பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்ட் மாநிலம் உருவானதன் வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

ரூ.8140 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்

தேவபூமியான உத்தராகண்ட் இந்தியாவின் ஆன்மீக இதயத்துடிப்பாக உள்ளது: பிரதமர்

Posted On: 09 NOV 2025 2:54PM by PIB Chennai

உத்தராகண்ட் மாநிலம் உருவானதன் வெள்ளி விழா கொண்டாட்டம் டேராடூனில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் போது, ​​பிரதமர் ரூ.8140 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடிதேவபூமியான உத்தராகண்ட் மக்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

நீண்ட, அர்ப்பணிப்பு மிக்க போராட்டத்தின் விளைவாக இதே  நவம்பர் 9-ம் தேதி உத்தராகண்ட் தனி மாநிலமாக உருவானது என்றும், இந்த நாள் நம் அனைவருக்கும் பெருமையை ஏற்படுத்துகிறது என்றும் பிரதமர் கூறினார். 25 ஆண்டுகளுக்கு முன்பு திரு அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசில், உத்தராகண்ட் மக்களின் நீண்ட காலக் கனவு நனவானது என்று அவர் எடுத்துரைத்தார். கடந்த 25 ஆண்டுகால பயணத்தை நினைவுகூர்ந்த திரு நரேந்திர மோடி, உத்தராகண்ட் இப்போது பெரிய உயரங்களை எட்டியுள்ளது என கூறினார். இதைப் பார்த்து இந்த அழகான மாநிலத்தை உருவாக்குவதற்காக ஒரு காலத்தில் பாடுபட்ட ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

உத்தராகண்டின் திறன்களை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள அரசுகள் உறுதிபூண்டுள்ளன என்று திரு நரேந்திர மோடி கூறினார். உத்தராகண்ட் மாநிலத்துடனான தமது ஆழமான பிணைப்பைப் பகிர்ந்து கொண்ட திரு நரேந்திர மோடி, இந்தப் பகுதியில் தாம் மேற்கொண்ட ஆன்மீகப் பயணங்களின் போது, ​​மலைகளில் வசிக்கும் மக்களால் உத்வேகம் பெற்றதாக குறிப்பிட்டார். இந்த மாநிலம் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், இது உத்தராகண்டின் எழுச்சியையும் முன்னேற்றத்தையும் வரையறுக்கும் சகாப்தம் என்று அவர் கூறினார்.

25 ஆண்டுகளுக்கு முன்பு, உத்தராகண்ட் புதிதாக உருவாக்கப்பட்டபோது ​​இருந்த சவால்கள் மிகப்பெரியவை என்று நினைவு கூர்ந்த திரு நரேந்திர மோடி, நிதி ஒதுக்கீடு குறைவாக இருந்தது என்றும் வருமான ஆதாரங்கள் குறைவாக இருந்தன என்றும் கூறினார். பெரும்பாலான தேவைகள் மத்திய உதவி மூலம் பூர்த்தி செய்யப்பட்டன என்று அவர் கூறினார். இப்போது நிலை முற்றிலும் மாறிவிட்டது என்று அவர் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பு, கல்வி, தொழில், சுற்றுலா, சுகாதாரம், மின்சாரம், கிராமப்புற மேம்பாடு போன்ற துறைகளில், உத்தராகண்டின் வெற்றி உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது என்று அவர் கூறினார். 25 ஆண்டுகளுக்கு முன்பு, உத்தராகண்டின் நிதி நிலை அறிக்கை ரூ.4,000 கோடியாக மட்டுமே இருந்தது எனவும், அது இப்போது ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்தக் காலகட்டத்தில், மாநிலத்தில் மின் உற்பத்தி நான்கு மடங்கு அதிகரித்துள்ளது எனவும், சாலைகளின் நீளம் இரட்டிப்பாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். முன்பு, ஆறு மாதங்களில் 4,000 விமானப் பயணிகள் மட்டுமே இங்கு வந்தனர் எனவும் ஆனால் இப்போது, ஒரே நாளில் 4,000-க்கும் மேற்பட்ட பயணிகள் வருவதாகவும் அவர் கூறினார்.

கடந்த 25 ஆண்டுகளில் உத்தராகண்டில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை பத்து மடங்குக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதைப் பிரதமர் சுட்டிக் காட்டினார். இம்மாநிலத்தில் முன்பு ஒரே ஒரு மருத்துவக் கல்லூரி மட்டுமே இருந்தது எனவும் இப்போது பத்து மருத்துவக் கல்லூரிகள் உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். அனைத்து பரிமாணங்களிலும் உத்தராகண்ட் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்இந்த மாற்றத்திற்கு உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரது கூட்டு உறுதிப்பாடுதான் காரணம் என்று அவர் கூறினார்.

உத்தராகண்டின் வளர்ச்சிப் பயணத்தை விரைவுபடுத்துவதற்காக இன்று பல திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக திரு நரேந்திர மோடி கூறினார். கல்வி, சுகாதாரம், சுற்றுலா, விளையாட்டு தொடர்பான இந்தத் திட்டங்கள் இந்தப் பகுதியில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார். டேராடூன், ஹல்த்வானி பகுதிகளின் குடிநீர் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் ஜம்ரானி, சாங் ஆகிய அணைத் திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை அவர் எடுத்துரைத்தார். இந்தத் திட்டங்களில் ரூ.8,000 கோடிக்கும் மேல் செலவிடப்படும் எனவும் அவர் கூறினார்.

தேவபூமியான உத்தராகண்ட் இந்தியாவின் ஆன்மீக வாழ்வின் இதயத்துடிப்பு என்று அவர் கூறினார். கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத், ஜாகேஷ்வர், ஆதி கைலாஷ் ஆகியவை நமது நம்பிக்கையை அடையாளப்படுத்தும் புனித யாத்திரைத் தலங்களாக உள்ளன என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். ஒவ்வொரு ஆண்டும், லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த புனித தலங்களுக்கு பயணங்களை மேற்கொள்கின்றனர் என்றும் இது பக்தியை அதிகரிப்பதோடு, உத்தராகண்டின் பொருளாதாரத்தில் புதிய ஆற்றலையும் வழங்குகிறது எனவும் அவர் கூறினார்.

மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து இணைப்பு, உத்தராகண்ட் மாநிலத்தின் வளர்ச்சியை அதிகரிக்கிறது என்பதை எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, தற்போது மாநிலத்தில் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான போக்குவரத்து இணைப்புத் திட்டங்கள் நடைபெற்று வருவதாகக் கூறினார். இந்தத் திட்டங்கள் உத்தராகண்டின் வளர்ச்சியை துரிதப்படுத்தும் என அவர் தெரிவித்தார்.

கடந்த 25 ஆண்டுகளில் உத்தராகண்ட் ஒரு நீண்ட முன்னேற்றப் பயணத்தை கடந்து வந்துள்ளது என்பதை பிரதமர் நினைவு கூர்ந்தார். எதிர்கால இலக்குகள் குறித்து சிந்திக்க இந்த நவம்பர் 9-ம் தேதியை விட சிறந்த நாள் இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

உத்தராகண்டின் உண்மையான அடையாளம் அதன் ஆன்மீக வலிமையில் உள்ளது என்பதை மீண்டும் எடுத்துரைத்த திரு நரேந்திர மோடி, வரும் ஆண்டுகளில் இம்மாநிலம் "உலகின் ஆன்மீக மையமாக" தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்று கூறினார். மாநிலத்தில் உள்ள கோயில்கள், ஆசிரமங்கள், தியான மையங்கள், யோகா மையங்கள் ஆகியவற்றை உலகளாவிய கட்டமைப்புடன் இணைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

எல்லைப் பகுதிகளில் துடிப்பான கிராமங்கள் திட்டத்திற்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், உத்தராகண்டில் உள்ள ஒவ்வொரு துடிப்பான கிராமமும் ஒரு சிறிய சுற்றுலா மையமாக மாற வேண்டும் என்று கூறினார். உத்தராகண்ட் தற்போது ஒரு திரைப்பட படப்பிடிப்பு மையமாக வளர்ந்து வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

உத்தராகண்ட் மாநிலம் தனது வெள்ளி விழாவைக் கொண்டாடும் வேளையில், வரும் ஆண்டுகளில் அந்த மாநிலம் வளர்ச்சியின் புதிய உயரங்களைத் தொடும் என்று பிரதமர் முழு நம்பிக்கை தெரிவித்தார். உத்தராகண்ட் தனது கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் பெருமையுடன் தொடர்ந்து முன்னேற்றும் என்று அவர் கூறினார். அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வையை கருத்தில் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் உறுதியாக முன்னேறிச் செல்ல வேண்டும் என்று திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார். வளர்ச்சியில் உத்தராகண்ட் அரசுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்று கூறி, மாநில மக்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துத் தமது உரையைப் பிரதமர்  திரு நரேந்திர மோடி நிறைவு செய்தார்.

உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மித் சிங், உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, மத்திய இணையமைச்சர் திரு அஜய் தம்தா உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2188000

***

SS/PLM/RJ


(Release ID: 2188028) Visitor Counter : 13