பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மும்பையில், மகாராஷ்டிராவில் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 08 OCT 2025 6:32PM by PIB Chennai

மகாராஷ்டிரா ஆளுநர், திரு ஆச்சார்யா தேவ்ரத் அவர்களே, முதலமைச்சர் திரு தேவேந்திர பட்நாவிஸ் அவர்களே, மத்திய அமைச்சரவையில் என்னுடன் இணைந்து பணியாற்றும் அமைச்சர்கள்  திரு ராம்தாஸ் அத்வாலே அவர்களே, திரு கே.ஆர். நாயுடு அவர்களே மற்றும் திரு முரளிதர் மோஹல் அவர்களே, மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர்கள் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, திரு அஜித் பவார் அவர்களே, மற்ற அமைச்சர்கள், இந்தியாவுக்கான ஜப்பானின் தூதர் திரு கெய்இச்சி ஓனோ அவர்களே, மற்றும் சகோதர சகோதரிகளே!

விஜயதசமி கடந்துவிட்டது, கோஜகிரி பௌர்ணமி முடிந்துவிட்டது, இப்போது, பத்து நாட்களில், நாம் தீபாவளியைக் கொண்டாடப் போகிறோம். இந்த பண்டிகைகளுக்கான எனது அன்பான வாழ்த்துகளை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று மும்பைக்கு ஒரு நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது. மும்பைக்கு இப்போது அதன் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் கிடைத்துள்ளது. இந்த விமான நிலையம் இப்பகுதியை ஆசியாவின் மிகப்பெரிய இணைப்பு மையங்களில் ஒன்றாக நிலைநிறுத்துவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கப் போகிறது. இன்று, மும்பைக்கு சுரங்க மெட்ரோவும் கிடைத்துள்ளது. இது மும்பையில் பயணத்தை மிகவும் எளிதாக்கி மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தும். இந்த சுரங்க மெட்ரோ வளர்ந்து வரும் பாரதத்தின் உயிரோட்டமான அடையாளமாகும். மும்பை போன்ற பரபரப்பான நகரத்தில், அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில் இந்த அற்புதமான மெட்ரோ நிலத்தடியில் கட்டப்பட்டுள்ளது. இதன் கட்டுமானத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்கள் மற்றும் பொறியாளர்களையும் நான் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

இது நாட்டின் இளைஞர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளின் காலகட்டமாகும். சில நாட்களுக்கு முன்புதான், நாடு முழுவதும் உள்ள பல ஐடிஐ-க்களை தொழில்துறையுடன் இணைக்க 60,000 கோடி ரூபாய் மதிப்பிலான பிரதமரின் சேது திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, மகாராஷ்டிரா அரசும் நூற்றுக்கணக்கான ஐடிஐக்கள் மற்றும் தொழில்நுட்பப் பள்ளிகளில் புதிய திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இனிமேல், மாணவர்கள் இந்த திட்டங்களின் மூலம் ட்ரோன்கள், ரோபோ தொழில்நுட்பம், மின்சார வாகனங்கள், சூரிய ஆற்றல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் பயிற்சி பெறுவார்கள். மகாராஷ்டிராவின் இளைஞர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்த முக்கியமான தருணத்தில், மகாராஷ்டிராவின் பெருமைமிக்க மகனும் மக்கள் தலைவருமான மறைந்த டி பி பாட்டீல் அவர்களையும் நான் நினைவுகூருகிறேன். சமூகம் மற்றும் விவசாயிகளுக்கான அவரது அர்ப்பணிப்பும் சேவையும் நம் அனைவருக்கும் உத்வேகமளிக்கிறது. அவரது வாழ்க்கை சமூக நலனுக்காக உழைப்பவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும்.

நண்பர்களே,

இன்று, நாடு முழுவதும் 'வளர்ச்சியடைந்த இந்தியா'  என்ற உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணித்துள்ளது.' வளர்ச்சியடைந்த இந்தியா என்றால் 'விரைவு' ‘முன்னேற்றம்' இவ்விரண்டும் உள்ள நாடு என்று பொருள், பொது நலன் முதன்மை முன்னுரிமையாக இருக்கும் ஒரு நாடு, அரசின் திட்டங்கள் மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் நாடு. கடந்த 11 ஆண்டுகளின் பயணத்தைத் திரும்பிப் பார்த்தால்நாட்டின்  ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இந்த உணர்வுடனேயே வேலைகள் மிக வேகமாக முன்னேறி வந்திருப்பதை நீங்கள் காண்பீர்கள். வந்டே பாரத் அதிவேக ரயில்கள் தண்டவாளங்களில் ஓடும்போதும், புல்லட் ரயில் திட்டங்கள் வேகம் பெறும்போதும், அகலமான நெடுஞ்சாலைகளும் விரைவுச் சாலைகளும் புதிய நகரங்களை இணைக்கும்போதும், மலைகளைக் கடந்து நீண்ட சுரங்கங்கள் கட்டப்படும்போதும், மேலும் கடலின் இரு கரைகளை இணைக்கும் மாட்சிமை மிக்க கடல் பாலங்கள் அமையும்போதும், நாம் பாரதத்தின் 'விரைவு' மற்றும் 'முன்னேற்றம்' ஆகிய இரண்டையும் நேரில் பார்க்கிறோம். இந்த முன்னேற்றம் பாரதத்தின் இளைஞர்களின் கனவுகளுக்கு புதிய சிறகுகளை வழங்குகிறது.

நண்பர்களே,

இன்றைய இந்த நிகழ்வும் இதே பயணத்தைத் தொடர்கிறது. நவி மும்பை சர்வதேச விமான நிலையம் உண்மையிலேயே  வளர்ச்சியடைந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கும் திட்டமாகும். இது சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மண்ணில் கட்டப்பட்டுள்ளது, மேலும் இதன் வடிவமைப்பு தாமரை மலரை ஒத்திருக்கிறது, அதாவது 'சம்ஸ்கிருதி' (பண்பாடு) மற்றும் 'சம்ருத்தி' (செழிப்பு) ஆகியவற்றின் துடிப்பான அடையாளமாகும். இந்தப் புதிய விமான நிலையத்தின் மூலம், மகாராஷ்டிராவின் விவசாயிகள் இப்போது ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள பெரும் விற்பனை மையங்களுடன் இணைக்கப்படுவார்கள். இதன் பொருள் விவசாயிகளின் விளைபொருட்களான பழங்கள், காய்கறிகள், மலர்கள் மற்றும் மீனவர்களின் மீன் பிடிப்பு உலகச் சந்தைகளை மிக வேகமாக அடையும். இந்த விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில்களுக்கான ஏற்றுமதி செலவுகளையும் குறைக்கும், மேலும் அதிக முதலீடுகளை ஈர்க்கும், மற்றும் புதிய நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை உருவாக்கும். இந்த விமான நிலையத்திற்காக மகாராஷ்டிரா மற்றும் மும்பை மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

நண்பர்களே,

கனவுகளை நிறைவேற்ற உறுதிப்பாடு இருக்கும்போது, விரைவான வளர்ச்சியின் பலன்கள் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைய வேண்டும் என்ற வலுவான விருப்பம் இருக்கும்போது, முடிவுகள் இயல்பாகவே பின்தொடர்கின்றன. நமது விமான போக்குவரத்துத் துறையும் அதனுடன் தொடர்புடைய தொழில்களும் இந்த முன்னேற்றத்திற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டாகும். 2014-ம் ஆண்டு நாடு எனக்கு சேவை செய்யும் வாய்ப்பை வழங்கியபோதுகாலணி அணிந்தவர் கூட விமானப் பயணத்தை மேற்கொள்ள முடியும் என்பதே எனது கனவு என்று நான் கூறியிருந்தேன் என்பதை நீங்கள் நினைவுகூறலாம். இந்தக் கனவை நனவாக்க, நாடு முழுவதும் புதிய விமான நிலையங்களைக் கட்டுவது அத்தியாவசியமாக இருந்தது. எங்கள் அரசு இந்த பணியில் தீவிரமாக செயல்படத் தொடங்கியது. கடந்த 11 ஆண்டுகளில், புதிய விமான நிலையங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உருவாகி வந்துள்ளன. 2014-ம் ஆண்டில், 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. இன்று, பாரதத்தில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 160-ஐ தாண்டிவிட்டது.

நண்பர்களே,

சிறு நகரங்களில் விமான நிலையங்கள் கட்டப்படும்போது, அங்குள்ள மக்களுக்கு விமானப் பயணத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கின்றன. மேலும் அவர்களுக்கு விமானப் பயணத்தை மலிவு விலையில் கிடைக்கச் செய்ய, நாங்கள் உடான் திட்டத்தை தொடங்கினோம், இதனால் மக்கள் குறைந்த செலவில் விமானத்தில் பயணிக்க முடியும். உடான் திட்டத்தின் காரணமாக, கடந்த தசாப்தத்தில் லட்சக்கணக்கான இந்தியர்கள் தங்கள் வாழ்நாளில் முதல் முறையாக விமானப் பயணத்தை மேற்கொண்டு தங்கள் கனவுகளை நிறைவேற்றியுள்ளனர்.

நண்பர்களே,

புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டதும் உடான் திட்டத்தின் வெற்றியும், மக்களுக்கு மிகப்பெரிய வசதியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து சந்தையாக மாற்றியுள்ளது. இப்போது, நமது விமான நிறுவனங்கள் தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன. மேலும் விமான உற்பத்தி நிறுவனங்களுக்கு தற்போது நாட்டிலிருந்து சுமார் 1,000 புதிய விமானங்களுக்கான கொள்முதல் ஆணைகள் உள்ளன என்பதை அறிந்து உலகம் முழுவதும் உள்ளவர்கள் வியப்படைகிறார்கள். இந்த வளர்ச்சி விமானிகள், கேபின் குழுவினர், பொறியாளர்கள் மற்றும் தரைப் பணியாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

நண்பர்களே,

விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புக்கான தேவையும் அதிகரிக்கிறது. இதற்காக, பாரதத்திலேயே புதிய பராமரிப்பு, பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் (எம்ஆர்ஓ) வசதிகளை நாங்கள் அமைத்து வருகிறோம். இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் பாரதம் ஒரு முக்கிய உலகளாவிய எம்ஆர்ஓ மையமாக மாறுவதே எங்கள் இலக்காகும். இதுவும் நமது இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

நண்பர்களே,

இன்று  உலகிலேயே  மிக அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களைக் கொண்ட நாடாக உள்ள இந்தியாவின் வலிமை இளையோரின் கைகளில் உள்ளது. எங்கள் அரசின் ஒவ்வொரு கொள்கையும் இளைஞர்களுக்கு அதிகபட்ச வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. உள்கட்டமைப்பில் அதிக முதலீடு இருக்கும்போது, வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. 76,000 கோடி ரூபாய் முதலீட்டுடன் வதாவன் போன்ற துறைமுகம் உருவாக்கப்படும்போது, அப்போது வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. வர்த்தகம் வளரும்போதும், தளவாடத் துறை வேகம் பெறும்போதும், எண்ணற்ற வேலைவாய்ப்புகள் எழுகின்றன.

சகோதர சகோதரிகளே,

தேசியக் கொள்கையே அரசியலின் அடித்தளமாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் வளர்க்கப்பட்டுள்ளோம். எங்களைப் பொறுத்தவரை, உள்கட்டமைப்பில் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் நமது குடிமக்களின் வசதியையும் திறனையும் மேம்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும். ஆனால் மறுபுறம், மக்கள் நலனைவிட தங்கள் சொந்த அதிகாரத்தையும் வசதியையும் முதன்மைப்படுத்தும் ஒரு அரசியல் நாட்டில் எப்போதும் இருந்து வந்துள்ளது. வளர்ச்சித் திட்டங்களில் தடைகளை உருவாக்குபவர்கள், ஊழல் மற்றும் மோசடிகள் மூலம் முன்னேற்றத்தை தடம் புரட்டியவர்களின் அரசியலால் நாடு பல ஆண்டுகளாக சேதத்தை  கண்டது.

நண்பர்களே,

இன்று திறக்கப்பட்டுள்ள மெட்ரோ பாதையும் ஒரு காலத்தில் முன்னேற்றத்தைத் தடுத்தவர்களின் செயல்களை நமக்கு நினைவூட்டுகிறது. அதன் அடிக்கல் நாட்டு விழாவில் நான் கலந்து கொண்டபோது, மும்பையில் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்கள் தாங்கள் தினசரி சந்திக்கும் போக்குவரத்து பிரச்சனைகள் விரைவில் எளிதாகிவிடும் என்ற நம்பிக்கைக் கொண்டிருந்தனர் என்பதை நான் நினைவில் கொள்கிறேன். ஆனால் பின்னர், ஒரு வேறுபட்ட அரசு சிறிது காலத்திற்கு அதிகாரத்திற்கு வந்தது மற்றும் அவர்கள் முழு திட்டத்தையும் நிறுத்தி வைத்தனர். அவர்கள் அதிகாரத்தைப் பெற்றனர், ஆனால் நாடு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான இழப்புகளை சந்தித்தது, மேலும் மக்கள் பல ஆண்டுகள் சிரமங்களை அனுபவித்தனர். இப்போது, இந்த மெட்ரோ பாதை நிறைவடைந்துள்ளதால், முன்னர் இரண்டு முதல் இரண்டரை மணி நேரப்  பயணம் இப்போது வெறும் 30 முதல் 40 நிமிடங்களில் முடிந்துவிடும். மும்பை போன்ற நகரத்தில், ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியம், மும்பைவாசிகளுக்கு இந்த வசதியை மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு மறுத்தது ஒரு பெரும் அநீதியைத் தவிர வேறொன்றுமில்லை.

நண்பர்களே,

கடந்த 11 ஆண்டுகளாக, குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதிலும், வாழ்க்கை வசதியை மேம்படுத்துவதிலும் எங்கள் கவனம் செலுத்தப்பட்டு வந்துள்ளது. அதனால்தான் ரயில், சாலைகள், விமான நிலையங்கள், மெட்ரோக்கள் மற்றும் மின்சார பேருந்துகள் என அனைத்து வகையான உள்கட்டமைப்பிலும் முன்னோடியில்லாத முதலீடு செய்யப்பட்டுள்ளது. அடல் பாலம் மற்றும் கடலோர சாலை போன்ற திட்டங்கள் கட்டப்பட்டுள்ளன.

நண்பர்களே,

அனைத்து போக்குவரத்து முறைகளையும் ஒன்றோடொன்று ஒருங்கிணைப்பதற்கான பணியிலும் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். தடையற்ற பயணத்தை உறுதிப்படுத்துவதே எங்கள் முயற்சியாகும், இதனால் மக்கள் ஒரு போக்குவரத்து முறையிலிருந்து மற்றொன்றுக்கு மாறும்போது சிரமப்பட வேண்டியதில்லை. இன்று, நாடு "ஒரு நாடு, ஒரு இயக்கம்" என்ற பார்வையை நோக்கி நகர்ந்து வருகிறது. மும்பை ஒன் செயலி இந்த திசையில் மற்றொரு படியாகும். இப்போது, மும்பை மக்கள் டிக்கெட்டுகளுக்காக நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டியதில்லை. மும்பை ஒன் செயலி மூலம், நீங்கள் ஒருமுறை டிக்கெட் வாங்கலாம் மற்றும் அதே டிக்கெட்டைப் பயன்படுத்தி உள்ளூர் ரயில்கள், பேருந்துகள், மெட்ரோக்கள் அல்லது டாக்சிகளில் பயணிக்கலாம்.

நண்பர்களே,

மும்பை, பாரதத்தின் நிதி தலைநகரம் மட்டுமல்ல, அதன் மிகவும் துடிப்பான நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது. அதனால்தான், பயங்கரவாதிகள் 2008-ம் ஆண்டு ஒரு பெரிய தாக்குதலுக்கு மும்பையைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு பலவீனத்தின் செய்தியை, பயங்கரவாதத்திற்கு முன் சரணடைதலின் செய்தியை அனுப்பியது. மிக சமீபத்தில், நாட்டின் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர், ஒரு நேர்காணலில் ஒரு பெரிய தகவலை வெளியிட்டார். மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தானைத் தாக்க நமது ஆயுதப் படைகள் தயாராக இருந்ததாக அவர் கூறியுள்ளார். அந்த நேரத்தில் நாடு முழுவதும் அதையே விரும்பியது. ஆனால் அந்த காங்கிரஸ் தலைவரின் கூற்றுப்படி, மற்றொரு நாட்டின் அழுத்தம் காரணமாக அப்போதைய காங்கிரஸ் அரசு பாரதத்தின் படைகளை பாகிஸ்தானைத் தாக்குவதிலிருந்து தடுத்தது. வெளிநாட்டு அழுத்தத்தின் கீழ் யார் அந்த முடிவை எடுத்தார்கள் மற்றும் யார் மும்பை மற்றும் நாட்டின் உணர்வுகளுடன் விளையாடினார்கள் என்பதை காங்கிரஸ் நமக்குச் சொல்ல வேண்டும். நாட்டுக்கு அறிந்து கொள்ளும் உரிமை உண்டு. காங்கிரஸின் இந்த பலவீனம் பயங்கரவாதிகளை பலப்படுத்தியது மற்றும் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தியது.

நண்பர்களே,

எங்களைப் பொறுத்தவரை, நாட்டின் மற்றும் அதன் மக்களின் பாதுகாப்பைவிட எதுவும் மேலானதல்ல. இன்றைய பாரதம் பொருத்தமான பதிலடியை வழங்குகிறது. இன்றைய பாரதம் எதிரியை அவர்களின் சொந்த எல்லைக்குள்ளேயே தாக்குகிறது. ஆபரேஷன் சிந்தூரின்போது உலகம் இதை பார்த்தது, மற்றும் பெருமை கொண்டது.

நண்பர்களே,

ஏழைகள், புதிய நடுத்தர வர்க்கம் அல்லது நடுத்தர வர்க்கத்தில், உள்ளவர்களுக்கு அதிகாரமளித்தல் இன்றைய தேசிய முன்னுரிமையாகும். இந்த குடும்பங்களுக்கு வசதியும் மரியாதையும் கிடைக்கும்போது, அவர்களின் திறன் அதிகரிக்கிறது. வலுவான குடிமக்கள் நாட்டை வலுவாக்குகின்றனர். அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மற்றும் விலைகளில் வீழ்ச்சி மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்துள்ளது. சந்தை புள்ளிவிவரங்கள் இந்த நவராத்திரியில் பல ஆண்டுகளின் விற்பனை சாதனைகள் முறியடிக்கப்பட்டதைக் காட்டுகின்றன. சாதனை எண்ணிக்கையிலான மக்கள் ஸ்கூட்டர்கள், பைக்குகள், டிவிகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சலவை இயந்திரங்களை வாங்கி வருகிறார்கள்.

நண்பர்களே,

மக்களின் வாழ்க்கையை சிறப்பாக்கும் மற்றும் நாட்டை வலுப்படுத்தும் ஒவ்வொரு நடவடிக்கையையும் எங்கள் அரசு தொடர்ந்து எடுத்து வரும். ஆனால் உங்களிடம் எனக்கு ஒரு வேண்டுகோள் உள்ளது. சுதேசியை (உள்நாட்டு தயாரிப்புகளை) தழுவுங்கள். பெருமையுடன் சொல்லுங்கள்: "இது சுதேசி!" இது ஒவ்வொரு வீட்டின், ஒவ்வொரு சந்தையின் மந்திரமாக இருக்கட்டும். ஒவ்வொரு குடிமகனும் இந்திய தயாரிப்பு ஆடைகள், காலணிகளை வாங்கினால், வீட்டிற்கு சுதேசி பொருட்களைக் கொண்டு வந்தால், பரிசுகள் அளிக்கும்போது சுதேசி தயாரிப்புகளைத் தேர்வு செய்தால், அப்போது நாட்டின் பணம் நாட்டிற்குள்ளேயே இருக்கும். இது இந்தியத் தொழிலாளர்களுக்கு வேலையையும் இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கும். நாடு முழுவதும் சுதேசியை ஏற்றுக்கொள்ளும்போது, பாரதத்தின் பலம் எவ்வளவு பெரிய அளவில் பெருகும் என்று கற்பனை செய்து பாருங்கள்!

நண்பர்களே,

மகாராஷ்டிரா எப்போதுமே நாட்டின் வளர்ச்சியை முன்னெடுப்பதில் முன்னணியில் இருந்து வந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி இரட்டை என்ஜீன் அரசு மகாராஷ்டிராவின் ஒவ்வொரு நகரத்தின், ஒவ்வொரு கிராமத்தின் பலத்தை மேம்படுத்த தொடர்ந்து அயராது உழைத்துக் கொண்டே இருக்கும். மீண்டும் ஒருமுறை, இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், எதிர்காலத்திற்கான எனது சிறந்த வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன். இப்போது, என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள். பாரத் மாதா கி ஜெய்! உங்கள் இரண்டு கைகளையும் உயர்த்தி இந்த வெற்றியைக் கொண்டாடுங்கள்!

பாரத் மாதா கி ஜெய்!

பாரத் மாதா கி ஜெய்!

மிக்க நன்றி.

***

(Release ID: 2176443)

SS/VK/KPG/KR


(Release ID: 2188633) Visitor Counter : 9