பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுதில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பை திறந்து வைத்தார்

சில நாட்களுக்கு முன்பு கடமைப்பாதையில் கட்டப்பட்டுள்ள பொது மத்திய செயலகமான கடமை மாளிகையை தொடங்கி வைத்தேன். இன்று, எனது சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்பு வளாகத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது: பிரதமர்

இன்று நமது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிய வீடுகளுக்கான தேவையை நிறைவு செய்துள்ள வேளையில், பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், நான்கு கோடி ஏழை மக்களுக்கு வீடுகள் வழங்கப்படவுள்ளது: பிரதமர்

நாட்டில் இன்று கடமைப் பாதை மற்றும் கடமை மாளிகையை கட்டியுள்ளது மட்டுமின்றி, லட்சக்கணக்கான குடிமக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் கடமையும் நிறைவேற்றப்பட்டுள்ளது: பிரதமர்

சூரிய மின் உற்பத்திக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மூலம் நாடு சூரிய சக்தி உற்பத்தியில் புதிய சாதனைப் படைத்துள்ளதுடன், நாடு தொடர்ந்து நீடித்த வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையுடன் முன்னேறி வருகிறது: பிரதமர்

Posted On: 11 AUG 2025 11:19AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதுதில்லியில் உள்ள பாபா கரக் சிங் மார்க் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 184 அடுக்குமாடி குடியிருப்பை (வகைப்பாடு-VII) தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், அண்மையில் கடமைப் பாதையில் பொது மத்திய செயலகத்திற்காக கட்டப்பட்டுள்ள கடமை மாளிகையை திறந்து வைத்ததை சுட்டிக்காட்டினார். இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வளாகத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாக அவர் கூறினார். ­­­­இந்தியாவில் உள்ள நான்கு சிறந்த நதிகளின் பெயரில் அதாவது, கிருஷ்ணா, கோதாவரி, கோஷி மற்றும் ஹுக்ளி என்ற பெயர்களில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்கள் கட்டப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். லட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரத்தை அளித்து வரும் நதிகளை நினைவு கூரும் வகையில், இந்த குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது. தற்போது இது மக்கள் பிரதிநிதிகளின் வாழ்க்கையில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார். நாட்டின் ஒற்றுமையின் பிணைப்பை எடுத்துக்காட்டும் வகையில், நதிகளின் பெயர்களை வைப்பது பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது என்று அவர் கூறினார். தில்லியில் வசித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த புதிய குடியிருப்பு வளாகம், உறுப்பினர்களின் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். இதன் மூலம் தில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அரசின் குடியிருப்பு வசதிகள் தற்போது அதிகரித்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறிய பிரதமர், இந்த குடியிருப்பு வளாக கட்டுமானத்தில் ஈடுபட்ட பொறியியலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க கடும் உழைப்பிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்பு வளாகத்தில் உள்ள மாதிரி வீட்டிற்குச் சென்று பார்வையிடும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக பிரதமர் கூறினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகள் நிலை குறித்தும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக அவர் தெரிவித்தார். இந்த பழைய குடியிருப்புகள் பாழடைந்தும், பராமரிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்ததையும் பிரதமர் குறிப்பிட்டார். இதன் காரணமாக பழைய குடியிருப்புகளில் வசித்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதன் மோசமான நிலை காரமாணக பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வந்ததையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். புதிய குடியிருப்புகளுக்குச் செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பழைய குடியிருப்புகளில் எதிர்கொண்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும் என்று பிரதமர் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாங்கள் வசிக்கும் வீடுகள் குறித்த பிரச்சனைகளில் இருந்து விடுபடும் போது, குடிமக்களின் பிரச்சனைகளுக்கு திறம்பட தீர்வு காண்பதற்கான சக்தி மற்றும் கூடுதல் நேரத்தை செலவிட வாய்ப்பு ஏற்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதுதில்லியில் வீடு கிடைப்பதில் உள்ள சவால்களை எதிர்கொள்வதை ஒப்புக்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பு வளாகம், இத்தகைய இன்னல்களை களைய உதவிடும் என்று கூறினார். 180-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே இடத்தில் வசிக்கும் வகையில் இந்த பல்லடுக்கு குடியிருப்பு வளாகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய வீடுகளை கட்டுவதற்கான முன்முயற்சிகளுக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார பரிமாணத்தை இத்திட்டம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். கடமை மாளிகையை தொடங்கி வைத்ததை நினைவு கூர்ந்த பிரதமர், பல்வேறு அமைச்சகங்கள் வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வந்ததாகவும், அதற்காக ஆண்டுதோறும் ஆயிரத்து 500 கோடி ரூபாய் வாடகையாக செலவிடப்பட்டது, மக்களின் நிதி நேரடியாக வீணடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.   இதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போதிய வீட்டு வசதி இல்லாத சூழல் அரசின் செலவினங்களை அதிகரிக்கச் செய்ததாக பிரதமர் கூறினார். கடந்த 2004-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டு வரையிலான காலத்தில் மக்களவை உறுப்பினர்களுக்காக ஒரு புதிய வீடு கூட கட்டப்படவில்லை என்றும், இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்புகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதையும் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். எனவே, தனது தலைமையிலான மத்திய அரசு இந்தப் பணியை ஒரு இயக்கமாக கருதி செயல்பட்டதாகவும், கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஏறத்தாழ 350 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தக் குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், மக்களின் பணம் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

21-ம் நூற்றாண்டில் இந்தியா வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் முழு ஈடுபாட்டுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர், இதன் ஒரு பகுதியாக நாட்டிற்காக கடமைப் பாதை மற்றும் கடமை மாளிகை கட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், அதே சமயத்தில் லட்ச்சக்கணக்கான மக்களுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் கடமையும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்.  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய வீடுகள் கட்டித் தரும் திட்டம் நிறைவடைந்துள்ளதாகவும் பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், நான்கு கோடி ஏழை குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். நாட்டிற்காக புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், நூற்றுக்கணக்கான மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளதையும் எடுத்துரைத்தார். அரசின் இத்தகைய முன்முயற்சிகள் காரணமாக ஏற்பட்டுள்ள பயன்கள் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பிரிவினரையும் சென்றடைந்து வருவதாக பிரதமர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் குறித்து திருப்தி தெரிவித்த பிரதமர், நீடித்த வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்களும் இதில் அடங்கி உள்ளதாக கூறினார். நாட்டின் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும், எதிர்கால பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், இத்தகைய முன்முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார். வீட்டு வசதி வளாகங்களில் சூரிய மின் உற்பத்திக்கான உள்கட்டமைப்பு வசதிகள் நிறுவப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். நீடித்த வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வையுடன் இந்தியா தொடர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், சூரியசக்தி உற்பத்தியில் படைக்கப்பட்டுள்ள புதிய சாதனைகள் இதனை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான புதிய குடியிருப்பு வளாகத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியின் போது, அவர்களுடன் பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் முன்வைத்தார். நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து வசிப்பது ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வுக்கு அடையாளமாகத் திகழ்கிறது என்று கூறினார். நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வரும் விழாக்கள் அனைத்தையும் ஒருங்கிணைந்து இந்த குடியிருப்பு வளாகத்தில் கொண்டாடுவது உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்று கூறினார். இதுபோன்ற விழாக்கள் பெருமளவிலான மக்களின் பங்களிப்புடன் கொண்டாடப்பட வேண்டும் என்று பிரதமர் ஆலோசனை கூறினார். பல்வேறு மொழிகளிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில், பிற மாநில மொழிகளை கற்றுக்கொள்வதிலும், போதிப்பதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். நிலைத்தன்மை மற்றும் தூய்மை ஆகியவை இந்த குடியிருப்பு வளாத்தின் முக்கிய அம்சமாக உள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், இதனைத்தொடர்ந்து பராமரிப்பது குறித்து அனைவருக்கும் பகிரப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது குடியிருப்பு வளாகமாக இருப்பதுடன் மட்டுமின்றி, இந்த ஒட்டுமொத்த வளாகமும் தூய்மை மற்றும் சுகாதாரம் பராமரிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

இறுதியாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து ஒரு குழுவாகப் பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்த பிரதமர், இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள் நாட்டிற்கு செய்யும் சேவையின் முன்மாதிரியாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பல்வேறு குடியிருப்பு வளாகங்களுக்கு இடையே தூய்மைப் பராமரிப்புக்கான போட்டிகளை அமைச்சகங்கள் மற்றும் வீட்டு வசதி குழுக்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த தீர்மானத்துடன் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

பின்னணி

புதுதில்லியில் உள்ள பாகா கரக் சிங் மார்க் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள வகை-VII அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி, அந்த குடியிருப்பு வளாகத்தில் சிந்தூர் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார். பின்னர் அந்த குடியிருப்பு வளாகத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட பணியாளர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

இந்த புதிய குடியிருப்பு வளாகம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளுக்கு ஏற்பவும், அனைத்து நவீன வசதிகளுடனும் தற்சார்பு கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பசுமை தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்பு வளாகம், கிரிகா-3 நட்சத்திர தரநிலையைக் கொண்டுள்ளதாகவும், 2016-ம் ஆண்டு தேசிய கட்டுமான விதிகளை பின்பற்றியும் கட்டப்பட்டுள்ளது. எரிசக்தி பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, சிறந்த கழிவு மேலாண்மை போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலைத்தன்மையுடன் கூடிய அம்சங்கள் சிறந்த பங்களிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவீன கட்டுமான தொழில்நுட்பங்களின் பயன்பாடு, குறிப்பாக ஒரே மாதிரியான அலுமினியத்துடன் கூடிய கான்கீரிட் கலவையுடன் கட்டமைக்கப்பட்டு நீண்டகால உறுதியுடன் கூடிய கட்டுமானத்தை உறுதி செய்யும் வகையில், குறித்த காலத்திற்குள் இத்திட்டம் முடிக்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு வளாகம் மாற்றுத்திறனாளிகளுக்கு உகந்த வகையில் அனைத்து வசதிகளை உள்ளடக்கியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போதிய வீட்டு வசதி இல்லாத பற்றாக்குறை சூழலைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பரப்பளவு கொண்ட நிலத்தை சிறப்பான வகையில் பயன்படுத்தும் நோக்குடன் அடுக்குமாடி குடியிருப்பாக நிலைத்தன்மையுடன் கட்டப்பட்டு இதற்கான பராமரிப்பு செலவும் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஒவ்வொரு வீடும் 5 ஆயிரம் சதுரடி கொண்டதாகவும், குடியிருப்பு மற்றும் அலுவலக செயல்பாடுகளுக்காக அதிக இட வசதியும் வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களின் பிரதிநிதிகளாக தங்களது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு உதவிடும் வகையில் அலுவலகங்கள் பணியாளர்களுக்கான குடியிருப்புகள், சமுதாய மையம் போன்ற பிரத்யேக பகுதிகளை உள்ளடக்கிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள்து.

இந்த வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களும், நிலநடுக்கத்தை தாங்கும் வகையிலும், நவீன கட்டுமான வடிவமைப்பு விதிகள் அடிப்படையிலும் கட்டப்பட்டுள்ளன. குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இந்த குடியிருப்பு வளாகம் முழுவதும் விரிவான பாதுகாப்பு அம்சங்கள் நிறுவப்பட்டுள்ளன.

***

AD/SV/RJ/SG


(Release ID: 2155008)