மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தேர்வு குறித்த கலந்துரையாடல் 2025, ஒரு மாதத்தில் அதிக பதிவுகளுக்கான கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம்பிடித்தது

Posted On: 04 AUG 2025 6:08PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் முதன்மை முயற்சியான தேர்வு குறித்த கலந்துரையாடல், 2018 முதல் கல்வி அமைச்சகத்தால் மை கவ் உடன் இணைந்து வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. "ஒரு குடிமக்கள் ஈடுபாட்டு தளத்தில் ஒரு மாதத்தில் அதிக மக்கள் பதிவு செய்துள்ளனர்" என்ற கின்னஸ் உலக சாதனையை இந்த நிகழ்ச்சி படைத்துள்ளது. மை கவ் தளத்தில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியின் 8வது பதிப்பின் போது பெறப்பட்ட 3.53 கோடி செல்லுபடியாகும் பதிவுகளின் முன் எப்போதும் இல்லாத சாதனையை இந்த அங்கீகாரம் கொண்டாடுகிறது.

 

புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் அதிகாரப்பூர்வ கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் முறையாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் திரு ஜிதின் பிரசாதா, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை செயலாளர் திரு சஞ்சய் குமார், மை கவ்-இன் தலைமை நிர்வாக அதிகாரி திரு நந்த் குமரும் மற்றும் கல்வி மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் முக்கிய பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். இந்த சாதனையை கின்னஸ் உலக சாதனைகளின் அதிகாரப்பூர்வ நடுவர் திரு ரிஷி நாத் அறிவித்தார்.

 

இந்த நிகழ்வில் பேசிய திரு தர்மேந்திர பிரதான், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ்,தேர்வு குறித்த கலந்துரையாடல் என்பது மன அழுத்தத்தை கற்றல் திருவிழாவாக மாற்றுவதன் மூலம் தேர்வுகளுக்கான தேசிய அணுகுமுறையாக மறுவரையறை செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். 2025 ஆம் ஆண்டில் அனைத்து ஊடக தளங்களிலும் மொத்தம் 21 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை இந்நிகழ்ச்சியின்  8வது பதிப்பு கண்டதாக திரு. பிரதான் தெரிவித்தார். தேர்வு குறித்த கலந்துரையாடல் 2025-இல் அதிக பங்கேற்பு, முழுமையான மற்றும் உள்ளடக்கிய கல்வி மற்றும் வளர்ந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் சீரமைப்பதற்கான நாட்டின் கூட்டு அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகக் கருதப்படுகிறது என்று அவர் மேலும் கூறினார்.

 

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அஸ்வினி வைஷ்ணவ், தேர்வு குறித்த கலந்துரையாடலை, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தனித்துவமான முயற்சி என்று குறிப்பிட்டார். இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒன்றிணைத்து நல்வாழ்வையும் மன அழுத்தமற்ற கற்றலையும் ஊக்குவிக்கிறது. இந்த அமிர்தக் காலத்தில் மாணவர்களுக்குக் கிடைக்கும் பரந்த அளவிலான தொழில் வாய்ப்புகளை அவர் எடுத்துரைத்தார், மேலும் அதிக பதிவுகளுக்கான கின்னஸ் உலக சாதனை, இந்த முயற்சியின் மீதான வலுவான பொது நம்பிக்கையை நிரூபிக்கிறது என்றும் கூறினார்.

 

நிர்வாகத்தை மேலும் பங்கேற்புடன் மாற்றுவதில் மைகவ் மேற்கொண்ட முயற்சிகளுக்கு திரு ஜிதின் பிரசாதாவும் பாராட்டு தெரிவித்தார். குடிமக்களின் ஈடுபாட்டை ஆழப்படுத்தவும், நாடு முழுவதும் தேர்வு குறித்த கலந்துரையாடலின் வரம்பை அதிகரிக்கவும் மைகவ் எவ்வாறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது என்பதை கின்னஸ் உலக சாதனை எடுத்துக்காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

 

 

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2152224

***

(Release ID: 2152224)

AD/RB/DL


(Release ID: 2152351) Visitor Counter : 4