பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மும்பையில் நடைபெற்ற உலக நிதி தொழில்நுட்ப விழாவின் 6-வது பதிப்பில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 09 OCT 2025 5:52PM by PIB Chennai

மேன்மைதங்கிய பிரதமர் கியர் ஸ்டார்மர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், கண்டுபிடிப்பாளர்கள், தலைவர்கள், நிதி தொழில்நுட்ப உலகின் முதலீட்டாளர்கள் மற்றும் நண்பர்களே! உங்கள் அனைவரைவும் மும்பை மாநகரத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்.

நண்பர்களே,

நான் கடைசியாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டபோது, 2024 தேர்தல்  நடைபெறாமல் இருந்தது. அன்று, இந்த நிகழ்ச்சியின் அடுத்த பதிப்பில் நான் கலந்துகொள்வேன் என்று கூறியிருந்தேன், அந்த நேரத்தில் நீங்கள் அனைவரும் மிகப்பெரிய கைதட்டல் அளித்தீர்கள். இங்கு இருந்த அரசியல் நிபுணர்கள் அப்போதே "மோடி மீண்டும் வெற்றிபெறுவார்" என்று முடிவு செய்திருந்தனர்.

நண்பர்களே,

மும்பை அதாவது ஆற்றல் நகரம், தொழில் முனைவோர் நகரம், எல்லையற்ற சாத்தியக்கூறுகளின் நகரம்! என் நண்பரான பிரதமர் ஸ்டார்மருக்கு இந்த மும்பையில் சிறப்பு வரவேற்பு அளிக்கிறேன். உலக நிதி தொழில்நுட்ப விழாவில் கலந்துகொள்ள நேரம் ஒதுக்கிய அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்களே,

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உலக நிதி தொழில்நுட்ப விழா தொடங்கியபோது, உலகம் பெருந்தொற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்தது. இன்று, இந்த விழா நிதி புதுமை மற்றும் ஒத்துழைப்புக்கான உலகளாவிய மேடையாக மாறியுள்ளது. இந்த ஆண்டு, இங்கிலாந்து நட்பு நாடாக இணைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய இரண்டு ஜனநாயக நாடுகளுக்கு இடையிலான இந்தக் கூட்டாண்மை உலகளாவிய நிதி நிலப்பரப்பை மேலும் வலுப்படுத்தும். இங்கே நான் காணும் சூழல், ஆற்றல், ஆற்றல்மிக்க தன்மை உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சி மீதான உலகளாவிய நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இதற்காக கிரிஸ் கோபாலகிருஷ்ணன் அவர்கள், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அவர்கள், மற்றும் இந்த பிரமாண்ட நிகழ்வுக்கான அனைத்து அமைப்பாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

நண்பர்களே,

இந்தியா ஜனநாயகத்தின் தாய். ஜனநாயகத்தைப் பற்றி நாம் பேசும்போது, அது தேர்தல்கள் அல்லது கொள்கை உருவாக்கம் மட்டும் அல்ல. இந்தியா ஜனநாயக உணர்வை ஆட்சியின் வலுவான தூணாக மாற்றியுள்ளது, இதற்கு சிறந்த உதாரணம் தொழில்நுட்பம். நீண்ட காலமாக, உலகம் தொழில்நுட்ப பிளவைப் பற்றி பேசியது, அந்த விவாதத்தில் உண்மை இருந்தது என்பதை நாம் மறுக்க முடியாது. இந்தியாவும் அந்த நேரத்தில் இதனால் பாதிக்கப்படாமல் இல்லை. ஆனால் இந்தியா கடந்த பத்தாண்டுகளில் தொழில்நுட்பத்தை ஜனநாயகமயமாக்கியுள்ளது. இன்றைய இந்தியா உலகின் மிகவும் தொழில்நுட்ப அடிப்படையில் உள்ளடக்கிய சமூகங்களில் ஒன்றாகும்!

நண்பர்களே,

நாம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும் ஜனநாயகமயமாக்கி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அதை அணுகக்கூடியதாக ஆக்கியுள்ளோம். இன்று, இது இந்தியாவின் நல்லாட்சி மாதிரியின் அடையாளமாக மாறியுள்ளது. இது ஒரு மாதிரியாகும், இதில் அரசு பொது நலனுக்காக டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குகிறது, பின்னர் தனியார் துறை அந்த தளத்தில் புதிய மற்றும் புதுமையான தயாரிப்புகளை உருவாக்குகிறது. தொழில்நுட்பம் வெறும் வசதிக்கான கருவி அல்ல, சமத்துவத்திற்கான வழிமுறையும் கூட என்பதை  இந்தியா காட்டியுள்ளது.

நண்பர்களே,

இந்த உள்ளடக்கிய அணுகுமுறை நமது வங்கி அமைப்பையும் மாற்றியுள்ளது. முன்பு, வங்கி சேவை ஒரு சிறப்புரிமையாக இருந்தது, ஆனால் டிஜிட்டல் தொழில்நுட்பம் அதை அதிகாரமளிக்கும் வழிமுறையாக மாற்றியுள்ளது. இன்று, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பணம் செலுத்தும்முறை இந்திய மக்களின் வாழ்க்கையின் வழக்கமான பகுதியாக மாறியுள்ளது. இதன் பெருமை ஜன் தன், ஆதார், மொபைல் ஒருங்கிணைந்த சேவையை சேரும். யுபிஐ பரிவர்த்தனைகளைப் பாருங்கள்! ஒவ்வொரு மாதமும், சுமார் 20 பில்லியன் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன, மொத்த மதிப்பு 25 டிரில்லியன் ரூபாயைத் தாண்டுகிறது, அதாவது, 25 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல். இன்று, உலகில் நடக்கும் ஒவ்வொரு 100 நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில், 50  இந்தியாவில் மட்டுமே நடைபெறுகின்றன.

நண்பர்களே,

இந்த ஆண்டு உலகளாவிய நிதி தொழில்நுட்ப விழாவின் கருப்பொருள், இந்தியாவின் இந்த ஜனநாயக உணர்வை முன்னெடுத்துச் சென்று வலுப்படுத்துகிறது..

நண்பர்களே,

இன்று, உலகம் முழுவதும் இந்தியாவின் டிஜிட்டல் நடைமுறைகள் கவனம் பெற்று வருகிறது. பாரதத்தின் இந்தியாவின் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (யுபிஐ), ஆதார் அடிப்படையில் பணம் செலுத்தும் அமைப்பு, பாரத் கட்டணம் செலுத்தும் முறை, பாரத் கியூ ஆர் கோடு, டிஜிலாக்கர், டிஜியாத்ரா, மற்றும் அரசு மின் - சந்தை  இவை அனைத்தும் இந்திய  டிஜிட்டல் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளன. இந்தியாவின் டிஜிட்டல் முன்னெடுப்புகள் தற்போது புதிய திறந்த சூழல் அமைப்புகளை உருவாக்குகிறது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களில் பலருக்கு இது தெரியாமல் இருக்கலாம், ஆனால் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த வலையமைப்பு (ஓஎன்டிசி) சிறு கடைக்காரர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக மாறி வருகிறது. இது அவர்களை நாடு முழுவதும் உள்ள சந்தைகளை அடைய உதவுகிறது. அதேபோல், ஓசிஇஎன் (முன்கூட்டியே ஒப்புதல் அளிக்கப்பட்ட கடனை செயல்படுத்துதுல்) சிறு தொழில் முனைவோர் கடன் பெறுவதை எளிதாக்குகிறது. இந்த அமைப்பு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கடன் பற்றாக்குறை பிரச்சினையை தீர்க்க உதவுகிறது. ரிசர்வ் வங்கியால் பின்பற்றப்படும் டிஜிட்டல் நாணய முயற்சிகள் இவற்றை இன்னும் சிறப்பாக்கும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த அனைத்து முயற்சிகளும் இந்தியாவின் பயன்படுத்தப்படாத திறனை நமது வளர்ச்சிக் கதையின் உந்து சக்தியாக மாற்றும்.

நண்பர்களே,

இந்தியாவின் டிஜிட்டல் முன்முயற்சிகள் மத்திய அரசின் திட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாக மட்டுமின்றி, உலகின் தென்பகுதியில் உள்ள வளரும் நாடுகளுக்கான நம்பிக்கையாக உருவெடுத்துள்ளது. டிஜிட்டல் அடிப்படையிலான புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உலக அளவில் பல்வேறு நாடுகளுடன் ஒத்துழைப்புகள் மேம்படுவதையே இந்தியா விரும்புகிறது. உலக அளவில் மக்களின் நலன் கருதி, டிஜிட்டல் தளங்களுக்கான வசதிகள் மற்றும் அது தொடர்பான நமது அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென இந்தியா பிரத்யேக அடையாளத்துடன் கூடிய டிஜிட்டல் தளத்தை வடிவமைத்துள்ளது. இன்று 25-க்கும் மேற்பட்ட நாடுகளில், டிஜிட்டல் முன்னெடுப்புகளுக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.இந்தியா டிஜிட்டல் தளங்களுக்கான தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்வதுடன் பிற நாடுகளுக்கு அது தொடர்பான செயல்பாடுகளுக்கு உதவியும் வருகிறது. இது டிஜிட்டல் நடவடிக்கைகளுக்கான உதவியாக மட்டுமின்றி, உலகின் நன்மை கருதி இந்தியா மேற்கொண்டு வரும் நல்லெண்ண நடவடிக்கையாகும்.

நண்பர்களே,

இந்தியாவின் நிதி தொழில்நுட்ப சமூகத்தின் முயற்சிகளுக்கு நன்றி, நமது சுதேசி தீர்வுகள் உலகளாவிய தொடர்புடையதாக மாறி வருகின்றன. அது இயங்கக்கூடிய கியுஆர் நெட்வொர்க்குகளாக இருந்தாலும் சரி, திறந்த வர்த்தகமாக இருந்தாலும் சரி, அல்லது திறந்த நிதி கட்டமைப்புகளாக இருந்தாலும் சரி, உலகம் நமது தொடக்கநிலை நிறுவனங்களின் வளர்ச்சியை கவனிக்கிறது. உண்மையில், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்தியா உலகில் அதிக நிதியளிக்கப்பட்ட மூன்று சிறந்த நிதி தொழில்நுட்ப சூழல் அமைப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது. நான் பேசும் இந்த சாதனை உங்கள் அனைவருக்கும் சொந்தமானது.

நண்பர்களே,

இந்தியாவின் வலிமை அதன் வளர்ச்சியை அளவிடுவதில் மட்டுமின்றி அனைத்தையும் உள்ளடக்கிய மீள்தன்மை கொண்ட நீடித்த வளர்ச்சிக்கான பங்களிப்பையும் கொண்டுள்ளது. இது அடிப்படையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்திற்கான நடவடிக்கைகளுக்கு தொடக்கமாக அமைந்துள்ளது. பாகுபாட்டைக் களைவது, நிகழ்நேர மோசடிகளைக் கண்டறிவது மற்றும் இதர சேவைகளுக்கான தரநிலையை மேம்படுத்துவது ஆகிய அம்சங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏராளமான வாய்ப்புகளைக் கொண்ட இத்துறையின் தரவுகள், திறன்கள் மற்றும் நிர்வாகத்தை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் அவசியமாகும்.

நண்பர்களே,

செயற்கை நுண்ணறிவில் பாரதத்தின் அணுகுமுறை மூன்று முக்கிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது சமமான அணுகல், மக்கள் அளவிலான திறன் மேம்பாடு, மற்றும் பொறுப்பான பயன்பாடு. இந்தியா - செயற்கை நுண்ணறிவு இயக்கத்தின் கீழ், நாங்கள் உயர் செயல்திறன் கணினி திறனை உருவாக்கி வருகிறோம், இதனால் ஒவ்வொரு புதுமை கண்டுபிடிப்பாளர்கள் புத்தொழில் நிறுவனமும் செயற்கை நுண்ணறிவு வளங்களுக்கு மலிவான மற்றும் எளிதான அணுகலைப் பெற முடியும். நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு மொழிக்கும் செயற்கை நுண்ணறிவின் பலன்கள் சென்றடைவதை உறுதி செய்வதே எங்களது குறிக்கோள். எங்கள் சிறப்பு மையங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் மற்றும் தனித்துவமான செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் இதை சாத்தியமாக்குகின்றன.

நண்பர்களே,

நெறிமுறை செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கட்டமைப்புக்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளித்து வருகிறது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு தொடர்பான எங்கள் அனுபவமும் எங்கள் கற்றல் களஞ்சியங்களும் உலகிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாங்கள் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை (டிபிஐ) செயல்படுத்திய அதே அளவில், இப்போது, செயற்கை நுண்ணறிவையும் செயல்படுத்த அதையே அடைய நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். எங்களுக்கு செயற்கை நுண்ணறிவு என்றால் வேறு அர்த்தம். எங்களுக்கு செயற்கை நுண்ணறிவு என்றால் அனைவரையும் உள்ளடக்கியதாகும்.

நண்பர்களே,

இன்று, உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவுக்கான நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு விதிகள் பற்றிய விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் பாரதம் ஏற்கனவே இதற்கான 'நம்பிக்கை அடுக்கை' உருவாக்கியுள்ளது. இந்தியா செயற்கை நுண்ணறிவு இயக்கம் தரவு மற்றும் தனியுரிமை கவலைகள் இரண்டையும் திறம்பட தீர்க்கும் திறனைக் கொண்டுள்ளது. புதுமை கண்டுபிடிப்பாளர்களை உள்ளடக்கிய பயன்பாடுகளை உருவாக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு தளங்களை நாங்கள் உருவாக்க விரும்புகிறோம்.  பணப் பரிவர்த்தனைகளில் விரைவான செயல்பாடுகள் மற்றும் நம்பிக்கையான நடைமுறைகளுக்கு இந்தியா உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. கடன் வழங்குவதில் குறைந்த வட்டி மற்றும் அனுமதி சார்ந்த செயல்பாடுகளை திறம்பட மேற்கொண்டு அதற்கான இலக்குகளை எட்டவும் கவனம் செலுத்தப்படுகிறது. காப்பீட்டுத் துறையில் சிறந்த காப்பீடுகளை வழங்குவதற்கும், காப்பீடு தொடர்பான உரிமைக் கோரல்களை குறித்த நேரத்தில் வழங்குவதிலும் உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மாற்றத்தின் உந்து சக்தியாக  செயற்கை நுண்ணறிவு மாறலாம். ஆனால் அதற்கு, செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும். முதல் முறையாக டிஜிட்டல் நிதி சேவையைப் பயன்படுத்தும் நபர் எந்தவொரு பிழைகளும் விரைவாக தீர்க்கப்படும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். இந்த நம்பிக்கைதான் டிஜிட்டல் உள்ளடக்கத்தையும் நிதி சேவைகளில் நம்பிக்கையையும் வலுப்படுத்தும்.

நண்பர்களே,

சில ஆண்டுகளுக்கு முன்பு, இங்கிலாந்தில் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சிமாநாடு தொடங்கியது. அடுத்த ஆண்டு, செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு இந்தியாவில் நடைபெறும். அதாவது, பாதுகாப்பு பற்றிய உரையாடல் இங்கிலாந்தில் தொடங்கியது, தாக்கம் பற்றிய உரையாடல் இந்தியாவில் நடைபெறும். பாரதமும் இங்கிலாந்தும் ஏற்கனவே உலகளாவிய வர்த்தகம் மற்றும் கூட்டாண்மையில் வெற்றிப் பாதையை உலகிற்குக் காட்டியுள்ளன. செயற்கை நுண்ணறிவு மற்றும் நிதி தொழில் - நுட்பத்தில் எங்கள் ஒத்துழைப்பு இந்த உணர்வை மேலும் வலுப்படுத்துகிறது. இங்கிலாந்தின் ஆராய்ச்சி வலிமையும் உலகளாவிய நிதி நிபுணத்துவமும், பாரதத்தின் அளவு மற்றும் திறமையுடன் இணைந்து, முழு உலகத்திற்கும் புதிய வாய்ப்புகளின் கதவுகளைத் திறக்க முடியும். இன்று, புத்தொழில் நிறுவனங்கள், நிறுவனங்கள் மற்றும் புதுமை மையங்களுக்கு இடையேயான தொடர்பை வலுப்படுத்த நாங்கள் தீர்மானித்துள்ளோம். இங்கிலாந்து- இந்தியா நிதி தொழில்நுட்ப வழித்தடம் புதிய புத்தொழில் நிறுவனங்களுக்கு சோதனை ரீதியில் வளர வாய்ப்புகளை உருவாக்கும். மேலும், இது லண்டன் பங்குச் சந்தை மற்றும் குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்திற்கு இடையே புதிய ஒத்துழைப்பு வழிகளைத் திறக்கும். நமது இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த நிதி ஒருங்கிணைப்பு, நமது நிறுவனங்கள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முழுமையாக பயன்படுத்த உதவும்.

நண்பர்களே,

நம் அனைவருக்கும் ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. இந்த நிகழ்ச்சியின் வாயிலாக, இங்கிலாந்து மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள நாடுகள் இந்தியாவுடன் இணைந்து செயல்பட அழைப்பு விடுக்கிறேன். இந்தியாவின் வளர்ச்சியுடன் இணைந்து செயல்பட ஒவ்வொரு முதலீட்டாளர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். மக்கள் மற்றும் புவிசார் நலன் கருதி மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் உலக அளவிலான நிதிசார் தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டியது அவசியமாகும். புதுமை கண்டுபிடிப்புகள் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு மட்டுமின்றி நலன் சார்ந்த அம்சங்களையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நிதி என்பது வெறும் எண்களாக மட்டுமல்லாமல், மனித முன்னேற்றத்திற்கும் உதவ வேண்டும். இந்த அழைப்புடன், உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளையும், ரிசர்வ் வங்கிக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!
 

(Release ID: 2176910)

***

SS/VK/KR


(रिलीज़ आईडी: 2187397) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam