பிரதமர் அலுவலகம்
அசாமின் கோலாகாட்டில் பாலிப்ரொப்பிலீன் ஆலைக்கு அடிக்கல் நாட்டிய விழாவில் பிரதமரின் உரையின் தமிழாக்கம்
Posted On:
14 SEP 2025 5:16PM by PIB Chennai
பாரத மாதாவுக்கு வணக்கம்
அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா அவர்களே, மத்திய அமைச்சரவை சகாக்கள் திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, திரு ஹர்தீப் சிங் பூரி அவர்களே, அசாம் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே மற்றும் இங்கு திரளாக வந்திருக்கும் எனது சகோதர சகோதரிகளே,
அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், துர்கா பூஜை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மகாபுருஷ் ஸ்ரீமந்த சங்கர்தேவரின் பிறந்தநாளையொட்டி, பெரியோர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.
நண்பர்களே,
நான் கடந்த 2 நாட்களாக நாட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கிறேன். நான் வடகிழக்கு பகுதிக்கு வரும்போதெல்லாம் முன்னெப்போதும் இல்லாத வகையில், எனக்கும் அன்பும் ஆசீர்வாதமும் கிடைக்கிறது. குறிப்பாக அசாமில் எனக்கு கிடைக்கும் அன்பும் பாசமும் சிறப்பானவை. இதற்காக நான் அனைத்து மக்களுக்கும் எனது இதயப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
வளர்ச்சியடைந்த அசாம் மற்றும் வளர்ச்சி அடைந்த இந்தியாவின் பயணத்திற்கு இன்று மிக முக்கியமான நாளாகும். அசாம் மாநிலம் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைப் பெற்றுள்ளது. நான் சிறிது நேரத்திற்கு முன்பு டாரங்கில் சுகாதாரம் மற்றும் இணைப்பு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டி வைக்கும் வாய்ப்பை பெற்றேன். தற்போது இங்கு எரிசக்தி பாதுகாப்பு தொடர்பான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் அசாமின் வளர்ச்சிப் பாதையை மேலும் வலுப்படுத்தும்.
நண்பர்களே,
அசாம் மாநிலம் நாட்டின் எரிசக்தி துறையை வலுப்படுத்தும் ஒரு நிலப்பகுதியாகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்கள் நாட்டின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்துகின்றன. அசாம் புதிய உயரங்களை காண, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பாடுபட்டு வருகிறது. இங்கு வருவதற்கு முன்பு, மூங்கிலில் இருந்து பயோ எத்தனால் உற்பத்தி செய்யும் நவீனமயமாக்கப்பட்ட ஆலையின் திறப்பு விழாவில் பங்கேற்றேன் இதன் தொடர்ச்சியாக தற்போது இன்று பாலிப்ரொப்பிலீன் ஆலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் அசாம் தொழில்துறைக்கு ஊக்கமளிக்கும். அசாம் வளர்ச்சியை துரிதப்படுத்தும். இவை விவசாயிகள், இளைஞர்கள் உட்பட அனைவருக்கும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதுபோன்ற பல்வேறு திட்டங்களுக்காக நான் உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.
நண்பர்களே,
இன்று உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியா வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நமக்கு மின்சாரம், எரிவாயு மற்றும் எரிபொருள் தேவையும் அதிகரித்து வருகிறது. இந்த தேவைகளுக்கு நாம் வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் நாம் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்வதன் மூலம், ஒவ்வொரு ஆண்டும் இந்தியா கோடிக்கணக்கான ரூபாய்களை பிற நாடுகளுக்கு செலுத்த வேண்டிய நிலை உள்ளது. நமது பணம் வெளிநாடுகளில் பல வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. அதனால் அங்குள்ள மக்களுக்கு வருமானம் அதிகரிக்கிறது. இந்த சூழ்நிலை மாற்றப்பட வேண்டிய ஒன்றாக இருந்தது. இதனால்தான் இந்தியா தனது எரிசக்தி தேவைகளுக்கு தன்னிறைவை அடையும் பாதையில் பயணிக்கிறது.
நண்பர்களே,
ஒருபுறம் நாம் புதிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புகளைக் கண்டுபிடித்துக் கொண்டு வருகிறோம். மறுபுறம் பசுமை எரிசக்தி ஆற்றல் திறனை அதிகரித்து வருகிறோம். தில்லி செங்கோட்டையில் இருந்து இந்தமுறை நான் சமுத்திர மந்தன் திட்டத்தை அறிவித்ததை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நமது கடல்பகுதிகளில் அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு இருக்கலாம் என வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்த எரிசக்தி வளங்களை நாட்டிற்காக பயன்படுத்தவும் அவற்றை ஆராயவும் நாம் தேசிய ஆழ்கடல் ஆய்வுப் பணியை தொடங்க உள்ளோம்.
நண்பர்களே,
பசுமை எரிசக்தி துறையை பொறுத்தவரையில், அதன் உற்பத்தியில் இந்தியா விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு சூரிய மின்சக்தி உற்பத்தியில் இந்தியா மிகவும் பின்தங்கி இருந்தது. ஆனால் இன்று சூரிய மின்சார உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் உள்ள 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
நண்பர்களே,
மாறிவரும் இந்த காலகட்டத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு மாற்றாக வேறு எரிபொருட்கள் இந்தியாவிற்கு அதிகம் தேவைப்படுகின்றன. எத்தனால் இந்த மாற்று எரிசக்தியில் ஒன்றாகும். மூங்கிலில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்யும் ஆலை இன்று இங்கு திறக்கப்பட்டுள்ளது. இது அசாம் விவசாயிகளுக்கும், எனது பழங்குடியின சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நண்பர்களே,
பயோ எத்தனால் ஆலைக்கு தேவையான மூங்கில் உற்பத்திக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மூங்கில் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்குவதுடன் இந்த மூங்கில்களையும் வாங்கும். மூங்கில்களை அறுக்கும் சிறிய அளவிலான அலகுகள் இங்கு அமைக்கப்படும். ஆண்டுதோறும் சுமார் 200 கோடி ரூபாய் இந்த துறைக்காக செலவழிக்கப்படும். இந்த ஆலையின் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள்.
நண்பர்களே,
இன்று நாம் மூங்கிலில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்ய உள்ளோம். ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு மூங்கில்களை வெட்டியவர்களை சிறையில் அடைத்த நாட்களை நீங்கள் மறந்துவிடக் கூடாது. பழங்குடியின மக்களின் வாழக்கை முறையின் ஒரு பகுதியாக இருக்கும் மூங்கிலை வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. நமது அரசு இந்த தடையை நீக்கியது. இந்த நடவடிக்கை வடகிழக்கு பகுதி மக்களுக்கு அதிக பயனை அளிக்கிறது.
நண்பர்களே,
அன்றாட வாழ்க்கையில், நீங்கள் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருகிறீர்கள். பிளாஸ்டிக் வாளிகள், குவளைகள், பந்துகள், நாற்காலிகள், மேசைகள், பொதிப்பொருட்கள் / பாக்கேஜிங் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்கள் நமக்கு தேவையாக உள்ளது. உங்களுக்கு தெரியுமா, இந்த பொருட்களை உற்பத்தி செய்வதற்கான மூலப் பொருள் பாலிப்ரொப்பிலீனாகும். இது இல்லாமல் இன்றைய வாழக்கையை கற்பனை செய்வது கடினமாகும். விரிப்புகள், கயிறுகள், பைகள், முகக் கவசங்கள், மருந்து பெட்டிகள், நார் இழைகள் உள்பட பல்வேறு பொருட்களும் இதன்மூலமே உற்பத்தி செய்யப்படுகின்றன. வாகன உற்பத்திக்கும், மருந்து பொருட்கள் உற்பத்திக்கும், விவசாய கருவிகள் உற்பத்திக்கும் இது பயன்படுகிறது. அசாம் மாநிலம் இன்று நவீன பாலிப்ரொப்பிலீன் தொழிற்சாலையை பரிசாக பெற்றுள்ளது. அசாமில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற கொள்கையை மேலும் வலுப்படுத்தும். நமது உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு இது மேலும் ஊக்கமளிக்கும்.
நண்பர்களே,
அசாம், கோமோஷா, எரி மற்றும் முகா பட்டுக்கு புகழ்பெற்ற மாநிலமாகும். தற்போது பாலிப்ரொப்பிலீன் கொண்டு உற்பத்தி செய்யப்படும் ஜவுளிகளும் அசாமின் அடையாளமாக இணைந்துள்ளது.
நண்பர்களே,
நமது நாடு இன்று தற்சார்பு இந்தியா பிரச்சாரத்தை முன்னெடுத்து கடின உழைப்பை வெளிப்படுத்தி வருகிறது. அசாம் மாநிலம் இந்த பிரச்சாரத்தின் முக்கிய மையங்களில் ஒன்றாக திகழ்கிறது. அசாமின் ஆற்றல் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. இதனால்தான் நாங்கள் ஒரு முக்கிய திட்டமான செமி கண்டெக்டர் திட்டத்திற்காக அசாமை தேர்வு செய்துள்ளோம். அசாமின் மீதான எனது நம்பிக்கைக்கான காரணம் பெரியது. அடிமைக் காலத்தின்போது அசாம் தேநீர் பிரபலம் அடையவில்லை. ஆனால் இன்று அசாம் மக்களும் அந்த மாநில மண்ணும் அசாம் தேயிலையை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றியுள்ளன. தற்போது ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. இந்தியா தற்சார்பு நாடாக மாறுவதற்கு தேவையான எரிசக்தி மற்றும் செமி கண்டக்டர் உள்ளிட்ட இரண்டு துறைகளிலும் அசாம் மாநிலம் மிக முக்கிய பங்கை வகித்து வருகிறது.
நண்பர்களே,
இன்று வங்கி அட்டைகள் முதல் செல்போன்கள், கார்கள், விமானங்கள் மற்றும் விண்வெளி திட்டங்கள் வரை ஒவ்வொன்றும் ஒரு சிறிய மின்னணு சிப்பில் அடங்கி உள்ளது. இன்று நாம் இவை அனைத்தையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டுமென்றால், அந்த மின்னணு சிப்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். இதனால்தான், இந்தியா செமி கண்டக்டர் திட்டத்தை தொடங்கியதுடன், அதற்கான முக்கிய உற்பத்தித் தலமாக அசாமை அமைத்துள்ளது. மோரிகான் பகுதியில் ஒரு செமி கண்டக்டர் தொழிற்சாலைக்கான கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. இதற்காக 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இது அசாம் மாநிலத்திற்கு மிகவும் பெருமை சேர்க்கும் விஷயமாகும்.
நண்பர்களே,
காங்கிரஸ் நாட்டை நீண்டகாலம் ஆட்சி செய்துள்ளது. அசாமிலும் பல தசாப்தங்களாக அரசை நடத்தியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவரை வளர்ச்சியின் வேகம் மிக மெதுவாக இருந்தது. மேலும் நெருக்கடி நிலையும் நீடித்தது. இரட்டை என்ஜின் பாஜக அரசு அசாமின் பழைய அடையாளத்தை வலுப்படுத்தியதுடன், நவீன அடையாளத்தையும் இணைத்துள்ளது. அசாம் மற்றும் வடகிழக்கு பகுதிகளை பிரிவினை, வன்முறை மற்றும் சர்ச்சைகளுக்கு உட்பட்டதாக காங்கிரஸ் மாற்றியது. பிஜேபி அரசு அசாமை வளர்ச்சி மற்றும் பாரம்பரியம் மிக்க மாநிலமாக மாற்றுகிறது. அசாம் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியது எங்கள் அரசு. அசாமில் புதிய தேசிய கல்விக் கொள்கையை பிஜேபி அரசு விரைந்து செயல்படுத்தி வருவதால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். உள்ளூர் மொழிகளில் கல்விக்கு இங்கு ஊக்கமளிக்கப்படுகிறது.
நண்பர்களே,
வடகிழக்கு மற்றும் அசாமின் மகத்தான புதல்வர்களுக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதையை வழங்கியதில்லை, இந்த மண்ணில் வீர் லஷித் போர்புகான் போன்ற துணிச்சலான வீரர்கள் வாழ்ந்தனர். ஆனால், காங்கிரஸ் அவருக்கான உரிய மரியாதையை ஒருபோதும் அளித்ததில்லை. லஷித் போர்புகானின் பாரம்பரியத்தை எங்கள் அரசு கௌரவித்தது. அவரது 400 வது பிறந்தநாளை தேசிய அளவில் நாங்கள் கொண்டாடினோம். அவரது வாழ்க்கை வரலாற்றை 23 மொழிகளில் வெளியிட்டுள்ளோம். இங்குள்ள ஜோராட் பகுதியில் அவருக்கு பிரம்மாண்ட சிலையை திறந்து வைக்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. காங்கிரஸ் புறக்கணித்தவற்றை எல்லாம் நாங்கள் முன்னிலைப்படுத்தி வருகிறோம்.
நண்பர்களே,
இங்கு புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருந்த சிவசாகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க ரங்கரை எங்கள் அரசு புதுப்பித்துள்ளது. ஸ்ரீமங்கா சங்கர்தேவின் பிறந்த இடமான பட்டத்ரவாவை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா மையமாக மாற்ற எங்கள் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் அமைக்கப்பட்டதைப் போன்று, உஜ்ஜைனியில் மகாகல் மகாலோக் கட்டப்பட்டதைப் போன்று, அசாமில் மா காமக்யா வழித்தடத்தையும் எங்கள் அரசு கட்டமைத்து வருகிறது.
நண்பர்களே,
அசாமில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய வரலாற்று தொடர்புடைய அடையாளச் சின்னங்கள் மற்றும் இடங்கள் பல உள்ளன. அடுத்த தலைமுறையினருக்காக அவற்றை பாஜக அரசு பாதுகாத்து வருகிறது. இது அசாமின் பாரம்பரியத்துக்கும் பயனளிப்பது மட்டுமின்றி, அசாமின் சுற்றுலாவும் வளர்ச்சியடைய உதவுகிறது. அசாமின் சுற்றுலாத் வளர்ச்சிடையும்போது, நமது இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்பை பெறுவார்கள்.
நண்பர்களே,
இந்த வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு மத்தியில், அசாமிற்குள் ஊடுருவல் பெறும் சவாலாக இருக்கிறது. காங்கிரஸ் அரசு இங்கு ஆட்சியில் இருந்தபோது, ஊடுருவல்காரர்களுக்கு நிலங்களை வழங்கியது மற்றும் சட்டவிரோத ஆக்கரமிப்பாளர்களுக்கு பாதுகாப்பு அளித்தது. வாக்கு வங்கி பேராசையால், அசாம் மக்கள் தொகை சமநிலையை காங்கிரஸ் சீர்குலைத்தது. தற்போது பாஜக அரசு அசாம் மக்களுடன் இணைந்து இந்த சவாலை எதிர்கொண்டு வருகிறது. ஊடுருவல்காரர்களிடமிருந்து உங்கள் நிலங்களை நாங்கள் மீட்டு வருகிறோம். நிலமில்லாத மற்றும் நிலம் தேவைப்படும் பழங்குடியின குடும்பங்களுக்கு எங்கள் அரசு குத்தகைக்கு நிலத்தை வழங்கி வருகிறது. பசுந்தரா திட்டத்திற்காக அசாம் அரசை நான் பாராட்டுகிறேன். இந்த திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு குத்தகைக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. சில பழங்குடியின் பகுதிகளில், அஹோம், கோச், ராஜ்போங்சி மற்றும் கோர்கா சமூகங்களின் நில உரிமைகள் அங்கீரிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த சமூகங்கள் பாதுகாக்கப்பட்ட வகுப்புகள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன. வரலாற்று ரீதியாக பழங்குடியின சமூகத்திற்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதியை சரிசெய்வதற்கு பிஜேபி அரசு முழு உறுதியுடன் உள்ளது.
நண்பர்களே,
பாஜக அரசிடம் வளர்ச்சிக்கான மந்திரம் மட்டுமே உள்ளது. நாட்டு மக்களே கடவுள் என்பதுதான் அது. அதாவது, நாட்டு மக்கள் எந்த சிரமத்தையும் எதிர்கொள்ளக் கூடாது, சிறிய தேவைகளுக்கு எங்கும் அலைய வேண்டியதில்லை. நீண்டகாலமாக காங்கிரஸ் ஆட்சியின்போது ஏழைகள் துன்பத்தை சந்தித்தனர். மேலும் நிராகரிப்புக்கு உள்ளாயினர். ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை திருப்திபடுத்தும் காங்கிரஸின் செயல்பாடே இதற்கு காரணம். இதற்காகத்தான் அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தினர். ஆனால் பாஜக திருப்திபடுத்துவதைவிட அனைவரும் திருப்தி அடைவதையே வலியுறுத்துகிறது. நாட்டின் எந்தவொரு ஏழையும் எந்தவொரு பகுதியும் பின்தங்கிவிடக்கூடாது என்பதை கருத்தில்கொண்டே நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அசாமில், ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. 20 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படுள்ளன. அசாமில் ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.
நண்பர்களே,
தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் நமது சகோதர சகோதரிகள் பாஜக அரசின் திட்டங்களால் பயனடைந்து வருகின்றனர். தேயிலை தொழிலாளர்களின் நலனுக்கு நாங்கள் முன்னிரிமை அளித்து வருகிறோம். தேயிலை தோட்டங்களின் பணிபுரியும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அரசு உதவி செய்து வருகிறது. பெண்களின் சுகாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வியில் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். குழந்தைப்பேறின் போது தாய் மற்றும் சிசு உயிரிழப்பை குறைப்பதற்கான திட்டங்களையும் இந்த அரசு மேற்கொண்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நிறுவனங்களின் ஆதரவில் விடப்பட்டனர். தற்போது பாஜக அரசு அவர்களுக்கு வீடுகள் மற்றும் வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்குவதிலும் அக்கறை செலுத்தி வருகிறது. அவர்களின் வீடுகளில் குடிநீர் இணைப்பு மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தப்படுகிறது. இத்திட்டங்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகின்றன.
நண்பர்களே,
அசாமின் வளர்ச்சியில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது. வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறையின் முக்கிய மையமாக அசாம் மாறும். வளர்ச்சியடைந்த அசாம் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவை நாம் உருவாக்குவோம். வளர்ச்சித் திட்டங்களுக்காக மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் இணைந்து உங்கள் கைகளை உயர்த்தி முழு பலத்துடன் பாரத மாதாவுக்கு ஜெ என்று சொல்லுங்கள்.
பாரத மாதாவுக்கு ஜெ… பாரத மாதாவுக்கு ஜெ…
பாரத மாதாவுக்கு ஜெ… மிக்க நன்றி
***
(Release ID: 2166542)
AD/GK/LDN/KR
(Release ID: 2166737)
Visitor Counter : 15
Read this release in:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam