பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்திய அரசுக்கும் பிலிப்பைன்ஸ் அரசுக்கும் இடையே ஓர் உத்திசார் கூட்டாண்மையை நிறுவுவது குறித்த பிரகடனம்

Posted On: 05 AUG 2025 5:23PM by PIB Chennai

இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், பிலிப்பைன்ஸ் அதிபர் மேதகு திரு. ஃபெர்டினாண்ட் ஆர். மார்கோஸ் ஜூனியர், 2025 ஆகஸ்ட் 4 முதல் 8 வரை இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதிபர் திரு மார்கோஸுடன் முதல் பெண்மணி திருமதி லூயிஸ் அரனெட்டா மார்கோஸ் மற்றும் பிலிப்பைன்ஸின் அமைச்சர்கள் மற்றும் உயர் மட்ட வணிகக் குழு உள்ளிட்ட அலுவலர்கள் குழுவும் வந்துள்ளது.

 

ஆகஸ்ட் 5, 2025 அன்று, அதிபர் திரு மார்கோஸுக்கு குடியரசுத்தலைவர் மாளிகையில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது, மேலும் அவர் மகாத்மா காந்திக்கு மலரஞ்சலி செலுத்த ராஜ்காட்டுக்குச் சென்றார். இதைத் தொடர்ந்து பிரதமர் திரு மோடிக்கும் அதிபர் திரு மார்கோஸுக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்தன. அதன் பிறகு, தலைவர்கள் இருதரப்பு ஒப்பந்த ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர். பிரதமர் திரு மோடி அளித்த மதிய விருந்தில் அதிபர் திரு மார்கோஸ் கலந்து கொண்டார். அவரது நிகழ்ச்சி நிரலில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவை சந்திப்பதும் அடங்கும். இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், அதிபர் திரு மார்கோஸை சந்தித்தார். திரு மார்கோஸ், பெங்களூருவுக்கு வருகை தருவார்.

பிரதமர் திரு மோடியும்,  அதிபர் திரு மார்கோஸும்,

 

(அ) இந்திய-பிலிப்பைன்ஸ் தூதரக உறவுகள் நிறுவப்பட்டதன்  எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடவும்;

 

(ஆ) பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, நாகரிக தொடர்புகள், பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் இந்தியாவிற்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான நீண்டகால நட்பை அங்கீகரிக்கவும்;

 

(இ) 1949 இல் தூதரக உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து பல்வேறு துறைகளில் அவர்களின் வளமான மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பு பாரம்பரியத்தை மேம்படுத்தவும்;

 

(ஈ) ஜூலை 11, 1952 இல் கையெழுத்திடப்பட்ட நட்பு ஒப்பந்தம், நவம்பர் 28, 2000 அன்று கையெழுத்திடப்பட்ட கொள்கை ஆலோசனைப் பேச்சுவார்த்தைகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம், அக்டோபர் 5, 2007 அன்று கையெழுத்திடப்பட்ட இருதரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டு ஆணையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தம் மற்றும் அக்டோபர் 5, 2007 அன்று இரு நாடுகளுக்கும் இடையே கையொப்பமிடப்பட்ட இருதரப்பு ஒத்துழைப்புக்கான கட்டமைப்பு குறித்த பிரகடனம் ஆகியவற்றின் அடிப்படை முக்கியத்துவத்தை வலியுறுத்தவும்;

 

(உ) இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விருப்பத்தைத் தொடரவும்;

 

(ஊ) இருதரப்பு உறவுகளின் மேலும் விரிவான வளர்ச்சி, இரு நாடுகளிலும் ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் முன்னேற்றத்தையும் செழிப்பையும் ஊக்குவிக்கும் என்பதை நம்பி;

(எ) இருதரப்பு கூட்டாண்மைக்கு ஒரு தரமான மற்றும் உத்திசார் புதிய பரிமாணத்தையும் நீண்டகால உறுதிப்பாட்டையும் வழங்கவும், அரசியல், பாதுகாப்பு, கடல்சார் களம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், விண்வெளி ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில் ஒத்துழைப்பு, இணைப்பு, சுகாதாரம் மற்றும் மருந்துகள், விவசாயம், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், மேம்பாட்டு ஒத்துழைப்பு, கலாச்சாரம், படைப்புத் தொழில்கள், சுற்றுலா, மக்களிடையேயான பரிமாற்றங்கள் மற்றும் பிற துறைகளில் ஒத்துழைப்பை தீவிரமாக வளர்க்கவும்;

 

(ஏ) தடையில்லாத, வெளிப்படையான, விதிகள் அடிப்படையிலான, உள்ளடக்கிய, வளமான மற்றும் மீள்தன்மை கொண்ட இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அவர்களின் பகிரப்பட்ட ஆர்வத்தை மீண்டும் உறுதிப்படுத்தவும், ஆசியான் மையத்திற்கான அவர்களின் வலுவான ஆதரவை மீண்டும் வலியுறுத்தவும் உறுதி பூண்டனர்.

 

இதன் மூலம் அறிவிக்கப்படுவதாவது:

 

இந்தியாவிற்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே ஒரு உத்திசார் கூட்டாண்மை நிறுவப்படும்;

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான முழு திறனையும் உணர்ந்து கொள்வதற்கான ஒரு புதிய அத்தியாயத்தை உத்திசார் கூட்டாண்மை குறிக்கும்;

இரு நாடுகளின் மற்றும் பரந்த பிராந்தியத்தின் தொடர்ச்சியான அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சிக்காக இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான பரஸ்பர உறுதிப்பாட்டின் அடிப்படையில் உத்திசார் கூட்டாண்மை அமைந்துள்ளது, மேலும் இரு நாடுகளும் எதிர்கால நோக்குடைய பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான அடித்தளமாக செயல்படுகின்றன;

இந்திய-பிலிப்பைன்ஸ் உத்திசார் கூட்டாண்மை, ஆகஸ்ட் 5, 2025 அன்று இரு நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல் திட்டத்தால் (2025-2029) வழிநடத்தப்படுகிறது;

இந்தியா-பிலிப்பைன்ஸ் கூட்டாண்மைக்கு அதிக உத்வேகத்தை அளிக்கும் நோக்கத்துடன், இரு தலைவர்களும் பின்வரும் துறைகளில் ஒத்துழைப்பை ஒப்புக்கொண்டனர்:

அரசியல்

பாதுகாப்பு மற்றும் கடல்சார் துறை

பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீடு

அறிவியல் & தொழில்நுட்பம்

இணைப்பு

தூதரக ஒத்துழைப்பு

பரஸ்பர சட்டம் மற்றும் நீதித்துறை

கலாச்சாரம், சுற்றுலா மற்றும் மக்களிடையேயான பரிமாற்றங்கள்

பிராந்தியம், பன்முகம் மற்றும் சர்வதேசம்

 

1952 ஜூலை 11 ஆம் தேதி, இந்திய அரசுக்கும், பிலிப்பைன்ஸ் அரசுக்கும் இடையில் ஏற்பட்ட நட்புறவு ஒப்பந்தத்தின் அடிப்படை மற்றும் நீடித்த உணர்விற்கு இணங்க, இந்த உத்திசார் கூட்டாண்மையில் முன்னேற இரு நாடுகளும் தங்கள் உறுதியை வெளிப்படுத்துகின்றன.

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2152631

----

(Release ID: 2152631)

AD/RB/DL


(Release ID: 2152814)