பிரதமர் அலுவலகம்
ஐசிசி மகளிர் உலக கோப்பை 2025-ஐ வென்ற இந்திய அணியினருடன் பிரதமர் உரையாடினார்
Posted On:
06 NOV 2025 1:28PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் ஐசிசி மகளிர் உலக கோப்பை 2025-ல் கோப்பையை வென்ற இந்திய அணியினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று உரையாடினார். 2025 நவம்பர் 02 அன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நாள் தேவ் தீபாவளி, குர்புரப் ஆகியவற்றை குறிப்பிடும் மிக மகத்துவமான நாள் என்று பிரதமர் குறிப்பிட்டு அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். பிரதமருக்கு நன்றி தெரிவித்த அணி பயிற்சியாளர் திரு அமோல் மஜூம்தார் அவரை சந்தித்தது கௌரவமிக்கது என்று கூறினார்.
நாட்டின் புதல்விகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்ட அர்ப்பணிப்பைப் பாராட்டினார். மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் ஒவ்வொரு பயிற்சி அமர்விலும் குறிப்பிடத்தக்க தீவிரத்துடனும் ஆற்றலுடனும் பங்கேற்றதாகவும், இதனால் அவர்களின் கடின உழைப்பு பலனளித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
2017-ம் ஆண்டு கோப்பை இல்லாமல் பிரதமரை சந்தித்ததை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் நினைவு கூர்ந்தார். பிரதமர் தங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளார் என்றும், அது மிகவும் பெருமைக்குரிய அம்சம் என்றும் அவர் கூறினார். எதிர்காலத்தில் அவரைத் தொடர்ந்து சந்தித்து அவருடன் குழு புகைப்படம் எடுப்பதே தங்களின் நோக்கம் என்றும் அவர் மேலும் கூறினார்.
மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் உண்மையிலேயே ஒரு பெரிய சாதனையைச் செய்ததாக திரு மோடி குறிப்பிட்டார். இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் ஒரு விளையாட்டு மட்டுமின்றி, மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார். கிரிக்கெட் போட்டி சிறப்பாக இருக்கும்போது, நாடு உயர்ந்ததாக உணரப்படுகிறது, ஒரு சிறிய பின்னடைவு கூட நாடு முழுவதையும் உலுக்கிவிடும் என்று அவர் குறிப்பிட்டார். தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு அணி எவ்வாறு விமர்சனங்களை எதிர்கொண்டது என்பதை அவர் குறிப்பிட்டார்.
2017-ம் ஆண்டு, இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு பிரதமரை சந்தித்ததாகவும், அடுத்த வாய்ப்பு வரும்போதெல்லாம் தாங்கள் சிறப்பாக விளையாட பிரதமர் தங்களை ஊக்குவித்ததாகவும் ஹர்மன்ப்ரீத் கவுர் மீண்டும் கூறினார். இறுதியாக கோப்பையை வென்றதற்கும், மீண்டும் அவருடன் பேச வாய்ப்பு கிடைத்ததற்கும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஸ்மிருதி மந்தனாவை தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமர் அழைத்தார். 2017 -ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற முடியவில்லை என்பதை நினைவுகூர்ந்த அவர், அந்த எதிர்பார்ப்புகளை எதிர்கொள்வது எப்படி என்று தாம் பிரதமரிடம் கேட்டதை சுட்டிக்காட்டினார். அதற்கு பிரதமர் அளித்த பதில், தமக்கு பெரிதும் உதவியதாகவும் அது அடுத்த 6 முதல் 7 ஆண்டுகள் வரை அணிக்கு பெரிதும் உதவியதாகவும் கூறினார். முதல் முறையாக இந்தியா, மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது பெரும் சாதனை போல் உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டார். பிரதமர் எப்போதும் ஒரு உத்வேகம் அளிப்பதாகவும், குறிப்பாக இஸ்ரோ ஏவுதல்கள் முதல் பிற தேசிய சாதனைகள் வரை அனைத்து துறையிலும் மகளிர் தற்போது சிறப்பாக செயல்பட சிறந்த ஊக்கமளிப்பதாக அவர் தெரிவித்தார். நாட்டு மக்கள் இதைக்கண்டு பெருமைப்படுவதாகவும், அவர்களின் அனுபவங்களைக் கேட்க உண்மையிலேயே விரும்புவதாகவும் திரு மோடி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2186881
***
SS/IR/AG/SH
(Release ID: 2187104)
Visitor Counter : 6
Read this release in:
Malayalam
,
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu