பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அகமதாபாத் விமான விபத்து நடந்த இடத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா ஆய்வு செய்தார்

சிவில் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினரை டாக்டர் பி கே மிஸ்ரா சந்தித்தார்

பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு டாக்டர் பி கே மிஸ்ரா அறிவுறுத்தினார்.

Posted On: 15 JUN 2025 8:09PM by PIB Chennai

சமீபத்திய விமான விபத்தைத் தொடர்ந்து, நிலைமையை மதிப்பிடுவதற்காக பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா, அகமதாபாத்திற்கு வருகை தந்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் விரைவான நிவாரணம், முழுமையான விசாரணை மற்றும் விரிவான ஆதரவை உறுதி செய்வதற்கான பிரதமர் திரு. நரேந்திர மோடியின் உத்தரவை அவரது வருகை வலுப்படுத்தியது.

 

மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி அருகே விபத்து நடந்த இடத்தை டாக்டர் மிஸ்ரா ஆய்வு செய்தார். அங்கு மாநில அரசு, விமான விபத்து புலனாய்வுப் பணியகம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் நிகழ்வுகளின் வரிசைமுறை மற்றும் உடனடி நடவடிக்கைகள் குறித்து அவருக்கு விளக்கினர்.

 

அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு சென்றபோது, ​​டாக்டர் மிஸ்ரா, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்தார், டிஎன்ஏ மாதிரி பொருத்த சோதனையை கண்காணித்ததுடன், முழு உதவியையும் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். காயமடைந்தவர்களுடன் அவர் தொடர்பு கொண்டார், அவர்களின் மருத்துவ சிகிச்சை மற்றும் மீட்சிக்கு முன்னுரிமை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

காந்திநகரில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில், டாக்டர் மிஸ்ரா டிஎன்ஏ மாதிரி முயற்சிகளை மதிப்பாய்வு செய்து, அறிவியல் துல்லியத்தைப் பேணுகையில் விரைவாக அடையாளத்தை முடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

 

அகமதாபாத்தில் உள்ள சர்க்யூட் ஹவுஸில் நடந்த உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய டாக்டர் மிஸ்ரா, மத்திய மற்றும் மாநில அரசுகள், விமான விபத்து புலனாய்வுப் பணியகம் மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுடன் நடந்து வரும் நிவாரணம், மீட்பு மற்றும் விசாரணை முயற்சிகள் குறித்து விவாதித்தார். விமான விபத்து புலனாய்வுப் பணியகம், ஒரு விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும் விமானம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது என்பதால் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், சர்வதேச நெறிமுறைகளின் கீழ் இணையான விசாரணையை நடத்தி வருகிறது. விமான தரவு ரெக்கார்டர்  மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டர் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

 

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளை வழங்குவதற்கும், சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களிலும் ஒருங்கிணைந்த பதிலை உறுதி செய்வதற்கும் பிரதமரின் உறுதிப்பாட்டை டாக்டர் மிஸ்ரா மீண்டும் வலியுறுத்தினார். பிரதமர் அலுவலக அதிகாரிகள், பிரதமரின் ஆலோசகர் திரு தருண் கபூர் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் துணைச் செயலாளர் திரு மங்கேஷ் கில்டியல் ஆகியோர் உடன் இருந்தனர்.

AD/BR/KR

***


(Release ID: 2136547)