பிரதமர் அலுவலகம்
விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் கலந்துரையாடினார்
தற்சார்பு தொழில்நுட்பத்துடன் விண்வெளி இலக்குகளை தொடர்வதில் இந்தியாவின் வெற்றிக்கானப் பாதை அமைந்துள்ளது: பிரதமர்
எதிர்கால பயணங்களுக்கு தலைமை தாங்கும் வகையில் தயாராக 40-50 விண்வெளி வீரர்களை இந்தியா உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது: பிரதமர்
விண்வெளி நிலையம், ககன்யான் என்ற இரண்டு முக்கியமான விண்வெளி பயணங்களை இந்தியா தற்போது எதிர்நோக்கி உள்ளது: பிரதமர்
விண்வெளி வீரர் சுக்லாவின் பயணம் இந்தியாவின் விண்வெளி லட்சியங்களில் முதல்படி மட்டுமே: பிரதமர்
Posted On:
19 AUG 2025 11:32AM by PIB Chennai
விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று புதுதில்லியில் கலந்துரையாடினார். விண்வெளி பயணத்தின் வித்தியாசமான அனுபவம் ஒருவருக்கு மாறுபட்ட எண்ணத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என்றும் விண்வெளி வீரர்கள் இந்த மாற்றத்தை எவ்வாறு உணர்கிறார்கள், அனுபவம் கொள்கிறார்கள் என்பது பற்றி அறிந்துகொள்ள விரும்புவதாகவும் பிரதமர் கூறினார். பிரதமருக்கு பதிலளித்த சுபான்ஷு சுக்லா, விண்வெளி சூழல் மிகவும் மாறுபட்டதாக உள்ளது என்றும், இதற்கு முக்கிய காரணம் ஈர்ப்புவிசை இல்லாததுதான் என்றும் கூறினார்.
இந்த பயணத்தின்போது இருக்கை ஏற்பாடு ஒரே மாதிரியாக இருந்ததா என்று பிரதமர் வினவினார். “ஆம் ஐயா, அது அப்படியேதான் இருந்தது” என்று சுக்லா உறுதியாக கூறினார். அப்படியென்றால் ஒரே மாதிரியான நிலையில் 23-24 மணிநேரம் செலவிடவேண்டியிருக்குமே என்று திரு மோடி கேட்டார். இதையும் உறுதி செய்த சுக்லா, விண்வெளிக்குள் சென்றபின் விண்வெளி வீரர்கள் தங்களின் இருக்கைகளிலிருந்து கட்டவிழ்த்துக் கொள்ளலாம் என்றும் அந்த அறைக்குள் சுதந்திரமாக இயங்கலாம் என்றும் கூறினார்.
சுபான்ஷு சுக்லாவுடன் தொடர்ந்த இந்த கலந்துரையாடலின் போது, உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் விண்வெளிப் பயணம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பேசிய பிரதமர், அந்த அறை போதிய இடவசதி கொண்டுள்ளதா என்பதை கேட்டறிந்தார். அந்த இடம் தாராளமாக இருக்கவில்லை என்றாலும், சில அறைகள் இருந்தன என்று சுபான்ஷு சுக்லா பதிலளித்தார். போர் விமானத்தின் விமானி இருக்கையைவிட அந்த அறை அதிக வசதி உள்ளதுபோல் தோன்றுகிறதே என்று பிரதமர் கூறியபோது, “அதைவிட இது நன்றாகவே இருக்கிறது ஐயா” என்று சுக்லா குறிப்பிட்டார்.
விண்வெளியை அடையும்போது உடற்கூறுகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது. விண்வெளிக்கு செல்லும்போது இதயத்துடிப்பின் அளவு கணிசமாக குறைந்தது என்பதை எடுத்துரைத்த சுக்லா, உடல் பலவிதமான மாற்றங்களை காண்கிறது என்றார். இருப்பினும், நான்கு முதல் ஐந்து நாட்களுக்குள் விண்வெளி சூழலுக்கு ஏற்ப உடல் தன்னை பழக்கப்படுத்திக் கொள்கிறது, இயல்பு நிலைக்கு வந்துவிடுகிறது என்றும் அவர் கூறினார். பூமிக்கு திரும்பிய பின் இதே போன்ற மாற்றங்களை உடல் அனுவம் கொள்கிறது என்பது பற்றியும் சுக்லா விவரித்தார். ஒருவரின் உடல் தகுதி எவ்வாறு இருந்தபோதும் தொடக்கத்தில் விண்வெளியில் நடப்பது சிரமமாகிறது என்று கூறிய அவர், தாம் மிக நன்றாக இருப்பதாக உணர்ந்தபோதும் முதல் அடிகளை எடுத்து வைக்கும்போது தடுமாறிவிட்டதாகவும், மற்றவர்கள் அப்போது உதவி செய்ததாகவும் தமது சொந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். ஒருவருக்கு எவ்வாறு நடக்க வேண்டும் என்று தெரிந்திருந்தபோதும் புதிய சூழலை புரிந்துகொள்ளவும் அதற்கேற்ப நடந்துகொள்ளவும் மூளைக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்று அவர் கூறினார். விண்வெளிப் பயணத்திற்கு உடல் ரீதியான பயிற்சி மட்டும் போதாது மனரீதியாக தயாராவதும் அவசியம் என்பதை பிரதமர் வலியுறுத்தினார். இதனை ஏற்றுக்கொண்ட சுக்லா, உடலும், தசைநார்களும் வலுவாக இருந்தபோதும் நடப்பதற்கும் இயல்பாக செயல்படுவதற்கும் புதிய சூழலை புரிந்துகொண்டு, அதற்கேற்ப நடந்துகொள்வதற்கு மூளைக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக கூறினார்.
விண்வெளிப் பயணத்தின்போது புதிய கண்டுபிடிப்பு பற்றி விவாதித்த திரு மோடி விண்வெளியில் நீண்ட காலம் செலவிட்ட வீரர்கள் பற்றி வினவினார். தற்போது தனிநபர்கள் ஒரு பயணத்தில் 8 மாதங்கள் வரை இருக்க முடியும் என்று தெரிவித்த சுபான்ஷு சுக்லா தற்போதைய விண்வெளி பயணம் ஒரு மைல்கல் முயற்சியாகும் என்றார். இந்த பயணத்தின்போது சுக்லா சந்தித்த விண்வெளி வீரர்கள் பற்றி பிரதமர் கேட்டபோது அவர்களில் சிலர் டிசம்பர் மாதத்தில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளதாக சுக்லா கூறினார்.
விண்வெளி நிலையத்தில் இருக்கும்போது பாசிப்பயறு மற்றும் வெந்தயம் வளர்த்த சுக்லாவின் குறிப்பிடத்தக்க அனுபவம் பற்றி திரு மோடி கேட்டார். இது பற்றி பலரும் அறியாமல் இருப்பது பற்றி சுக்லா வியப்புத் தெரிவித்தார். அளவான இடம், செலவு மிகுந்த சரக்குகள் காரணமாக விண்வெளி நிலையங்களில் உணவு என்பது பெரும் சவாலாக உள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். குறைவான இடத்தில் அதிகபட்ச கலோரிகளையும் ஊட்டச்சத்து பொருட்களையும் கொண்டு செல்வதில் கவனம் செலுத்தப்படுவதாக அவர் கூறினார். பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்படுவதுப் பற்றி விவரித்த அவர் விண்வெளியில் சில வகையான உணவு பொருள்களை வளர்ப்பது எளிதானது என்றார். சிறிய கிண்ணம், கொஞ்சம் தண்ணீர் ஆகியவற்றை பயன்படுத்தி எட்டு நாட்களில் உணவுப் பொருட்களை முளைவிடச் செய்யலாம் என்ற தமது விண்வெளி பயண அனுபவத்தை சுக்லா விவரித்தார். இந்தியாவின் தனித்துவமான வேளாண் கண்டுபிடிப்புகள் தற்போது நுண் ஈர்ப்புவிசை ஆராய்ச்சி தளத்தை எட்டியிருப்பதாக அவர் கூறினார். இந்த பரிசோதனைகளின் திறன் உணவுப் பாதுகாப்பு சவால்களுக்கு விடையளிக்கும் என்று கூறிய சுக்லா விண்வெளி வீரர்களுக்கு மட்டுமின்றி பூமியில் உள்ள ஏழ்மையான மக்களுக்கும் இது பயனளிக்கும் என்றார்.
ஒரு இந்திய விண்வெளி வீரரை சந்தித்த போது சர்வதேச விண்வெளி வீரர்கள் எவ்வாறு உணர்ந்தனர் என்று பிரதமர் கேட்டார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக தாம் எங்கு சென்றாலும் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்ததாகவும், தம்மை சந்திக்க ஆர்வமுடன் இருந்ததாகவும் சுக்லா தெரிவித்தார். இந்தியாவின் விண்வெளி நடவடிக்கைகள் குறித்து அவர்கள் அடிக்கடி கேட்டறிந்ததாகவும், நாட்டின் முன்னேற்றம் குறித்து அவர்கள் நன்றாக அறிந்துள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக ககன்யான் திட்டம் பற்றி பலர் ஆர்வமுடன், அதனுடைய காலக்கெடு குறித்து கேட்டறிந்ததாக கூறினார். தமது குழு உறுப்பினர்கள் கையெழுத்திடப்பட்ட குறிப்புகளை கேட்டதாகவும் ஏவுதலின் போது தாங்கள் அழைக்கப்படவும், இந்தியாவின் விண்கலத்தில் பயணிக்க விருப்பம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
சுக்லாவை அறிவாளி என்று மற்றவர்கள் அழைத்தார்களே என திரு மோடி மேலும் கேள்வி எழுப்பினார். அதற்கு பணிவுடன் பதிலளித்த சுக்லா, அவர்கள் தங்கள் கருத்துக்களை அன்புடன் வெளிப்படுத்தியதாக கூறினார். முதலில் இந்திய விமானப்படையிலும், பிறகு விண்வெளி பயணத்திலும் விமானியாக தாம் இருந்ததற்கு காரணமான கடுமையான பயிற்சியே அவர்களுடைய பாராட்டுதலுக்கு காரணம் என்று தெரிவித்தார். தொடக்கத்தில் இதுசார்ந்த கல்வி கற்றல் குறைவாக இருக்கும் என்று தாம் நம்பிய நிலையில், பின்னர் விரிவான கற்றல் தேவை என்று தாம் அறிந்ததாக சுக்லா கூறினார். விண்வெளி விமானியாக இருப்பது பொறியியல் துறையில் பட்டம் பெறுவதற்கு சமம் என்று அவர் விளக்கினார். இந்திய விஞ்ஞானிகளின் கண்காணிப்பின் கீழ் பல ஆண்டுகள் பயிற்சி பெற்றதாகவும் இந்தத் திட்டத்திற்காக சிறந்த முறையில் தயாராகி விட்டதாக உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.
விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு தொடக்கத்தில் ஒதுக்கப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டார். அதற்கு பதிலளித்த சுக்லா முன்னேற்றம் சிறப்பாக அமைந்ததாக குறிப்பிட்டார். விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே தமது பயணம் அமைந்தது என்று குறிப்பிட்ட அவர், இந்த இலக்கு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். இந்த இயக்கம் வெற்றிகரமாக நிறைவடைந்து, குழுவினர் பாதுகாப்பாக திரும்பிய நிலையில் இது முடிவல்ல, தொடக்கம் மட்டுமே என்று அவர் எடுத்துரைத்தார். இது முதல் நடவடிக்கை என்று குறிப்பிட்ட பிரதமரிடம், ஆமாம் ஐயா இது முதலாவது நடவடிக்கை தான் என்று சுக்லா பதிலளித்தார். இயன்றவரை கற்றுக்கொள்வதும், அது குறித்த நுண்ணறிவுகளை அறிந்து திரும்புவதே இத்திட்டத்தின் நோக்கம் என்று அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற திட்டங்களுக்காக இந்தியாவில் பெரும் எண்ணிக்கையிலான விண்வெளி வீரர்களை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்த பிரதமர், 40 முதல் 50 பேர் இதற்காக தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விண்வெளி வீரராக வேண்டும் என்று இதுவரை வெறும் சில குழந்தைகளே எண்ணியிருப்பார்கள் என்றும், ஆனால் சுக்லாவின் பயணம் மிக நம்பிக்கையையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.
தாம் குழந்தை பருவத்தில் இருந்த போது 1984-ம் ஆண்டு ராகேஷ் சர்மா விண்வெளிக்கு சென்றதை நினைவுகூர்ந்த சுக்லா இது குறித்த தேசிய திட்டம் ஏதுமில்லாததால் விண்வெளி வீரராக வேண்டும் என்ற உணர்வு தமக்கு ஏற்படவில்லை என்று தெரிவித்தார். எனினும் தாம் அண்மையில் மேற்கொண்ட இந்தத் திட்டத்தின் போது நேரடியாக ஒருமுறையும், வானொலி வாயிலாக இரண்டு முறையும் மூன்று நிகழ்வுகளில் குழந்தைகளுடன் உரையாடியதாக அவர் குறிப்பிட்டார். இந்த மூன்று நிகழ்வுகளிலும் தாம் எப்படி விண்வெளி வீரராவது என்று குறைந்தது ஒரு குழந்தையாவது தம்மிடம் கேட்டதாக அவர் கூறினார். இந்த சாதனை நாட்டிற்கு மிகப்பெரிய வெற்றி என்று குறிப்பிட்ட விண்வெளி வீரர் சுக்லா, தற்போது இந்தியா கனவு காண வேண்டியதில்லை என்றும், விண்வெளிப் பயணம் சாத்தியமானது என்றும் அந்த விருப்பங்கள் உள்ளதாகவும் விண்வெளி வீரர் ஆவது என்பது நிகழக்கூடியதே என்றார். விண்வெளியில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்தது சிறந்த வாய்ப்பு என்றும், மேலும் பலர் இந்த மைல்கற்களை அடைய உதவுவது தமது தற்போதைய கடமை என்றும் சுக்லா மேலும் கூறினார்.
இந்தியா தற்போது விண்வெளி நிலையம், ககன்யான் என்று இரண்டு முக்கிய திட்டங்களைக் கொண்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, சுக்லாவின் அனுபவம் இம்முயற்சிகளுக்கு சிறந்த மதிப்புடையதாக அமையும் என்றார்.
குறிப்பாக பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் அரசின் நீடித்த உறுதிப்பாட்டில், இது நாட்டிற்கு மிகப்பெரிய வாய்ப்பு என்று சுக்லா, உறுதிபட தெரிவித்தார். சந்திரயான்-2-ல் வெற்றி கிடைக்காத நிலை போன்ற பின்னடைவுகளுக்கு இடையே அரசு விண்வெளி திட்டத்திற்கு தொடர்ந்து நிதி ஆதரவு அளித்து சந்திரயான் -3 வெற்றிக்கு முன்னிலை வகித்ததாக அவர் குறிப்பிட்டார். தோல்விகளுக்கு பின்னரும், இதுபோன்ற ஆதரவு உலக அளவில் காணப்படுவதாகவும், விண்வெளி துறையில் இந்தியாவின் திறனும், நிலையும் பிரதிபலிப்பதாக கூறினார். இந்தியா தலைமைத்துவத்தை பெற முடியும் என்றும் மற்ற நாடுகளின் பங்களிப்புடன் பாரதத்தின் தலைமையின் கீழ் உருவாக்கப்படும் விண்வெளி நிலையம் சக்திமிக்கதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
விண்வெளி உற்பத்தியில் தற்சார்பு இந்தியா என்ற நிலை குறித்து சுதந்திர தினத்தின் போது பிரதமர் ஆற்றிய கருத்துகள் குறித்தும் சுக்லா மேலும் குறிப்பிட்டார். ககன்யான், விண்வெளி நிலையம், நிலவில் தரையிறங்குதல் ஆகியவற்றுக்கான தொலைநோக்கு ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்றும் பரந்த அளவிலான லட்சியக்கனவை உருவாக்குகிறது என்றும் சுக்லா குறிப்பிட்டார். தற்சார்புடன் இந்தியா இந்த இலக்குகளை தொடர்ந்தால் வெற்றிபெற முடியும் என்று பிரதமர் மோடி உறுதிபட கூறினார்.
***
(Release ID: 2157788)
AD/SMB/IR/AG/SG/KR
(Release ID: 2157861)
Read this releasein:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam