பிரதமர் அலுவலகம்
ஜப்பானின் மியாகி மாகாணத்தின் செண்டாயில் உள்ள செமிகண்டக்டர் உற்பத்தி மையத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்
Posted On:
30 AUG 2025 11:52AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் திரு ஷிகெரு இஷிபாவுடன் இணைந்து மியாகி மாகாணத்தில் உள்ள செண்டாய்க்குப் பயணம் மேற்கொண்டார். செண்டாயில், இரு தலைவர்களும் செமிகண்டக்டர் (குறைக்கடத்தி) துறையில் முன்னணியில் உள்ள ஜப்பானிய நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரான் மியாகி லிமிடெட் (டிஇஎல் மியாகி) நிறுவனத்தைப் பார்வையிட்டனர். உலகளாவிய செமிகண்டக்டர் மதிப்புச் சங்கிலியில் டிஇஎல்-ன் பங்கு, அதன் மேம்பட்ட உற்பத்தித் திறன், இந்தியாவுடனான அதன் தற்போதைய, எதிர்கால ஒத்துழைப்புகள் ஆகியவை குறித்து பிரதமருக்கு விளக்கப்பட்டது. செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலி, உற்பத்தி, சோதனை ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை உருவாக்க இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நல்ல வாய்ப்புகள் குறித்த நடைமுறை புரிதலை இந்த தொழிற்சாலை பயணம் இரு தலைவர்களுக்கும் வழங்கியது.
செண்டாய் விஜயம் இந்தியாவின் வளர்ந்து வரும் செமிகண்டக்டர் உற்பத்திச் சூழல் அமைப்புக்கும், செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் ஜப்பானின் மேம்பட்ட திறன்களுக்கும் இடையிலான இணைப்புத் தன்மையை எடுத்துக்காட்டுகிறது. ஜப்பான்-இந்தியா செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலி ஒத்துழைப்பு ஒப்பந்தம், இந்தியா-ஜப்பான் தொழில்துறை போட்டித்தன்மை ஒத்துழைப்பு, பொருளாதார பாதுகாப்பு உரையாடலின் கீழ் நடந்து வரும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில், இந்தத் துறையில் கூட்டு செயல்பாடுகளை ஆழப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் இஷிபா ஆகியோரின் இந்த கூட்டுப் பயணம், வலுவான, மீள்தன்மை கொண்ட, நம்பகமான செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியை உருவாக்குவதற்கான இந்தியா - ஜப்பான் நாடுகளின் பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை எடுத்துக் காட்டுகிறது. இந்தப் பயணத்தில் தன்னுடன் இணைந்ததற்காக ஜப்பான் பிரதமர் திரு இஷிபாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் இந்தத் துறையில் ஜப்பானுடன் நெருக்கமாகப் பணியாற்ற இந்தியா தயாராக இருப்பதை மீண்டும் அவர் உறுதிப்படுத்தினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியை கௌரவிக்கும் விதமாக அவருக்கு செண்டாயில் ஜப்பான் பிரதமர் திரு இஷிபா மதிய விருந்தளித்தார். இந்த நிகழ்ச்சியில் மியாகி மாகாண ஆளுநரும் பிற முக்கியப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2162142)
AD/PLM/RJ
(Release ID: 2162208)
Visitor Counter : 31
Read this release in:
Odia
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada