பிரதமர் அலுவலகம்
போபாலில் உள்ள தேவி அஹில்யாபாய் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
Posted On:
31 MAY 2025 4:18PM by PIB Chennai
மத்தியப் பிரதேச ஆளுநர், திரு மங்குபாய் படேல் அவர்களே, மதிப்பிற்குரிய முதலமைச்சர் திரு. மோகன் யாதவ் அவர்களே, தொழில்நுட்பம் மூலம் இணையும் மத்திய அமைச்சர்களே, இந்தூரைச் சேர்ந்த தோகான் சாஹு அவர்களே, தாத்தியாவிலிருந்து இணையும் திரு ராம் மோகன் நாயுடு அவர்களே, சத்னாவிலிருந்து இணையும் திரு முரளிதர் மோஹோல் அவர்களே, மேடையில் இருக்கும் மாநில துணை முதலமைச்சர்கள் திரு. ஜெகதீஷ் தேவ்தா & திரு. ராஜேந்திர சுக்லா அவர்களே, மக்களவை நண்பர் திரு. வி. டி. சர்மா அவர்களே, இங்கு பெருமளவில் கூடியிருக்கும் இதர அமைச்சர்களே, மக்கள் பிரதிநிதிகளே மற்றும் எனது அன்பான சகோதர சகோதரிகளே!
முதலாவதாக, நான் பாரத அன்னைக்கும், பாரதப் பெண்களுக்கும் தலைவணங்குகிறேன். இன்று, தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் ஒரு பெரிய கூட்டம் இங்கு வந்து தங்கள் ஆசிகளை நமக்கு வழங்கியுள்ளது. உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் நான் உண்மையிலேயே பாக்கியம் பெற்றதாக உணர்கிறேன்.
சகோதர சகோதரிகளே,
லோகமாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் 300வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தேசத்தைக் கட்டியெழுப்பும் மகத்தான பணியில் பங்கேற்க 140 கோடி இந்தியர்களுக்கும் இது ஒரு முக்கியமான சந்தர்ப்பமாகும். மக்களுக்கு சேவை செய்வதிலும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும்தான் உண்மையான நிர்வாகம் இருக்கிறது என்று தேவி அஹில்யாபாய் கூறுவார். இன்றைய நிகழ்ச்சி அவரது ஆழமான தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்கிறது. இந்தூர் மெட்ரோ இன்று திறக்கப்பட்டுள்ளது, மேலும் தாத்தியா மற்றும் சத்னாவிலிருந்து விமான சேவைகளும் இப்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் மத்தியப் பிரதேசத்தில் பொது வசதிகளை மேம்படுத்தும், வளர்ச்சியை துரிதப்படுத்தும், மேலும் ஏராளமான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இந்தப் புனிதமான நாளில், இதுபோன்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சி முன்னேற்றங்களுக்காக உங்களுக்கும், முழு மத்தியப் பிரதேச மாநிலத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
லோகமாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கர் என்ற பெயரே ஒரு ஆழ்ந்த பயபக்தியைத் தூண்டுகிறது. அவருடைய ஆளுமையின் மகத்துவத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. மன உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும், எவ்வளவு பாதகமான சூழ்நிலைகள் வந்தாலும், ஒருவர் குறிப்பிடத்தக்க பலன்களை அடைய முடியும் என்ற கருத்தின் சின்னமாக தேவி அஹில்யாபாய் உள்ளார். 2.5 - 3 நூற்றாண்டுகளுக்கு முன்பு, நமது தேசம் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தபோது, அவர் செய்த அசாதாரண சாதனைகளை, பல தலைமுறைகள் பேசுகின்றன. இன்று இதுபோன்ற சாதனைகளைப் பற்றிப் பேசுவது சுலபமாக இருந்தாலும், அத்தகைய கடினமான காலங்களில் அவற்றை அடைவது எளிதாக இல்லை.
நண்பர்களே,
லோகமாதா அஹில்யாபாய், கடவுளுக்குச் சேவை செய்வதையும் மக்களுக்குச் சேவை செய்வதையும் தனித்தனி கடமைகளாக ஒருபோதும் பார்த்ததில்லை. அவர் எப்போதும் தன்னுடன் ஒரு சிவலிங்கத்தை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இவ்வளவு கொந்தளிப்பான காலகட்டத்தில் ஒரு மாநிலத்தை வழிநடத்துவது முள் கிரீடம் அணிவதற்கு ஒப்பானது. அந்தப் பொறுப்பின் சுமையை ஒருவரால் கற்பனை செய்து மட்டுமே பார்க்க முடியும். ஆயினும்கூட, லோகமாதா அஹில்யாபாய் தனது மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஒரு புதிய திசையைக் கொடுத்தார். ஏழைகளிலும் ஏழ்மையானவர்களுக்குக் கூட அதிகாரம் அளிப்பதற்காக அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். தேவி அஹில்யாபாய், பாரதத்தின் பாரம்பரியத்தை உறுதியாகப் பாதுகாத்தவர். நமது கோயில்கள், புனிதத் தலங்கள் மற்றும் கலாச்சார அடையாளங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளான நேரத்தில், லோகமாதா அவற்றைப் பாதுகாக்க முன்முயற்சி எடுத்தார். காசி விஸ்வநாதர் கோயில் உட்பட இந்தியா முழுவதும் ஏராளமான கோயில்களையும் புனிதத் தலங்களையும் அவர் மீட்டெடுத்து மீண்டும் கட்டினார். லோகமாதா அஹில்யாபாய் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை விரிவாக மேற்கொண்ட காசி நகரத்திற்கு இப்போது சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனது அதிர்ஷ்டம். இன்று, நீங்கள் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றால், அங்கு தேவி அஹில்யாபாயின் சிலையையும் காணலாம்.
நண்பர்களே,
ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு மிகுந்த முன்னுரிமை அளிக்கும் ஒரு முன்மாதிரியான நிர்வாக மாதிரியை தேவி அஹில்யாபாய் ஏற்றுக்கொண்டார். வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கினார். அவர் விவசாயத்தையும், வனம் சார்ந்த குடிசைத் தொழில்கள் மற்றும் கைவினைகளையும் ஊக்குவித்தார். விவசாயத்தை ஆதரிப்பதற்காக, அவர் சிறிய கால்வாய்களின் சிக்கலான வலையமைப்பைக் கட்டினார் - மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு அவருக்கு இருந்த தொலைநோக்கை கற்பனை செய்து பாருங்கள். நீர் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக அவர் ஏராளமான குளங்களையும் கட்டினார். இன்று, "மழை நீர் சேமிப்பு" என்ற செய்தியை நாம் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஆனாலும், தேவி அஹில்யாபாய் இந்த செய்தியை 250 முதல் 300 ஆண்டுகளுக்கு முன்பே நமக்குக் கொடுத்திருந்தார். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பருத்தி மற்றும் மசாலாப் பொருட்களின் சாகுபடியை அவர் ஊக்குவித்தார். இன்றும் கூட, விவசாயிகள் தங்கள் பயிர்களை நெல் அல்லது கரும்புக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல், பன்முகப்படுத்த வேண்டும் என்று நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். நாட்டிற்குத் தேவையான அனைத்தையும் நாம் வளர்க்க வேண்டும். பழங்குடி மற்றும் நாடோடி சமூகங்களுக்காக, காலியாக உள்ள நிலங்களை விவசாயத்திற்குப் பயன்படுத்துவதற்கான திட்டங்களை அவர் வகுத்தார். இன்று இந்தியாவின் குடியரசுத்தலைவராக இருக்கும் ஒரு பழங்குடி மகளின் தலைமையில் எனது பழங்குடி சகோதர சகோதரிகளுக்கு சேவை செய்வதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உலகப் புகழ்பெற்ற மகேஸ்வரி புடவைகளை மேம்படுத்துவதற்காக தேவி அஹில்யாபாய் புதிய தொழில்களையும் நிறுவினார். திறமை மற்றும் கைவினைத்திறனை அவர் அபாரமாகப் போற்றியிருந்தார் என்பது சிலருக்குத் தெரிந்திருக்கலாம். குஜராத்தின் ஜூனகாத்தில் இருந்து சில குடும்பங்களை மகேஷ்வருக்கு அழைத்து வந்து, அவர்களை ஒன்றிணைத்து, மகேஸ்வரி புடவைகளின் கைவினைப்பொருளை உருவாக்கினார். 250 முதல் 300 ஆண்டுகளுக்கு முன்பு அவர் நிறுவிய மரபு, பல குடும்பங்களின் வாழ்க்கையை வளப்படுத்தி வருகிறது, மேலும் நமது நெசவாளர்களுக்கு மிகுந்த பயனளிக்கிறது.
நண்பர்களே,
தேவி அஹில்யாபாய், தனது பல தொலைநோக்கு சமூக சீர்திருத்தங்களுக்காக என்றென்றும் நினைவுகூரப்படுவார். இன்று, பெண் குழந்தைகளின் திருமண வயதை உயர்த்துவது பற்றி நாம் பேசும்போது, நம் நாட்டில் சில தனிநபர்கள் அதை மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தலாகக் கருதுகின்றனர், அல்லது மத நம்பிக்கைகளுக்கு முரணாகக் கருதுகின்றனர். ஆனால் தேவி அஹில்யாபாயை எடுத்துக்கொண்டால், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, பெண்களின் கண்ணியம் மற்றும் ஆற்றலுக்கான மரியாதை காரணமாக, ஒரு பெண்ணின் திருமணத்திற்கு ஏற்ற வயதைப் பற்றி அவர் ஏற்கனவே சிந்தித்துக் கொண்டிருந்தார். அவரே இளம் வயதில் திருமணம் செய்து கொண்டாலும், மகள்களின் வளர்ச்சியையும் அவர்களுக்கு அதிகாரமளிப்பதை உறுதி செய்யும் பாதை என்ன என்பது குறித்தும் அவருக்குத் தெளிவான புரிதல் இருந்தது. தேவி அஹில்யாபாயின் பார்வை அப்படிப்பட்டது. பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டும் என்றும், கணவனை இழந்த விதவைகள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவர் காலத்தில், இதுபோன்ற விஷயங்களைப் பற்றி விவாதிப்பது கூட மிகவும் கடினமாக இருந்தது, ஆனாலும் தேவி அஹில்யாபாய் இந்த முற்போக்கான சீர்திருத்தங்களை உறுதியாக ஆதரித்தார். இவர் மால்வா ராணுவத்திற்குள் ஒரு சிறப்பு பெண்கள் படைப்பிரிவையும் ஏற்படுத்தினார். மேற்கத்திய உலகில் உள்ள மக்கள் இதைப் பற்றி இன்னும் அறியாமலேயே உள்ளனர். 2.5 - 3 நூற்றாண்டுகளுக்கு முன்பு, பாரதத்தில் பெண்கள் அதன் படைகளில் பணியாற்றினர் என்பதை அறியாமல், அவர்கள் பெரும்பாலும் பெண்களின் உரிமைகள் தொடர்பாக எங்களை விமர்சிக்கவும் இழிவுபடுத்தவும் முயற்சிக்கிறார்கள்.
நண்பர்களே,
பெண்களின் பாதுகாப்பிற்காக, அவர் கிராமங்களில் பெண்கள் பாதுகாப்பு குழுக்களை நிறுவினார். தேவி அஹில்யாபாய் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணியில் பெண்களின் விலைமதிப்பற்ற பங்கைப் போற்றுகிறார். சமூகத்தில் இவ்வளவு ஆழமான மாற்றத்தைக் கொண்டு வந்த தேவி அஹில்யாபாய்க்கு நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். அவர் எங்கிருந்தாலும், அவர் நம் அனைவருக்கும் தொடர்ந்து தனது ஆசிகளைப் பொழியட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
நண்பர்களே,
தேவி அஹில்யாபாய் கூறிய ஒரு சக்திவாய்ந்த கூற்று நமக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும், அதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. அவருடைய வார்த்தைகளின் சாராம்சம் இதுதான்: 'நாம் எதைப் பெறுகிறோமோ அது பொதுமக்களால் கொடுக்கப்பட்ட கடன், அதை திருப்பிச் செலுத்துவது நமது கடமை.' இன்று, நமது அரசு லோகமாதா அஹில்யாபாயால் பின்பற்றப்பட்ட இந்த மதிப்புகளால் வழிநடத்தப்படுகிறது. "குடிமகனே கடவுள்” என்பது நமது ஆட்சியின் மந்திரமாக மாறிவிட்டது. எங்கள் அரசு பெண்கள் தலைமையிலான முன்னேற்றத்தை அதன் வளர்ச்சி உத்தியின் மையத்தில் வைக்கிறது. அரசின் ஒவ்வொரு பெரிய திட்டத்திலும் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் மையமாக உள்ளனர். ஏழைகளுக்காக 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியும், மேலும் இவற்றில் பெரும்பாலானவை பெண்களின் பெயர்களில், அதாவது நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு சட்டப்பூர்வ உரிமையை வழங்குகின்றன. இந்தப் பெண்களில் பலருக்கு, அவர்களின் வாழ்க்கையில் ஒரு சொத்து அவர்களின் பெயரில் பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை. இதன் பொருள், நம் நாட்டில் கோடிக்கணக்கான பெண்கள் முதல் முறையாக வீட்டு உரிமையாளர்களாக மாறிவிட்டனர் என்பதாகும்.
நண்பர்களே,
இன்று, ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் நீர் கிடைப்பதை உறுதி செய்ய அரசு செயல்பட்டு வருகிறது, இதனால் நமது தாய்மார்களும் சகோதரிகளும் வெகு தொலைவு சென்று தண்ணீர் எடுக்கும் சிரமத்திலிருந்து விடுபடுவார்கள், மேலும் நமது மகள்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியும். கடந்த காலங்களில், கோடிக்கணக்கான பெண்களுக்கு மின்சாரம், சமையல் எரிவாயு மற்றும் கழிப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. இந்த வசதிகளை வழங்குவதை எங்கள் அரசு உறுதி செய்துள்ளது. இவை வெறும் வசதிகள் அல்ல; அவை நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு மரியாதை செலுத்தும் ஒரு உண்மையான சைகை. இந்த நடவடிக்கைகள் ஏழைக் குடும்பங்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் போராட்டங்கள் பலவற்றைத் தளர்த்தியுள்ளன.
நண்பர்களே,
முந்தைய காலங்களில், பல பெண்களுக்கு தங்கள் நோய்களை மறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கர்ப்ப காலத்தில் கூட, மருத்துவச் செலவுகள் குடும்பத்திற்கு சுமையாகிவிடும் என்று பயந்து, மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்த்தனர். இதன் விளைவாக, அவர்கள் வலியை அமைதியாகத் தாங்கிக் கொண்டனர். ஆயுஷ்மான் பாரத் திட்டம் அவர்களின் இந்தக் கவலையைப் போக்கியுள்ளது. இப்போது, அவர்களும் ரூ.5 லட்சம் வரை மதிப்புள்ள இலவச மருத்துவமனை சிகிச்சையைப் பெறலாம்.
நண்பர்களே,
கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்புடன், பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று வருமான உருவாக்கம் ஆகும். ஒரு பெண் தனக்கென பணம் சம்பாதிக்கும்போது, வீட்டிற்குள் அவருடைய சுயமரியாதை அதிகரிக்கிறது, மேலும் குடும்ப முடிவுகளில் அவருடைய பங்கேற்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. கடந்த பதினொரு ஆண்டுகளாக, பாரதப் பெண்களைப் பொருளாதார ரீதியாக மேம்படுத்த எங்கள் அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள் - 2014 க்கு முன்பு, நீங்கள் என்னிடம் சேவைப் பொறுப்பை ஒப்படைப்பதற்கு முன்பு, நாட்டில் 30 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வங்கிக் கணக்கு கூட இல்லை. எங்கள் அரசு மக்கள் நிதிக் கணக்குத் திட்டத்தைத் தொடங்கி அவர்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்குகளைத் திறந்தது. இதன்மூலம், அரசு இப்போது பல்வேறு திட்டங்களின் நிதியை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றுகிறது. இன்று, அவர்கள் கிராமங்களில் வாழ்ந்தாலும் சரி, நகரங்களில் வாழ்ந்தாலும் சரி, பெண்கள் சுயதொழில் செய்து, வாழ்வாதாரத்தை ஈட்டி, நிதி ரீதியாக சுதந்திரமாகி வருகின்றனர். 'முத்ரா திட்டம்’ மூலம், அவர்கள் பிணையம் இல்லாத கடன்களைப் பெறுகிறார்கள். மேலும் முத்ரா திட்டத்தின் பயனாளிகளில் 75% க்கும் அதிகமானோர், பெண்கள் ஆவர்.
நண்பர்களே,
இன்று நாடு முழுவதும் 10 கோடி பெண்கள் சுய உதவிக்குழுக்களுடன் தொடர்புடையவர்களாகவும் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர். இந்தப் பெண்களுக்கு புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவதில் அரசு உதவி வருகிறது, பல லட்ச ரூபாய் மதிப்பிலான ஆதரவை வழங்குகிறது. மூன்று கோடி பெண்களை லட்சபதி சகோதரிகளாக மாற்ற நாங்கள் தீர்மானித்துள்ளோம். 1.5 கோடிக்கும் மேற்பட்ட சகோதரிகள் ஏற்கனவே இந்த மைல்கல்லை அடைந்துள்ளனர் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொரு கிராமத்திலும், வங்கி சகிகள் இப்போது மக்களை வங்கி சேவைகளுடன் இணைக்கின்றனர். 'பீமா சகி'களுக்கு பயிற்சி அளிப்பதற்கான பிரச்சாரத்தையும் அரசு தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் காப்பீட்டுத் திட்டத்தை வழங்குவதில் நமது சகோதரிகளும் மகள்களும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றனர்.
நண்பர்களே,
பெண்கள் புதிய தொழில்நுட்பத்தை அணுகுவதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு காலம் இருந்தது. இன்று, நமது தேசம் அந்த சகாப்தத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளது. நமது சகோதரிகளும் மகள்களும் நவீன தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருப்பதை உறுதி செய்ய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உதாரணமாக, விவசாயத்தில், நாம் ஒரு ட்ரோன் புரட்சியைக் காண்கிறோம், மேலும் நமது கிராமப்புற பெண்கள் முன்னணியில் உள்ளனர். 'நமோ ட்ரோன் சகோதரி ' முயற்சி கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் வருமானத்தை அதிகரித்து, அவர்களின் சமூகங்களில் அவர்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தருகிறது.
நண்பர்களே,
நமது மகள்களில் பலர் விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள் மற்றும் விமானிகளாக மாறி வருகின்றனர். அறிவியல் மற்றும் கணிதம் படிக்கும் இளம் பெண்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நமது அனைத்து முக்கிய விண்வெளி பயணங்களிலும், பல தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் விஞ்ஞானிகளாக பங்களிக்கின்றனர். 100க்கும் மேற்பட்ட பெண் விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் பங்கேற்ற சந்திரயான்-3 பயணம் குறித்து ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது. அதேபோல், புத்தொழில் நிறுவனங்களின் யுகத்தில், நமது மகள்கள் அசாதாரண திறமையை வெளிப்படுத்துகிறார்கள். நாட்டில் உள்ள சுமார் 45% புத்தொழில் நிறுவனங்களில், குறைந்தது ஒரு இயக்குநராவது பெண்ணாக, நமது சகோதரிகள் அல்லது மகள்களில் ஒருவராகா உள்ளார். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நண்பர்களே,
கொள்கை வகுப்பில் பெண்கள் மற்றும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். கடந்த பத்தாண்டுகளில், இந்த முயற்சியில் பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எங்கள் அரசின் தலைமையின் கீழ் முதல் முறையாக, முழுநேர பாதுகாப்பு அமைச்சராக ஒரு பெண் நியமிக்கப்பட்டார். நாட்டிற்கு முதல் முறையாக ஒரு பெண் நிதியமைச்சர் கிடைத்துள்ளார். பஞ்சாயத்துகள் முதல் நாடாளுமன்றம் வரை, பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நாடாளுமன்றத்தில், 75 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இருப்பினும், இந்தப் பங்கேற்பை மேலும் விரிவுபடுத்த நாங்கள் இலக்கு வைத்துள்ளோம். இந்தக் கண்ணோட்டத்துடனேயே 'நாரி சக்தி வந்தன் ஆதினியம்' இயற்றப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்தச் சட்டம், இப்போது நமது அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு ஒரு யதார்த்தமாகிவிட்டது. சாராம்சத்தில், பாஜக அரசு நமது சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு ஒவ்வொரு மட்டத்திலும், ஒவ்வொரு களத்திலும் அதிகாரம் அளிக்க பாடுபடுகிறது.
நண்பர்களே,
பாரதம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் நிலம். சிந்தூர் (குங்குமம்) என்பது, நமது மரபுகளில் பெண்மை மற்றும் பெண் சக்தியின் போற்றப்படும் சின்னமாகும். ராமர் மீது மிகுந்த பக்தி கொண்ட ஹனுமான், சிந்தூரம் அணிந்தவராகவும் சித்தரிக்கப்படுகிறார். தேவி வழிபாட்டின் போது நாம் சிந்தூரம் பூசுகிறோம் . இன்று, இந்த சிந்துர், பாரதத்தின் வீரம் மற்றும் துணிச்சலின் அடையாளமாக மாறியுள்ளது.
நண்பர்களே,
பஹல்காமில், பயங்கரவாதிகள் இந்தியர்களின் ரத்தத்தை மட்டும் சிந்தவில்லை, நமது கலாச்சாரத்தின் மீதும் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். அவர்கள் நமது சமூகத்திற்குள் பிரிவினையை விதைக்க முயன்றுள்ளனர். மிக முக்கியமாக, இந்த பயங்கரவாதிகள், பாரதப் பெண்களுக்கு நேரடியாக சவால் விடுத்துள்ளனர். அந்த சவாலே பயங்கரவாதிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் இறுதி மணியை அடித்துள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்', இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையாக உள்ளது. நமது ஆயுதப் படைகள் ஆழமாகத் தாக்கின - எதிரிப் பகுதிக்குள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் ஊடுருவி, பாகிஸ்தான் ராணுவம் கூட எதிர்பார்க்காத பகுதிகளில் பயங்கரவாத மறைவிடங்களை அழித்துவிட்டன. இந்த நடவடிக்கை ஒரு தெளிவான செய்தியை அனுப்பியுள்ளது, பயங்கரவாதத்தின் மூலமான மறைமுகப் போர்களின் சகாப்தம் முடிந்துவிட்டது என்பதுதான் அது. இனிமேல், நாம் வெறும் தற்காத்துக் கொள்ள மாட்டோம், பதிலடி கொடுப்போம். பயங்கரவாதத்திற்கு அடைக்கலம் கொடுத்து ஆதரிப்பவர்களின் இதயங்களை நாம் தாக்குவோம், அவர்கள் அதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். இன்று, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும், 140 கோடி இந்தியர்களின் ஒன்றுபட்ட குரலும், "நீங்கள் ஒரு தோட்டாவை சுட்டால், பதிலுக்கு ஒரு தாக்குதலுக்குத் தயாராக இருங்கள்" என்று அறிவிக்கிறது.
நண்பர்களே,
‘ஆபரேஷன் சிந்தூர்’, நமது பெண்களின் வலிமையின் சக்திவாய்ந்த அடையாளமாக மாறியுள்ளது. இந்த நடவடிக்கையில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்கை நாம் அனைவரும் அறிவோம். ஜம்முவிலிருந்து பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் எல்லைகள் வரை, நமது எல்லைப் பாதுகாப்புப் படையின் ஏராளமான மகள்கள் முன்னணியில் நின்று, துணிச்சலுடன் நமது நாட்டைப் பாதுகாத்தனர். எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டுக்கு அவர்கள் தீர்க்கமாக பதிலளித்தனர். கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் முதல் எதிரி நிலைகளை அழிப்பது வரை, எல்லைப் பாதுகாப்புப் படையின் துணிச்சலான மகள்கள் குறிப்பிடத்தக்க வீரத்தை வெளிப்படுத்தினர்.
நண்பர்களே,
இன்று, தேசப் பாதுகாப்புத் துறையில் பாரதத்தின் மகள்களின் அசாதாரண திறன்களை உலகம் காண்கிறது. இந்தத் துறையில் அவர்களை மேம்படுத்த கடந்த பத்தாண்டுகளாக அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பள்ளிகள் முதல் போர்க்களம் வரை, நாடு இப்போது அதன் மகள்களின் தைரியம் மற்றும் வலிமையின் மீது முன்னெப்போதும் இல்லாத நம்பிக்கையை வைக்கிறது. முதல் முறையாக, நமது ஆயுதப் படைகள் சைனிக் பள்ளிகளின் கதவுகளை பெண்களுக்குத் திறந்துவிட்டன. 2014க்கு முன்பு, தேசிய மாணவர் படையில் 25% கேடட்கள் மட்டுமே பெண்களாக இருந்தனர். இன்று, அந்த எண்ணிக்கை 50% ஐ நெருங்குகிறது. நேற்று, மற்றொரு வரலாற்று மைல்கல் எட்டப்பட்டது. தேசிய பாதுகாப்பு அகாடமியில் முதல் தொகுதி பெண்கள் கேடட்கள் பட்டம் பெற்றதாக நீங்கள் செய்தித்தாள்களில் பார்த்திருப்பீர்கள். இன்று, ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் பெண்கள் முன்னணியில் பணியமர்த்தப்படுகிறார்கள். போர் விமானங்கள் முதல் 'ஐஎன்எஸ் விக்ராந்த்' போர்க்கப்பல் வரை, பெண் அதிகாரிகள் தங்கள் துணிச்சலையும் திறமையையும் அச்சமின்றி வெளிப்படுத்தி வருகின்றனர்.
நண்பர்களே,
நமது கடற்படையின் துணிச்சலான மகள்களின் வீரத்திற்கு சமீபத்திய மற்றும் ஊக்கமளிக்கும் உதாரணம் நமக்குக் கிடைத்துள்ளது. இந்திய கடற்படையின் இரண்டு துணிச்சலான பெண் அதிகாரிகள் சுமார் 250 நாட்கள் நீடித்த கடல் பயணத்தை மேற்கொண்டு, உலகைச் சுற்றி வந்தனர். இந்தக் குறிப்பிடத்தக்க பயணம் ஒரு இயந்திரத்தால் அல்ல, காற்றினால் இயக்கப்படும் படகில் நிறைவடைந்தது. 250 நாட்கள் கடலில் பயணித்து, வாரக்கணக்கில் நிலத்தைப் பார்க்காமல், கடுமையான புயல்களையும் கொந்தளிப்பான வானிலையையும் எதிர்கொள்வது பற்றி கற்பனை செய்து பாருங்கள். ஆனாலும், அவர்கள் ஒவ்வொரு சவாலையும் சமாளித்து வெற்றி பெறுகிறார்கள். எவ்வளவு வலிமையான தடையாக இருந்தாலும், பாரதத்தின் மகள்கள் அதை வெல்லும் வலிமையைப் பெற்றுள்ளனர் என்பதற்கு இது சான்றாகும்.
நண்பர்களே,
நக்சலைட் கிளர்ச்சியை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி, இன்று நம் மகள்கள் நாட்டைப் பாதுகாப்பதில் ஒரு வலிமையான கேடயமாக மாறி வருகின்றனர். தேவி அஹில்யாவின் இந்த புனித பூமியிலிருந்து, பாரதப் பெண்களுக்கு மீண்டும் ஒருமுறை எனது மரியாதைக்குரிய வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
தேவி அஹில்யா வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டது மட்டுமல்லாமல், நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் பாதுகாத்தார். இன்றைய பாரதமும் வளர்ச்சி மற்றும் பாரம்பரியத்தின் இரட்டைப் பாதைகளில் முன்னேறி வருகிறது. நாடு முழுவதும் நவீன உள்கட்டமைப்பு கட்டுமானப் பணிகள் எந்த அளவுக்கு வேகமாக நடைபெற்று வருகின்றன என்பதற்கு இன்றைய நிகழ்ச்சி ஒரு சான்றாகும். இன்று, மத்தியப் பிரதேசம், அதன் முதல் மெட்ரோ சேவையைப் பெற்றுள்ளது. ஏற்கனவே உலகளவில் தூய்மைக்காகப் பாராட்டப்பட்ட இந்தூர், இனி அதன் மெட்ரோ இணைப்புக்கும் பெயர் பெறும். போபாலிலும் மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. மத்தியப் பிரதேசம் முழுவதும், ரயில்வே துறையில் விரிவான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்புதான், ரத்லம்-நாக்டா பாதையை நான்கு வழித்தடங்களாக மாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இது அதிக ரயில்களை இயக்க அனுமதிக்கும் மற்றும் இப்பகுதியில் நெரிசலைக் குறைக்கும். இந்தூர்-மன்மாட் ரயில் திட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
நண்பர்களே,
மத்தியப் பிரதேசத்தில் உள்ள தாத்தியா மற்றும் சத்னா ஆகியவை இப்போது விமானப் பயண வலையமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு விமான நிலையங்களும் பண்டல்கண்ட் மற்றும் விந்தியா பகுதிகளுக்கு இடையே விமான இணைப்பை கணிசமாக மேம்படுத்தும். இது மா பீதாம்பரம், மா சாரதா தேவி மற்றும் புனிதமான சித்ரகூட் தாம் ஆகிய புனித தலங்களைப் பார்வையிடுவதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.
நண்பர்களே,
பாரதம் அதன் வரலாற்றில் ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளது- நாம் நமது பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும், நமது திறன்களை பெருக்க வேண்டும், மேலும் ஒவ்வொரு மட்டத்திலும் நமது கலாச்சார அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும். இதை அடைவதற்கு, நமது தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் போன்ற நமது பெண்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. லோகமாதா தேவி அஹில்யாபாயிடமிருந்து உத்வேகம் பெறுகிறோம். ராணி லக்ஷ்மிபாய், ராணி துர்காவதி, ராணி கமலாபதி, அவந்திபாய் லோதி, கிட்டூர் ராணி சென்னம்மா, ராணி கைடின்லியு, வேலு நாச்சியார், சாவித்ரிபாய் புலே போன்றோரின் பெயர்கள் நம் இதயங்களை பெருமையால் நிரப்புகின்றன. லோகமாதா அஹில்யாபாயின் 300வது பிறந்தநாள், வரும் தலைமுறைகளுக்கு வலுவான மற்றும் மீள்தன்மை கொண்ட பாரதத்தை உருவாக்க நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கட்டும். இந்த உறுதியுடன், மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது, உங்கள் மூவர்ணக் கொடியை உயர்த்தி, என்னுடன் சேர்ந்து கூறுங்கள்:
பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜே!
பாரத் மாதா கி ஜே!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
வந்தே மாதரம்!
******
(Release ID: 2132994)
RB/RJ
(Release ID: 2133103)