பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 2025 தொடங்குவதையொட்டி பிரதமரின் உரை

Posted On: 21 JUL 2025 11:47AM by PIB Chennai

வணக்கம் நண்பர்களே!

மழைக்கால கூட்டத் தொடரில் ஊடகவியலாளர்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன்.

நண்பர்களே,

மழைக்காலம் என்பது புத்துணர்ச்சி மற்றும் படைப்பாக்கத்தின் அடையாளமாகும். இதுவரை கிடைத்த தகவலின்படி, இக்காலம் வேளாண்மைக்கு பயனளிக்கக் கூடியது என்ற செய்தியுடன் நாடு முழுவதும் வானிலை சாதகமாக உள்ளது. நமது விவசாயிகளின் பொருளாதாரத்தில் மழை முக்கிய பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், தேசிய பொருளாதாரம், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் ஒவ்வொரு வீட்டின் பொருளாதாரத்திலும் பங்கு வகிக்கிறது.

நண்பர்களே,

இந்த மழைக்கால கூட்டத் தொடர் நாட்டிற்கு பெருமை அளிக்கக் கூடிய விஷயமாகும். இத்தொடர் நாட்டின் வெற்றியை கொண்டாடுவதாக அமைந்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் முதல் முறையாக இந்திய மூவண்ணக்கொடி பறக்கவிடப்பட்டிருப்பது அனைத்து இந்தியர்களுக்கும் பெருமை அளிக்கக் கூடிய தருணமாகும். மக்களவை, மாநிலங்களவை உள்ளிட்ட நாடாளுமன்ற மற்றும் நாட்டின் குடிமக்கள் இந்த வெற்றியை ஒருமித்த குரலில் கொண்டாடுவதற்கு இணைவார்கள்.

நண்பர்களே,

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய ஆயுதப்படையினர் தங்களது நோக்கங்களில் நூறு சதவீத வெற்றியைக் கண்டனர். வெறும் 22 நிமிடங்களில் எதிரியின் பிரதேசத்தில் தனது இலக்குகளை அடைந்து இந்த போர் நடவடிக்கை அவற்றை சிதைத்து அழித்தது.

நண்பர்களே,

ஒரு காலத்தில் நாட்டில் நூற்றுக்கணக்கான மாவட்டங்கள் நக்சல் ஆதிக்கத்தில் இருந்த நிலையில் தற்போது அங்கெல்லாம் சுதந்திர காற்று சுவாசிக்கப்படுகிறது என்று என்னால் பெருமையுடன் கூறமுடியும். நமது அரசியல் சாசனம் குண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகளை வெற்றிகொண்டுள்ளது.

நண்பர்களே,

2014-ம் ஆண்டுக்கு முன்பு உலகப் பொருளாதார நாடுகளின் தரவரிசையில் நாம் 10-வது இடத்தில் இருந்தோம். தற்போது உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடு என்ற நிலையை நோக்கி இந்தியா விரைவாக முன்னேறுகிறது. 25 கோடி மக்கள் ஏழ்மை நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டதை பல்வேறு சர்வதேச அமைப்புகள் பாராட்டுகின்றன.

நண்பர்களே,

சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் 90 கோடிக்கும் அதிகமானவர்கள் சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் உள்ளனர். இது மிகப்பெரிய சாதனையாகும். அதே போல் மழைக்காலங்களில் பரவும் கண்நோயான ட்ராகோமா, இந்தியாவில் கிடையாது என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

நண்பர்களே,

பஹல்காமில் நிகழ்ந்த கொடூரமான படுகொலைத்தாக்குதல் உலகை அதிர்ச்சியடையச் செய்தது. பயங்கரவாதம் மற்றும் அச்செயல்களில் ஈடுபடுவோருக்கு நிதியுதவி செய்வோர் குறித்து உலகின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இதற்காக பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நாட்டின் சேவைக்காக சர்வதேச நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு விளக்கினார்கள். நாட்டின் நலன் கருதி இந்த முக்கிய பணியில் ஈடுபட்டதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகளை பாராட்டுகிறேன். அவர்களுடைய முயற்சிகள் நாட்டிற்கு நேர்மறையான சூழலை உருவாக்கியுள்ளன‌. பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் கண்ணோட்டத்தை சர்வதேச சமுதாயத்தின் மனதை விழிப்படைய செய்தது. நாட்டின் நலனுக்காக இந்த சிறப்பான பங்களிப்பில் ஈடுபட்ட நமது நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் பாராட்டுவது எனது பாக்கியம் என்று நான் கருதுகிறேன்.  அர்த்தமுடைய ஆக்கபூர்வமான விவாதங்களில் பங்கேற்பதற்காக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி!

***

AD/TS/IR/AG


(Release ID: 2146368)