பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநிலம் கயாவில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் முடிவுற்ற திட்டங்களை தொடங்கிவைத்தார்

கயா தொன்மையான மற்றும் வளமையான ஆன்மீக கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது: பிரதமர்

ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் பாதுகாப்பு உத்திக்கு புதிய வழியை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர்

விரைவான வளர்ச்சியடைந்து வரும் மாநிலமாக பீகாரை உருவாக்குவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணித் தலைமையிலான மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது: பிரதமர்

எவ்வித விலக்குமின்றி நாட்டிற்குள் ஊடுருவியவர்கள் அனைவரும் வெளியேற்றப்படுவார்கள்: பிரதமர்

Posted On: 22 AUG 2025 1:52PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, பீகார் மாநிலம் கயாவில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் முடிவுற்ற திட்டங்களையும் இன்று தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், விஷ்ணுபாத் கோவில் அமைந்துள்ள மகத்தான இடமாகவும், ஞானம், சுதந்திரம் ஆகியவற்றுக்கான புனிதத் தலமாகவும் திகழும் கயாவிற்கு, வணக்கம் செலுத்துவதுடன் அங்கு வசிக்கும் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். ஆன்மீகம் மற்றும் அமைதிக்கான தலமாக கயா திகழ்கிறது என்று அவர் கூறினார். இந்தப் புனிதமான மண்ணில் புத்தர் ஞானோதயம் பெற்று உன்னத நிலையை அடைந்ததாகக் குறிப்பிட்டார். கயா நகரம் வளமான மற்றும் தொன்மையான  ஆன்மீகம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் வாழ்த்து தெரிவிக்கும் போது கயாவை மிகுந்த மரியாதையுடன் குறிப்பிடுவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இத்தகைய உணர்வுபூர்வமான வகையில் மரியாதை செலுத்துவதற்காக பீகார் மாநில அரசுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார். மத்திய அரசும், பீகார் மாநில அரசும், கயாவின் விரைவான வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.

புனித நகரமான கயாவிலிருந்து இன்று ஒரே நாளில் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற திட்டங்கள் அனைத்தும் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். எரிசக்தி, சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு உள்ளிட்ட முக்கிய துறைகளில் வளர்ச்சித் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். அரசின் இத்தகைய முன்முயற்சிகள் பீகார் மாநிலத்தின் தொழில்துறை திறனை வலுப்படுத்துவதுடன் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது என்று அவர் கூறினார். இது போன்ற மாற்றங்களை உருவாக்கும் திட்டங்கள், இம்மாநிலத்தில் செயல்படுத்தப்படுவதற்காக அம்மாநில மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.  இம்மாநிலத்தில் சுகாதார சேவைகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில், மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையமும் இன்று தொடங்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இதன் மூலம் இம்மாநில மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சைக்கான கூடுதல் வசதிகளும் கிடைக்கும் என்று அவர் கூறினார்.

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் உள்ள இடர்பாடுகளைக் களைவதிலும், பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும், மக்கள் சேவகனாக செயல்படுவது தனக்கு மிகுந்த மன திருப்தியை அளிப்பதாக  உள்ளது என்று அவர் கூறினார். ஏழை மக்களுக்கு கான்கீரிட் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளதாக அவர் தெரிவித்தார். தேவை உள்ள ஒவ்வொரு ஏழை நபருக்கும் வீடுகள் கிடைப்பது உறுதியாகும் வரை தாம் ஓயப்போவதில்லை என்று அவர் உறுதிபட  தெரிவித்தார். இதே தீர்மானத்துடன் கடந்த 11 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஏழை மக்களுக்கான நான்கு கோடி கான்கீரிட் வீடுகள் கட்டப்பட்டுள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். பீகார் மாநிலத்தில் மட்டும் 38 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும், கயா மாவட்டத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் கான்கீரிட் வீடுகளைப் பெற்றுள்ளதாகவும்  பிரதமர் குறிப்பிட்டார். இது வசிப்பதற்கான வீடாக இருப்பது மட்டுமின்றி ஏழை மக்கள் கண்ணியமாக வாழ்வதற்கான அடையாளமாகவும் உள்ளது என்று அவர் கூறினார். இந்த வீடுகள் மின்சாரம், குடிநீர், கழிவறைகள் மற்றும் சமையல் எரிவாயு இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளதாகவும் ஏழைக் குடும்பங்களுக்கு பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் வசதிகளுடன் கூடிய வாழ்க்கை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

அரசின் இத்தகைய முன்முயற்சிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் பீகார் மாநிலத்தில் உள்ள மஹத் பகுதியில் வசிக்கும் 16,000-க்கும் அதிகமான குடும்பங்கள் கான்கீரிட் வீடுகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். எனவே இந்த ஆண்டு தீபாவளி மற்றும் சத் பூஜை கொண்டாட்டங்கள் தங்களது வீடுகளில் மிகுந்த மகிழ்ச்சியுடன்  கொண்டாடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். வீடுகளைப் பெற்றுள்ள அனைத்துப் பயனாளிகளுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், வீடுகளைப் பெறுவதற்கு காத்திருக்கும் மக்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் ஒவ்வொரு ஏழை மக்களும் சொந்த வீடு பெறும் வரை இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று பிரதமர் உறுதிபடக் கூறினார்.

பீகார் மாநிலம் சந்திரகுப்த மெளரியர் மற்றும் சாணக்கியர் வாழ்ந்த நிலம் என்றும் எதிரிகளிடமிருந்து சவால்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் நாட்டிற்கான கேடயமாக பீகார் மாநிலம் திகழ்கிறது என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தீர்மானமும் முழுமையாக நிறைவடையாமல் இருந்தது இல்லை என்று பிரதமர் கூறினார். காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அவர்களது மதங்களைக் கேட்டறிந்த பின்னரே, அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டினார். இதனையடுத்து, தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு பீகார் மண்ணிலிருந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அப்போது அவர் நினைவு கூர்ந்தார். இன்று பீகார் மண்ணிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இந்த உறுதியான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை உலக நாடுகள் கவனித்து வந்துள்ளதாக  கூறினார். பாகிஸ்தானிலிருந்து இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏவப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகனைகள் நடுவானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டதை அப்போது அவர் நினைவு கூர்ந்தார். பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட ஒரு ஏவுகனை கூட இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இந்தியாவின் பாதுகாப்பு உத்திக்குப் புதிய பாதையை வகுத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கான அனுப்பப்பட்ட தீவிரவாதிகள் ஒருவரும் தப்பிவிட முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக உறுதிபட தெரிவித்தார். தீவிரவாதிகள் பூமியின் எந்த ஆழத்தில் மறைந்திருந்தாலும் இந்தியாவின் ஏவுகனைகள் அவர்கள் பதுங்கியுள்ள இடங்களைத் தாக்கி அழிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

பீகார் மாநிலத்தின் விரைவான வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருவதாகவும் மத்திய – மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக அம்மாநிலம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார். அண்மை ஆண்டுகளில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், வளர்ச்சிக்கான புதிய பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். லாந்தர்ன் விளக்குகள் பயன்படுத்தப்பட்ட காலத்தில் இருந்த கடுமையான சூழல் குறித்து எடுத்துரைத்த பிரதமர், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் பிடியில் அப்பகுதியில் இருந்ததாகவும், அப்போது அங்கு சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, மக்கள் நடமாட்டம் மிகக் கடினமான சூழலாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். இந்த இருளான சூழலிலிருந்து கயா நகரம் தற்போது விடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.   ஆயிரக்கணக்கான கிராமங்களில் தெருவிளக்குகள் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை இருந்ததாக அவர் கூறினார். அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள், பீகார் மாநிலத்தின் எதிர்காலத்தை இருள் சூழ்ந்த மாநிலமாக மாற்றியிருந்ததாக அவர் கூறினார். மேலும் இம்மாநிலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு இல்லாத நிலை இருந்ததாகவும் இதன் காரணமாக அம்மாநிலத்தில் தலைமுறைகளாக வசித்து வந்த மக்கள், பிற இடங்களுக்கு புலம் பெயர வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டதாகவும் கூறினார்.

 

எதிர்கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பீகார் மாநில மக்களை வாக்கு வங்கியாக கருதி வந்ததாக கூறினார். அவர்கள் ஏழை மக்களின் மகிழ்ச்சி மற்றும் வேதனை குறித்து கவலை கொள்ளவில்லை என்றும் ஏழை மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கை மற்றும் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்று பிரதமர் குறை கூறினார்.  ஆட்சிப் பொறுப்பில் இருந்த முன்னாள் முதலமைச்சர் ஒருவர், பீகார் மாநிலத்திலிருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் அம்மாநிலத்திற்கு திரும்ப அனுமதிக்க முடியாது என்று மக்கள் மத்தியில் வெளிப்படையாக அறிவித்திருந்ததை பிரதமர் சுட்டிக்காட்டினார். ஏழை மக்களுக்கு கடன் வழங்கியவர்கள், அம்மக்களை துன்பத்துக்கு ஆளாக்கியதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் கடுமையாகவும் விமர்சித்தார். எதிர்க்கட்சிகளின் இத்தகைய தவறான செயல்பாடுகள் காரணமாக அம்மாநிலத்தின் வளர்ச்சி ஆழ்ந்த உறக்க நிலைக்கு சென்றதாக பிரதமர் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி கூட்டணிகளின் பிளவுபடுத்தும் பிரச்சாரத்திற்கு தற்போதைய பீகார் அரசு பதிலளித்து வருவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார். பீகாரின் மகன்கள் மற்றும் மகள்கள் மாநிலத்திற்குள் வேலைவாய்ப்பு பெறுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பீகார் முழுவதும் பெரிய திட்டங்கள் தற்போது உருவாக்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டிய திரு. மோடி, பீகாரில் மிகப்பெரிய தொழில்துறை பகுதி கயா மாவட்டத்தின் தோபியில் நிறுவப்பட்டு வருவதாகவும், கயாவில் ஒரு தொழில்நுட்ப மையமும் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இன்றைய பக்சர் அனல் மின் நிலையத்தின் திறப்பு விழாவையும் அவர் குறிப்பிட்டார். சில மாதங்களுக்கு முன்பு, அவுரங்காபாத்தில் நபிநகர் சூப்பர் அனல் மின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதை நினைவு கூர்ந்த திரு. மோடி, பாகல்பூரில் உள்ள பிர்பைன்டியில் ஒரு புதிய அனல் மின் நிலையம் கட்டப்படும் என்றும் கூறினார். இந்த மின் உற்பத்தி நிலையங்கள் பீகாரில் மின்சார விநியோகத்தைக் கணிசமாக அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். அதிகரிக்கப்படும் மின் உற்பத்தி வீடுகளில் மேம்பட்ட மின்சார விநியோகத்திற்கும், தொழில்களுக்கு அதிக விநியோகத்திற்கும் வழிவகுக்கும் என்று கூறிய  திரு. மோடி, இந்த எரிசக்தி உள்கட்டமைப்பின் விரிவாக்கம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் கூறினார்.

பீகார் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைகளை வழங்குவதற்கான ஒரு பெரிய பிரச்சாரத்தை முதலமைச்சர்  திரு. நிதிஷ் குமார் தொடங்கி வைத்துள்ளதாகக் கூறிய திரு. மோடி, திரு  நிதிஷ் குமாரின் தலைமையின் காரணமாகவே மாநிலத்தில் ஆசிரியர் பணியமர்த்தல் முழு வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். பீகாரில் அதிகபட்ச எண்ணிக்கையிலான இளைஞர்கள் வேலைக்காக இடம்பெயராமல், மாநிலத்திலேயே வேலைவாய்ப்பு பெறுவதை உறுதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மத்திய அரசின் புதிய முயற்சி இந்த இலக்கை கணிசமாக ஆதரிக்கும் என்பதை எடுத்துரைத்த பிரதமர், தமது சுதந்திர தின உரையில், பிரதமரின் வளர்ச்சியடைந்த பாரதம் வேலைவாய்ப்பு திட்டம் அறிவிக்கப்பட்டதாகக் கூறினார். இந்தத் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் தனியார் துறையில் தங்கள் முதல் வேலையில் சேரும் போது,  மத்திய அரசு அவர்களுக்கு நேரடியாக ரூ 15,000 வழங்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் தனியார் நிறுவனங்களும் நிதி உதவி பெறும் என்றும் அவர் கூறினார். இந்தத் திட்டம் பீகார் இளைஞர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று பிரதமர் உறுதிப்படுத்தினார்.

அரசின் நிதியை ஒருபோதும் மதிப்பதில்லை என்று எதிர்க்கட்சிகளையும் அவற்றின் அரசுகளையும் விமர்சித்த திரு. மோடி, அவர்களுக்கு, பொது நிதி என்பது அவர்களின் சொந்தக் கருவூலத்தை நிரப்புவதற்கான ஒரு வழிமுறை மட்டுமே என்று கூறினார். எதிர்க்கட்சிகளின் ஆட்சியில் திட்டங்கள் பல ஆண்டுகளாக முழுமையடையாமல் இருந்தன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஒரு திட்டம் எவ்வளவு காலம் தாமதமானதோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் அதிலிருந்து பணம் சம்பாதித்தனர். இந்தக் குறைபாடுள்ள மனநிலையை இப்போது தமது அரசாங்கம் மாற்றியுள்ளது என்று பிரதமர் கூறினார். அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு, பணிகளை விரைவாக முடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.  இந்த அணுகுமுறைக்கு ஒரு உதாரணமாக, இன்றைய திட்டத்தை மேற்கோள் காட்டிய பிரதமர், அவுண்டா-சிமாரியா பகுதிக்கு அவர் அடிக்கல் நாட்டியதை நினைவு கூர்ந்தார், இப்போது அதை தாமே திறந்து வைப்பதாகக் குறிப்பிட்டார். இந்தப் பாலம் சாலைகளை இணைப்பதுடன் மட்டுமல்லாமல், வடக்கு மற்றும் தெற்கு பீகாரையும் இணைக்கும் என்று அவர் கூறினார். காந்தி சேது வழியாக முன்பு 150 கிலோமீட்டர் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் இப்போது நேரடி பாதையைக் கொண்டிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இது வர்த்தகத்தை துரிதப்படுத்தும், தொழில்களை வலுப்படுத்தும். மேலும்,  யாத்ரீகர்களுக்கு பயணத்தை எளிதாக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். தங்கள் அரசின்  கீழ் தொடங்கப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் நிச்சயம் நிறைவடையும் என்று அவர் உறுதியுடன் கூறினார்.

பீகாரில் ரயில்வே போக்குவரத்து வளர்ச்சியை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைவாக செயல்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். அமிர்த பாரத நிலையத் திட்டத்தின் கீழ், பயணிகளுக்கு விமான நிலையம் போன்ற வசதிகளை வழங்குவதற்காக கயா ஜி ரயில் நிலையம் நவீனமயமாக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.  கயா இப்போது ராஜ்தானி, ஜன் சதாப்தி மற்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்களை அணுகக்கூடிய நகரமாக உள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார். கயா ஜியிலிருந்து சசாரம், பிரயாக்ராஜ் மற்றும் கான்பூர் வழியாக தில்லிக்குச் செல்லும்  நேரடி ரயில் இணைப்பு பீகாரின் இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

2014 ஆம் ஆண்டு பிரதமராக தமது பதவிக் காலத்தைத் தொடங்க உதவிய மக்களின்  ஆசீர்வாதங்களுக்கும், நாட்டின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கும் நன்றி தெரிவித்த திரு மோடி, இத்தனை ஆண்டுகளில், தமது அரசில் ஒரு ஊழல் கறை கூட காணப்படவில்லை என்பதைப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.  இதற்கு நேர்மாறாக, சுதந்திரத்திற்குப் பிறகு ஆறு முதல் ஆறரை தசாப்தங்கள் ஆட்சி செய்த எதிர்க்கட்சி அரசுகள், ஊழல் வழக்குகளின் நீண்ட பட்டியலைக் கொண்டுள்ளன என்றும், எதிர்க்கட்சிகளின் ஊழல், பீகாரில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தை அதன் தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்ல, யாரும் நடவடிக்கையின் எல்லைக்கு வெளியே இருக்கக்கூடாது என்று பிரதமர் தெளிவாகக் கூறினார். ஒரு இளைய அரசு ஊழியர் கூட 48 மணி நேரம் காவலில் வைக்கப்பட்டால் தானாகவே இடைநீக்கம் செய்யப்படுவார் என்ற தற்போதைய சட்டத்தை அவர் சுட்டிக்காட்டினார். ஒரு முதலமைச்சர் அல்லது அமைச்சர் சிறையில் இருக்கும்போது கூட அதிகார சலுகைகளை எவ்வாறு அனுபவிக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். சிறையில் இருந்து நேரடியாக கோப்புகளில் கையெழுத்திடப்பட்டு அதிகாரப்பூர்வ உத்தரவுகள் வழங்கப்பட்ட சமீபத்திய நிகழ்வுகளை அவர் மேற்கோள் காட்டினார்.  இத்தகைய அரசியல் தலைவர்களின் ஆலோசனைப்படி, ஊழலுக்கு எதிரான போராட்டத்தை எவ்வாறு திறம்பட முன்னெடுக்க முடியும் என திரு மோடி வினவினார்.

இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு பொது பிரதிநிதியிடமிருந்தும் நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் எதிர்பார்க்கிறது என்பதை வலியுறுத்திய பிரதமர், அரசியலமைப்பின் கண்ணியத்தைக் குறைக்க  அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார். நாட்டின் பிரதமருக்கும் கூட பொருந்தும் வகையில் கடுமையான ஊழல் எதிர்ப்புச் சட்டத்தை தமது அரசு கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களும் இந்தச் சட்டத்தின் கீழ் வருவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார். இதை மேலும் விளக்கிய திரு. மோடி, இந்தச் சட்டம் இயற்றப்பட்டவுடன், கைது செய்யப்பட்ட எந்தவொரு பிரதமர், முதலமைச்சர் அல்லது அமைச்சர் 30 நாட்களுக்குள் ஜாமீன் பெற வேண்டும் என்றும் கூறினார். ஜாமீன் வழங்கப்படாவிட்டால், அவர்கள் 31 ஆம் நாள் தங்கள் பதவியை காலி செய்ய வேண்டும். இதுபோன்ற கடுமையான சட்டத்தை இயற்றும் நோக்கத்துடன் அரசு முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்தச் சட்டத்தை எதிர்த்ததற்காக எதிர்க்கட்சிகளை விமர்சித்த திரு. மோடி, அவர்களின் கோபம் பயத்திலிருந்து உருவாகிறது - தவறு செய்தவர்கள் அவற்றை மற்றவர்களிடமிருந்து மறைக்கக்கூடும், ஆனால் அவர்களே தங்கள் செயல்களை அறிந்திருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில தலைவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர் என்றும், மற்றவர்கள் ஊழல் தொடர்பான சட்ட நடவடிக்கைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர் என்றும், இந்த நபர்கள் சிறைக்குச் சென்றால், தங்கள் அரசியல் கனவுகள் சிதைந்துவிடும் என்று அஞ்சுகிறார்கள் என்றும் அவர் கூறினார். அதனால்தான் அவர்கள் முன்மொழியப்பட்ட சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றும் அவர் கூறினார். ராஜேந்திர பாபு மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் போன்ற தலைவர்கள், அதிகார வெறி கொண்ட நபர்கள் ஊழல் செய்து சிறையில் இருக்கும்போது கூட பதவியில் நீடிப்பார்கள் என்று ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள் என்று பிரதமர் கூறினார்.  புதிய சட்டத்தின் கீழ், ஊழல்வாதிகள் சிறைக்குச் செல்வது மட்டுமல்லாமல், தங்கள் அதிகாரப் பதவிகளையும் இழப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.  “இந்தியாவை ஊழலில் இருந்து விடுவிப்பதற்கான உறுதியானது கோடிக்கணக்கான குடிமக்களின் கூட்டு உறுதிப்பாடாகும் - மேலும் இந்த உறுதி நிறைவேறும்” என்று பிரதமர் கூறினார்.

செங்கோட்டையில் இருந்து ஒரு தீவிரமான கவலையை எழுப்பியதாக குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, நாட்டில் ஊடுருவல்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மிகுந்த கவலைக்குரியது என்று குறிப்பிட்டார். பீகாரின் எல்லை மாவட்டங்களின் மக்கள்தொகை விவரம் வேகமாக மாறி வருவதாகவும், ஊடுருவல்காரர்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க விடக்கூடாது என்பதில் தங்கள் அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். பீகாரின் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை ஊடுருவல்காரர்கள் பறிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார். இந்திய மக்களுக்கான வசதிகள் ஊடுருவல்காரர்களால் கொள்ளையடிக்கப்படக் கூடாது என்றும் அவர் கூறினார். இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள, மிக விரைவில் நடவடிக்கைகள் தொடங்கும் எனவும் மக்கள்தொகை ஆய்வுத் திட்டம் தொடங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார். இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள, ஊடுருவல்காரர்களை ஆதரிப்பவர்களுக்கு எதிராக பீகார் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பீகாரின் உரிமைகளைப் பறித்து மக்களை ஊடுருவல்காரர்களிடம் ஒப்படைக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக திரு நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார். திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளுக்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும், அந்தக் கட்சிகள் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருப்பதாக அவர் கூறினார். பீகார் மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

எதிர்க்கட்சிகளின் தீய நோக்கங்களிலிருந்து பீகார் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய திரு நரேந்திர மோடி, பீகாருக்கு இது மிகவும் முக்கியமான நேரம் என்று குறிப்பிட்டார். பீகார் இளைஞர்களின் கனவுகள் நிறைவேறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். பீகார் மக்களின் விருப்பங்களுக்கு புதிய சிறகுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த நோக்கத்திற்காக மத்திய அரசு திரு நிதிஷ் குமாருடன் தோளோடு தோள் சேர்ந்து செயல்பட்டு வருவதாக எடுத்துரைத்த பிரதமர், பீகாரில் வளர்ச்சி வேகத்தை பராமரிக்க, மத்திய - மாநில அரசுகள் தொடர்ந்து கடினமாக உழைத்து வருவதாகவும், இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் இந்த திசையில் ஒரு முக்கியமான படியாகும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.

பீகார் ஆளுநர் திரு ஆரிஃப் முகமது கான், பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார், மத்திய அமைச்சர்கள் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், திரு ஜிதன் ராம் மஞ்சி, திரு கிரிராஜ் சிங், திரு சிராக் பாஸ்வான், திரு நித்யானந்த் ராய், திரு ராம் நாத் தாக்கூர், டாக்டர் ராஜ் பூஷண் சவுத்ரி, திரு சதீஷ் சந்திர துபே உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பின்னணி

போக்குவரத்துக்கான இணைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி, கங்கை நதியின் மேல் தேசிய நெடுஞ்சாலை எண் 31-ல் 1.86 கிலோ மீட்டர் நீள 6 வழிச்சாலையை உள்ளடக்கிய, 1,870 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 8.15 கிலோ மீட்டர் நீளமுள்ள அவுண்டா – சிமாரியா மேம்பாலத்தை திறந்து வைத்தார். இது பாட்னாவில் உள்ள முகாமா பெகுசராய் இடையே நேரடி போக்குவரத்துக்கான இணைப்பை வழங்குகிறது. பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

இந்தப் புதிய மேம்பாலம் ஏற்கனவே பாழடைந்து மோசமான நிலையில் உள்ள ரயில் மற்றும் சாலை மேம்பாலமாக இருக்கும் ராஜேந்திர சேது என்ற மேம்பாலத்திற்கு மாற்றாக அதன் அருகிலேயே கட்டப்பட்டுள்ளது. இந்தப் புதிய மேம்பாலம், வடக்கு பீகார் (பெகு சராய்), சுபாவுல், மதுபனி, புர்னியா, அராரியா) – தெற்கு பீகார் (ஷேக் புரா நவாடா, லக்கிசராய்) இடையே கனரக வாகனங்கள் போக்குவரத்துக்கான 100 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமான பயண தூரத்தைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பிராந்தியத்தின் பிற பகுதிகளில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், கனரக வாகனங்களின் நீண்ட தூர பயணத்தைக் குறைக்கும் வகையிலும் இந்தப் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

மூலப் பொருட்களைக் கொண்டு வருவதில் ஜார்க்கண்ட் மற்றும் தெற்கு பீகார் பகதிகளை சார்ந்திருக்கும் நிலை இருப்பதால் வடக்கு பீகார் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைக் கட்டமைப்புகள், பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும். புகழ் பெற்ற சிமாரியா புனித தலத்திற்கு  செல்லும் யாத்ரீகர்களுக்கு சிறந்த போக்குவரத்து வசதியை அளிப்பதுடன் பிரபலமான பாடலாசிரியர், மறைந்த ராம்தாரி சிங் திங்கரின் பிறந்த இடத்திற்கு செல்லவும் உதவுகிறது.

பக்தியர்பூர் – மொகாமா இடையே, தேசிய நெடுஞ்சாலை 31-ல் 1,900 கோடி ரூபாய் செலவில், கட்டப்பட்டுள்ள நான்கு வழிச்சாலையையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்தச் சாலை இப்பகுதிகளுக்கு இடையேயான பயண நேரத்தைக் குறைப்பதுடன் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு புதிய பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்கவும் உதவிடும்.

பீகாரில் மின்சாரத்துறை உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தும் வகையில், 6,880 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பக்சர் அனல்மின் நிலையத்தை (660 மெகாவாட்) பிரதமர் தொடங்கி வைத்தார். இது மின் உற்பத்தித் திறனைக் குறிப்பிடத்தக்க அளவிற்கு மேம்படுத்துவதுடன் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தவும், அப்பகுதிகளில் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.

சுகாதார உள்கட்டமைப்புக்கு உத்வேகம் அளிக்கும் வகையில், முசாஃபர்பூரில், ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இந்த மையத்தில் வெளிப்புற மற்றும் உட்புற புற்று நோயாளிகளுக்கான நவீன வசதிகளுடன் அறுவை சிகிச்சை மையங்கள், மேம்பட்ட ஆய்வகங்கள், ரத்த வங்கி மற்றும் 24 படுக்கை வசதிகளுடன் கூடிய அவசரகால சிகிச்சைப் பிரிவுகளும் உள்ளன. பீகாரில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் வகையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவ மையம், அண்டை மாநிலங்களிலிருந்து தொலைதூரப் பகுதிகளில் அமைந்துள்ள பெருநகர மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக செல்வதற்கான பயண நேரத்தையும் குறைக்க உதவிடும்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் தொலைநோக்குப் பார்வை, கங்கை நதியில், தூய்மையைப் பராமரிப்பது, தண்ணீர் தடையின்றி செல்வதை உறுதி செய்வது ஆகிய நோக்கங்களுடன், அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தையும், 520 கோடி ரூபாய் செலவில், தூய்மை கங்கை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட கழிவுநீர்ப் பாதை கட்டமைப்பையும் பிரதமர் தொடங்கி வைத்தார். கங்கை நதி மாசடைவதைத் தடுக்கும் வகையிலும், அப்பகுதியில் தூய்மைப்பணிகளை மேம்படுத்தும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

1,260 கோடி ரூபாய் செலவிலான நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டப் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அவுரங்காபாதில் தௌட்நகர் மற்றும் ஜெகன்னாபாதில் கழிவுநீர் கட்டமைப்புப் பணிகளும் அடங்கும். ஜமுய் மற்றும் லக்சிசராயில் உள்ள பராகியாவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கழிவுநீர் மாற்றுப்பதை அமைக்கும் திட்டமும் இதில் அடங்கும். அம்ருத் இரண்டாம் கட்ட திட்டத்தின் கீழ், அவுரங்காபாத், புத்தகயா, ஜெகன்னாபாத் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும் குடிநீர் விநியோகத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இந்தத் திட்டங்கள் தூய்மையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதுடன் நவீன கழிவு நீர் அகற்றும் முறைகளையும் மேம்படுத்தி இப்பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் சுகாதார நிலையை உயர்த்தி, சிறந்த சுகாதார  வசதிகளை வழங்கும்.

இப்பகுதியில் ரயில் போக்குவரத்துக்கான இணைப்பை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு புதிய ரயில் சேவைகளை பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். கயா – தில்லி இடையே அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவை, ரயில் பயணிகளுக்கு நவீன வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. புத்த கயாவிற்கு சுற்றுலா செல்லும் வகையில், வைசாலி மற்றும் கொடர்மா இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதன் மூலம் இப்பகுதியில் உள்ள முக்கிய புத்தத் தலங்களுக்கான சுற்றுலா மற்றும் மதம் சார்ந்த பயணம் ஊக்குவிக்கப்படும்.

பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 12,000 கிராமப்புற பயனாளிகளுக்கும், பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், 4,260 பயனாளிகளுக்கும் புதிய வீடுகளுக்கான சாவிகளை வழங்கும் கிரகப்பிரவேச நிகழ்ச்சிகளிலும் பிரதமர் பங்கேற்று, அந்த வீடுகளுக்கான சாவிகளை பயனாளிகளிடம் வழங்கினார். இத்திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் சொந்த வீடு எனும் கனவு நிறைவேறியுள்ளது.

***

(Release ID: 2159719)

AD/SS/SV/PKV/PLM/KPG/AG/DL


(Release ID: 2159909)