பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஐபிஎஸ்ஏ தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 23 NOV 2025 2:29PM by PIB Chennai

மாண்புமிகு அதிபர் ராமபோசா அவர்களே,

மாண்புமிகு அதிபர் லுலா அவர்களே,

வணக்கம்!

துடிப்பான மற்றும் அழகு கொஞ்சும் நகரமான ஜொகன்னஸ்பர்கில் நடைபெறும் ஐபிஎஸ்ஏ தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த முன்முயற்சியை தொடங்கியதற்காக ஐபிஎஸ்ஏ-வின் தலைவர் அதிபர் லுலா அவர்களுக்கும், அன்பான விருந்தோம்பல் அளித்த அதிபர் ராமபோசா அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐபிஎஸ்ஏ என்பது, மூன்று நாடுகளின் மன்றம் மட்டுமல்ல; மூன்று கண்டங்கள், மூன்று முக்கிய ஜனநாயக சக்திகள் மற்றும் மூன்று குறிப்பிடத்தக்க பொருளாதாரங்களை இணைக்கும் முக்கிய தளமாகவும் செயல்படுகிறது. நமது பன்முகத்தன்மை, பகிரப்பட்ட மாண்புகள் மற்றும் லட்சியங்களில் வேரூன்றிய ஆழமான மற்றும் உறுதியான கூட்டு முயற்சியாகவும் இது விளங்குகிறது.

நண்பர்களே,

 

இன்றைய ஐபிஎஸ்ஏ தலைவர்களின் கூட்டம், சரியான நேரத்தில் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புவாய்ந்தது. ஆப்பிரிக்க கண்டத்தில் நடைபெறும் இந்த முதலாவது ஜி20 உச்சிமாநாடு, உலகளாவிய தெற்கு நாடுகளின் தலைமையில் தொடர்ச்சியாக நான்கு முறை நடைபெற்று வந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று ஐபிஎஸ்ஏ நாடுகள் ஜி20 உச்சிமாநாட்டிற்குத் தலைமை வகித்துள்ளன. இந்த மூன்று உச்சிமாநாடுகளில், மனிதநேய மேம்பாடு, பன்முக சீர்திருத்தம் மற்றும் நிலையான வளர்ச்சி உள்ளிட்ட பகிரப்பட்ட முன்னுரிமைகளில் ஏராளமான முக்கிய முன்முயற்சிகளை நாம் எடுத்துள்ளோம். இந்த முன்முயற்சிகளை வலுப்படுத்தி அவற்றின் தாக்கத்தை மேம்படுத்துவது, இப்பொழுது நமது கூட்டுப் பொறுப்பாகும். இந்த உணர்வுடன் நமது ஒத்துழைப்பில் சில பரிந்துரைகளை முன்வைக்க விரும்புகிறேன்.

நண்பர்களே,

முதலில், 21-வது நூற்றாண்டின் யதார்த்தங்களை சர்வதேச அமைப்புகள் பிரதிபலிப்பதில்லை என்பதை நாம் அனைவரும் ஒப்புக்கொள்கிறோம். நம்மில் ஒருவர் கூட ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அல்ல. உலகளாவிய அமைப்புகள், இன்றைய உலக நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்பதை இது தெளிவாக உணர்த்துகிறது. எனவே நிறுவன சீர்திருத்தம் என்பது ஒரு தேர்வு அல்ல, மாறாக அது ஒரு கட்டாயம் என்ற ஒருமித்த கருத்தை ஐபிஎஸ்ஏ உலகில் முன் வைக்க வேண்டும்.

அதேபோல பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் இரட்டை நிலைக்கு ஒருபோதும் இடம் அளிக்கக் கூடாது. உலகளாவிய அமைதி மற்றும் செழிப்பைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த, உறுதியான செயல்பாடு அவசியமாகிறது.

 

ஐபிஎஸ்ஏ மூன்று நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் முதலாவது கூட்டம், கடந்த 2021-ஆம் ஆண்டு இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற்றது. பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு இதை நாம் நிறுவனமயமாக்கலாம்.

நண்பர்களே,

மனித குலத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சியை வலுப்படுத்துவதில் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட குறிப்பிடத்தக்க துறைகளில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை ஐபிஎஸ்ஏ வழி நடத்தலாம். இது தொடர்பாக ஐபிஎஸ்ஏ டிஜிட்டல் புதுமை கூட்டமைப்பைஉருவாக்குவது பற்றி நாம் ஆலோசிக்கலாம். இந்தக் கூட்டமைப்பின் மூலம், யுபிஐ, கோவின் போன்ற சுகாதாரத் தளங்கள், சைபர் பாதுகாப்புக் கட்டமைப்புகள் மற்றும் பெண்களால் வழிநடத்தப்படும் தொழில்நுட்ப முன்முயற்சிகள் போன்ற டிஜிட்டல் பொது உள்கட்டமைப்புகள், மூன்று நாடுகளுக்கு இடையே பகிர்ந்து கொள்ளப்படலாம். நமது டிஜிட்டல் பொருளாதாரங்களின் வளர்ச்சியை இது வலுப்படுத்துவதுடன், உலகளாவிய தெற்கிற்கான அளவிடக்கூடிய தீர்வுகளையும் உருவாக்கும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாதுகாப்பான, நம்பகத்தன்மை வாய்ந்த மற்றும் மனிதர்களை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு விதிமுறைகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கலாம். அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவிருக்கும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த உச்சிமாநாட்டில் இதை அறிமுகப்படுத்தலாம்.

நண்பர்களே,

நிலையான வளர்ச்சிக்கு, ஒருவரது மேம்பாட்டு முயற்சிகளுக்கு மற்றொருவர் ஆதரவளிப்பதுடன், உலக நாடுகளுக்கு முன்மாதிரியாகவும் ஐபிஎஸ்ஏ செயல்படலாம். சிறுதானியங்களின் ஊக்குவிப்பு, இயற்கை வேளாண்மை, பேரிடர் நெகிழ்தன்மை மற்றும் பசுமை எரிசக்தியாக இருந்தாலும், பாரம்பரிய மருத்துவம் மற்றும் சுகாதார பாதுகாப்பாக இருந்தாலும், பல்வேறு துறைகளில் நமது ஆற்றல் சக்திகளை ஒன்றிணைப்பதன் மூலம் உலகளாவிய நன்மைக்கு கணிசமாக ஆதரவு அளிக்கலாம்.

இந்த தொலைநோக்குப் பார்வையுடன் தான் ஐபிஎஸ்ஏ நிதியம் நிர்மாணிக்கப்பட்டது. இதன் உதவியால், சுமார் 40 நாடுகளில் ஏறத்தாழ 50 திட்டங்களை நாம் செயல்படுத்தி இருக்கிறோம். கல்வி மற்றும் சுகாதாரம் முதல் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் சூரிய சக்தி திட்டங்கள் வரையிலான இந்த முன்முயற்சிகள், உள்ளூர் மக்களின் தேவைகளின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒத்துழைப்பு உணர்வை மேலும் வலுப்படுத்துவதற்காக, பருவநிலை நெகிழ்தன்மையுடன் கூடிய வேளாண்மைக்கான ஐபிஎஸ்ஏ நிதியத்தை  அறிமுகப்படுத்துவது பற்றி நாம் ஆலோசிக்கலாம்.

நண்பர்களே,

இன்றைய உலகம் பல்வேறு விஷயங்களில் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் மனிதத்துவத்தின் முக்கிய செய்தியை ஐபிஎஸ்ஏ விடுக்கலாம். மூன்று ஜனநாயக நாடுகளாக, இது நமது பொறுப்பு மற்றும் வலிமையாகும்.

மிக்க நன்றி.

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

 

***

(Release IID: 2193133)

AD/BR/RK


(रिलीज़ आईडी: 2193394) आगंतुक पटल : 46
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Gujarati , Urdu , Marathi , Assamese , Bengali , Manipuri , Punjabi , Odia , Telugu , Kannada , Malayalam