பிரதமர் அலுவலகம்
மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி ரூ.5,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
கொல்கத்தா போன்ற நகரங்கள் இந்தியாவின் வரலாறு மற்றும் அதன் எதிர்காலத்தின் வளமான அடையாளத்தைக் குறிக்கின்றன: பிரதமர்
உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற இந்தியா முன்னேறி வருவதால், டம் டம் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்கள் இந்தப் பயணத்தில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும்: பிரதமர்
இந்தியாவிற்கு 21 ஆம் நூற்றாண்டு போக்குவரத்து அமைப்பு தேவை. எனவே, இன்று நாடு முழுவதும், ரயில்வே முதல் சாலைகள் வரை, மெட்ரோ ரயில் முதல் விமான நிலையங்கள் வரை நவீன போக்குவரத்து வசதிகள் மேம்படுத்தப்படுவது மட்டுமல்லாமல், தடையற்ற இணைப்பை உறுதி செய்வதற்காக ஒருங்கிணைக்கப்படுகின்றன: பிரதமர்
Posted On:
22 AUG 2025 6:14PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் ரூ.5,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கிவைத்தார், மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மேற்கு வங்கத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறினார். நோபராவிலிருந்து ஜெய்ஹிந்த் விமான நிலையம் வரையிலான கொல்கத்தா மெட்ரோ ரயில் பயணத்தின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட திரு. மோடி, இந்தப் பயணத்தின் போது, பல்வேறு சக ஊழியர்களுடன் கலந்துரையாடியதாகவும், கொல்கத்தாவின் பொதுப் போக்குவரத்து அமைப்பின் நவீனமயமாக்கல் குறித்து அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். ஆறு வழி கோனா உயர்மட்ட விரைவுச் சாலைக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் திட்டங்களுக்காக, கொல்கத்தா மக்களுக்கும் மேற்கு வங்கத்தின் அனைத்து மக்களுக்கும் அவர் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
கொல்கத்தா போன்ற நகரங்கள் இந்தியாவின் வரலாறு மற்றும் அதன் எதிர்காலத்தின் வளமான உருவகமாகும். இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி முன்னேறும்போது, டம் டம் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்று திரு. மோடி கூறினார். இன்றைய திட்டத்தின் நிகழ்வு நவீன இந்தியா அதன் நகர்ப்புற நிலப்பரப்பை எவ்வாறு மாற்றுகிறது என்பதற்கு ஒரு சான்றாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். மின்சார சார்ஜிங் முனையங்கள் மற்றும் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பசுமை இயக்கத்தை ஊக்குவிக்க இந்திய நகரங்கள் முழுவதும் முயற்சிகள் நடந்து வருவதாகவும், 'கழிவுகளிலிருந்து செல்வம்' முயற்சியின் கீழ், நகரங்கள் இப்போது நகர்ப்புற கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். மெட்ரோ சேவைகள் விரிவடைந்து வருவதையும், மெட்ரோ வலையமைப்புகள் விரிவுபடுத்தப்படுவதையும் எடுத்துரைத்த திரு. மோடி, இந்தியா தற்போது உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ வலையமைப்பைக் கொண்டிருப்பதில் பெருமிதம் தெரிவித்தார். 2014- க்கு முன்பு, நாட்டில் 250 கிலோமீட்டர் மெட்ரோ வழித்தடங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று, இந்தியாவில் மெட்ரோ கட்டமைப்பு 1,000 கிலோமீட்டருக்கும் மேல் விரைவாக விரிவடைந்துள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். கொல்கத்தாவும் அதன் மெட்ரோ அமைப்பின் தொடர்ச்சியான விரிவாக்கத்தைக் கண்டுள்ளது என்று அவர் கூறினார். கொல்கத்தாவின் மெட்ரோ ரயில் கட்டமைப்பில் சுமார் 14 கிலோமீட்டர் புதிய பாதைகள் சேர்க்கப்படுவதாகவும், ஏழு புதிய நிலையங்கள் கொல்கத்தா மெட்ரோவுடன் ஒருங்கிணைக்கப்படுவதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்த வளர்ச்சிகள் அனைத்தும் கொல்கத்தா மக்களின் வாழ்க்கை வசதியையும் பயண வசதியையும் மேம்படுத்தும் என்று அவர் உறுதிப்படுத்தினார்.
21-ம் நூற்றாண்டில், அதற்குத் தேவையான போக்குவரத்து அமைப்புகள் அவசியமாகிறது. எனவே, இன்று நாடு முழுவதும் ரயில்வே முதல் சாலைகள் வரை, மெட்ரோ முதல் விமான நிலையம் வரை, நவீன போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது மற்றும் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துக்கான இணைப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகருக்கு போக்குவரத்துக்கான இணைப்பை ஏற்படுத்துவது தொடர்பான முயற்சிகள் மட்டுமின்றி மக்கள் தங்களது வீடுகளுக்கு அருகிலேயே தடையற்ற போக்குவரத்து வசதிகள் பெறுவதை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த தொலைநோக்குப் பார்வையின் கீழ் கொல்கத்தாவில் பன்முனை மாதிரி போக்குவரத்து இணைப்பிற்கான நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாட்டில் மிகவும் பரபரப்பான இரண்டு ரயில் நிலையங்களான ஹவுரா மற்றும் ஷீல்டா இடையே தற்போது மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இதன் காரணமாக இந்த இரு ரயில் நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் ஒன்றரை மணியிலிருந்து சில நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஹவுரா ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை பல்முனை மாதிரிப் போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். முன்னதாக பயணிகள் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ரயில்களில் பயணம் செய்வதற்காக நெடுந்தூரம் பயணிக்க வேண்டிய சூழல் இருந்ததாகவும் சுரங்கப்பாதைகள் அமைப்பதன் மூலம் இதற்கான பயண நேரம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். கொல்கத்தா விமான நிலையம் தற்போது மெட்ரோ ரயில் சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவித்த பிரதமர், பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மெட்ரோ ரயில் மூலம் எளிதில் விமான நிலையத்தைச் சென்றடைய முடியும் என்று கூறினார்.
மேற்கு வங்க மாநிலத்தின் வளர்ச்சிக்கான ஒவ்வொரு வாய்ப்பையும் மத்திய அரசு, செயல்படுத்தி வருவதாகவும், அம்மாநிலத்தில் உள்ள ரயில்போக்குவரத்து சேவைகள் 100 சதவீதம் மின்மயமாக்கப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். புருளியா - ஹவுரா இடையேயான புறநகர் ரயில்சேவை வேண்டும் என்று அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை சுட்டிக்காட்டிய அவர், மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அவை விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது பல்வேறு வழித்தடங்களில் 9 வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருவதுடன் தெரிவித்த அவர், கூடுதலாக இரண்டு அம்ரித் பாரத் ரயில் சேவைகளும் அம்மாநில மக்களின் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 11 ஆண்டுகளில், மத்திய அரசு இந்தப் பகுதியில் பல முக்கிய நெடுஞ்சாலைத் திட்டங்களை நிறைவு செய்துள்ளது என்று கூறிய பிரதமர், பல உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டினார். ஆறு வழி கோனா விரைவுச் சாலைப் பணிகள் நிறைவடைந்தவுடன், துறைமுகத்திற்கான போக்குவரத்து இணைப்பு கணிசமாக மேம்படும் என்று அவர் எடுத்துரைத்தார். இந்த மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து இணைப்பு, கொல்கத்தாவுக்கும் ஒட்டுமொத்த மேற்கு வங்கத்துக்கும் சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்தும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.
மேற்கு வங்க ஆளுநர் டாக்டர் சி.வி. ஆனந்த போஸ், மத்திய அமைச்சர்கள் திரு சாந்தனு தாக்கூர், திரு ரவ்னீத் சிங் பிட்டு, டாக்டர் சுகந்தா மஜும்தார் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னணி
உலகத் தரத்திலான உள்கட்டமைப்பு வசதிகளுடன் நகர்ப்புற போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில், கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் சேவைகளை பிரதமர் தொடங்கி வைத்தார். 13.61 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள புதிய மெட்ரோ வழித்தடத்தில் புதிய மெட்ரோ ரயில் சேவைகளை அவர் தொடங்கி வைத்தார். பின்னர், ஜெசோ சாலை மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்ற அவர், நொவாப்பாரா – ஜெய்ஹிந்த் பிமான் பந்தர் மெட்ரோ ரயில் சேவையை, ஜெசோ சாலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து தொடங்கி வைத்தார். மேலும், ஷீல்டா - எஸ்ப்ளனேடு மற்றும் பெலிகத்தா – ஹெமந்தா முக்காபாத்தியாயா மெட்ரோ ரயில் சேவைகளையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதனையடுத்து ஜெசோ சாலை மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ஜெய்ஹிந்த் பிமன் பந்தர் மெட்ரோ ரயில் நிலையம் வரை பயணம் செய்து ஜெசோ ரயில் நிலையத்திற்கு திரும்பினார்.
பின்னர் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், ஹவுரா மெட்ரோ ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுரங்கப் பாதை மற்றும் மெட்ரோ வழித்தடங்களை தொடங்கி வைத்தார். நொவாப்பாரா – ஜெய்ஹிந்த் பிமன் பந்தர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை, அங்குள்ள விமான நிலையத்திற்கு எளிதில் செல்ல வகை செய்கிறது. ஷீல்டா – எஸ்ப்ளனேடு இடையேயான மெட்ரோ ரயில் சேவை, பயண நேரத்தை 40 நிமிடத்திலிருந்து 11 நிமிடமாகக் குறைக்கிறது. பெலிகத்தா – ஹெமந்தா முக்காபாத்தியாயா இடையேயான மெட்ரோ ரயில் நிலையங்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையேயான போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் முக்கிய ரயில் நிலையங்களாக உள்ளன. இந்தப் புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்கள் கொல்கத்தாவில் பரபரப்பான பகுதிகளுக்கு இடையே போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவதுடன் பயண நேரத்தையும் வெகுவாக குறைக்க உதவுகிறது. இந்தப் புதிய ரயில் சேவைகள், அன்றாடம் லட்சக்கணக்கான ரயில் பயணிகளுக்கு பல்தட போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இப்பகுதியில் சாலைக் கட்டமைப்புகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் 1,200 கோடி ரூபாய் செலவில், 7.2 கிலோமீட்டர் தொலைவிற்கு 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ள கோனா விரைவுச் சாலைக்கான கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இது ஹவுரா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகள் மற்றும் கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு சாலைப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இப்பகுதியில் சுற்றுலா வர்த்தகம், போன்ற பொருளாதார நடவடிக்கைகளுக்கும் உத்வேகம் அளிப்பதுடன் பயண நேரத்தையும் வெகுவாகக் குறைக்கும்.
----
(Release ID: 2159869)
AD/PKV/PLM/SV/AG/DL
(Release ID: 2159914)
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada