பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம்

Posted On: 09 JUL 2025 12:54AM by PIB Chennai

மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா அவர்களே,

இருநாடுகளின் பிரதிநிதிகளே,

ஊடக நண்பர்களே,

வணக்கம்.

“போவா டார்டே”.

ரியோவிலும் பிரேசிலியாவிலும் அன்பான வரவேற்பு அளித்ததற்காக எனது நண்பர் அதிபர் லூலாவுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அமேசான் அழகிலும் உங்களின் அன்பிலும் உண்மையிலேயே நாங்கள் மனம் நெகிழ்ந்துள்ளோம்.

பிரேசில் அதிபரால் பிரேசிலின் மிக உயரிய தேசிய விருது வழங்கி இன்று கௌரவிக்கப்பட்டிருக்கும் தருணமானது எனக்கு மட்டும் பெருமிதமும், உணர்ச்சிப் பெருக்கானதும் அல்ல, 140 கோடி இந்தியர்களுக்கானதாகும்.  இந்த கௌரவத்திற்காக அதிபருக்கும், பிரேசில் அரசுக்கும் பிரேசில் மக்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இந்தியா- பிரேசில் இடையேயான உத்திசார்ந்த கூட்டாண்மையின் தலைமைச் சிற்பியாக எனது நண்பர் அதிபர் லூலா விளங்குகிறார். எங்களின் உறவுகளை வலுப்படுத்துவதில் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளார்.

அவருடனான ஒவ்வொரு சந்திப்பும் எங்கள் நாடுகளின் முன்னேற்றத்திற்கும் நல்வாழ்வுக்கும் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதற்கு எனக்கு ஊக்கமளித்துள்ளது. இந்த கௌரவத்தை இந்தியாவுக்கான அவரது வலுவான உறுதிப்பாட்டிற்கும் எங்களின் நீடித்த நட்புறவுக்கும் நான் அர்ப்பணிக்கிறேன்.

நண்பர்களே,

இன்றையப் பேச்சுகளில் அனைத்துத் துறைகளிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்த நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தை 20 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்த நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

இந்திய மக்களால் நேசிக்கப்படும் கிரிக்கெட் போல பிரேசிலின் ஆர்வம் மிக்க கால்பந்து உள்ளது. பந்தினை எல்லைக்கோட்டுக்கு வேகமாக அனுப்புவதாக இருந்தாலும், கோல் போடுவதாக இருந்தாலும் இருதரப்பும் ஒரே சிந்தனையுடன் இருந்தால் 20 பில்லியன் டாலர் கூட்டாண்மையை எட்டுவது ஒன்றும் சிரமம் அல்ல. இந்தியா – மெர்கோசர் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்த நாங்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்.

நண்பர்களே,

எரிசக்தி துறையில் எங்களின் ஒத்துழைப்பு தொடர்ந்து சீராக அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழல் மற்றும் தூய்மையான எரிசக்திக்கு எங்களின் இருநாடுகளும் உயர் முன்னுரிமை அளிக்கின்றன. இன்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம், எங்களின தூய்மை இலக்குகளுக்கு புதிய திசையையும், வேகத்தையும் அளிக்கும் வகையில் இந்தத் துறையில் ஒத்துழைப்பை விரிவாக்கும். இந்த ஆண்டின் பிற்பகுதியில் பிரேசிலில் சிஓபி-30 உச்சிமாநாடு நடைபெற இருப்பதற்காக அதிபர் லூலாவுக்கு நான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் எங்களின் ஒத்துழைப்பு இருநாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. எங்களின் பாதுகாப்பு தொழில்துறைகளை இணைக்கவும் இந்த கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும் எங்களின் முயற்சிகளை நாங்கள் தொடர்வோம்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் சூப்பர் கம்ப்யூட்டர் துறைகளில் எங்களின் ஒத்துழைப்பு விரிவடைகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, மனிதர்களை மையப்படுத்திய புதிய கண்டுபிடிப்பு என்ற எங்களின் பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையை இது பிரதிபலிக்கிறது.

பிரேசிலில் யுபிஐ ஏற்புக்கு இருதரப்பிலும் இணைந்து பணியாற்றுகிறோம். டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, விண்வெளி போன்ற துறைகளில் பிரேசிலுடன் இந்தியாவின் வெற்றிகரமான அனுபவத்தை பகிர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்புத்துறைகளில் எங்களின் ஒத்துழைப்பு பல பத்தாண்டுகளாக நிலவுகிறது. அதேபோல், வேளாண் ஆராய்ச்சி மற்றும் உணவுபதனத் துறைகளில் நாங்கள் இப்போது ஒருங்கிணைந்து பணியாற்றுகிறோம்.  சுகாதாரத் துறையிலும் கூட எங்களின் ஒத்துழைப்பு விரிவடைந்து வருகிறது. பிரேசிலில் ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளை விரிவுபடுத்த நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

நண்பர்களே,

எங்களின் நட்புறவில் மக்களோடு மக்கள் மேற்கொள்ளும் உறவுகள் முக்கியமானதாகும். விளையாட்டுகளில் எங்களின் ஆர்வமும் கூட எங்களை வலுவாக இணைத்து வைக்கின்றன.

இந்தியா – பிரேசில் உறவுகள் கார்னிவல் விழா போல் துடிப்பாகவும், கால்பந்து போட்டியைப் போல் ஆர்வமாகவும், சம்பா விழாவைப் போல் இதயங்களை இணைப்பதாகவும் உள்ளன. இவை அனைத்தும் விசா கவுண்டர்களில் நீண்ட வரிசைகள் இல்லாமல் அமைகின்றன! இந்த உணர்வுடன் நமது நாடுகளுக்கு இடையே மக்களுடனான குறிப்பாக சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், விளையட்டு வீரர்கள், வணிகர்களுடனான பரிவர்த்தனைகளை எளிதாக்க நாங்கள் இணைந்து பாடுபடுவோம்.

நணபர்களே,

உலக அளவில், இந்தியாவும், பிரேசிலும் எப்போதும் நெருக்கமான ஒத்துழைப்புடன் பணியாற்றுகின்றன. இரண்டு பெரிய ஜனநாயகங்கள் என்ற வகையில், எங்களின் ஒத்துழைப்பு உலகளாவிய தெற்கு நாடுகளுக்கு மட்டும் பொருத்தமானதாக இல்லாமல், மனிதகுலம் முழுமைக்கும் பொருத்தமானதாக உள்ளது. உலக அரங்கில் முன்னிலை வகிப்பதற்கு உலகளாவிய தெற்கின் கவலைகளையும், முன்னுரிமைகளையும் கொண்டு வரும் தார்மீக பொறுப்பில் நாங்கள் உறுதியான நம்பிக்கை வைத்துள்ளோம்.

இன்றைய உலகம் பதற்றத்துடனும், நிச்சயமற்ற தன்மையுடனும் செல்லும் நிலையில்…. எனது நண்பர் ஏற்கனவே இதுபற்றி விரிவாக கூறியிருப்பதால் நான் திரும்பவும் கூறவில்லை…. இந்தியா-பிரேசில் கூட்டாண்மை என்பது நிலைத்தன்மைக்கும் சமநிலை ஏற்படுத்துவதற்கும் முக்கியமானதாக விளங்குகிறது. அனைத்து பிரச்சனைகளும் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக உறவுகள் மூலம் மட்டுமே தீர்க்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் முழுமையாக உடன்படுகிறோம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பூஜ்ய சகிப்புத்தன்மை மற்றும் பூஜ்ய இரட்டை நிலைப்பாடு என்ற பொதுவான அணுகுமுறையை நாங்கள் பகிரிந்து கொள்கிறோம். பயங்கரவாதம் என்று வரும் போது, இரட்டை நிலைப்பாட்டுக்கு இடமே இல்லை என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

மேன்மை தங்கியவரே,

இந்த மிக உயரிய தேசிய கவுரவத்திற்கும் உங்களின் நீடித்த நட்புறவுக்கும் எனது மனமார்ந்த நன்றியை 140 கோடி இந்தியர்கள் சார்பில் நான் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுக்கிறேன்.

நன்றி.

“முயிட்டோ ஒப்ரிகடோ!” 

***

(Release ID: 2143274)

VL/TS/SMB/RJ/KR


(Release ID: 2143387)