பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் 1,22,100 கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் நலனுக்காகவும் சேவை மனப்பான்மையுடன் மத்திய அரசு பணியாற்றி வருகிறது : பிரதமர்

Posted On: 25 SEP 2025 4:40PM by PIB Chennai

ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் 1,22,100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (25.09.2025) தொடங்கி வைத்து புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அன்னை திரிபுர சுந்தரியின் புனித பூமிக்குச் செல்ல கிடைத்த வாய்ப்பை ஒரு பாக்கியமாகக் கருதுவதாகத் பிரதமர் கூறினார். பக்தி மற்றும் வீரம் நிறைந்த இந்த பூமியிலிருந்து, மஹாராணா பிரதாப் மற்றும் ராஜா பன்சியா பிலுக்கு மரியாதை செலுத்துவதாக அவர் தெரிவித்தார்.

பன்ஸ்வாராவில் இன்று நடைபெறும் இந்த முக்கிய நிகழ்வு எரிசக்தி உற்பத்திக்கு உத்வேகம் அளிக்கும் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். இந்தியாவின் மின் துறையில் ஒரு புதிய அத்தியாயம் ராஜஸ்தான் மண்ணிலிருந்து எழுதப்படுகிறது என்று அவர் எடுத்துரைத்தார். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ₹90,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான மின் திட்டங்கள் இன்று தொடங்கப்படுவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இதுபோன்ற பெரிய அளவிலான திட்டங்களை ஒரே நேரத்தில் தொடங்குவது, எரிசக்தி துறையில் இந்தியாவின் விரைவான முன்னேற்றத்தைப் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். சூரிய சக்தி முதல் அணுசக்தி வரை, மின் உற்பத்தி திறனில் இந்தியா புதிய உயரங்களை எட்டிவருவதாக  பிரதமர் கூறினார்.

இன்றைய புதிய தொழில் மற்றும் தொழில்நுட்ப சகாப்தத்தின்  வளர்ச்சி, மின்சாரத்தை அடிப்படையாக கொண்டது என்று அவர் குறிப்பிட்டார். மின்சாரத்தின் முக்கியத்துவத்தை புறக்கணித்ததாக முந்தைய அரசுகளை அவர் விமர்சித்தார். 2014-ம் ஆண்டில் தது அரசு ஆட்சிக்கு வந்தபோது, ​​2.5 கோடி வீடுகளுக்கு மின்சார இணைப்புகள் இல்லை என்றும், சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும், 18,000 கிராமங்களில் ஒரு மின் கம்பம் கூட ல்லை என்றும் திரு நரேந்திர மோடி கூறினார். முந்தைய காலங்களில் முக்கிய நகரங்களில் கூட பல மணிநேர மின்தடை ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். மின்சாரப் பற்றாக்குறை தொழிற்சாலை செயல்பாடுகளை பாதித்ததாக அவர் கூறினார். 2014-ம் ஆண்டில், இந்த நிலைமையை மாற்ற தது அரசு தீர்மானித்ததாக பிரதமர் தெரிவித்தார். தமது ஆட்சியில் ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், 2.5 கோடி வீடுகளுக்கு மின் இணைப்புகள் கிடைத்ததாகவும் அவர் கூறினார். மின் இணைப்புகள் எங்கெல்லாம் சென்றடைந்தனவோ, அங்கெல்லாம் மக்களின் வாழ்க்கை எளிதாகி வளர்ச்சி அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

21-ம் நூற்றாண்டில் விரைவான வளர்ச்சியை அடைய வேண்டுமென்றால், மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். தூய எரிசக்தியில் முன்னணியில் உள்ள நாடுகள், வெற்றிகரமான நாடுகளாக உள்ளன என்று அவர் கூறினார். தமது தலைமையிலான அரசு தூய எரிசக்தி திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளது என்று திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.

இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறுவதற்கு அதிவேகமாக செயல்பட்டு வருகிறது எனவும் இந்தப் பயணத்தில் ராஜஸ்தான் குறிப்பிடத்தக்க பங்கை வகிப்பதாகவும் அவர் கூறினார். ராஜஸ்தானில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்டவை தொடர்பான ₹30,000 கோடி மதிப்பிலான  திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். வந்தே பாரத் சேவை உட்பட மூன்று புதிய ரயில்களையும் பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான நாடு தழுவிய இயக்கத்தின் கீழ் ராஜஸ்தானில் 15,000 இளைஞர்களுக்கு அரசு வேலைகளுக்கான நியமனக் கடிதங்களையும் அவர் வழங்கினார். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக ராஜஸ்தான் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

ராஜஸ்தானில் தற்போதைய மாநில அரசு மாநிலத்தின் வளர்ச்சிக்கு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். ராஜஸ்தானில், சட்டம் ஒழுங்கு வலுப்படுத்தப்பட்டு, வளர்ச்சியின் வேகம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

சாதாரண மக்களின் வாழ்க்கை எளிதாகும்போது, ​​அவர்கள் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்குவதாக அவர்  தெரிவித்தார்.  சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களின் நலனுக்காகவும் சேவை மனப்பான்மையுடன் மத்திய அரசு பணியாற்றி வருகிறது என்று பிரதமர் தெரிவித்தார். 2017-ம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது நாடு சிக்கலான வரிநடைமுறைகளிலிருந்து விடுபட்டதாக அவர் கூறினார். தற்போது நவராத்திரியின் முதல் நாளில், ஒரு பெரிய ஜிஎஸ்டி சீர்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை அவர் குறிப்பிட்டார். இதன் விளைவாக இந்தியா முழுவதும் ஜிஎஸ்டி சேமிப்பு விழா  தொடங்கியிருப்பதாக அவர் கூறினார்.

தற்சார்பு இந்தியா என்ற இலக்கை நாம் மறந்துவிடக் கூடாது என்று கூறிய பிரதமர், நாம் வாங்கும் பொருட்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். பண்டிகைக் காலத்தில் சுதேசி பொருட்களை மட்டுமே வாங்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து, இன்றைய திட்டங்களுக்காக ராஜஸ்தான் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் ஆளுநர் திரு ஹரிபாவ் கிசன்ராவ் பகடே, ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா, மத்திய அமைச்சர் திரு பிரல்ஹத் ஜோஷி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2171198

***

SS/PLM/AG/SH


(Release ID: 2172619) Visitor Counter : 6