பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் மாநிலம் ஹன்சால்பூரில் பசுமை போக்குவரத்து வாகனத் திட்டங்களைத் தொடங்கிவைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 26 AUG 2025 2:21PM by PIB Chennai

மக்கள் செல்வாக்குமிக்க குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பாய் படேல் அவர்களே, இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் திரு கீச்சி ஒனோ சான் அவர்களே, சுசுகி மோட்டார் நிறுவனத்தின் தலைவர் தோஷிஹிரோ சுசுகி சான் அவர்களே, மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஹிசாஷி தக்கூச்சி சான் அவர்களே, தலைவர் ஆர் சி பார்கவா அவர்களே, ஹன்சால்பூர் தொழிற்சாலையின் ஊழியர்களே, சிறப்புமிக்க பிரமுகர்களே, பெரியோர்களே, தாய்மார்களே,

கணேச உற்சவ பண்டிகை உற்சாகத்திற்கிடையே இந்தியாவில் தயாரிப்போம் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் தயாரிப்போம், உலகுக்கு தயாரிப்போம் என்ற பகிரப்பட்ட இலக்கை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு சான்றாகும். இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்கள் இன்று முதல் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளன. இந்தியாவில் ஹைப்ரிட் பேட்டரி எலக்ட்ரோடு உற்பத்தியும் தொடங்கப்படவுள்ளது. இந்தியா-ஜப்பான் இடையேயான நட்புறவுக்கு இது ஒரு புதிய பரிமாணத்தை கொண்டுவந்துள்ளது.

நண்பர்களே,

இந்தியாவின் வெற்றிக்கதைக்கான விதைகள் 12-13 ஆண்டுகளுக்கு முன் விதைக்கப்பட்டன. 2012-ம் ஆண்டு நான் குஜராத் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஹன்சால்பூரில் மாருதி சுசுகி நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்திலும் தற்சார்பு இந்தியா மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் என்பதுதான் தொலைநோக்குப் பார்வையாக இருந்தது. அந்த ஆரம்ப கால முயற்சிகள் இப்போது நாட்டின் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்குவகிக்கின்றன.

நண்பர்களே,

இந்த நிகழ்வில் மறைந்த திரு ஒசாமு சுசுகியை நான் அன்போடு நினைவுகூர்கிறேன். இந்திய அரசு அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கும் பெருமையை பெற்றது. இந்தியாவுக்காக திரு ஒசாமு சுசுகி கொண்டிருந்த தொலைநோக்குப் பார்வையின் பரந்த விரிவாக்கத்தை காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நண்பர்களே,

இந்தியா ஜனநாயகத்தின் வலிமையையும், மக்களின் பலனையும் ஒருசேர கொண்டுள்ளது. இந்தியாவில் திறமையான பணியாளர்கள் பெருவாரியாக உள்ளனர். இந்தச் சூழல் ஒவ்வொரு பங்குதாரருக்கும் வெற்றிச் சூழ்நிலையை உருவாக்குகிறது. சுசுகி ஜப்பான் இப்போது இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்கிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும்  வாகனங்கள் மீண்டும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது இந்தியா-ஜப்பான் உறவுகளின் வலிமையை மட்டுமின்றி, இந்தியாவின் உலகளாவிய நிறுவனங்களுக்கு அதிகரித்து வரும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது.  மாருதி சுசுகி போன்ற நிறுவனங்கள்  மேக் இன் இந்தியாவின் பிராண்ட் தூதர்களாக மாறிவிட்டன. தொடர்ந்து 4 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய கார் ஏற்றுமதியாளராக மாருதி சுசுகி இருந்துவருகிறது.  அதே அளவில் இன்று முதல் மின்சார வாகன ஏற்றுமதியும் தொடங்கவுள்ளது. உலகெங்கிலும் உள்ள 10க்கும் அதிகமான நாடுகளில் இயங்கும் மின்சார வாகனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்ற முத்திரையை பெருமையுடன் பெறவுள்ளன.

நண்பர்களே,

மின்சார வாகனங்களுக்கு மிகவும் முக்கியமான சாதனம் பேட்டரியாகும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவிற்கான பேட்டரிகள் முழுவதும் இறக்குமதி செய்யப்பட்டன. மின்சார வாகனங்களின் உற்பத்தியை  வலுப்படுத்த உள்நாட்டில் பேட்டரி உற்பத்தியைத் தொடங்குவது இந்தியாவிற்கு அவசியமாக இருந்தது. இந்தத் தொலைநோக்கின் அடிப்படையில் 2017-ம் ஆண்டு டிடிஎஸ்ஜி பேட்டரி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் 3 ஜப்பான் நிறுவனங்கள் இணைந்து முதல் முறையாக இந்தியாவில் பேட்டரி செல்கள் உற்பத்தியை தொடங்கவுள்ளன. மேலும் பேட்டரி செல் எலக்ட்ரோடும் உற்பத்தி செய்யப்படும். இது இந்தியாவின் தற்சார்பை அதிகரிக்கும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தொடக்கத்திற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளை நான் தெரிவித்துகொள்கிறேன்.

நண்பர்களே,

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மின்சார வாகனங்கள் மாற்றுத் தெரிவாக பார்க்கப்பட்டன. இப்போது அவை பல்வேறு சவால்களுக்கு தீர்வுகளை அளிப்பதாக உள்ளன என்று நான் உறுதியாக நம்புகிறேன். கடந்த ஆண்டு நான் சிங்கப்பூர் சென்றிருந்த போது நமது பழைய வாகனங்களை நமது பழைய ஆம்புலன்ஸ்களை மின்சார வாகனங்களாக மாற்ற முடியும் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது.  இந்த சவாலை மாருதி சுசுகி நிறுவனம் ஏற்றுக்கொண்டு ஆறே மாதங்களில் மாற்றத்தை கொண்டுவந்தது. இ-ஆம்புலன்ஸ் என்ற இந்தத் திட்டத்திற்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. மின்சார வாகனங்கள் மாசுபாட்டை குறைத்து பழைய வாகனங்களை மாற்றுவதற்கு உகந்த தெரிவாக உள்ளன.

நண்பர்களே,

விநியோகத் தொடர்பு பிரச்சனைகளால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் கொள்கை முடிவுகள் மிகவும் பயனுள்ளவை என நிரூபிக்கப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டில் நாட்டிற்கு சேவை செய்யும் வாய்ப்பை நான் பெற்ற போது இதற்கான தயாரிப்புகளை உடனடியாக தொடங்கினேன். இதன் மூலம் இந்தியாவில் உற்பத்தி என்ற இயக்கத்தை தொடங்கி உலகளாவிய மற்றும் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு உகந்த சூழல் உருவாக்கப்பட்டது.  இந்தியா தனது உற்பத்தித் துறையை திறமையானதாகவும், உலக அளவில் போட்டித்தன்மை வாய்ந்ததாகவும் மாற்றுவதற்கு பாடுபட்டு வருகிறது.

நண்பர்களே,

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மின்னணு சாதன உற்பத்தி 500 சதவீதம் அதிகரித்துள்ளது. 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் செல்பேசி உற்பத்தி 2700 சதவீதம் அதிகரித்துள்ளது.  பாதுகாப்பு தளவாட உற்பத்தியும் 200 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது. இந்த வெற்றி அனைத்து  மாநிலங்களையும் உத்வேகம் அடையச் செய்துள்ளது. சீர்திருத்தங்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி ஏற்பட்டு ஒட்டுமொத்த நாடும் பயனடைகிறது. உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் எளிதாக வர்த்தகம் செய்வதற்கான வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.

நண்பர்களே,

தற்போது எதிர்காலத்திற்கு தேவையான தொழில்துறைகளை நோக்கி இந்தியாவின் கவனம் திரும்பியுள்ளது. இதையடுத்து செமிகண்டக்டர் துறையில் பணிகள் வேகமடைந்துள்ளன. நாடு முழுவதும் ஆறு செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் உற்பத்தியை மேலும் அதிகரிக்க அரசு உறுதிபூண்டுள்ளது.

நண்பர்களே,

அடுத்த வாரம் நான் ஜப்பான் செல்லவிருக்கிறேன். இந்தியா-ஜப்பான் இடையேயான உறவு, ராஜீய உறவுகளுக்கும் அப்பாற்பட்டது. இது கலாச்சாரம் மற்றும் பரஸ்பர நம்பிக்கையில் வேரூன்றியுள்ளது. தத்தம் முன்னேற்றத்தில் இவை ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. மாருதி சுசுகியுடன் தொடங்கிய இந்தப் பயணம் தற்போது அதிவேக புல்லட் ரயில் போக்குவரத்தை எட்டியுள்ளது.

நண்பர்களே,

இந்தியா-ஜப்பான் கூட்டாண்மையில் தொழில்துறை சக்தி என்பது குஜராத்தில் தொடங்கியது. 20 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட துடிப்புமிக்க குஜராத் உச்சிமாநாட்டில் ஜப்பான் முக்கிய பங்குதாரராக இருந்தது. இன்று, துடிப்புமிக்க குஜராத் பயணத்தை நான் நினைவுகூர்கிறேன்.  எனது நண்பர்கள் இங்கே அமர்ந்திருப்பதை நான் காண்கிறேன். 2003-ல் இங்கு வந்தவர்களில் ஒருவராக இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் உள்ளார். அவரை நான் அன்புடன் வரவேற்கிறேன்.

நண்பர்களே,

உள்நாட்டுப் பொருட்களுக்கு நாம் ஆதரவளிப்போம். சுதேசி என்பது நமது வாழ்க்கையின் மந்திரமாக இருக்க வேண்டும். பெருமையோடு சுதேசியை நோக்கி நாம் நடைபோடுவோம். ஜப்பான் இங்கு தயாரிப்பவையும் கூட சுதேசி தான். சுதேசி என்பதற்கான எனது விளக்கம் மிகவும் எளிதானது. யாருடைய பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதோ அது டாலரா, பவுண்டா, ரூபாயா என்பதோ முக்கியமல்ல. உற்பத்தி செய்யப்படும் பொருள் எனது நாட்டு மக்களின் வியர்வையால் செய்யப்பட்டிருக்க வேண்டும். பணம் யாருடையதாக இருந்தாலும் உழைப்பு நம்முடையது. இந்த உணர்வோடு என்னுடன் இணையுங்கள். 2047-க்குள் இத்தகைய பாரதத்தை நாம் கட்டமைப்போம். உங்களின் தியாகத்தில் எதிர்கால தலைமுறை பெருமையடையும்.  உங்களின் பங்களிப்பை பெருமிதமாக எடுத்துக்கொள்ளும். இந்த உணர்வோடு உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

***

(Release ID: 2160839)

AD/SMB/AG/SG/DL


(Release ID: 2160983)