சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
குஜராத்தின் பர்தா வனவிலங்கு சரணாலயத்தில் உலக சிங்கங்கள் தின கொண்டாட்டம் - மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் பங்கேற்பு
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவில் சிங்கங்கள் எண்ணிக்கை 891 ஆக உயர்ந்துள்ளது- திரு பூபேந்தர் யாதவ்
Posted On:
10 AUG 2025 12:47PM by PIB Chennai
குஜராத் மாநில அரசின் வனத் துறையுடன் இணைந்து மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம், குஜராத்தின் பர்தா வனவிலங்கு சரணாலயத்தில் இன்று (10.08.2025) உலக சிங்கங்கள் தினத்தைக் கொண்டாடியது. இந்த கொண்டாட்டத்தில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், குஜராத் வனத்துறை அமைச்சர் திரு முலுபாய் பெரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இந்தியாவில் சிங்கங்களின் எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 674 ஆக இருந்தது எனவும் இது தற்போது 891 ஆக அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ஆசிய சிங்கம் வெற்றிகரமான வனவிலங்கு பாதுகாப்பின் உலகளாவிய அடையாளமாகும் எனவும் இந்த உலக சிங்க தினத்தில், அவற்றின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை நாம் கொண்டாடுவதாகவும் அவர் கூறினார். 1990-ல் வெறும் 284 சிங்கங்களிலிருந்து, இப்போது 2025-ல் 891 ஆக உயர்ந்துள்ளது எனவும் கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 70% க்கும் அதிகமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இது வியக்கத்தக்க வெற்றி என்று கூறிய அமைச்சர், இந்த சாதனைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையே காரணம் என்றார்.
ஏற்கெனவே குஜராத் முதலமைச்சராகவும் தற்போது பிரதமராகவும் பதவி வகித்து வரும் திரு நரேந்திர மோடி ப்ராஜெக்ட் லயன் திட்டத்தை அறிமுகம் செய்து சிங்கங்களின் பாதுகாப்பை முன்னுரிமை நடவடிக்கையாக செயல்படுத்துவதாக அமைச்சர் கூறினார். இந்த வெற்றிக்குப் பங்களித்த ஒவ்வொரு வன அதிகாரிகள், வனவிலங்கு ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் பாராட்டுத் தெரிவித்தார்.
மனிதர்களும் வனவிலங்குகளும் ஒன்றாக செழித்து வளம் அடையும் வகையில் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை அமைச்சர் மீண்டும் எடுத்துரைத்தார். இப்போது ஆசிய சிங்கங்கள் குஜராத்தின் கிர் காடுகளில்தான் உள்ளது என்பது மிகப்பெரிய தேசிய பெருமைக்குரிய விஷயம் என்று அமைச்சர் கூறினார். கடந்த பத்து ஆண்டுகளில் நமது இடைவிடாத பாதுகாப்பு முயற்சிகள் அவற்றின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியுள்ளன என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், ஆசிய சிங்கங்களின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் குஜராத் அரசின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார். இந்த இனத்தின் உலகளாவிய தாயகமாக குஜராத் தொடர்ந்து இருந்து வருவதாக அவர் கூறினார்.
'காட்டின் ராஜா' எனப்படும் ஆசிய சிங்கத்தின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக, குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியின் 11 மாவட்டங்களில் 'உலக சிங்க தின' கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த சிங்கங்கள் சௌராஷ்டிராவின் 11 மாவட்டங்களில் சுமார் 35,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.
*****
(Release ID: 2154818)
AD/SM/PLM/SG
(Release ID: 2154832)
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Malayalam