பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பிரதமர் ஆற்றிய உரை

प्रविष्टि तिथि: 20 OCT 2025 1:46PM by PIB Chennai

பாரத அன்னைக்கு ஜே!

பாரத அன்னைக்கு ஜே!

பாரத அன்னைக்கு ஜே!

இன்று ஒரு குறிப்பிடத்தக்க நாள், இந்தத் தருணம் மறக்க முடியாதது. இந்தக் காட்சி அசாதாரணமானது. எனக்கு ஒரு பக்கம் பரந்த, எல்லையற்ற கடல் உள்ளது. மறுபுறம் அன்னை பாரதியின் துணிச்சலான வீரர்களின் மகத்தான பலம் உள்ளது. எனக்கு ஒரு பக்கம் எல்லையற்ற அடிவானமும் முடிவற்ற வானமும் உள்ளது. மறுபுறம் வலிமைமிக்க மற்றும் அற்புதமான ஐஎன்எஸ் விக்ராந்த் நிற்கிறது. அது தனக்குள் எல்லையற்ற சக்தியைக் கொண்டுள்ளது. கடல் நீரில் சூரிய ஒளியின் பிரகாசம், ஒரு வகையில், நமது துணிச்சலான வீரர்களால் ஏற்றப்படும் தீபாவளி விளக்குகளைப் போன்றது. இவை நமது தெய்வீக ஒளி மாலைகள். இந்த முறை நமது கடற்படையின் துணிச்சலான வீரர்களுக்கு மத்தியில் தீபாவளி என்ற புனிதப் பண்டிகையை நான் கொண்டாடுவது எனது மிகப்பெரிய அதிர்ஷ்டம்.

நண்பர்களே,

நேற்று இரவு ஐஎன்எஸ் விக்ராந்தில் நான் கழித்த அனுபவத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது கடினம். உங்கள் அனைவரையும் நிரப்பிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும்  நான் கண்டேன். நேற்று உங்கள் சொந்தப் படைப்பின் பாடல்களைப் பாடுவதையும், அந்தப் பாடல்களில் ஆபரேஷன் சிந்தூரை நீங்கள் விவரித்த விதத்தையும் பார்த்தபோது... போர்க்களத்தில் நிற்கும் ஒரு சிப்பாய் வெளிப்படுத்தக்கூடிய உணர்வுகளை எந்தக் கவிஞரும் வெளிப்படுத்தியிருக்க முடியாது. ஒருபுறம், என் கண்களுக்கு முன்பாக ராணுவ வலிமையைக் கண்டேன்.

நண்பர்களே,

இந்த அற்புதமான கப்பல்கள், காற்றை விட வேகமாக பறக்கும் இந்த விமானங்கள் மற்றும் இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் அனைத்திற்கும் அவற்றின் சொந்த இடம் உண்டு. ஆனால் உங்கள்  ஆர்வம்தான் அவற்றில் உயிர் ஊட்டுகிறது. இந்தக் கப்பல்கள் இரும்பினால் ஆனதாக இருக்கலாம், ஆனால் நீங்கள் அவற்றில் ஏறும்போது, அவை உயிருள்ள, அச்சமற்ற வீரப் படைகளாக மாறுகின்றன. நேற்று முதல் நான் உங்களுடன் இருக்கிறேன். ஒவ்வொரு கணமும் எனக்குப் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொடுத்துள்ளது, புதிதாக ஒன்றை தெளிவுபடுத்தியது. நான் தில்லியை விட்டு வெளியேறியபோது, என் இதயம் இந்தத் தருணத்தை வாழ ஏங்கியது.

ஆனால் நண்பர்களே,

உங்கள் கடின உழைப்பு, உங்கள் அர்ப்பணிப்பு, உங்கள் ஒழுக்கம், உங்கள் பக்தி, இவை அனைத்தும் மிக உயர்ந்த மட்டத்தில், மிக உயர்ந்த உயரத்தில் உள்ளன. அதை நானே முழுமையாக வாழ முடியவில்லை. ஆனால் நான் நிச்சயமாக அதைப் புரிந்து கொள்ள முடிந்தது. நான் அதை அறிந்திருக்கிறேன். அந்த வாழ்க்கையை வாழ்வது எவ்வளவு கடினமாக இருக்கும் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. ஆனால் நான் உங்களுடன் நெருக்கமாக இருந்தபோது, உங்கள் சுவாசத்தை அனுபவித்தபோது, உங்கள் இதயத் துடிப்பை உணர்ந்தபோது, நேற்று இரவு உங்கள் கண்களில் அந்தப் பிரகாசத்தைக் கண்டபோது, நான் சற்று சீக்கிரமாக தூங்கினேன். அது நான் வழக்கமாகச் செய்வதில்லை. ஒருவேளை நான் சீக்கிரமாக தூங்கியதற்குக் காரணம், நாள் முழுவதும் உங்களைப் பார்த்த பிறகு நான் உணர்ந்த ஆழ்ந்த மனநிறைவு உணர்வுதான். அது வெறும் தூக்கம் அல்ல; அந்த மன நிறைவிலிருந்து பிறந்த அமைதியான தூக்கம்.

நண்பர்களே,

இன்று காலை கடலுக்கு மேல் ஆழமான இரவு மற்றும் சூரிய உதயம் எனது தீபாவளியை பல வழிகளில் மிகவும் சிறப்பானதாக்கியுள்ளது. எனவே மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இந்த வீரமிக்க ஐஎன்எஸ் விக்ராந்த்திலிருந்து உங்கள் அனைவருக்கும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், குறிப்பாக உங்கள் குடும்பங்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்!

நண்பர்களே,

தீபாவளி பண்டிகையை, அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட விரும்புகிறார்கள். நானும் என் குடும்பத்தினருடன் தீபாவளியைக் கொண்டாடப் பழகிவிட்டேன். நீங்கள் என் குடும்பம் என்பதால், தீபாவளியைக் கொண்டாட நான் உங்கள் மத்தியில் இங்கு வந்துள்ளேன். இந்தத் தீபாவளியை நான் என் குடும்பத்தினருடன் கொண்டாடுகிறேன், அதனால்தான் இந்தத் தீபாவளி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

நண்பர்களே,

ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டபோது, நான் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது: விக்ராந்த் மிகப்பெரியது, பிரமாண்டமானது, பிரமிக்க வைக்கக் கூடியது. விக்ராந்த் தனித்துவமானது, அது அற்புதமானது. விக்ராந்த் என்பது வெறும் போர்க்கப்பல் மட்டுமல்ல, 21-ம் நூற்றாண்டில் பாரதத்தின் கடின உழைப்பு, திறமை, தாக்கம் மற்றும் அர்ப்பணிப்பின் சின்னம். பாரதம் உள்நாட்டு ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலை  பெற்ற நாளை நீங்கள் அனைவரும் நினைவில் வைத்திருப்பீர்கள், நமது கடற்படை காலனித்துவத்தின் ஒரு முக்கிய சின்னத்தையும் கைவிட்டது. சத்ரபதி சிவாஜி மகாராஜாவால் ஈர்க்கப்பட்டு, நமது கடற்படை ஒரு புதிய கடற்படைக் கொடியை ஏற்றுக்கொண்டது. சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாழ்க! சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாழ்க! சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாழ்க!

நண்பர்களே,

நமது ஐஎன்எஸ் விக்ராந்த் இன்று 'தற்சார்பு இந்தியா', இந்தியாவில் தயாரிப்போம்' என்பதன் சக்திவாய்ந்த அடையாளமாக உள்ளது. கடல் கடந்து செல்லும் இந்த உள்நாட்டில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த், பாரதத்தின் ராணுவ வலிமையைப் பிரதிபலிக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு, விக்ராந்த் என்ற பெயரே பாகிஸ்தானில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி, இரவில் அவர்களின் உறக்கத்தைத் தொலைத்ததைக் கண்கூடாக கண்டோம். ஐஎன்எஸ் விக்ராந்த் என்பது எதிரியின் துணிச்சலை நசுக்கக்கூடிய ஒரு பெயர். அதுதான் ஐஎன்எஸ் விக்ராந்த்! அதுதான் ஐஎன்எஸ் விக்ராந்த்! அதுதான் ஐஎன்எஸ் விக்ராந்த்!

நண்பர்களே,

இந்தச் சந்தர்ப்பத்தில், நமது ஆயுதப் படைகளுக்கு நான் குறிப்பாக வணக்கம் செலுத்த விரும்புகிறேன். இந்தியக் கடற்படையால் உருவாக்கப்பட்ட பயம், இந்திய விமானப்படை காட்டிய அசாதாரணத் திறமை மற்றும் இந்திய ராணுவத்தின் துணிச்சல், மூன்று படைகளின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைப்பு ஆகியவை பாகிஸ்தானை ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இவ்வளவு விரைவாக சரணடைய கட்டாயப்படுத்தின. எனவே, நண்பர்களே, மீண்டும் ஒருமுறை, இந்த புனிதமான சேவை இடத்திலிருந்து, ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் உள்ள இந்த வீரம் நிறைந்த இடத்திலிருந்து, மூன்று ஆயுதப் படைகளின் துணிச்சலான வீரர்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.

நண்பர்களே,

எதிரி கண்முன்னே இருக்கும்போது, போர் நெருங்கும்போது, தாங்களாகவே போராடும் வலிமை உள்ளவரின் நிலை எப்போதும் வலிமையானது. படைகள் வலுவாக இருக்க, அவர்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பது அவசியம். இந்தத் துணிச்சலான வீரர்கள் இந்த மண்ணிலிருந்தே பிறந்து, அதில் வளர்ந்தவர்கள். அதனால்தான் அவர்கள், இந்தத் தாய்நாட்டின் மரியாதைக்காக தங்கள் அனைத்தையும், தங்கள் உயிரையும் கூட கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தைக் கொண்டுள்ளனர். நான் உலகம் முழுவதிலுமிருந்து வலிமையான, உயரமான வீரர்களைக் கொண்டு வந்து அவர்களுக்கு எல்லா பணத்தையும் வழங்கினாலும், அவர்கள் உங்களைப் போல இறக்கத் தயாராக இருப்பார்களா? உங்களைப் போலவே அவர்களும் எல்லாவற்றையும் கொடுப்பார்களா? இந்தியராக இருப்பதன் மூலம் வரும்  வலிமை, பாரத மண்ணில் உங்கள் வாழ்க்கை வலுவாக வேரூன்றி இருப்பதன் மூலம், வரும் வலிமை, அதே போல ஒவ்வொரு கருவியும், ஒவ்வொரு ஆயுதமும், ஒவ்வொரு கூறுகளும் இந்தியமயமாகும் போது நமது பலம் பன்மடங்கு பெருகும். கடந்த பத்தாண்டுகளில் நமது ஆயுதப் படைகள் தற்சார்பை நோக்கி விரைவான முன்னேற்றங்களை அடைந்ததில் நாம் பெருமைப்படுகிறோம். நமது ஆயுதப் படைகள் ஆயிரக்கணக்கான பொருட்களின் பட்டியலை உருவாக்கி, அவற்றை இனி இறக்குமதி செய்ய மாட்டோம் என்று முடிவு செய்தன. இதன் விளைவாக, படைகளுக்குத் தேவையான பெரும்பாலான உபகரணங்கள் இப்போது நாட்டிற்குள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த 11 ஆண்டுகளில், நமது பாதுகாப்பு உற்பத்தி மூன்று மடங்கிற்கும் அதிகமாகிவிட்டது. கடந்த ஆண்டு, இது 1.5 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டிய சாதனையை எட்டியது. இன்னொரு உதாரணத்தை நாட்டுடன் பகிர்ந்து கொள்கிறேன்: 2014 முதல், இந்திய கடற்படை இந்திய கப்பல் கட்டும் தளங்களிலிருந்து 40-க்கும் மேற்பட்ட உள்நாட்டு போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெற்றுள்ளது. கேட்கும் அனைத்து சக இந்தியர்களும், இந்த எண்ணிக்கையை நினைவில் கொள்ளுங்கள். இதைக் கேட்டவுடன், உங்கள் தீபாவளி விளக்குகளின் ஒளி இன்னும்  பிரகாசிக்கும் என்று நான் நம்புகிறேன். இன்று நமது திறன் என்ன? சராசரியாக, ஒவ்வொரு 40 நாட்களுக்கும் ஒரு புதிய உள்நாட்டு போர்க்கப்பல் அல்லது நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் சேர்க்கப்படுகிறது.

நண்பர்களே,

பிரமோஸ் மற்றும் ஆகாஷ் போன்ற நமது ஏவுகணைகள் ஆபரேஷன் சிந்தூரிலும் தங்கள் திறன்களை நிரூபித்தன. பிரம்மோஸ் - பெயர் மட்டுமே அச்சத்தை உருவாக்குகிறது. பிரம்மோஸ் வருவதை கேட்கும் தருணத்தில், பலர் கவலைப்படத் தொடங்குகிறார்கள்! இப்போது, உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் இந்த ஏவுகணைகளை வாங்க விரும்புகின்றன. உலகத் தலைவர்களை நான் சந்திக்கும் போதெல்லாம், பலர் தங்களுக்கும் அவை வேண்டும் என்ற அதே விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்கள்! பாரதம் இப்போது மூன்று சேவைகளுக்கும் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்யும் திறனை வளர்த்து வருகிறது. இந்தியாவை உலகின் சிறந்த பாதுகாப்பு ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக நிலை நிறுத்துவதே எங்கள் குறிக்கோள். கடந்த பத்தாண்டுகளில், நமது பாதுகாப்பு ஏற்றுமதிகள் 30 மடங்குக்கும் மேலாக வளர்ந்துள்ளன! இந்த வெற்றிக்குப் பின்னால் நமது பாதுகாப்பு புத்தொழில் நிறுவனங்கள்  மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி பிரிவுகளின் மகத்தான பங்கு உள்ளது.

நண்பர்களே,

சக்தி மற்றும் திறனைப் பொறுத்தவரை, இந்தியா எப்போதும் அறிவு, செழிப்பு வலிமை மற்றும் அனைத்தும் மனிதகுலத்தின் சேவை மற்றும் பாதுகாப்பிற்காக என்ற பாரம்பரியத்தைப் பின்பற்றி வருகிறது. இன்று, இந்த ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில், உலகளாவிய பொருளாதாரங்களும் வளர்ச்சியும் கடல்சார் வர்த்தக வழிகளை பெரிதும் சார்ந்திருக்கும் போது, இந்தியக் கடற்படை உலகளாவிய ஸ்திரத்தன்மையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று, உலகின் எண்ணெய் விநியோகத்தில் 66% மற்றும் உலகளாவிய கொள்கலன் ஏற்றுமதிகளில் 50% இந்தியப் பெருங்கடல் வழியாகவே செல்கின்றன. மேலும், இந்த வழிகளைப் பாதுகாப்பதில், இந்தியக் கடற்படை இந்தியப் பெருங்கடலின் காவலாளியைப் போல செயல்படுகிறது. இந்தப் பணியைச் செய்வது நீங்கள்தான். மேலும், இந்த முழுப் பிராந்தியத்திலும், பணி அடிப்படையிலான வரிசைப்படுத்தல்கள், கடற்கொள்ளை எதிர்ப்பு ரோந்துகள் மற்றும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகள் மூலம் இந்தியக் கடற்படை உலகளாவிய பாதுகாப்பு கூட்டாளியாகச் செயல்படுகிறது.

நண்பர்களே,

நமது தீவுகளின் பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் உறுதி செய்வதில் நமது கடற்படை முக்கிய பங்கு வகிக்கிறது. சில காலத்திற்கு முன்பு, குடியரசு தினத்தன்று நாட்டின் ஒவ்வொரு தீவிலும் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம். ஒவ்வொரு ஜனவரி 26-ம் தேதியும் மிகுந்த பெருமையுடனும் மரியாதையுடனும் கடற்படை இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி வருகிறது. அதற்காக நமது கடற்படையை நான் வாழ்த்துகிறேன்! இன்று, இந்திய கடற்படை பாரதத்தின் ஒவ்வொரு தீவிலும் மூவர்ணக் கொடியை ஏற்றி வருகிறது.

நண்பர்களே,

பாரதம் வேகமாக முன்னேறி வருவதால், உலகளாவிய தெற்கின் அனைத்து நாடுகளும் எங்களுடன் சேர்ந்து முன்னேறுவதை உறுதிசெய்ய நாங்கள் பாடுபடுகிறோம். இதற்காக, “சாகர்” என்னும்  கடல்சார் தொலைநோக்குப் பார்வையில் நாங்கள் விரைவாகச் செயல்பட்டு வருகிறோம். பல நாடுகளுக்கு நாங்கள் மேம்பாட்டு பங்காளிகளாக மாறி வருகிறோம், தேவைப்படும் போதெல்லாம், உலகில் எங்கும் மனிதாபிமான உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆப்பிரிக்காவிலிருந்து தென்கிழக்கு ஆசியா வரை, பேரழிவு மற்றும் நெருக்கடி காலங்களில் உலகம் இப்போது பாரதத்தை ஒரு உண்மையான உலகளாவிய நண்பராகப் பார்க்கிறது. 2014-ம் ஆண்டில், நமது அண்டை நாடான மாலத்தீவு குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டபோது, நாங்கள் ஆபரேஷன் நீர் என்ற திட்டத்தைத் தொடங்கினோம், மேலும் நமது கடற்படை நன்னீர் விநியோகத்துடன் அங்கு சென்றடைந்தது. 2017-ம் ஆண்டு இலங்கை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, முதலில் உதவிக்கரம் நீட்டியது பாரதம்தான். 2018-ம் ஆண்டு இந்தோனேசியாவை சுனாமி தாக்கியபோது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தோனேசிய மக்களுடன் பாரதம் தோளோடு தோள் நின்றது. அதேபோல், மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கமாக இருந்தாலும் சரி, 2019-ல் மொசாம்பிக்கில் ஏற்பட்ட நெருக்கடியாக இருந்தாலும் சரி, 2020-ல் மடகாஸ்கரில் ஏற்பட்ட நெருக்கடியாக இருந்தாலும் சரி, பாரதம் சேவை மற்றும் இரக்க மனப்பான்மையுடன் எல்லா இடங்களையும் சென்றடைந்தது.

நண்பர்களே,

வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீண்டும் அழைத்து வர நமது ஆயுதப் படைகள் அவ்வப்போது மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. ஏமன் முதல் சூடான் வரை, எங்கு தேவைப்பட்டாலும், உங்கள் தைரியமும் வீரமும் உலகம் முழுவதும் வாழும் இந்தியர்களின் நம்பிக்கையை பெரிதும் வலுப்படுத்தின. ஆயிரக்கணக்கான நமது சொந்த குடிமக்களை மட்டுமல்ல, அந்த நாடுகளில் சிக்கித் தவிக்கும் பிற நாடுகளின் குடிமக்களையும் மீட்டு பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளோம்.

நண்பர்களே,

நமது ராணுவப் படைகள் நிலத்திலும், கடலிலும், வான்வெளியிலும் தேசத்திற்கு சேவை செய்துள்ளன.  கடலில், நமது கடற்படை நாட்டின் கடல் எல்லைகளையும் வர்த்தக நலன்களையும் பாதுகாக்கிறது. வானத்தில், நமது விமானப்படை எப்போதும் இந்தியாவின் பாதுகாப்பிற்கு உறுதியுடன் உள்ளது. நிலத்தில், பாலைவனங்கள் முதல் பனிக்கட்டி பனிப்பாறைகள் வரை, நமது ராணுவம், பிஎஸ்எஃப் மற்றும் ஐடிபிபி பணியாளர்கள் உடைக்க முடியாத சுவரைப் போல நிற்கிறார்கள். இதேபோல், பல்வேறு முனைகளில், எஸ்எஸ்பி, அசாம் ரைபிள்ஸ், சிஆர்பிஎஃப், சிஐஎஸ்எஃப் மற்றும் நமது உளவுத்துறை நிறுவனங்கள் அன்னை பாரதியின் சேவையில் ஒரே பிரிவாக தடையின்றிச் செயல்படுகின்றன. நமது கடற்கரையை இரவும் பகலும் பாதுகாக்க கடற்படையுடன் சரியான ஒருங்கிணைப்பில் செயல்படும் இந்திய கடலோரக் காவல்படையையும் பாராட்ட இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். தேசிய பாதுகாப்பின் இந்த மகத்தான பணிக்கு அவர்களின் பங்களிப்பு உண்மையிலேயே மகத்தானது.

நண்பர்களே,

நமது பாதுகாப்புப் படைகளின் வீரம் மற்றும் துணிச்சலால்தான் நாடு சமீபத்திய ஆண்டுகளில் மற்றொரு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது, மேலும் இந்த சாதனை மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை ஒழிப்பதாகும். இன்று, நக்சலைட்-மாவோயிஸ்ட் வன்முறையிலிருந்து நாடு முழுமையான விடுதலையின் விளிம்பில் நிற்கிறது, அந்த விடுதலை கதவைத் தட்டுகிறது! நண்பர்களே, 2014-க்கு முன்பு, நாட்டில் சுமார் 125 மாவட்டங்கள் மாவோயிஸ்ட் வன்முறையால் பாதிக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை 125 மாவட்டங்களிலிருந்து வெறும் 11 ஆகக் குறைந்து வருகிறது, இவற்றில் கூட, 3 மாவட்டங்கள் மட்டுமே அவற்றின் செல்வாக்கின் தடயங்களைக் காட்டுகின்றன. 125 மாவட்டங்களில், 3 மட்டுமே எஞ்சியுள்ளன! முதல் முறையாக, நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் இப்போது மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு, சுதந்திரத்தின் புதிய காற்றை சுவாசித்து, உண்மையிலேயே மகிழ்ச்சியான தீபாவளியைக் கொண்டாடுகின்றன. பல தலைமுறைகளாக பயம் மற்றும் வன்முறைக்குப் பிறகு, லட்சக்கணக்கான மக்கள் இப்போது வளர்ச்சியின் முக்கிய நீரோட்டத்தில் அடியெடுத்து வைக்கின்றனர். ஒரு காலத்தில் மாவோயிஸ்டுகள் சாலைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டப்படுவதைத் தடுத்த பகுதிகள், இருக்கும் பள்ளிகளை வெடிக்கச் செய்து, மருத்துவர்களைச் சுட்டுக் கொன்ற பகுதிகள், மொபைல் கோபுரங்கள் கூட நிறுவ அனுமதிக்காத பகுதிகள் ஆகியவற்றில், இன்று நெடுஞ்சாலைகள் கட்டப்படுகின்றன, தொழிற்சாலைகள் உருவாகின்றன, பள்ளிகளும் மருத்துவமனைகளும் குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன. இந்த வெற்றி நமது பாதுகாப்புப் படையினரின் தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்திற்கு முற்றிலும் சொந்தமானது. இந்த ஆண்டு, இந்த மாவட்டங்களில் பலவற்றில் முதல் முறையாக மக்கள் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் தீபாவளியைக் கொண்டாடுவார்கள் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நண்பர்களே,

இன்று, நான் நமது துணிச்சலான வீரர்களின் மத்தியில் நிற்கிறேன். நமது கடற்படை வீரர்கள் மரணத்தைக் கையில் ஏந்தி அச்சமின்றி நடப்பவர்கள், தைரியமும் ஆபத்தும் உங்களுக்கு இயல்பாகவே வரும். ஆனால், பொதுவாக ஒரு தடியை மட்டுமே எடுத்துச் செல்லும் நமது காவல்துறையினரைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவர்களிடம் ஒரே மாதிரியான வளங்கள் அல்லது பயிற்சி இல்லை. அவர்களின் பணி பொதுமக்களுடன் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதை உள்ளடக்கியது. இருப்பினும், இந்த காவல்துறையினர், துணிச்சலுடன் நக்சலைட்டுகளை எதிர்த்துப் போராடியுள்ளனர். அவர்கள் நடத்திய போர்கள் மிக உயர்ந்த பாராட்டுக்குரியவை. இந்தப் புனித தீபாவளி பண்டிகையில், எனது அனைத்து காவல்துறையினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் குறிவைக்கப்பட்ட குடும்பங்களை நான் அறிவேன், அவர்களின் கை, கால்கள் துண்டிக்கப்பட்டன, அவர்களின் கிராமங்கள் வாழ முடியாதவையாகின.. இந்த எண்ணற்ற வீரர்கள் மிகுந்த வலியைத் தாங்கி, அமைதி நிலவவும், குடிமக்கள் சிறந்த வாழ்க்கையை வாழவும், குழந்தைகள் படிக்கவும், பிரகாசமான எதிர்காலத்தைக் கனவு காணவும் பெரும் தியாகங்களைச் செய்துள்ளனர். நாட்டின் அமைதி மற்றும் முன்னேற்றத்திற்காக அவர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொண்டனர்.

நண்பர்களே,

சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, நமது காவல்துறை இவ்வளவு பெரிய சவாலை எதிர்கொண்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 50 ஆண்டுகால இந்தக் கொடிய அச்சுறுத்தலை அவர்கள் கிட்டத்தட்ட ஒழித்துவிட்டார்கள் என்று நான் நம்புகிறேன். நீங்கள் போரை நன்கு புரிந்துகொள்கிறீர்கள், ஆனால் ஒருவரின் சொந்த நிலத்திற்குள் போர் நடத்தப்படும்போது, அதற்கு மிகுந்த பொறுமை மற்றும் நிதானம் தேவை, எந்த அப்பாவி உயிரும் இழக்கப்படாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டும். இது ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாகும், மேலும் ஒரு நாள், இந்த வகையான உள்நாட்டு கொரில்லா போர் எவ்வாறு கையாளப்பட்டது என்பது பற்றி தொகுதிகள் எழுதப்படும். பாரதத்தின் துணிச்சலான படைகள் தங்கள் வீரம் மற்றும் உத்தி மூலம் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்தை எவ்வாறு அழித்தது என்பது குறித்து உலகம் ஆய்வு செய்யும். இந்தியர்களாகிய நாம், நமது மண்ணில் இத்தகைய வீரம் வேரூன்றியுள்ளது என்பதில் பெருமை கொள்கிறோம்.

நண்பர்களே,

இன்று, இந்த மாவட்டங்கள் ஜிஎஸ்டி சேமிப்பு விழாவில் சாதனை அளவிலான விற்பனை மற்றும் கொள்முதல்களைக் காண்கின்றன. ஒரு காலத்தில் மாவோயிஸ்டுகள் அரசியலமைப்பைப் பற்றிக் குறிப்பிடவே அனுமதிக்காத பகுதிகளில், அதன் இருப்பு மறுக்கப்பட்ட பகுதிகளில், இன்று "சுதேசி"  உணர்வு ஒவ்வொரு மூலையிலும் எதிரொலிக்கிறது. ஒரு காலத்தில் துப்பாக்கிகளை ஏந்திய இளைஞர்கள் இப்போது அரசியலமைப்பைத் தழுவுகிறார்கள்.

நண்பர்களே,

பாரதம் இன்று குறிப்பிடத்தக்க வேகத்தில் முன்னேறி வருகிறது. 140 கோடி நாட்டு மக்களின் கனவுகளை நாம் நிறைவேற்றுகிறோம். நிலத்திலிருந்து வானம் வரை என்பதே, ஒரு காலத்தில் கற்பனை செய்ய முடியாதது,  இப்போது நம் கண் முன்னே நிஜமாகி வருகிறது. இந்த உந்துதல், முன்னேற்றம் மற்றும் மாற்றம் தேசத்தின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. மேலும் அந்த நம்பிக்கையிலிருந்து வளர்ச்சியின் மந்திரம் வெளிப்படுகிறது. தேசத்தைக் கட்டியெழுப்பும் இந்த மகத்தான பயணத்தில், நமது ஆயுதப் படைகள் ஒரு மகத்தான பங்கைக் கொண்டுள்ளன. தேசிய நீரோட்டத்தை இயக்கவும், அதன் போக்கை மாற்றவும் உங்களுக்கு சக்தி இருக்கிறது! காலத்தையே வழிநடத்தும் தைரியம், சாத்தியமற்றதைக் கடக்கும் வீரம், ஒவ்வொரு தடையையும் கடக்கும் மன உறுதி உங்களிடம் உள்ளது. நமது வீரர்கள் உறுதியாக நிற்கும் மலைச் சிகரங்கள் பாரதத்தின் வெற்றியின் அடையாளங்களாக மாறிவிட்டன. நமது கடற்படை காவல் காக்கும் கடல்கள், கடலின் வலிமையான அலைகள் கூட பாரதத்தின் வெற்றியைப் பாடுவது போல் தெரிகிறது. "பாரத் மாதா கி ஜே!" என ஒவ்வொரு அலையும் அதை எதிரொலிக்கின்றன. கடலின் அலைகளைக் கூட "மா பாரதிக்கு வெற்றி!" என்று அறிவிக்க நீங்கள் தூண்டியிருக்கிறீர்கள்! கடலின் இரைச்சல், மலைகளிலிருந்து வரும் காற்று, பாலைவனங்களிலிருந்து வரும் தூசி, இவற்றை இதயத்தையும் மனதையும் ஒருங்கிணைத்து கவனமாகக் கேட்டால், ஒவ்வொரு மண் துகளிலிருந்தும், ஒவ்வொரு துளி நீரிலிருந்தும் ஒரு ஒற்றைக் குரல் வெளிப்படுகிறது: பாரத் மாதா கி ஜே!  இந்த உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும், உங்கள் அனைவருக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், நாட்டின் 140 கோடி குடிமக்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி, நம்பிக்கை மற்றும் உறுதி உங்களுக்குள் வளரட்டும். உங்கள் கனவுகளின் சிறகுகள் விரிவடைந்து புதிய உச்சங்களை எட்டட்டும்.

இப்போது, என்னுடன் சேர்ந்து, சத்தமாகச் சொல்லுங்கள்: பாரத் மாதா கி ஜே! பாரத் மாதா கி ஜே! பாரத் மாதா கி ஜே! பாரத் மாதா கி ஜே! பாரத் மாதா கி ஜே!  வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! மிக்க நன்றி!

***

(Release ID 2180963)

SS/PKV/KPG/KR

 


(रिलीज़ आईडी: 2187453) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Bengali , Punjabi , Odia , Telugu , Kannada , Malayalam