பிரதமர் அலுவலகம்
ஆகஸ்ட் 2 ஆம் தேதி, பிரதமர், வாரணாசிக்கு பயணம் மேற்கொள்கிறார்
வாரணாசியில் சுமார் ரூ.2200 கோடி மதிப்பிலான பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தவற்றைத் துவக்கி வைப்பார்
உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், சுற்றுலா, நகர்ப்புற மேம்பாடு, கலாச்சார பாரம்பரியம் உள்ளிட்ட பல துறைகளின் தேவைகளைத் திட்டங்கள் பூர்த்தி செய்கின்றன
ஸ்மார்ட் விநியோகத் திட்டம் மற்றும் மின்சார உள்கட்டமைப்புத் திட்டங்களின் கீழ் பல்வேறு பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்
கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன், பல்வேறு குளங்களில் நீர் சுத்திகரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்
பிரதமரின் கிசான் திட்டத்தின் 20வது தவணையை பிரதமர் வெளியிடுவார், இதன் மூலம் 9.7 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு சுமார் ரூ.20,500 கோடி தொகை பரிமாற்றம் செய்யப்படும்
பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் அதன் தொடக்கத்திலிருந்து மொத்த தொகை ரூ.3.90 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.
Posted On:
31 JUL 2025 6:59PM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை 11 மணியளவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி, சுமார் ரூ.2200 கோடி மதிப்பிலான பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார் மற்றும் நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றுவார்.
வாரணாசியில் முழுமையான நகர்ப்புற மாற்றம், கலாச்சார புத்துணர்ச்சி, மேம்பட்ட இணைப்பு மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை அடைவதை நோக்கமாகக் கொண்ட உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், சுற்றுலா, நகர்ப்புற மேம்பாடு மற்றும் கலாச்சார பாரம்பரியம் உள்ளிட்ட பல துறைகளை இந்த திட்டங்கள் பூர்த்தி செய்கின்றன.
வாரணாசியில் சாலை இணைப்பை மேம்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரதமர் பல முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார். மோகன் சராய் - அடல்புரா சாலையில் நெரிசலைக் குறைக்க, வாரணாசி - படோஹி சாலை மற்றும் சித்தௌனி - ஷூல் தங்கேஷ்வர் சாலையின் அகலப்படுத்தல் மற்றும் வலுப்படுத்தல் பணிகள் மற்றும் ஹர்தத்பூரில் ரயில்வே மேம்பாலம் ஆகியவற்றை அவர் திறந்து வைப்பார். தல்மண்டி, லஹர்தரா-கோட்வா, கங்காபூர், பாபத்பூர் உள்ளிட்ட பல கிராமப்புற மற்றும் நகர்ப்புற வழித்தடங்களில் விரிவான சாலை விரிவாக்கம் மற்றும் வலுப்படுத்துதலுக்கும், லெவல் கிராசிங் 22சி மற்றும் காலிஸ்பூர் யார்டில் உள்ள ரயில்வே மேம்பாலங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுவார்.
இந்தப் பகுதியில் மின்சார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், ஸ்மார்ட் விநியோகத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மற்றும் ரூ.880 கோடிக்கு மேல் மதிப்புள்ள மின்சார உள்கட்டமைப்பை நிலத்தடியில் அமைக்கும் பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.
சுற்றுலாவுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், 8 ஆற்றங்கரை கச்சா படித்துறைகளின் மறுசீரமைப்பு, காளிகா தாமில் மேம்பாட்டுப் பணிகள், ஷிவ்பூரில் உள்ள ரங்கில்தாஸ் குடியாவில் உள்ள குளம் மற்றும் படித்துறையை அழகுபடுத்துதல் மற்றும் துர்காகுண்டின் மறுசீரமைப்பு மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைப்பார். கர்தமேஷ்வர் மகாதேவ் கோயிலில் மறுசீரமைப்பு பணிகள், பல சுதந்திரப் போராட்ட வீரர்களின் பிறப்பிடமான கார்க்கியாவோனின் மேம்பாடு, சாரநாத், ரிஷி மந்த்வி மற்றும் ராம்நகர் மண்டலங்களில் நகர வசதி மையங்கள், லமாஹியில் உள்ள முன்ஷி பிரேம்சந்தின் மூதாதையர் வீட்டின் மறுசீரமைப்பு மற்றும் அருங்காட்சியகத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார். காஞ்சன்பூரில் ஒரு நகர்ப்புற மியாவாகி வனத்தை மேம்படுத்துவதற்கும், ஷாஹீத் உதயன் மற்றும் 21 பிற பூங்காக்களை மறுசீரமைப்பு மற்றும் அழகுபடுத்துவதற்கும் அவர் அடிக்கல் நாட்டுவார்.
மேலும், கலாச்சார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நீர்நிலைகளைப் பாதுகாக்க, ராம்குண்ட், மந்தாகினி, ஷங்குல்தாரா உள்ளிட்ட பல்வேறு குளங்களில் நீர் சுத்திகரிப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார், அத்துடன் நான்கு மிதக்கும் பூஜை மேடைகள் நிறுவப்படும். கிராமப்புறங்களில் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 47 கிராமப்புற குடிநீர் திட்டங்களையும் பிரதமர் திறந்து வைப்பார்.
அனைவருக்கும் தரமான கல்வி என்ற தனது தொலைநோக்குப் பார்வையை மேலும் மேம்படுத்தும் வகையில், நகராட்சி எல்லைக்குள் 53 பள்ளி கட்டிடங்களின் மேம்பாட்டுப் பணிகளையும் பிரதமர் தொடங்கி வைப்பார். புதிய மாவட்ட நூலகம் கட்டுதல் மற்றும் லால்பூர், ஜாகினியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளின் புனரமைப்பு உள்ளிட்ட பல கல்வித் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுவார்.
சுகாதார உள்கட்டமைப்பிற்கு ஒரு பெரிய ஊக்கமாக, மகாமனா பண்டித மதன் மோகன் மாளவியா புற்றுநோய் மையம் மற்றும் ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மற்றும் சிடி ஸ்கேன் வசதிகள் உள்ளிட்ட மேம்பட்ட மருத்துவ உபகரண நிறுவல்களை பிரதமர் திறந்து வைப்பார். ஹோமியோபதி கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும் அவர் அடிக்கல் நாட்டுவார். மேலும், அவர் ஒரு விலங்கு கருத்தடை மையத்தையும் அதனுடன் தொடர்புடைய நாய் பராமரிப்பு மையத்தையும் திறந்து வைப்பார்.
வாரணாசியில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு உள்கட்டமைப்புக்கான தனது தொலைநோக்கை மேலும் விரிவுபடுத்தும் வகையில், பிரதமர், டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் செயற்கை ஹாக்கி புல்தரையைத் திறந்து வைப்பார். சட்ட அமலாக்கப் பணியாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில், ராம்நகரில் உள்ள பிரதேச ஆயுதப்படை காவலர் (PAC) வளாகத்தில் 300 பேர் அமரக்கூடிய பல்நோக்கு மண்டபத்தை பிரதமர் திறந்து வைப்பார் மற்றும் விரைவு நடவடிக்கை குழு (QRT) முகாம்களுக்கு அடிக்கல் நாட்டுவார்.
விவசாயிகள் நலனுக்கான ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியாக,பிரதமரின் கிசான் திட்டத்தின் 20வது தவணையை வெளியிடுவார். நாடு முழுவதும் உள்ள 9.7 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.20,500 கோடிக்கும் அதிகமான தொகை நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்த வெளியீட்டின் மூலம், இந்தத் திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.3.90 லட்சம் கோடியைத் தாண்டும்.
காசி சன்சத் பிரதியோகிதாவின் கீழ் ஓவியப் போட்டி, புகைப்படப் போட்டி, கேல்-கூட் பிரதியோகிதா, ஞான பிரதியோகிதா மற்றும் வேலைவாய்ப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மற்றும் போட்டிகளுக்கான பதிவு தளத்தையும் பிரதமர் திறந்து வைப்பார். பல்வேறு மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் பயனாளிகளுக்கு 7,400க்கும் மேற்பட்ட உதவி உபகரணங்களையும் பிரதமர் விநியோகிப்பார்.
***
(Release ID: 2150952)
AD/RB/DL
(Release ID: 2151128)
Read this release in:
Odia
,
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam