பிரதமர் அலுவலகம்
எகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
23 AUG 2025 9:44PM by PIB Chennai
வணக்கம்!
உலகத் தலைவர்கள் மன்றக் கூட்டத்திற்கு வந்துள்ள அனைத்து விருந்தினர்களையும் வரவேற்கிறேன். இந்த கூட்டம் நடத்தப்படும் நேரம் மிகவும் சரியானது. எனவே நான் அதைப் பாராட்டுகிறேன். கடந்த வாரம்தான், செங்கோட்டையிலிருந்து அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களைப் பற்றிப் பேசினேன். இப்போது இந்த மன்றம் அந்த உணர்வின் பலத்தைப் பெருக்குவதாகச் செயல்படுகிறது.
நண்பர்களே,
இங்கே, உலகளாவிய சூழ்நிலைகள், புவிசார் பொருளாதாரம் குறித்து விரிவான விவாதங்கள் நடந்துள்ளன. மேலும் உலகளாவிய சூழலில் நாம் அதைப் பார்க்கும்போது, பாரதத்தின் பொருளாதாரத்தின் வலிமையை நீங்கள் உணர்கிறீர்கள். இன்று, பாரதம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. மிக விரைவில், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாம் மாறப் போகிறோம். உலகளாவிய வளர்ச்சியில் பாரதத்தின் பங்களிப்பு விரைவில் கிட்டத்தட்ட 20 சதவீதமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இது கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள பெரிய பொருளாதார நிலைத்தன்மையின் விளைவாகும். நமது வங்கிகள் முன்பை விட வலுவாக உள்ளன. பணவீக்கம் மிகக் குறைவு. வட்டி விகிதங்கள் குறைவாக உள்ளன.
நண்பர்களே,
ஒரு பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாகவும், அதன் அடித்தளம் வலுவாகவும் இருக்கும்போது, அதன் தாக்கம் எல்லா இடங்களிலும் தெரியும். ஆகஸ்ட் 15-ம் தேதி இதைப் பற்றி விரிவாக பேசினேன். அந்தக் குறிப்புகளை நான் மீண்டும் சொல்லத் தேவை இல்லை.
நண்பர்களே,
இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 2017-க்குப் பிறகு மிகக் குறைந்த அளவில் உள்ளது. நமது அந்நியச் செலாவணி இருப்பு அதன் சாதனை உச்சத்தை நெருங்குகிறது. 2014-ம் ஆண்டில், நமது சூரியமின் உற்பத்தி திறன் சுமார் 2.5 ஜிகாவாட் ஆக இருந்தது. இப்போது இந்த திறன் 100 ஜிகாவாட் என்ற வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.
நண்பர்களே,
அண்மையில் மற்றொரு செய்தி வந்தது. எஸ் அண்ட் பி குளோபல் மதிப்பீடுகள் பாரதத்தின் கடன் மதிப்பீட்டை மேம்படுத்தியுள்ளன. இது கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளது. பாரதம் உலகின் பிற பகுதிகளுக்கு நம்பிக்கையின் அடையாளமாக மாறியுள்ளது.
நண்பர்களே,
நம் நாட்டில், முந்தைய அரசுகள் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறையின் வாய்ப்புகளைத் தவறவிட்டன. யாரையும் விமர்சிக்கும் நோக்கத்துடன் நான் இங்கு வரவில்லை. ஆனால் சில சமயங்களில் ஒப்பீடுகள் செய்வது ஜனநாயகத்தில் நிலைமையை தெளிவுபடுத்த உதவுகிறது.
நண்பர்களே,
முந்தைய அரசுகள் நாட்டை வாக்கு வங்கி அரசியலில் சிக்க வைத்தன. அவர்களின் சிந்தனை தேர்தல்களுக்கு அப்பால் செல்லவில்லை. அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்குவது வளர்ந்த நாடுகளின் வேலை என்று அவர்கள் நம்பினர். நமக்கு எப்போதாவது அது தேவைப்பட்டால், நாம் அதை அங்கிருந்து இறக்குமதி செய்வோம். அதனால்தான், பல ஆண்டுகளாக, நம் நாடு உலகின் பல நாடுகளை விட பின்தங்கியிருந்தது. நமது தொலைத் தொடர்புத் துறையை எடுத்துக் கொள்ளுங்கள். உலகம் முழுவதும் இணைய சகாப்தம் தொடங்கியபோது, அந்தக் கால அரசு குழப்பத்தில் இருந்தது. பின்னர் 2ஜி சகாப்தம் வந்தது. 3ஜி, 4ஜி -க்காக நாம் வெளிநாடுகளைச் சார்ந்து இருந்தோம். ஆனால் இதை எவ்வளவு காலம் தொடர்வது? அதனால்தான், 2014-க்குப் பிறகு, இந்தியா தனது அணுகுமுறையை மாற்றியது. இப்போது முழு 5ஜி தொழில்நுட்பத்தையும் உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளோம். 6ஜி தொடர்பாக வேகமாகச் செயல்பட்டு வருகிறோம்.
நண்பர்களே,
பாரதத்தில் செமிகண்டக்டர் உற்பத்தியை 50 முதல் 60 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியிருக்கலாம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் பாரதம் அந்த வாய்ப்பையும் தவறவிட்டது. இது பல ஆண்டுகளாகத் தொடர்ந்தது. இன்று, இந்த நிலைமையை நாம் மாற்றியமைத்துள்ளோம்.
நண்பர்களே,
இன்று தேசிய விண்வெளி தினமும் கூட. இந்த சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2014 க்கு முன்பு, நமது விண்வெளி பயணங்கள் குறைவாகவே இருந்தன. இதில் பாரதம் எப்படி பின்தங்கியிருக்க முடியும்? அதனால்தான் விண்வெளித் துறையில் சீர்திருத்தங்களைச் செய்து, அதை தனியார் துறைக்கு அனுமதித்தோம். 1979 முதல் 2014 வரை, பாரதம் 42 விண்வெளி செயற்கைக்கோள் ஏவுதல்களை மட்டுமே மேற்கொண்டது. ஆனால் கடந்த 11 ஆண்டுகளில், 60 க்கும் மேற்பட்ட விண்வெளி செலுத்துதல்கள் நடைபெற்றுள்ளன என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். வரவிருக்கும் காலத்திற்கு இன்னும் பல பயணங்கள் வரிசையாக உள்ளன. ககன்யான் பணி மூலம் பாரதம் தனது விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வருகிறது. இதில், குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லாவின் அனுபவம் நமக்குப் பெரிதும் உதவும்.
நண்பர்களே,
விண்வெளித் துறைக்கு புதிய சக்தியை அளிக்க, அதை அனைத்து கட்டுப்பாடுகளிலிருந்தும் விடுவிப்பது அவசியம். அதனால்தான், முதன்முறையாக, தனியார் பங்கேற்புக்கான தெளிவான விதிகளை நாங்கள் உருவாக்கினோம்.
நண்பர்களே,
இன்று, இந்தியாவின் விண்வெளித்துறை இந்த சீர்திருத்தங்களின் வெற்றியைக் காண்கிறது. 2014-ல், பாரதத்தில் ஒரே ஒரு விண்வெளி புத்தொழில் நிறுவனம் மட்டுமே இருந்தது. இப்போது 300-க்கும் மேற்பட்டவை உள்ளன. மேலும் நமக்குச் சொந்தமாக விண்வெளி நிலையம் இருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.
நண்பர்களே,
நாம் படிப்படியான மாற்றங்களுடன் முன்னேறவில்லை. மாறாக மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் முன்னேறிச் செல்கிறோம். எங்களைப் பொறுத்தவரை, சீர்திருத்தங்கள் கட்டாயத்தின் பேரிலோ அல்லது நெருக்கடியின் பேரிலோ செய்யப்பட்டவை அல்ல. அவை எங்கள் உறுதிப்பாடு!
நண்பர்களே,
சில நாட்களுக்கு முன்புதான், நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்தது. இந்த மழைக்கால கூட்டத்தொடரிலேயே, சீர்திருத்தங்களின் தொடர்ச்சியை நீங்கள் காணலாம். எதிர்க்கட்சிகளால் ஏராளமான இடையூறுகள் இருந்தபோதிலும், சீர்திருத்தங்களுக்கு நாங்கள் முழுமையாக உறுதிபூண்டுள்ளோம்.
நண்பர்களே,
இந்த மழைக்கால கூட்டத்தொடரிலேயே, சுரங்கம் தொடர்பான சட்டங்களிலும் குறிப்பிடத்தக்க திருத்தங்கள் செய்யப்பட்டன. கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் தொடர்பான சட்டங்களும் மாற்றப்பட்டன. பிரிட்டிஷ் காலத்திலிருந்து இந்தச் சட்டங்கள் மாறாமல் தொடர்ந்தன. இப்போது, ஏற்பட்டுள்ள சீர்திருத்தங்கள் இந்தியாவின் நீலப் பொருளாதாரத்தையும் துறைமுகம் சார்ந்த வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். அதேபோல், விளையாட்டுத் துறையிலும் புதிய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
நண்பர்களே,
சாதித்ததில் திருப்தி அடைந்து, "இது போதும், இப்போது ஓய்வெடுக்கலாம்" என்று நினைப்பது நமது எண்ணம் இல்லை. சீர்திருத்தங்களுக்கும் இதுவே பொருந்தும். எதிர்காலத்திற்காக நாங்கள் தொடர்ந்து தயாராகி வருகிறோம், மென்மேலும் நாம் முன்னேற வேண்டும்.
நண்பர்களே,
அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களால் இந்தியாவில் உற்பத்தி அதிகரிக்கும். வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும். மேலும் வாழ்க்கை எளிமை, வணிகம் செய்வதற்கான எளிமை இரண்டும் மேம்படும்.
நண்பர்களே,
இன்று, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு பாரதம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியா, தற்சார்பு இந்தியா ஆகியவையே நமது நோக்கம்.
நண்பர்களே,
அதேபோல், எரிசக்தித் துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தை உலகம் காண்கிறது. 2030-ம் ஆண்டுக்குள், நமது மொத்த மின் திறனில் 50 சதவீதத்தை புதைபடிவமற்ற எரிபொருட்களிலிருந்து உற்பத்தி செய்வோம் என்று நாங்கள் தீர்மானித்திருந்தோம். 2030-ம் ஆண்டிற்கான இலக்கு அதுதான். ஆனால் இந்த இலக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, 2025-ம் ஆண்டிலேயே அடைந்துவிட்டோம்.
நண்பர்களே,
முந்தைய காலங்களில், இறக்குமதியில் அதிக கவனம் செலுத்தப்பட்டன. ஆனால் இப்போது தற்சார்பு பாரதம் ஏற்றுமதியிலும் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும், 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளோம். கடந்த ஆண்டில், உலக அளவில் 800 கோடி தடுப்பூசி டோஸ்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றில் 400 கோடி பாரதத்திலேயே உற்பத்தி செய்யப்பட்டன.
நண்பர்களே,
2014 வரை, பாரதத்தின் ஆட்டோமொபைல் ஏற்றுமதி சுமார் 50,000 கோடி ரூபாயாக இருந்தது. இப்போது, பாரதம் ஒரு வருடத்தில் 1.2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆட்டோமொபைல் பாகங்களை ஏற்றுமதி செய்கிறது. இப்போது, மெட்ரோ ரயில் பெட்டிகள், ரயில் பெட்டிகள் முதல் ரயில் இன்ஜின்கள் வரை அனைத்தையும் ஏற்றுமதி செய்கிறோம்.
நண்பர்களே,
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு, ஆராய்ச்சி என்பது மிகப்பெரிய அடித்தளம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஆராய்ச்சித் துறையில், நமக்கு சரியான மனநிலை தேவை. ஆராய்ச்சியை ஊக்குவிக்க நாங்கள் வேகமாக செயல்பட்டு வருகிறோம். இதற்குத் தேவையான கொள்கைகள் மற்றும் தளங்களில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமைத் திட்டத்தையும் நாங்கள் அங்கீகரித்துள்ளோம்.
நண்பர்களே,
இந்த உச்சிமாநாட்டில், தொழில்துறையைச் சேர்ந்த பல முன்னணி நபர்களும் கலந்து கொள்கிறார்கள். இன்றைய காலத்தின் தேவை என்னவென்றால், தொழில்துறையும் தனியார் துறையும் முன்னேற வேண்டும். குறிப்பாக தூய்மையான எரிசக்தி, குவாண்டம் தொழில்நுட்பம், பேட்டரி சேமிப்பு, மேம்பட்ட பொருட்கள், உயிரி தொழில்நுட்பம் போன்ற துறைகளில், ஆராய்ச்சியில் தங்கள் முயற்சிகளையும் முதலீடுகளையும் அதிகரிக்க வேண்டும்.
நண்பர்களே,
சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் எனும் மந்திரத்துடன், பாரதம் இன்று வளர்ச்சி அடைகிறது. பாரதம் இன்று காலத்தின் போக்கையே வளைக்கும் வலிமையைக் கொண்டுள்ளது.
நண்பர்களே,
உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை சந்திக்க இந்த வாய்ப்பை வழங்கியதற்காக எகனாமிக் டைம்ஸுக்கு நான் நன்றி கூறுகிறேன். இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி!
(Release ID: 2160240)
AD/PLM/RJ
(Release ID: 2160384)