பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காவலர் நினைவு தினம்: புதுதில்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் பாதுகாப்பு அமைச்சர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்

Posted On: 21 OCT 2025 12:02PM by PIB Chennai

காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு, 2025, அக்டோபர் 21 அன்று, புதுதில்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில், பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 1959-ம் ஆண்டு இதே நாளில், லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸில், கனரக ஆயுதமேந்திய சீன ராணுவத்தினரின் தாக்குதலில் வீரம் செறிந்த 10 காவலர்கள் உயிர்த் தியாகம் செய்தனர்.

காவல் துறை மற்றும் துணை ராணுவப் படையினர் தேசத்திற்கு ஆற்றிய சேவைக்கு பாதுகாப்பு அமைச்சர் தமது உரையில் நன்றி தெரிவித்து, வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். ஆயுதப்படைகளும்  காவல் படைகளும்  தேசப் பாதுகாப்பின் தூண்கள் என்றும் முந்தையது நாட்டையும் அதன் புவியியல் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் அதே வேளையில், பிந்தையது சமூகத்தையும் சமூக ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கிறது என்றும் கூறினார். “ராணுவமும் காவல்துறையும் வெவ்வேறு தளங்களில் செயல்படுகின்றன, ஆனால் அவற்றின் நோக்கம் ஒன்றுதான் - தேசத்தைப் பாதுகாப்பது. 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கி நாம் முன்னேறும்போது, ​​நாட்டின் வெளி மற்றும் உள் பாதுகாப்பை சமநிலைப்படுத்துவது முன்னெப்போதையும் விட முக்கியமானது,” என்று அவர் கூறினார்.

குற்றங்களைத் தடுக்கும் தனது அதிகாரபூர்வப் பொறுப்பை நிறைவேற்றும் அதே வேளையில், சமூகத்தின் மீதான நம்பிக்கையைப் பேணுவதற்கான தார்மீகக் கடமையை நிறைவேற்றும் காவல்துறையினரை, பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார். "இன்று மக்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள் என்றால், விழிப்புடன் இருக்கும் நமது ஆயுதப் படைகள் மற்றும் காவல்துறையின் மீதான நம்பிக்கையால் தான். இந்த நம்பிக்கையே நமது நாட்டின் நிலைத்தன்மைக்கு அடித்தளம்" என்று அவர் கூறினார்.

சமூகமும் காவல்துறையும் சமமாக ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பதை வலியுறுத்திய பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு எந்திரத்தை இன்னும் வலுவாகவும் விழிப்புடனும் மாற்ற, இருவருக்கும் இடையே சமநிலையான உறவைப் பேணுவது அவசியம் என்றார்.  "குடிமக்கள் கூட்டாளிகளாகச் செயல்பட்டு சட்டத்தை மதிக்கும்போதுதான் காவல் துறை திறம்பட செயல்பட முடியும். சமூகத்திற்கும் காவல்துறைக்கும் இடையிலான உறவு பரஸ்பர புரிதல் மற்றும் பொறுப்பின் அடிப்படையில் அமைந்தால், இரண்டும் வளம்பெறும்" என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக மத்திய ஆயுதக் காவல் படைகள் மற்றும் தில்லி காவல்துறையின் கூட்டு அணிவகுப்பு நடைபெற்றது. மத்திய உள்துறை இணையமைச்சர் திரு பண்டி சஞ்சய் குமார், உள்துறை செயலாளர் திரு கோவிந்த் மோகன், உளவுப் பிரிவு  இயக்குநர் திரு தபன் தேகா, எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் திரு தல்ஜித் சிங் சௌத்ரி, மத்திய காவல் படைகளின் பிற தளபதிகள், ஓய்வு பெற்ற தலைமைத் தளபதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2181113  

****

SS/SMB/SG

 


(Release ID: 2181235) Visitor Counter : 10