பிரதமர் அலுவலகம்
மணிப்பூர் மாநிலம் சூரசந்த்பூரில் ரூ.7,300 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்ளைத் தொடங்கி வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
Posted On:
13 SEP 2025 2:17PM by PIB Chennai
மணிப்பூரில் உள்ள சூரசந்த்பூரில் ரூ.7,300 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன், புதியதிட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மணிப்பூர் நிலம் தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் பூமி என்று குறிப்பிட்டார். மணிப்பூர் மக்களின் உற்சாகத்திற்கு வணக்கம் செலுத்திய திரு. மோடி, அதிக எண்ணிக்கையில் வந்திருந்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இன்று, சூரசந்த்பூர் மற்றும் மணிப்பூர் நாட்டின் பிற பகுதிகளுடன் முன்னேறி வருவதாக அவர் குறிப்பிட்டார். ஏழைகளுக்கு உறுதியான வீடுகள் கட்டுவதற்கான நாடு தழுவிய திட்டத்தில், மணிப்பூரில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைந்துள்ளனர் என்றும், கிட்டத்தட்ட 60,000 வீடுகள் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக இந்தப் பகுதி கடுமையான மின்சாரப் பற்றாக்குறையை எதிர்கொண்டதாக திரு மோடி குறிப்பிட்டார். மக்களை இந்த சிரமத்திலிருந்து விடுவிக்க அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், இதன் விளைவாக, மணிப்பூரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இலவச மின்சார இணைப்புகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
சூரசந்த்பூரில் ஒரு மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டுள்ளதாகவும், அங்கு புதிய மருத்துவர்கள் இப்போது பயிற்சி பெறுவதாகவும், சுகாதார சேவைகள் மேம்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களாக மணிப்பூரின் மலைப் பகுதிகளில் மருத்துவக் கல்லூரி இல்லாத குறை, தற்போதைய அரசால் சாத்தியமானது என்பதை அவர் குறிப்பிட்டார்.
மணிப்பூரில் நடந்த வன்முறை துரதிருஷ்டவசமானது என்று பிரதமர் குறிப்பிட்டார். சிறிது நேரத்திற்கு முன்பு, முகாம்களில் வசிக்கும் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்ததாக அவர் கூறினார். அவரது உரையாடலுக்குப் பிறகு, மணிப்பூரில் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின் புதிய விடியல் வந்து கொண்டிருக்கிறது என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
"எந்தவொரு பிராந்தியத்திலும் வளர்ச்சிக்கு அமைதியை நிலைநாட்டுவது அவசியம், கடந்த பதினொரு ஆண்டுகளில், வடகிழக்கில் நீண்டகாலமாக நிலவி வந்த மோதல்கள் மற்றும் சச்சரவுகள் தீர்க்கப்பட்டுள்ளன" என்று பிரதமர் விளக்கினார். மக்கள் அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்து வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். சமீபத்தில், மலைகள் மற்றும் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள பல்வேறு குழுக்களுடன் உரையாடல் நடந்துள்ளது குறித்து திரு மோடி திருப்தி தெரிவித்தார். இந்த முயற்சிகள் இந்திய அரசின் அணுகுமுறையின் ஒரு பகுதியாகும். அமைதிப் பாதையில் முன்னேறிச் சென்று அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுமாறு அனைத்து அமைப்புகளுக்கும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார். மக்களுடன் தான் நிற்பதாகவும், மத்திய அரசு மணிப்பூருடன் இருப்பதாகவும் கூறி, தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்.
மணிப்பூரில் மக்களின் வாழ்க்கையை மீண்டும் அமைதிப் பாதையில் கொண்டு வர மத்திய அரசு அனைத்து சாத்தியமான முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த திரு மோடி, இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு 7,000 புதிய வீடுகளைக் கட்டுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். சுமார் ரூ 3,000 கோடி சிறப்புத் தொகுப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ ரூ 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மணிப்பூரில் உள்ள பழங்குடி இளைஞர்களின் கனவுகள் மற்றும் போராட்டங்களை நன்கு அறிந்திருப்பதை ஒப்புக்கொண்ட பிரதமர், அவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்ய பல தீர்வுகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். உள்ளூர் நிர்வாக அமைப்புகளை வலுப்படுத்த அரசு முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார்.
மணிப்பூரின் வளர்ச்சிக்காகவும், இடம்பெயர்ந்த குடும்பங்களின் மீள்குடியேற்றத்திற்காகவும், அமைதியை நிலைநாட்டுவதற்காகவும், மத்திய அரசு மணிப்பூர் அரசுக்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று மக்களுக்கு உறுதியளித்து அவர் தமது உரையை நிறைவு செய்தார்.
***
(Release ID: 2166235)
AD/PKV/RJ
(Release ID: 2166293)
Visitor Counter : 2