பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஃபிஜி பிரதமருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட கருத்துக்களின் தமிழாக்கம்

Posted On: 25 AUG 2025 1:35PM by PIB Chennai

மாண்புமிகு பிரதமர் திரு ரபுகா அவர்களே,

இரு நாடுகளின் பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

வணக்கம்!

புலா வினாகா!

இந்தியாவிற்கு பிரதமர் திரு ரபுகாவையும் அவரது பிரதிநிதிக்குழுவையும் நான் அன்புடன் வரவேற்கிறேன்.

2014 ஆம் ஆண்டில், 33 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இந்தியப் பிரதமர் ஃபிஜிக்கு பயணம் செய்தார். இந்த நல்வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன்.

அந்த நேரத்தில், நாங்கள் இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தைத் (FIPIC) தொடங்கினோம். இந்த முயற்சி இந்திய-ஃபிஜி உறவுகளை மட்டுமல்லாமல், முழு பசிபிக் பிராந்தியத்துடனான எங்கள் உறவுகளையும் வலுப்படுத்தியுள்ளது. இன்று, பிரதமர் திரு ரபுகாவின் வருகையுடன், எங்கள் கூட்டாண்மையில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறோம்.

நண்பர்களே,

இந்தியாவும் ஃபிஜியும் ஆழமான நட்புறவைப் பகிர்ந்து கொள்கின்றன. 19 ஆம் நூற்றாண்டில், ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவிலிருந்து அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் ஃபிஜிக்குச் சென்று, தங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் அதன் செழிப்புக்கு பங்களித்தனர். அவர்கள் ஃபிஜியின்  சமூக மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கு புதிய வண்ணத்தைச் சேர்த்துள்ளனர், மேலும் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை தொடர்ந்து வலுப்படுத்தியுள்ளனர்.

இதன் மூலம், அவர்கள் தங்கள் வேர்களுடன் இணைந்திருந்து, தங்கள் கலாச்சாரத்தைப் பாதுகாத்து வருகின்றனர். ஃபிஜியின்  ராமாயண மண்டலியின் பாரம்பரியம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். பிரதமர் திரு  ரபுகாவின் 'கிர்மிட் தினம்' அறிவிப்பை நான் வரவேற்கிறேன். இது நமது பகிரப்பட்ட வரலாற்றுக்கு வழங்கப்படும் மரியாதையாகும். நமது கடந்த கால தலைமுறைகளின் நினைவுகளுக்கு ஒரு அஞ்சலியாகும்.

நண்பர்களே,

இன்று எங்கள் விரிவான கலந்துரையாடல்களில், நாங்கள் பல முக்கியமான முடிவுகளை எடுத்தோம். ஆரோக்கியமான நாடு  மட்டுமே வளமான நாடாக இருக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, சுவாவில் 100 படுக்கைகள் கொண்ட ஒரு சிறப்பு மருத்துவமனை கட்டப்படும். டயாலிசிஸ் பிரிவுகள் மற்றும் கடல் ஆம்புலன்ஸ்களும் அனுப்பப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் மலிவு விலையில், உயர்தர மருந்துகளை வழங்க மக்கள் மருந்தக மையங்கள் திறக்கப்படும். தங்கள் கனவுகளை அடையும் போட்டியில் எவரும் பின்தங்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, ஃபிஜியில் 'ஜெய்ப்பூர் கால்' முகாமும் ஏற்பாடு செய்யப்படும்.

வேளாண் துறையில், இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் கௌபி விதைகள் ஃபிஜியின்  மண்ணில் மிகவும் நன்றாக வளர்ந்து வருகின்றன. இந்தியா 12 வேளாண் ட்ரோன்கள் மற்றும் 2 நடமாடும் மண் பரிசோதனை ஆய்வகங்களையும் பரிசளிக்கும். ஃபிஜியில் இந்திய நெய்யை அங்கீகரித்ததற்காக ஃபிஜி அரசை நாங்கள் பாராட்டுகிறோம்.

நண்பர்களே,

பாதுகாப்புத்துறையில் எங்கள் ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக ஒரு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஃபிஜியின்  கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்த, பயிற்சி மற்றும் உபகரணங்களில் இந்தியா ஒத்துழைப்பை வழங்கும். சைபர் பாதுகாப்பு மற்றும் தரவு பாதுகாப்பில் எங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

பயங்கரவாதம், முழு மனிதகுலத்திற்கும் ஒரு பெரிய சவால் என்பதில் நாங்கள் ஒருமனதாக இருக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டத்தில் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்காக பிரதமர் திரு ரபுகா மற்றும் ஃபிஜி அரசிற்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நண்பர்களே,

விளையாட்டு என்பது மக்களை தரையில் இருந்து மனம் வரை இணைக்கும் ஒரு துறையாகும். ஃபிஜியில் ரக்பி மற்றும் இந்தியாவில் கிரிக்கெட் ஆகியவை உதாரணங்கள். 'ரக்பி செவன்ஸின் நட்சத்திரமான' வைசலே செரெவி, இந்திய ரக்பி அணிக்கு பயிற்சி அளித்தார். இப்போது, ​​ஒரு இந்திய பயிற்சியாளர் ஃபிஜி கிரிக்கெட் அணியை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்ல உள்ளார்.

ஃபிஜி பல்கலைக்கழகத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைக் கற்பிக்க இந்திய ஆசிரியர்களை அனுப்ப முடிவு செய்துள்ளோம். ஃபிஜி நாட்டின்  பண்டிதர்கள் இந்தியாவுக்கு வந்து கீதா மஹோத்சவத்தில் பங்கேற்பார்கள். இது மொழியிலிருந்து கலாச்சாரம் வரை எங்கள் தொடர்பை ஆழப்படுத்தும்.

நண்பர்களே,

காலநிலை மாற்றம் ஃபிஜிக்கு ஒரு முக்கியமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இந்தச் சூழலில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், குறிப்பாக சூரிய சக்தித் துறையில் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம். சர்வதேச சூரிய சக்தி கூட்டணி, பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி ஆகியவற்றில் நாங்கள் ஒன்றாக செயல்படுகிறோம். எதிர்காலத்தில், ஃபிஜியின்  பேரிடர் மீட்புத் திறன்களை வலுப்படுத்தவும் ஒத்துழைப்பை வழங்குவோம்.

நண்பர்களே,

பசிபிக் தீவு நாடுகளுடனான எங்கள் ஒத்துழைப்பில், ஃபிஜியை ஒரு மையமாக நாங்கள் பார்க்கிறோம். எங்கள் இரு நாடுகளும் தடையில்லாத, திறந்த, உள்ளடக்கிய, பாதுகாப்பான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பகுதியை வலுவாக ஆதரிக்கின்றன. "அமைதிப் பெருங்கடல்கள்" என்ற பிரதமரின் தொலைநோக்கு பார்வை உண்மையில் மிகவும் நேர்மறையான மற்றும் எதிர்கால அணுகுமுறையாகும். இந்தியாவின் இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்முயற்சியுடன் ஃபிஜியின்  தொடர்பை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம்.

இந்தியாவும் ஃபிஜியும் தனித்தனி பெருங்கடல்களாக இருக்கலாம், ஆனால் எங்கள் விருப்பங்கள் ஒரே படகில் பயணிக்கின்றன.

உலகளாவிய தெற்கின் வளர்ச்சிப் பயணத்தில் நாங்கள் சக பயணிகள். உலகளாவிய தெற்கின் சுதந்திரம், கருத்துக்கள் மற்றும் அடையாளத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்படும் ஒரு உலக ஒழுங்கை வடிவமைப்பதில் நாங்கள் ஒன்றாக பங்காளிகளாக இருக்கிறோம்.

எந்தக் குரலும் புறக்கணிக்கப்படக்கூடாது, எந்த நாடும் பின்தங்கியிருக்கக்கூடாது என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்!

மேன்மை தங்கியவர்களே,

இந்தியப் பெருங்கடலிலிருந்து பசிபிக் பெருங்கடல் வரை, எங்கள் கூட்டாண்மை கடல்களைக் கடக்கும் ஒரு பாலமாகும். இது வெய்லோமணியில் வேரூன்றி, நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் வருகை இந்த நீடித்த பிணைப்பை மேலும் வலுப்படுத்துகிறது. உங்கள் நட்பை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்.

வினகா வகலேவு!

 

***

(Release ID:  2160495  )

AD/BR/SG

 


(Release ID: 2160995)