பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தில்லியின் யஷோபூமியில் நடைபெற்ற செமிகான் இந்தியா 2025 விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 02 SEP 2025 12:55PM by PIB Chennai

எனது அமைச்சரவை நண்பர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, தில்லி முதல்வர் திருமிகு ரேகா குப்தா அவர்களே, ஒடிசா முதல்வர் திரு மோகன் சரண் மாஜி அவர்களே, மத்திய இணையமைச்சர் திரு  ஜிதின் பிரசாத் அவர்களே, செமி-ன் தலைவர் திரு அஜித் மனோச்சா அவர்களே, இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த குறைக்கடத்தி துறையின் தலைமை நிர்வாக அதிகாரிகளே மற்றும் அவர்களது கூட்டாளிகளே, பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு வந்துள்ள எங்கள் விருந்தினர்களே, புத்தொழில் நிறுவனங்களுடன் தொடர்புடைய தொழில்முனைவோர்களே, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எனது இளம் மாணவ நண்பர்களே!, தாய்மார்களே!, அன்பர்களே!

நேற்று இரவு தான் நான் ஜப்பான் மற்றும் சீன பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினேன். நான் அங்கு சென்றதற்காக பாராட்டுகிறீர்களா அல்லது திரும்பி வந்ததற்காக பாராட்டுகிறீர்களா? இன்று, யஷோபூமியில் உள்ள இந்த மண்டபத்தில், லட்சியங்கள் மற்றும் நம்பிக்கையால் நிரம்பியுள்ளேன். எனக்குத் தொழில்நுட்பத்தின் மீது இயல்பான ஆர்வம் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். சமீபத்தில், ஜப்பானுக்கு நான் சென்றபோது, பிரதமர் திரு ஷிகேரு இஷிபா சானுடன் டோக்கியோ எலக்ட்ரான் தொழிற்சாலையைப் பார்வையிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மேலும் அதன் தலைமை நிர்வாக அதிகாரியும் திரு மோடி வந்திருந்ததாக இப்போதுதான் நம்மிடம் கூறினார்.

நண்பர்களே,

தொழில்நுட்பத்தின் மீதான எனது ஆர்வம் என்னை மீண்டும் மீண்டும் உங்களிடையே அழைத்து வருகிறது. அதனால்தான் இன்றும் கூட உங்களுடன் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

நண்பர்களே,

உலகம் முழுவதிலுமிருந்து குறைக்கடத்திகள் தொடர்பான நிபுணர்கள் இங்கு வந்துள்ளனர். 40-50க்கும் மேற்பட்ட நாடுகள் இங்கு பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மேலும் இந்தியாவின் புத்தாக்கம் மற்றும் இளைஞர் சக்தியும் இங்கே தெரிகிறது. உருவாக்கப்பட்ட இந்த கலவையானது ஒரே ஒரு செய்தியை மட்டுமே கொண்டுள்ளது. அதுதான், உலகம் இந்தியா மீது நம்பிக்கை கொண்டுள்ளது , உலகம் இந்தியாவை நம்புகிறது, மேலும் உலகம் இந்தியாவுடன் குறைக்கடத்தி எதிர்காலத்தை உருவாக்க தயாராக உள்ளது, என்பதாகும்.

செமிகான் இந்தியாவிற்கு வந்துள்ள உங்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். வளர்ச்சியடைந்த இந்தியாவின் பயணத்தில், தற்சார்பு இந்தியாவின் பயணத்தில், நீங்கள் அனைவரும் எங்கள் மிக முக்கியமான பங்காளிகள்.

நண்பர்களே,

சில நாட்களுக்கு முன்தான், இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்கள் வெளியிடப்பட்டன. மீண்டும் ஒருமுறை இந்தியா ஒவ்வொரு நம்பிக்கையையும், ஒவ்வொரு எதிர்பார்ப்பையும், ஒவ்வொரு மதிப்பீட்டையும் விட சிறப்பாகச் செயல்பட்டது. ஒருபுறம், உலக பொருளாதாரம் மந்தநிலையில் இருக்கும்போதும், பொருளாதார சுயநலத்தால் எழும் சவால்கள் இருக்கும்போதும், அத்தகைய சூழலில் இந்தியா 7.8 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது. மேலும் இந்த வளர்ச்சி ஒவ்வொரு துறையிலும், உற்பத்தி, சேவைகள், விவசாயம், கட்டுமானம் என எல்லா இடங்களிலும் உற்சாகம் பொங்குகிறது. இன்று, இந்தியா வளர்ந்து வரும் வேகம், நம் அனைவரிடமும், தொழில்துறையிலும், நாட்டின் ஒவ்வொரு குடிமகனிடமும் புதிய ஆற்றலைப் புகுத்துகிறது. இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதை நோக்கி வேகமாக நகரும் வளர்ச்சியின் பாதை இது, என்பதில் ஐயமில்லை.

நண்பர்களே,

குறைக்கடத்திகள் உலகில் ஒரு பழமொழி உண்டு, எண்ணெய் கருப்பு தங்கமாக இருந்தாலும், சிப்கள் டிஜிட்டல் வைரங்களாகும். நமது கடந்த நூற்றாண்டு, எண்ணெயால் வடிவமைக்கப்பட்டது. உலகின் விதி எண்ணெய் கிணறுகளால் தீர்மானிக்கப்பட்டது. இந்த எண்ணெய் கிணறுகளிலிருந்து எவ்வளவு பெட்ரோலியம் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து உலகப் பொருளாதாரம் ஏற்ற இறக்கத்தை நிர்ணயிக்கிறது. ஆனால் 21-ம் நூற்றாண்டின் சக்தி ஒரு சிறிய சிப்பில் அடைக்கப்பட்டுள்ளது. இந்த சிப்கள் சிறியதாக இருக்கலாம், ஆனால் அவை உலகின் முன்னேற்றத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் சக்தியைக் கொண்டுள்ளன. அதனால்தான் இன்று குறைக்கடத்திகளுக்கான உலகளாவிய சந்தை 600 பில்லியன் டாலர்களை எட்டுகிறது. அடுத்த சில ஆண்டுகளில், இது ஒரு ட்ரில்லியன் டாலர்களைக் கடக்கும். குறைக்கடத்தித் துறையில் இந்தியா முன்னேறி வரும் வேகத்துடன், இந்த ஒரு டிரில்லியன் சந்தைப் பங்கில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்கைப் பெறும் என்று நான் நம்புகிறேன்.

 

 

நண்பர்களே,

இந்தியாவின் வேகம் என்ன என்பதையும் நான் முன்வைக்க விரும்புகிறேன். 2021-ம் ஆண்டில், நாங்கள் செமிகான் இந்தியா திட்டத்தைத் தொடங்கினோம், 2023-ம் ஆண்டில், இந்தியாவின் முதல் குறைக்கடத்தி ஆலைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2024-ல், நாங்கள் இன்னும் சில ஆலைகளுக்கு ஒப்புதல் அளித்தோம். 2025-ம் ஆண்டில், மேலும் 5 திட்டங்களுக்கு அனுமதி அளித்தோம். ஒட்டுமொத்தமாக, 10 குறைக்கடத்தி திட்டங்களில் பதினெட்டு பில்லியன் டாலர் முதலீடு, அதாவது ரூ.1.5 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப்படுகிறது. இது இந்தியா மீது உலக நாடுகளின் வளர்ந்து வரும் நம்பிக்கையைக் காட்டுகிறது.

நண்பர்களே,

குறைக்கடத்திகளில் வேகம் முக்கியம் என்பது உங்களுக்குத் தெரியும். கோப்பிலிருந்து தொழிற்சாலைக்கு செல்லும் நேரம் குறைவாக இருந்தால், காகித வேலைகள் குறைவாக இருந்தால், வேஃபர் வேலைகளை  விரைவில் தொடங்க முடியும். எங்கள் அரசு, இதே அணுகுமுறையுடன் செயல்படுகிறது. நாங்கள் தேசிய ஒற்றை சாளர அமைப்புமுறையை செயல்படுத்தியுள்ளோம். இதன் மூலம், மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து ஒப்புதல்களும் ஒரே தளத்தில் பெறப்படுகின்றன. இது நம் முதலீட்டாளர்களை ஏராளமான காகித வேலைகளிலிருந்து விடுவித்துள்ளது. இன்று, நாடு முழுவதும் குறைக்கடத்தி பூங்காக்கள்  உடனடி பயன்பாட்டிற்கு ஏற்ற  உள்கட்டமைப்பு மாதிரியில் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காக்களில் நிலம், மின்சாரம், துறைமுகங்கள், விமான நிலையங்கள், இவை அனைத்திற்கும் இணைப்பு மற்றும் திறமையான தொழிலாளர் சக்தி போன்ற வசதிகள் உள்ளன. மேலும் இவற்றுடன் சலுகைகளும் சேர்க்கப்படும்போது, ​​தொழில் நிச்சயமாக செழிக்கும். அது உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைகளாக இருந்தாலும் சரி அல்லது வடிவமைப்புடன் கூடிய ஊக்கத்தொகைகளாக இருந்தாலும் சரி, இந்தியா சிறந்த திறன்களை வழங்குகிறது. அதனால்தான் முதலீடுகளின் வரத்தும் தொடர்கிறது. இந்தியா இப்போது பின்னணியிலிருந்து முழு அடுக்கு குறைக்கடத்தி நாடாக மாறுகிறது. இந்தியாவின் மிகச்சிறிய சிப், உலகின் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை. நமது பயணம் தாமதமாகத் தொடங்கியதை மறுப்பதற்கில்லை.  ஆனால் இப்போது எதுவும் நம்மைத் தடுக்க முடியாது. சிஜி பவரின் சோதனை ஆலை 4-5 நாட்களுக்கு முன்பு, அதாவது ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. கெய்ன்ஸ் பைலட் ஆலையும் செயல்படத் தொடங்க உள்ளது. மைக்ரான் மற்றும் டாடாவின் சோதனை சிப்கள் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. நான் முன்பே கூறியது போல், இந்த ஆண்டு முதல் வணிக சிப்கள் உற்பத்தி செய்யப்படும். இது குறைக்கடத்தித் துறையில் இந்தியா எவ்வளவு வேகமாக முன்னேறி வருகிறது என்பதைக் காட்டுகிறது.

நண்பர்களே,

இந்தியாவில் குறைக்கடத்திகளின் வெற்றிக் கதை, குறிப்பிட்ட ஒரு துறை அல்லது தொழில்நுட்பத்திற்கு மட்டுப்படுத்தப்படவில்லை. வடிவமைப்பு, உற்பத்தி, பேக்கேஜிங் மற்றும் உயர் தொழில்நுட்ப சாதனங்கள், அனைத்தும் இந்தியாவில் கிடைக்கும் வகையில் நாங்கள் ஒரு முழுமையான சூழலை  உருவாக்குகிறோம். நமது குறைக்கடத்தி இயக்கம், ஒரு உற்பத்தி அல்லது ஒரு சிப் உற்பத்திக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. தன்னிறைவு மற்றும் உலகளவில் போட்டித்தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்றும் ஒரு குறைக்கடத்தி சூழலை நாங்கள் உருவாக்குகிறோம்.

நண்பர்களே,

இந்தியாவின் குறைக்கடத்தி இயக்கம் மற்றொரு சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளது. உலகின் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன் இந்தியா இந்தத் துறையில் முன்னேறி வருகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப்களிலிருந்து புதிய சக்தியைப் பெறுவதில் கவனம் செலுத்துகிறோம். நொய்டா மற்றும் பெங்களூருவில் கட்டப்பட்டு வரும் நம் வடிவமைப்பு மையங்கள் உலகின் மிகவும் மேம்பட்ட சிப்களில் சிலவற்றை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு  வருகின்றன. இவை, பில்லியன் கணக்கான டிரான்சிஸ்டர்கள் சேமிக்கப்படும் சிப்களாகும். இந்த சிப்கள் 21-ம் நூற்றாண்டின் அதிவேக தொழில்நுட்பங்களுக்கு புதிய சக்தியை வழங்கும்.

நண்பர்களே,

இன்று, உலகின் குறைக்கடத்தித் துறை எதிர்கொள்ளும் சவால்களில் இந்தியா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இன்று நகரங்களில் வானளாவிய கட்டிடங்களையும் அற்புதமான இயல் உள்கட்டமைப்பையும் நாம் காண்கிறோம். அத்தகைய உள்கட்டமைப்பின் அடித்தளம் எஃகு. மேலும் நமது டிஜிட்டல் உள்கட்டமைப்பின் அடிப்படை முக்கியமான கனிமங்கள். அதனால்தான் இந்தியா இன்று தேசிய முக்கிய கனிமங்கள்  இயக்கத்தில் செயல்பட்டு வருகிறது. நமது நாட்டிற்குள் அரிய கனிமங்களுக்கான நமது தேவையை பூர்த்தி செய்வதை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம். கடந்த நான்கு ஆண்டுகளில், முக்கியமான கனிம திட்டங்களில் நாங்கள் விரிவாக பணியாற்றியுள்ளோம்.

நண்பர்களே,

குறைக்கடத்தித் துறையின் வளர்ச்சியில் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் எம்எஸ்எம்இகளுக்கு மிக முக்கிய பங்கு இருப்பதாக நமது அரசு கருதுகிறது. இன்று, உலகின் குறைக்கடத்தி வடிவமைப்பு திறமையில் இந்தியா 20 சதவீதம் பங்களிக்கிறது. இந்தியாவில் உள்ள இளைஞர்கள், குறைக்கடத்தித் துறையில் மிகப்பெரிய மனித மூலதன தொழிற்சாலையாகக் கருதப்படுகிறார்கள். எனது இளம் தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன், அரசு உங்களுடன் தோளோடு தோள் நின்று ஆதரவு அளிக்கிறது. வடிவமைப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் மற்றும் புத்தொழில் நிறுவனங்களுக்கு சிப் திட்டம் முதலியவை, உங்களுக்கானது. வடிவமைப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தையும் அரசு புதுப்பிக்கப் போகிறது. இந்தத் துறையில் இந்திய அறிவுசார் சொத்துரிமையை மேம்படுத்த முயல்கிறோம். சமீபத்தில் தொடங்கப்பட்ட அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி நிதியத்துடன் இணைந்து செயல்படுவதும் உங்களுக்கு உதவும்.

நண்பர்களே,

பல மாநிலங்களும் இங்கு பங்கேற்றுள்ளன, பல மாநிலங்கள் குறைக்கடத்தித் துறைக்கு சிறப்புக் கொள்கைகளை உருவாக்கியுள்ளன, இந்த மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் சிறப்பு உள்கட்டமைப்பை வலியுறுத்துகின்றன. நாட்டின் அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநிலங்களில் குறைக்கடத்தி சூழலை உருவாக்கவும், தங்கள் மாநிலங்களில் முதலீட்டு சூழலை மேம்படுத்தவும் மற்ற மாநிலங்களுடன் ஆரோக்கியமான போட்டியைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே,

சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற மந்திரத்தைப் பின்பற்றி இந்தியா இந்த நிலையை அடைந்துள்ளது. வரும் காலங்களில், அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களின் புதிய கட்டத்தைத் தொடங்கப் போகிறோம். இந்திய குறைக்கடத்தி இயக்கத்தின் அடுத்த கட்டத்திலும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.  திறந்த மனதுடன் உங்களை வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று இங்குள்ள அனைத்து முதலீட்டாளர்களுக்கும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உங்கள் மொழியில் சொன்னால், வடிவமைப்பு தயாராக உள்ளது, மாற்றுரு சீரமைக்கப்பட்டுள்ளது. துல்லியமாக செயல்படுத்தவும், பெருமளவில் வழங்கவும் இதுதான் நேரம். எங்கள் கொள்கைகள் குறுகிய கால சமிக்ஞைகள் அல்ல; அவை நீண்டகால உறுதிமொழிகள். உங்கள் ஒவ்வொரு தேவையையும் நாங்கள் பூர்த்தி செய்வோம். இந்தியாவில் வடிவமைக்கப்பட்டது, இந்தியாவில் தயாரிக்கப்பட்டது, என்று  ஒட்டுமொத்த உலகமும் கூறும் நாள் வெகு தொலைவில் இல்லை. நமது ஒவ்வொரு முயற்சியும் வெற்றிபெறட்டும், ஒவ்வொரு பைட்டும் புதுமையால் நிரப்பப்படட்டும், நம் பயணம் எப்போதும் பிழைகள் இல்லாமல், உயர் செயல்திறன் நிறைந்ததாக இருக்கட்டும். இந்த உணர்வுடன், உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

நன்றி!

 

***

(Release ID: 2163000)

AD/BR/KR

 


(Release ID: 2163775) Visitor Counter : 9