பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பீகார் மாநிலம் கயாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 22 AUG 2025 3:20PM by PIB Chennai

உலகப் புகழ்பெற்ற அறிவுசார்  மற்றும் விடுதலைக்கான புனித நகரமான கயாவை நாங்கள் தலைவணங்குகிறோம்.

விஷ்ணுபாத் கோயில் என்ற புகழ்பெற்ற பூமியில், உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பீகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அவர்களே; பிரபலமான முதல்வர் நிதிஷ் குமார் அவர்களே; மத்திய அமைச்சரவையில் எனது சகாக்கள், ஜிதன் ராம் மஞ்சி அவர்களே, ராஜீவ் ரஞ்சன் சிங் அவர்களே, சிராக் பாஸ்வான் அவர்களே, ராம் நாத் தாக்கூர் அவர்களே, நித்யானந்த் ராய் அவர்களே, சதீஷ் சந்திர துபே அவர்களே, ராஜ் பூஷண் சவுத்ரி அவர்களே; துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி அவர்களே மற்றும் விஜய் குமார் சின்ஹா அவர்களே; பீகார் அரசின் அமைச்சர்களே; என் சக நாடாளுமன்ற உறுப்பினர் உபேந்திர குஷ்வாஹா அவர்களே; இதர நாடாளுமன்ற உறுப்பினர்களே மற்றும் பீகாரின் எனது அன்பான சகோதர சகோதரிகளே!

கயாவின் இந்த நிலம் ஆன்மீகம் மற்றும் அமைதியின் பூமி. பகவான் புத்தர் ஞானம் பெற்ற புனித பூமி, இது. கயாவின் ஆன்மீக மற்றும் கலாச்சார பாரம்பரியம் மிகவும் பழமையானது மற்றும் மிகவும் வளமானது. இங்குள்ள மக்கள் இந்த நகரத்தை கயா என்று மட்டும் அழைக்காமல், கயா ஜி என்று அழைக்க வேண்டும் என்று விரும்பினர். இந்த முடிவுக்காக பீகார் அரசை நான் பாராட்டுகிறேன். கயாவின் விரைவான வளர்ச்சிக்காக பீகாரின் இரட்டை எஞ்சின் அரசு தொடர்ந்து பாடுபடுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

சகோதர சகோதரிகளே,

 

 

இன்றும் கூட, 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் கயா புனித பூமியிலிருந்து ஒரே நாளில் தொடங்கிவைக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இவற்றில் எரிசக்தி, சுகாதாரம் மற்றும் நகர்ப்புற மேம்பாடு தொடர்பான பல முக்கிய திட்டங்கள் அடங்கும். இவை பீகாரின் தொழில்களை வலுப்படுத்தும் மற்றும் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்தத் திட்டங்களுக்காக பீகார் மக்களை நான் வாழ்த்துகிறேன். பீகாரில் சிறந்த சுகாதார வசதிகளுக்காக இன்று ஒரு புதிய மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையமும் இங்கு திறக்கப்பட்டுள்ளது. இப்போது, பீகார் மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சைக்கான மற்றொரு மையமும் கிடைக்கும்.

நண்பர்களே,

ஏழைகளின் வாழ்க்கையை எளிதாக்குவதும், பெண்களின் வாழ்க்கையை எளிதாக்குவதும், மக்களின் ஊழியராக நான் மிகப்பெரிய திருப்தியைக் காணும் விஷயங்களாகும். ஏழைகளுக்கு நிரந்தர வீடு கொடுப்பது போல..

நண்பர்களே,

எனக்கு ஒரு பெரிய உறுதிப்பாடு உள்ளது. ஒவ்வொரு ஏழைக்கும் நிரந்தர வீடு கிடைக்கும் வரை, மோடி மன நிறைவாக இருக்க மாட்டார். இந்த தொலைநோக்குப் பார்வையுடன், கடந்த 11 ஆண்டுகளில் 4 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு ஏழைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பீகாரில் மட்டும், 38 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கயா மாவட்டத்திலும், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் நிரந்தர வீடுகளைப் பெற்றுள்ளன. மேலும் நாங்கள் வீடுகளை - அதாவது வெறும் நான்கு சுவர்களைக் கொடுக்கவில்லை - ஏழைகளுக்கு, அவர்களின் கண்ணியத்தையும் கொடுத்துள்ளோம். இந்த வீடுகள் மின்சாரம், தண்ணீர், கழிப்பறைகள் மற்றும் எரிவாயு இணைப்புகள் போன்ற வசதிகளுடன் வருகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஏழைக் குடும்பங்கள் இப்போது வசதி, பாதுகாப்பு மற்றும் மரியாதையுடன் வாழ்வதற்கான உத்தரவாதத்தைப் பெற்றுள்ளன.

நண்பர்களே,

இன்று, இந்த முயற்சியைத் தொடர்ந்து, பீகாரின் மகத் பகுதியைச் சேர்ந்த 16,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் நிரந்தர வீடுகளைப் பெற்றுள்ளன. இதன் பொருள் தீபாவளி மற்றும் சத் பூஜை கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு இந்த குடும்பங்களுக்கு இன்னும் பிரகாசமாக இருக்கும் என்பதுதான். வீடுகளைப் பெற்ற அனைத்து பயனாளி குடும்பங்களையும் நான் மனதார வாழ்த்துகிறேன். பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் இன்னும் பயனடையாதவர்களுக்கு, ஒவ்வொரு ஏழைக்கும் சொந்தமாக நிரந்தர வீடு கிடைக்கும் வரை வீட்டுவசதிக்கான பிரச்சாரம் தொடரும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

 

நண்பர்களே,

பீகார், சந்திரகுப்த மௌரியர் மற்றும் சாணக்கியரின் பூமி. பாரதம் எதிரிகளால் சவால்களை எதிர்கொண்ட   போதெல்லாம், பீகார், நாட்டின் கேடயமாக நின்றுள்ளது. இந்த மண்ணில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு தீர்மானமும், இந்த மண்ணின் வலிமையைக் கொண்டுள்ளது, இங்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு தீர்மானமும் ஒருபோதும் வீணாகாது.

அதனால்தான் சகோதர சகோதரிகளே,

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தபோது, நமது அப்பாவி குடிமக்களின் மதம் குறித்து கேட்டு, பின் படுகொலை செய்தபோது, பயங்கரவாதிகள் தூசியாகிவிடுவார்கள் என்று நான் இந்த பீகார் நிலத்திலிருந்தே அறிவித்தேன். இன்று, இந்த பீகார் நிலத்திலிருந்து எடுக்கப்பட்ட தீர்மானம் நிறைவேறியதை உலகம் காண்கிறது. உங்களுக்கு நினைவிருக்கலாம், அந்த நேரத்தில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களை அனுப்பி நம் மீது ஏவுகணைகளை ஏவிக்கொண்டிருந்தது, அதே நேரத்தில் பாரதம் அந்த பாகிஸ்தான் ஏவுகணைகளை வைக்கோல் போல காற்றில் பறக்கவிட்டு நொறுக்கிக்கொண்டிருந்தது. பாகிஸ்தானில் இருந்து ஒரு ஏவுகணையால் கூட நமக்கு தீங்கு விளைவிக்க முடியாது.

நண்பர்களே,

பாரதத்தின் பாதுகாப்புக் கொள்கையில் ஆபரேஷன் சிந்தூர் ஒரு புதிய கேடயத்தை வரைந்துள்ளது. இப்போது, யாரும் பயங்கரவாதிகளை பாரதத்திற்குள் அனுப்பி தாக்குதல்களை நடத்தி தப்பிக்க முடியாது. பயங்கரவாதிகள் நிலத்தடியில் ஒளிந்து கொள்ள முயன்றாலும், பாரதத்தின் ஏவுகணைகள் அவர்களை அங்கேயே புதைத்துவிடும்.

நண்பர்களே,

பீகாரின் விரைவான வளர்ச்சி, மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிற்கு மிகப் பெரிய முன்னுரிமையாகும். அதனால்தான் இன்று பீகார் அனைத்து வகையான வளர்ச்சியின் பாதையில் முன்னேறி வருகிறது. கடந்த ஆண்டுகளில், பழைய பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளன, மேலும் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. "லாந்தர் விளக்குகள் பயன்படுத்தப்பட்ட காலத்தில்" விஷயங்கள் எப்படி இருந்தன என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் இந்த பகுதி மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் பிடியில் பீடிக்கப்பட்டிருந்தது. மாவோயிஸ்டுகள் காரணமாக, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு எங்கும் செல்வது கடினமாக இருந்தது. அந்தக் காலத்தில் கயா போன்ற நகரங்கள் இருளில் மூழ்கின. ஆயிரக்கணக்கான கிராமங்களில் மின் கம்பங்கள் கூட இல்லை. லாந்தர் விளக்குகளின் காலம் பீகாரின் எதிர்காலத்தை இருளில் தள்ளியது. கல்வி இல்லை, வேலைவாய்ப்பு இல்லை, மேலும் பல தலைமுறை மக்கள் பீகாரிலிருந்து இடம்பெயர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர்.

 

நண்பர்களே,

ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பீகார் மக்களை தங்கள் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கின்றன. ஏழைகளின் மகிழ்ச்சி, துக்கம், கண்ணியம் அல்லது மரியாதை குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. பீகாரைச் சேர்ந்த மக்கள் தனது மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஒரு காங்கிரஸ் முதல்வர் ஒரு மேடையில் இருந்து வெளிப்படையாக அறிவித்ததை நீங்கள் நினைவில் கொள்ளலாம். பீகார் மக்கள் மீது காங்கிரஸ் காட்டிய ஆழமான வெறுப்பு, அவமதிப்பை ஒருபோதும் மறக்க முடியாது. பீகார் மக்களை காங்கிரஸ் இவ்வளவு மோசமாக நடத்திய பிறகும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.

சகோதர சகோதரிகளே,

பீகாரின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, காங்கிரஸ் மற்றும் இண்டி கூட்டணியின் இந்த வெறுப்பு பிரச்சாரத்திற்கு பதிலளிக்கிறது. பீகாரின் மகன்களும் மகள்களும் இங்கேயே வேலை தேட வேண்டும், கண்ணியமான வாழ்க்கையை வாழ வேண்டும், தங்கள் பெற்றோரை இங்கேயே கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இப்போது பீகாரில் பெரிய திட்டங்கள் வரவிருக்கின்றன. கயா மாவட்டத்தின் தோபியில், பீகாரின் மிகப்பெரிய தொழில்துறை பகுதி உருவாக்கப்பட்டு வருகிறது. கயாவில் ஒரு தொழில்நுட்ப மையமும் நிறுவப்படுகிறது. இன்று பக்சர் அனல் மின் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, அவுரங்காபாத்தில் உள்ள நவிநகர் சூப்பர் அனல் மின் திட்டத்திற்கு நான் அடிக்கல் நாட்டினேன். பாகல்பூரில் உள்ள பிர்பைன்டியில் ஒரு புதிய அனல் மின் நிலையமும் கட்டப்படும். இந்த மின் நிலையங்கள் பீகாரில் மின்சார விநியோகத்தை அதிகரிக்கும். மின்சார உற்பத்தி அதிகரிக்கும்போது என்ன நடக்கும் என்று  உங்களுக்குத் தெரியும். வீடுகளில் மின்சார விநியோகம் அதிகரிக்கிறது, தொழிற்சாலைகளுக்கு அதிக மின்சாரம் கிடைக்கிறது, இது வேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.

நண்பர்களே,

பீகார் இளைஞர்களுக்கு பாதுகாப்பான அரசு வேலைகளை வழங்குவதற்காக நிதிஷ், ஒரு பெரிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இங்கு ஆசிரியர்களை நியமிப்பதில் கூட முழு வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட்டதற்கு நிதிஷ் தான் காரணம்.

நண்பர்களே,

இங்குள்ள இளைஞர்கள் பீகாரிலேயே அதிகபட்ச வேலைவாய்ப்புகளைப் பெறுவதையும், வேலை தேடி இடம்பெயர வேண்டிய கட்டாயத்தில் இல்லை என்பதையும் உறுதி செய்வதற்காக, மத்திய அரசின் ஒரு புதிய திட்டம் பெரும் ஆதரவை வழங்கும். கடந்த வாரம், ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று, நாடு தழுவிய அளவில் பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், நமது இளைஞர்கள் தனியார் துறையில் தங்கள் முதல் வேலையில் சேரும்போது, மத்திய அரசு அவர்களுக்கு நேரடியாக 15,000 ரூபாய் வழங்கும். இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் தனியார் நிறுவனங்களும் அரசிடமிருந்து கூடுதல் நிதி உதவியைப் பெறும். பீகாரில் உள்ள எனது இளம் சகோதர சகோதரிகள் இந்தத் திட்டத்தின் மூலம் பெரிதும் பயனடைவார்கள்.

நண்பர்களே,

காங்கிரஸாக இருந்தாலும் சரி, ராஷ்ட்ரிய ஜனதா தளமாக இருந்தாலும் சரி, அவர்களின் அரசுகள் மக்கள் பணத்தின் உண்மையான மதிப்பை ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, மக்கள் பணம் என்பது அவர்களின் சொந்தக் கருவூலத்தை நிரப்புவதாகும். அதனால்தான் காங்கிரஸ்-ஆர்ஜேடி அரசுகளின் காலத்தில், திட்டங்கள் பல ஆண்டுகளாக முழுமையடையாமல் இருக்கும். ஒரு திட்டம் எவ்வளவு காலம் தாமதமாகிறதோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் பணத்தை வீணடிப்பார்கள். இந்த தவறான அணுகுமுறைக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இப்போது, அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு, கொடுக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை விரைவாக முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்றைய திட்டமும் இதற்கு ஒரு அற்புதமான எடுத்துக்காட்டு. அவுண்டா-சிமாரியா பகுதிக்கு பாலத்துக்கு அடிக்கல் நாட்ட எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, இன்று, உங்கள் ஆசி மற்றும் அன்புடன், இந்தப் பாலத்தைத் திறந்து வைக்கும் வாய்ப்பும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் சாலைகளை இணைப்பது மட்டுமல்லாமல், வடக்கு மற்றும் தெற்கு பீகாரையும் இணைக்கும். காந்தி சேது வழியாக 150 கிலோமீட்டர் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் இப்போது நேரடிப் பாதையைக் கொண்டிருக்கும். இது வர்த்தகத்தை விரைவுபடுத்தும், தொழில்களை மேம்படுத்தும், மேலும் யாத்ரீகர்கள் தங்கள் இடங்களை அடைவதை எளிதாக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடித்தளம் அமைக்கும்போது, அவை நிச்சயமாக நிறைவடையும் - இது உறுதி செய்யப்படுகிறது.

நண்பர்களே,

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரட்டை எஞ்சின் அரசும் இங்கு ரயில்வேயின் வளர்ச்சியில் வேகமாக செயல்பட்டு வருகிறது. அமிர்த பாரத நிலையத் திட்டத்தின் கீழ், கயா ரயில் நிலையம் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. இது விமான நிலையத்தில் உள்ளதைப் போன்ற வசதிகளை பயணிகளுக்கு வழங்கும். இன்று, கயா நகரம் ராஜ்தானி, ஜன் சதாப்தி மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களின் சேவைகளைக் கொண்ட ஒரு நகரமாகும். கயா, சசாரம், பிரயாக்ராஜ் மற்றும் கான்பூரிலிருந்து தில்லிக்கான நேரடி இணைப்பு, பீகாரின் இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குகிறது.

 

சகோதர சகோதரிகளே,

உங்கள் ஆசிகளாலும், நாட்டின் அசைக்க முடியாத நம்பிக்கையாலும், 2014-ல் பிரதமராகத் தொடங்கிய எனது பணிக்காலம் இன்னும் தொடர்கிறது. இத்தனை ஆண்டுகளில், எங்கள் அரசின் மீது ஒரு ஊழல் கறை கூட படவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு, 60-65 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசுகள் ஊழல் வழக்குகளின் நீண்ட பட்டியலைக் கொண்டுள்ளன. மேலும் ஆர்ஜேடியின் ஊழலைப் பொறுத்தவரை, பீகாரில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் இது பற்றித் தெரியும். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தர்க்கரீதியான முடிவுக்குக் கொண்டு செல்ல விரும்பினால், யாரையும் அதன் எல்லைக்கு வெளியே வைத்திருக்கக்கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். யோசித்துப் பாருங்கள் - இன்று, ஒரு சிறிய அரசு ஊழியர் கூட 50 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டால், அவர் தானாகவே இடைநீக்கம் செய்யப்படுவார் என்று சட்டம் கூறுகிறது. அது ஒரு ஓட்டுநராக இருந்தாலும் சரி, ஒரு இளைய எழுத்தராக இருந்தாலும் சரி, ஒரு கடைநிலை ஊழியராக இருந்தாலும் சரி - அவரது வாழ்க்கை என்றென்றும் அழிந்துவிடும். ஆனால் ஒருவர் முதலமைச்சராகவோ, அமைச்சராகவோ அல்லது ஒரு பிரதமராகவோ இருந்தால், சிறையில் அமர்ந்திருக்கும்போதும் அவர் அதிகாரத்தின் இன்பங்களை அனுபவிக்க முடியும். இது எப்படி சாத்தியமாகும்? சிறையில் இருந்து கோப்புகளில் கையெழுத்திடுவதையும், சிறைக்குள் இருந்து அரசின் உத்தரவுகள் எவ்வாறு பிறப்பிக்கப்படுவதையும் நாம் சமீபத்தில் பார்த்தோம். தலைவர்கள் தொடர்ந்து இப்படி நடந்து கொண்டால், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் எப்படி வெற்றி பெற முடியும்?

நண்பர்களே,

அரசியலமைப்பு ஒவ்வொரு அரசு பிரதிநிதியிடமிருந்தும் நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் எதிர்பார்க்கிறது. அரசியலமைப்பின் கண்ணியத்தை நாம் கிழிக்க அனுமதிக்க முடியாது. அதனால்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஊழலுக்கு எதிரான ஒரு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது, அதில் பிரதமரும் கூட அதன் எல்லைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். இந்தச் சட்டம் முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களையும் உள்ளடக்கியது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தவுடன், அது பிரதமராக இருந்தாலும் சரி, முதலமைச்சராக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்த அமைச்சராக இருந்தாலும் சரி, அவர்கள் கைது செய்யப்பட்ட 30 நாட்களுக்குள் ஜாமீன் பெற வேண்டும். ஜாமீன் வழங்கப்படாவிட்டால், 31 ஆம் நாள் அவர்கள் தங்கள் பதவியிலிருந்து விலக வேண்டும். சகோதரர்களே, சொல்லுங்கள் - யாராவது சிறைக்குச் சென்றால், அவர்கள் தங்கள் பதவியை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லையா? அவர்கள் நாற்காலியில் தொடர்ந்து அமர முடியுமா? சிறையில் இருந்து அரசு கோப்புகளில் கையெழுத்திட முடியுமா? சிறையில் இருந்து யாராவது ஒரு அரசை நடத்த முடியுமா? அதனால்தான் இவ்வளவு கடுமையான சட்டத்தை இயற்ற நாங்கள் முன்னேறி வருகிறோம்.

 

ஆனால் நண்பர்களே,

இந்த ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள், இந்தச் சட்டத்தை எதிர்க்கிறார்கள். அவர்கள் கோபமாக இருக்கிறார்கள். ஏன் என்று யாருக்குத்தான்  தெரியாது? பாவம் செய்தவர்கள், தங்கள் குற்றங்களை மற்றவர்களிடமிருந்து மறைக்கலாம், ஆனால் உள்ளுக்குள் ஆழமாக, அவர்கள் என்ன தவறுகளைச் செய்தார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். இதுதான் அவர்கள் அனைவரின் கதை. இந்த ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் தலைவர்களில் சிலர் ஜாமீனில் வெளியே உள்ளனர், சிலர் ரயில்வே ஊழலில் சிக்கி நீதிமன்றங்களைச் சுற்றி ஓடுகிறார்கள். இன்று ஜாமீனில் சுதந்திரமாக சுற்றித் திரிபவர்கள்தான் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறார்கள். சிறையில் அடைக்கப்பட்டால், தங்கள் கனவுகள் அனைத்தும் சிதைந்துவிடும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால்தான், இரவும் பகலும், மோடி மீது எல்லா வகையான அவதூறுகளையும் வீசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மிகவும் கிளர்ச்சியடைந்து, மிகவும் அமைதியற்றவர்களாக இருக்கிறார்கள், இந்த மக்கள் சார்ந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள். அதிகார வெறி கொண்ட தலைவர்கள் ஊழலில் ஈடுபடுவார்கள், சிறைக்குச் சென்ற பிறகும் தங்கள் நாற்காலிகளில் ஒட்டிக்கொள்வார்கள் என்று நமது ராஜேந்திர பாபு, நமது பாபாசாகேப் அம்பேத்கர் போன்றவர்கள் ஒருபோதும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது, கனவிலும் கூட நினைத்திருக்க முடியாது. ஆனால் இப்போது, ஊழல்வாதிகள் சிறைக்குச் செல்வார்கள், அவர்களின் நாற்காலியும் போகும். பாரதத்தை ஊழலற்ற நாடாக மாற்றும் உறுதிப்பாடு இந்த நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் உறுதிப்பாடாகும். இந்த உறுதிப்பாடு நிச்சயமாக நிறைவேறும்.

நண்பர்களே,

செங்கோட்டையிலிருந்து, நான் இன்னொரு ஆபத்தைப் பற்றிப் பேசியிருக்கிறேன் - இந்த ஆபத்து பீகாரிலும் உள்ளது. நாட்டில் ஊடுருவல்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகுந்த கவலைக்குரிய விஷயம். பீகாரின் எல்லை மாவட்டங்களில் மக்கள்தொகை வேகமாக மாறி வருகிறது. அதனால்தான் இந்த நாட்டின் எதிர்காலத்தை ஊடுருவல்காரர்கள் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. பீகார் இளைஞர்களின் வேலைகளைப் பறிக்க ஊடுருவல்காரர்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். பாரத மக்களுக்குச் சொந்தமான வசதிகளை ஊடுருவல்காரர்கள் கொள்ளையடிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த ஆபத்தைச் சமாளிக்க, மக்கள்தொகை இயக்கத்தைத் தொடங்குவதாக நான் அறிவித்துள்ளேன். மிக விரைவில், இந்த இயக்கத்தின் பணி தொடங்கும். மேலும் இந்த நாட்டிலிருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் நாங்கள் விரட்டுவோம். சொல்லுங்கள் - இந்த ஊடுருவல்காரர்கள் அகற்றப்பட வேண்டுமா இல்லையா? ஒரு ஊடுருவல்காரர் உங்கள் வேலையைப் பறித்தால் நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? ஒரு ஊடுருவல்காரர் உங்கள் நிலத்தைக் கைப்பற்றினால் நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? ஒரு ஊடுருவல்காரர் உங்கள் உரிமைகளைப் பறித்தால் நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்களா? பீகார் மக்களே, இந்த ஊடுருவல்காரர்களை ஆதரிப்பவர்களிடம் கவனமாக இருங்கள். ஊடுருவல்காரர்களுடன் யார் நிற்கிறார்கள் என்பது நன்றாகத் தெரியும். காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி போன்ற கட்சிகள் பீகார் மக்களின் உரிமைகளைப் பறித்து ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைக்க விரும்புகின்றன. வாக்கு வங்கி அரசியலுக்காக, காங்கிரசும் ஆர்ஜேடியும் எந்த மட்டத்திற்கும் இறங்கலாம். அதனால்தான் பீகார் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நண்பர்களே,

நாம் பீகாரை காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியின் தீய செயல்களில் இருந்து பாதுகாக்க வேண்டும். பீகாருக்கு இது மிகவும் முக்கியமான நேரம். பீகார்  இளைஞர்களின் கனவுகள் நிறைவேற, பீகார் மக்களின் அபிலாஷைகள் உயர உயர - மத்திய அரசும் நிதிஷும் பீகாரின் நலனுக்காக தோளோடு தோள் நின்று உழைத்து வருகின்றனர். பீகாரில் வளர்ச்சியின் வேகம் தொடர்வதை உறுதி செய்ய, இரட்டை எஞ்சின் அரசு தொடர்ந்து பாடுபடுகிறது. இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் அந்த திசையில் ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். மீண்டும் ஒருமுறை, இந்தத் திட்டங்களுக்காக பீகார் மக்களுக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள்

 

பாரத் மாதா கி ஜெய்!

பாரத் மாதா கி ஜெய்!

பாரத் மாதா கி ஜெய்!

பாரத் மாதா கி ஜெய்!

 

மிக்க நன்றி.

*****


(Release ID: 2159753)

AD/BR/SG


(Release ID: 2160094)