அசாம் ஆளுநர் திரு லட்சுமண பிரசாத் ஆச்சார்யா, அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா, மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207171®=3&lang=1
***
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2207226)
आगंतुक पटल : 10