பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜெனீவாவில் நடைபெற்ற பேரிடர் அபாயக் குறைப்பு நிதியுதவி குறித்த அமைச்சர்கள் அளவிலான வட்டமேசை கூட்டத்தில் உறுதியான, காலக்கெடுவுடன் கூடிய விளைவுகளை இந்தியா கோரியது

Posted On: 06 JUN 2025 11:27AM by PIB Chennai

ஜெனீவாவில் ஜூன் 04, 2025 அன்று நடைபெற்ற பேரிடர் அபாயக் குறைப்பு நிதியுதவி குறித்த அமைச்சர்கள் அளவிலான வட்டமேசை கூட்டத்தில்  பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ரா உரையாற்றினார். இந்த முக்கியமான விவாதத்தை நடத்துவதற்காக ஏற்பாட்டாளர்களை அவர் பாராட்டினார். ஜி20 தலைமைத்துவங்கள் மூலம் உலகளாவிய உரையாடலைத் தொடர்வதில் பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவின் பங்களிப்புகளையும் இந்தியா அங்கீகரித்தது.

பேரிடர் அபாயக் குறைப்பு (டி.ஆர்.ஆர்) நிதியுதவி என்பது ஒரு புறப் பிரச்சினை அல்ல; மாறாக அதிகரித்து வரும் பருவநிலை மற்றும் பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளும் போது தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்புகளின் திறமையான  செயல்பாட்டிற்கும் வளர்ச்சி ஆதாயங்களைப் பாதுகாப்பதற்கும் முக்கியமானது ஆகும் என்று டாக்டர் மிஸ்ரா சுட்டிக் காட்டினார். வலுவான மற்றும் பதில்வினை புரியக்கக்கூடிய டி.ஆர்.ஆர் நிதியுதவி கட்டமைப்பானது மீள்தன்மையின் மூலக்கல்லாகும் என்ற இந்தியாவின் நம்பிக்கையை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

டி.ஆர்.ஆர் நிதியுதவியில் இந்தியாவின் பயணத்தை எடுத்துரைத்த அவர், ஆரம்பகால நிதி ஆணையங்களின் ஆரம்ப ஒதுக்கீடுகள் 60 மில்லியன் ரூபாய் (தோராயமாக 0.7 மில்லியன் அமெரிக்க டாலர்) என்று குறிப்பிட்டார். இன்று, 15வது நிதி ஆணையத்தின் கீழ் ஒட்டுமொத்த செலவு  2.32 டிரில்லியன் ரூபாயைத் (தோராயமாக  28 பில்லியன் டாலர் ) தாண்டியுள்ளது.

2005 ஆம் ஆண்டின் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் ஆதரவுடன், தேசிய அளவில் இருந்து மாநில மற்றும் மாவட்ட அளவில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட, விதி அடிப்படையிலான ஒதுக்கீடுகளின் முக்கியத்துவத்தை டாக்டர் மிஸ்ரா வலியுறுத்தினார். இந்த மாற்றம் பேரிடர் நிதி எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக கட்டமைக்கப்பட்டதாகவும் கணிக்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்கிறது என்று அவர் கூறினார்.

நான்கு முக்கிய கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்தியாவின் டி.ஆர்.ஆர்  நிதியளிப்பு அணுகுமுறையை கோடிட்டுக் காட்டிய திரு மிஸ்ரா, முதலில், தயார்நிலை, தணிவிப்பு , நிவாரணம் மற்றும் மீட்புக்கான அர்ப்பணிக்கப்பட்ட நிதி சாளரங்கள்; இரண்டாவதாக, பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்; மூன்றாவது, அனைத்து அரசாங்க மட்டங்களிலும் - மத்திய, மாநில மற்றும் உள்ளூர் முழுவதும் நிதி வளங்களை அணுகுதல்; நான்காவது கொள்கை பொறுப்புடைமை, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைத்து செலவினங்களையும் வழிநடத்தும் அளவிடக்கூடிய விளைவுகள் என விளக்கினார்.

பேரிடர் ஆபத்து நிதியளிப்பு தேசிய அளவில் சுதந்திரமானதாக இயக்கப்பட வேண்டும் என்றும், சர்வதேச ஒத்துழைப்பால் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்றும் டாக்டர் மிஸ்ரா வலியுறுத்தினார். ஒவ்வொரு நாடும் அதன் நிர்வாக கட்டமைப்பு, நிதிச் சூழல் மற்றும் இடர் சுயவிவரத்திற்கு ஏற்ப அதன் அமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்றாலும், உலகளாவிய அளவுகோல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் இன்றியமையாததாகவே உள்ளன எனவும் அவர் கூறினார்.

டிஆர்ஆர் நிதி அமைப்புகளை நிறுவுவதற்கும் வலுப்படுத்துவதற்கும் ஆதரவளிக்க ஒரு அர்ப்பணிப்புள்ள சர்வதேச நிதி இயக்க முறை இல்லாததை டாக்டர் மிஸ்ரா  சுட்டிக்காட்டினார். ஐ.நா. அமைப்பு மற்றும் பலதரப்பு நிதி நிறுவனங்களால் ஆதரிக்கப்படும் ஒரு உலகளாவிய வசதியை உருவாக்க, வினையூக்க நிதி, தொழில்நுட்ப உதவி மற்றும் அறிவு பரிமாற்றத்திற்கான ஒரு தளத்தை வழங்க அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த  வட்டமேசை கூட்டத்தில்  நோக்க அறிக்கைகளுக்கு அப்பால் சென்று உறுதியான, காலக்கெடு சார்ந்த முடிவுகளை நோக்கி நகருமாறு இந்தியா வலியுறுத்தியது. தேசிய அளவில் இயக்கப்படும் ஆனால் சர்வதேச அளவில் ஆதரிக்கப்படும் டிஆர்ஆர் நிதி கட்டமைப்பை உருவாக்குவதில் தலைமைத்துவம் மற்றும் ஒத்துழைப்புக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை டாக்டர் மிஸ்ரா மீண்டும் உறுதிப்படுத்தினார்.

 

*** 

(Release ID: 2134452)

AD/TS/PKV/KPG/KR


(Release ID: 2134488) Visitor Counter : 2