பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் மகாராஷ்டிராவில் அக்டோபர் 8, 9 ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்கிறார்

Posted On: 07 OCT 2025 10:30AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, மகாராஷ்டிராவில் அக்டோபர் 8, 9 ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்கிறார். நவி மும்பைக்கு, பிற்பகல் 3 மணி அளவில் சென்றடையும் பிரதமர், புதிதாக கட்டப்பட்டுள்ள நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தைப் பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து பிற்பகல் 3.30 மணி அளவில், நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கும் பிரதமர், மும்பையில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்து முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து உரையாற்றுகிறார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இங்கிலாந்து பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் 2025 அக்டோபர் 8, 9 ஆகிய நாட்களில் இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். இது பிரதமர் ஸ்டார்மரின் முதலாவது அதிகாரப்பூர்வ இந்தியப் பயணமாகும்.

மும்பையில் அக்டோபர் 9 அன்று காலை 10 மணி அளவில், பிரதமர் திரு நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் சர் கீர் ஸ்டார்மருக்கு விருந்தளிக்கிறார். நண்பகல் 1.40 மணி அளவில் இருநாட்டு பிரதமர்களும் மும்பை ஜியோ உலக மையத்தில் நடைபெறும் தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். அதன் பின்னர், பிற்பகல், 2.45 மணி அளவில் உலகளாவிய ஃபின்டெக் திருவிழாவின் 6-வது பதிப்பில் இருவரும் பங்கேற்கின்றனர். அத்துடன் இத்திருவிழாவில் அவர்கள் முக்கிய உரையாற்றுகின்றனர்.

நவிமும்பையில் பிரதமர்

உலகளாவிய விமானப்போக்குவரத்து மையமாக இந்தியாவை திகழச் செய்யவேண்டும் என்ற தமது தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், ரூ.19,650 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நவிமும்பை சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். நவிமும்பை சர்வதேச விமான நிலையம், பொது – தனியார் கூட்டாண்மையுடன் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிகப் பெரிய பசுமை விமான நிலையத்திட்டமாகும்.

மும்பை பெருநகரப் பகுதிக்கான இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக, நவிமும்பை சர்வதேச விமான நிலையம், சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்துடன் இணைந்து, உலகளாவிய பல விமான நிலைய அமைப்புகளின் ஒன்றாக மும்பையை திகழச் செய்யும். 1160 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட உலகின் மிகவும் திறன்மிக்க விமான நிலையங்களில் ஒன்றாக வடிவமைக்கப்பட்ட இந்த விமான நிலையம், ஆண்டுதோறும் 90 மில்லியன் பயணிகளையும் 3.25 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளையும் கையாளும்.

பிரதமர், மும்பை மெட்ரோ பாதை -3 ன் 2பி முனையத்தை திறந்து வைக்கிறார். இது ஆச்சார்யா அத்ரே சௌக் முதல் கஃபே பரேட் வரை சுமார் ரூ.12,200 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், மும்பை மெட்ரோ பாதை 3 (அக்வா பாதை) முழுவதையும் அவர் நாட்டிற்கு அர்ப்பணிப்பார். மொத்தம் ரூ.37,270 கோடிக்கும் அதிகமான செலவில் இது கட்டப்பட்டுள்ளது. இது நகர்ப்புற போக்குவரத்து மாற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது.

மும்பையின் முதலாவது மற்றும் ஒரு முழுமையான நிலத்தடி மெட்ரோ பாதையாக, இந்த திட்டம் மும்பை பெருநகரப் பகுதி முழுவதும் பயணத்தை மறுவரையறை செய்ய உள்ளது. இது மில்லியன் கணக்கான குடியிருப்பாளர்களுக்கு விரைவான  திறன்மிக்க மற்றும் நவீன போக்குவரத்து தீர்வை அளிக்கிறது.

மெட்ரோ மோனோ ரயில், புறநகர் ரயில் மற்றும் பேருந்து போன்ற பொது போக்குவரத்துகளில் பயணிப்பதற்காக “மும்பை ஒன்” என்ற ஒருங்கிணைந்த பொது மொபைல் செயலியையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

மகாராஷ்டிராவில் திறன், வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, புதுமை கண்டுபிடிப்புத் துறையின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறுகிய கால வேலைவாய்ப்புத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இது 400 அரசு இந்திய தொழிற்பயிற்சி நிலையங்கள், 150 அரசு தொழில்நுட்ப உயர்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் செயல்படுத்தப்படும். இது தொழில்துறைக்குத் தேவையான திறன் மேம்பாட்டை, வெளிக்கொண்ட வருவதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2175641

***

SS/IR/KPG/KR


(Release ID: 2175870) Visitor Counter : 18