கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில், புதுதில்லியில் கூட்டுறவு அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது

Posted On: 05 AUG 2025 9:15PM by PIB Chennai

கூட்டுறவுத் துறையை வலுப்படுத்துவதற்கான அமைச்சகத்தின் முன்முயற்சிகள் குறித்த ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டத்திற்கு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை  அமைச்சர்  திரு அமித் ஷா இன்று புதுதில்லியில் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மத்திய கூட்டுறவு இணையமைச்சர்கள் திரு கிருஷ்ணன் பால் மற்றும் திரு முரளிதர் மொஹோல், குழுவின் உறுப்பினர்கள், கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் உரையாற்றிய திரு அமித் ஷா, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையில், கூட்டுறவு அமைச்சகம் கூட்டுறவுகளை துடிப்பான மற்றும் வெற்றிகரமான வணிக அலகுகளாக மாற்ற உறுதிபூண்டுள்ளது என்றார். 5 ஆண்டுகளில் நாட்டில் 2 லட்சம் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களை அமைக்கும் லட்சிய இலக்கில், இதுவரை 35,395 புதிய கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 6,182 பல்நோக்கு முதன்மை வேளாண் கடன் சங்கங்கள், 27,562 பால் பண்ணைகள் மற்றும் 1,651 மீன்வள கூட்டுறவு சங்கங்கள் அடங்கும் என்றும்  அவர் கூறினார்.

 

கூட்டுறவுத் துறையால், நிலமற்ற மற்றும் ஏழை மக்களுக்கு செழிப்புக்கான வழியை ஏற்படுத்தித் தர முடியும் என்று திரு அமித் ஷா கூறினார். கூட்டுறவுத் துறை, விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக தேசிய அளவில் மூன்று  கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலையைப் பெறுவதற்காக, விவசாயிகளின் கரிமப் பொருட்களின் சான்றிதழ், பிராண்டிங், பேக்கேஜிங் மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவற்றை தேசிய கூட்டுறவு ஆர்கானிக் லிமிடெட்  உறுதி செய்கிறது என்று அவர் கூறினார். தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட், விவசாயிகளின் பொருட்களை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான அனைத்து வசதிகளையும் வழங்குகிறது என்றும், இதன் மூலம் முழு லாபமும் விவசாயிகளுக்குச் செல்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

கூட்டுறவுகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், அந்தந்த மாநிலங்களில் பால்வளத் துறையை வலுப்படுத்துமாறு மத்திய அமைச்சர் உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார். முதன்மை வேளாண் கடன் சங்கங்கள், பால்வளம், மீன்வளம், கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் கூட்டுறவு நிர்வாக அமைப்புகளை வலுப்படுத்த கூட்டுறவு அமைச்சகம் கடந்த நான்கு ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட முன்முயற்சிகளை எடுத்துள்ளதாக அவர் கூறினார். தேசிய கூட்டுறவு கொள்கை-2025, நாட்டில் நிலையான கூட்டுறவு மேம்பாட்டிற்கான ஒரு விரிவான செயல்திட்டத்தை வழங்குகிறது என்றார், அவர். இந்த செயல்திட்டத்தில், கூட்டுறவு சூழலியலை அடிமட்ட அளவில் வலுப்படுத்த, பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்டம், தேசிய பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டம் போன்ற இந்திய அரசின் திட்டங்களுடனான ஒருங்கிணைப்பும் அடங்கும். கூட்டுறவு சங்கங்கள் தலைமையிலான வெண்மைப் புரட்சி 2.0 இன் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பால் கொள்முதலை 50% அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

கூட்டுறவுத் துறையை மேலும் வலுப்படுத்துவதற்கான தனது பரிந்துரைகளை ஆலோசனைக் குழு முன்வைத்தது. கிராமப்புற இந்தியாவில் வளர்ச்சி, சமத்துவம் மற்றும் தன்னம்பிக்கைக்கான இயந்திரங்களாக கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை அமைச்சகம் மீண்டும் உறுதிப்படுத்தியது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2152795

----

(Release ID: 2152795)

AD/RB/DL


(Release ID: 2152809)