பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

எழுச்சிமிகு வடகிழக்கு முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 23 MAY 2025 2:03PM by PIB Chennai

மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சக அமைச்சர்கள் திரு ஜோதிராதித்ய சிந்தியா அவர்களே, திரு சுகந்தா மஜும்தார் அவர்களே, மணிப்பூர் ஆளுநர் திரு அஜய் பல்லா அவர்களே, அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, அருணாச்சல பிரதேச முதலமைச்சர் திரு பேமா காண்டு அவர்களே, திரிபுரா முதலமைச்சர் திரு மாணிக் சஹா அவர்களே, மேகாலயா முதலமைச்சர் திரு கான்ராட் சங்மா அவர்களே, சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமங் அவர்களே, நாகாலாந்து முதலமைச்சர் திரு நெய்பியு ரியோ அவர்களே, மிசோரம் முதலமைச்சர் திரு லால்துஹோமா அவர்களே, அனைத்து தொழில் துறை தலைவர்களே, முதலீட்டாளர்களே, பெண்களே, தாய்மார்களே வணக்கம்!

வடகிழக்கின் எழுச்சி  என்ற இந்த பிரமாண்டமான மேடையில், மிகுந்த நம்பிக்கையை உணர்கிறேன். சில மாதங்களுக்கு முன்பு, பாரத் மண்டபத்தில் அஷ்டலட்சுமி விழாவைக் கொண்டாடினோம். இப்போது, வடகிழக்கில் முதலீட்டுத் திருவிழாவைக் கொண்டாடுகிறோம். பல தொழில் துறை தலைவர்கள் இங்கு கூடியுள்ளனர். இது வடகிழக்கு மாநிலங்கள் மீது அனைவருக்கும் உள்ள உற்சாகத்தையும் புதிய கனவுகளையும் எடுத்துக்காட்டுகிறது. இந்த சாதனைக்காக அனைத்து அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் முயற்சிகள் இங்கு முதலீட்டிற்கான சிறந்த சூழலை உருவாக்கியுள்ளன. எனது சார்பாகவும், இந்திய அரசின் சார்பாகவும், வடகிழக்கு எழுச்சி உச்சிமாநாட்டின் வெற்றிக்கு உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

பாரதம் உலகின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட நாடாகக் கருதப்படுகிறது, மேலும் நமது வடகிழக்கு பிராந்தியம் இந்த பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பகுதியாகும். வர்த்தகம் முதல் பாரம்பரியம் வரை, ஜவுளி முதல் சுற்றுலா வரை, வடகிழக்கின் பன்முகத்தன்மை அதன் மிகப்பெரிய பலமாகும். வடகிழக்கு என்றால் உயிரியல் பொருளாதாரம் மற்றும் மூங்கில்; வடகிழக்கு என்றால் தேயிலை உற்பத்தி மற்றும் பெட்ரோலியம்; வடகிழக்கு என்றால் விளையாட்டு மற்றும் திறன்; வடகிழக்கு என்றால் சுற்றுச்சூழல் சுற்றுலாவின் மையம்; வடகிழக்கு என்பது இயற்கை உற்பத்திப் பொருட்களின் புதிய உலகம்; வடகிழக்கு என்பது ஆற்றலின் சக்தி மையம். அதனால்தான், வடகிழக்கு நமது அஷ்டலட்சுமியாக திகழ்கிறது. (எட்டு வகையான செழிப்பு). இந்த அஷ்டலட்சுமியின் ஆசீர்வாதத்துடன், வடகிழக்கில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் முதலீட்டிற்குத் தயாராக உள்ளன. அதை நாங்கள் வழிநடத்தத் தயாராக இருக்கிறோம்.

நண்பர்களே,

வளர்ச்சியடைந்த பாரதத்தைக் கட்டமைக்க கிழக்கு பாரதம் வளர்ச்சியடைவது அவசியம். வடகிழக்கு என்பது கிழக்கு பாரதத்தின் மிக முக்கியமான பகுதியாகும். எங்களுக்கு, கிழக்கு என்பது வெறும் திசையல்ல . அது அதிகாரமளித்தல், செயல்படுதல், வலுப்படுத்துதல் மற்றும் மாற்றம் ஆகியவற்றைக்  குறிக்கிறது. கிழக்கு பாரதத்திற்கான எங்கள் அரசின் கொள்கை இதுவேயாகும். இதே கொள்கை, இதே முன்னுரிமை, கிழக்கு பாரதத்தையும், நமது வடகிழக்கையும் வளர்ச்சியின் மைய நிலைக்கு கொண்டு வந்துள்ளது.

நண்பர்களே,

கடந்த 11 ஆண்டுகளில் வடகிழக்கு கண்ட மாற்றம் வெறும் எண்ணிக்கையைப் பற்றியது அல்ல, அது களத்தில் உணரக்கூடிய மாற்றமாகும். அரசுத் திட்டங்கள் மூலம் வடகிழக்குடன் நாம் ஒரு தொடர்பை மட்டும் உருவாக்கவில்லை. நாம் இதயத்திலிருந்து ஒரு பிணைப்பை உருவாக்கியுள்ளோம். இதைக் கேட்பதில் நீங்கள் ஆச்சரியப்படலாம்: நமது மத்திய அரசின் அமைச்சர்கள் 700-க்கும் மேற்பட்ட முறை வடகிழக்கு பகுதிக்கு பயணம் செய்துள்ளனர். அது வெறும் வருகை மற்றும் புறப்பாடு மட்டுமல்ல. மக்களின் கண்களில் அவர்கள் நம்பிக்கையைக் கண்டனர். மேலும் அவர்கள் அந்த நம்பிக்கையை வளர்ச்சி சார்ந்த கொள்கையாக மாற்றினர். உள்கட்டமைப்பை வெறும் செங்கல் மற்றும் சிமெண்டாக நாங்கள் பார்க்கவில்லை. அதை உணர்ச்சி ரீதியான தொடர்புக்கான ஒரு ஊடகமாக மாற்றினோம். கிழக்கு நோக்கிய கொள்கையைத் தாண்டி, கிழக்கு பகுதியில் சிறந்த செயல்பாடு என்ற மந்திரத்தை ஏற்றுக்கொண்டோம். இன்று, அதன் முடிவுகளைக் காண்கிறோம். வடகிழக்கு ஒரு எல்லைப் பகுதி என்று மட்டுமே குறிப்பிடப்பட்ட ஒரு காலம் இருந்தது. இன்று, அது வளர்ச்சியின் முன்னணி என மாறி வருகிறது.

நண்பர்களே,

சிறந்த உள்கட்டமைப்பானது சுற்றுலாவை மிகவும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகிறது. வலுவான உள்கட்டமைப்பு இருக்கும் இடத்தில், முதலீட்டாளர்களும் அதிக நம்பிக்கையைப் பெறுகிறார்கள். சிறந்த சாலைகள், வலுவான மின்சார உள்கட்டமைப்பு மற்றும் திறமையான சரக்குப் போக்குவரத்து கட்டமைப்பு ஆகியவை எந்தவொரு தொழிலுக்கும் முதுகெலும்பாகும். தடையற்ற போக்குவரத்து இணைப்பு இருக்கும் இடத்தில் வர்த்தகம் செழிக்கும். வேறுவிதமாகக் கூறுவதானால் எந்தவொரு வளர்ச்சிக்கும் தரமான உள்கட்டமைப்பு அடித்தளமாகவும் முதல் தேவையாகவும் இருக்கிறது. அதனால்தான் வடகிழக்கில் ஒரு உள்கட்டமைப்பு புரட்சியை நாங்கள் தொடங்கியுள்ளோம். நீண்ட காலமாக, வடகிழக்கு புறக்கணிக்கப்பட்டது. ஆனால் இப்போது, வடகிழக்கு வாய்ப்புகளின் நிலமாக மாறி வருகிறது. வடகிழக்கில் போக்குவரத்து இணைப்பு உள்கட்டமைப்பில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். நீங்கள் அருணாச்சலப் பிரதேசத்திற்குச் சென்றால், சேலா சுரங்கப்பாதை போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களைப் பார்ப்பீர்கள். அசாமில், பூபன் ஹசாரிகா பாலம் போன்ற மெகா திட்டங்களை நீங்கள் காண்பீர்கள். 10 ஆண்டுகளில், வடகிழக்கில் 11,000 கிலோமீட்டர் புதிய நெடுஞ்சாலைகளை நாங்கள் கட்டியுள்ளோம். நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் பராக் நதிகளில் நீர்வழிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நூற்றுக்கணக்கான மொபைல் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன, அது மட்டுமல்லாமல் 1,600 கிலோமீட்டர் நீளமுள்ள குழாய்வழியான வடகிழக்கு எரிவாயு திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது தொழில்துறைக்கு நம்பகமான எரிவாயு விநியோகத்தை உறுதி செய்கிறது. சுருக்கமாக  நெடுஞ்சாலைகள், ரயில்வேக்கள், நீர்வழிகள் போன்றவற்றின் மூலம் வடகிழக்கில் அனைத்து வடிவங்களிலும் இணைப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. வடகிழக்கில் அடித்தளம் வலுவாக உள்ளது. நமது தொழில்கள் முன்னேறி இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் இந்த நன்மையைத் தவறவிடாதீர்கள்.

நண்பர்களே,

வரவிருக்கும் 10 ஆண்டுகளில், வடகிழக்கு பிராந்தியத்தின் வர்த்தகத் திறன் பல மடங்கு அதிகரிக்கும். இன்று, இந்தியா – ஆசியான் நாடுகளுக்கு இடையேயான வர்த்தக அளவு சுமார் 125 பில்லியன் டாலர்களாக உள்ளது. வரும் ஆண்டுகளில், இது 200 பில்லியன் டாலர்களைத் தாண்டும், மேலும் வடகிழக்கு இந்த வர்த்தகத்திற்கான ஒரு வலுவான பாலமாக மாறும். ஆசியானுக்கான நுழைவாயிலாக மாறும்‌. இந்த தொலைநோக்கு பார்வையை ஆதரிக்க தேவையான உள்கட்டமைப்பை நாங்கள் விரைவாக உருவாக்கி வருகிறோம். இந்தியா - மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலை மியான்மர் வழியாக தாய்லாந்திற்கு நேரடி இணைப்பை ஏற்படுத்தும். இது தாய்லாந்து, வியட்நாம் மற்றும் லாவோஸ் போன்ற நாடுகளுடன் இந்தியாவின் இணைப்பை எளிதாக்கும். கொல்கத்தா துறைமுகத்தை மியான்மரில் உள்ள சிட்வே துறைமுகத்துடன் இணைக்கும்.  மேலும் வடகிழக்கின் மற்ற பகுதிகளை மிசோரம் வழியாக இணைக்கும் கலடன் பல்வகை போக்குவரத்துத் திட்டத்தை முடிக்க எங்கள் அரசு விரைவாக செயல்பட்டு வருகிறது. இது மேற்கு வங்கம் மற்றும் மிசோரம் இடையேயான தூரத்தை கணிசமாகக் குறைக்கும். தொழில் மற்றும் வர்த்தகத்திற்கு ஒரு பெரிய வரமாக இது நிரூபிக்கப்படும்.

நண்பர்களே,

இன்று, கௌஹாத்தி, இம்பால், அகர்தலா போன்ற நகரங்கள் பல்வகை சரக்குப் போக்குவரத்து மையங்களாக உருவாக்கப்பட்டு வருகின்றன. மேகாலயா மற்றும் மிசோரமில் நிறுவப்பட்டுள்ள நில சுங்க நிலையங்கள் இப்போது சர்வதேச வர்த்தகத்திற்கு ஒரு புதிய ஊக்கத்தை அளித்து வருகின்றன. இந்த அனைத்து முயற்சிகளாலும், இந்தோ-பசிபிக் நாடுகளுடனான வர்த்தகத்தில் வடகிழக்கு ஒரு புதிய பெயராக வளர்ந்து வருகிறது. அதாவது வடகிழக்கில் உங்களுக்கு சாத்தியக்கூறுகளின் புதிய வானம் திறக்கிறது.

நண்பர்களே,

பாரதத்தை உலகளாவிய சுகாதார மற்றும் நல்வாழ்வு தீர்வு வழங்குநராக நிலைநிறுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்தியாவில் குணமடையுங்கள் என்ற மந்திரத்தை உலகளாவிய மந்திரமாக மாற்றுவதே எங்கள் நோக்கம். வடகிழக்குப் பகுதி இயற்கையால் வளமானது மட்டுமல்ல. அது ஒரு இயற்கை வாழ்க்கை முறைக்கு ஏற்ற இடமும் ஆகும். அதன் பல்லுயிர்த்தன்மையும் அதன் பருவநிலையும் நல்வாழ்வுக்கான இயற்கை மருந்தாக செயல்படுகின்றன. அதனால்தான் இந்தியாவில் குணமடையுங்கள் இயக்கத்தில் முதலீட்டு வாய்ப்புகளுக்காக வடகிழக்குப் பகுதியை அதிகம் தேர்வு செய்யுமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே,

இசை, நடனம் மற்றும் கொண்டாட்டம் ஆகியவை வடகிழக்கின் கலாச்சாரத்தில் பின்னிப் பிணைந்துள்ளன. இது உலகளாவிய மாநாடுகள், இசை நிகழ்ச்சிகளுக்கு ஒரு அருமையான இடமாக அமைகிறது. இப்போது வளர்ச்சியின் நன்மைகள் வடகிழக்கின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைந்து வருவதால், சுற்றுலாவிலும் நேர்மறையான தாக்கத்தை நாங்கள் காண்கிறோம். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது, இது வெறும் எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல. கிராமங்களில் தங்குமிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் சுற்றுலா வழிகாட்டிகளாக புதிய வாய்ப்புகளைப் பெறுகிறார்கள். ஒரு முழுமையான சுற்றுலா மற்றும் பயணச் சூழல் சார் அமைப்பு உருவாகி வருகிறது.

நண்பர்களே,

எந்தவொரு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கும், மிக முக்கியமான தேவை அமைதி மற்றும் சட்டம்  ஒழுங்கு. அது பயங்கரவாதமாக இருந்தாலும் சரி, மாவோயிஸ்ட் கிளர்ச்சியாக இருந்தாலும் சரி, எங்கள் அரசு பூஜ்ய சகிப்புத்தன்மை என்ற சமரசமற்ற கொள்கையைப் பின்பற்றுகிறது. வடகிழக்கு பிராந்தியம் குண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் முற்றுகைகளுடன் தொடர்புடைய பகுதியாக ஒரு காலத்தில் இருந்தது. எங்கள் கவனம் வடகிழக்கு இளைஞர்களின் எதிர்காலத்தில் உள்ளது. அதனால்தான் நாங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அமைதி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம், இளைஞர்கள் வளர்ச்சியின் முக்கிய நீரோட்டத்தில் சேர வாய்ப்பளிக்கிறோம். கடந்த 10–11 ஆண்டுகளில், 10,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு அமைதிப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இன்று, வடகிழக்கு இளைஞர்கள் தங்கள் சொந்தப் பகுதியிலேயே வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் செய்வதற்கான புதிய வாய்ப்புகளைப் பெறுகின்றனர். முத்ரா கடன் திட்டம் மூலம், வடகிழக்கில் உள்ள பல லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள நிதி உதவியைப் பெற்றுள்ளனர். வளர்ந்து வரும் கல்வி நிறுவனங்கள் இந்த இளைஞர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொள்ள உதவுகின்றன. வடகிழக்கு இப்போது இந்தியாவின் டிஜிட்டல் நுழைவாயிலாக மாறி வருகிறது.

நண்பர்களே,

வளர்ச்சிக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் திறன்கள் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வடகிழக்குப் பகுதியில் இதற்கும் சாதகமான சூழல் நிலவுகிறது. மத்திய அரசு இந்தப் பகுதியின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு சூழல் அமைப்பில் பெரிய முதலீடுகளைச் செய்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில், வடகிழக்கு மாநில கல்வித் துறையில் 21,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 850 புதிய பள்ளிகள் நிறுவப்பட்டுள்ளன. வடகிழக்கில் முதல் எய்ம்ஸ்  இப்போது செயல்பட்டு வருகிறது. ஒன்பது புதிய மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இரண்டு புதிய ஐஐஐடிகள் இப்பகுதியில் நிறுவப்பட்டுள்ளன. மிசோரமில் இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு முழுவதும் சுமார் 200 புதிய திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. நாட்டின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகமும் அங்கு கட்டப்பட்டு வருகிறது. கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், வடகிழக்கில் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

இப்போது இயற்கை உணவுக்கான உலகளாவிய தேவை அதிகரித்து வருகிறது. முழுமையான சுகாதாரப் பராமரிப்புக்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது.  மேலும் எனக்கு ஒரு கனவு இருக்கிறது. உலகில் உள்ள ஒவ்வொருவரது உணவு மேசையிலும் குறைந்தது ஒரு இந்திய உணவு வகையாவது இருக்க வேண்டும். இந்தக் கனவை நிறைவேற்றுவதில் வடகிழக்குப் பகுதி  முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், வடகிழக்குப் பகுதியில் இயற்கை விவசாயம் இரட்டிப்பாகியுள்ளது.

நண்பர்களே,

வடகிழக்கில் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளை அமைப்பதை எளிதாக்க அரசுசெயல்பட்டு வருகிறது. மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து இணைப்பு ஏற்கனவே இதற்கு உதவுகிறது, அதோடு, பெரிய அளவில் உணவு பூங்காக்களை உருவாக்கி வருகிறோம். குளிர்பதன கிடங்கு கட்டமைப்பை விரிவுபடுத்துகிறோம்.

நண்பர்களே,

வடகிழக்குப் பகுதி இரண்டு துறைகளுக்கு ஒரு முக்கிய இடமாக வளர்ந்து வருகிறது: அவை எரிசக்தி மற்றும் குறைக்கடத்திகள் ஆகும். அது நீர் மின்சாரம் அல்லது சூரிய சக்தியாக இருந்தாலும், வடகிழக்கின் ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு பெரிய முதலீடுகளைச் செய்து வருகிறது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆலைகள் மற்றும் உள்கட்டமைப்பில் முதலீட்டு வாய்ப்புகள் மட்டுமல்லாமல், உற்பத்தியில் ஒரு பொன்னான வாய்ப்பும் உங்களுக்கு உள்ளது. அது சூரிய சக்தி தகடுகள், செல்கள், மின்சேமிப்பு, ஆராய்ச்சி என எதுவாக இருந்தாலும், நமக்கு அதிக முதலீடுகள் தேவை. இதுதான் நமது எதிர்காலம். இன்று நாம் அதில் எவ்வளவு அதிகமாக முதலீடு செய்கிறோமோ, அவ்வளவு குறைவாக வெளிநாடுகளைச் சார்ந்திருப்போம். இன்று, வடகிழக்குப் பகுதி குறிப்பாக அசாம் மாநிலம் நாட்டின் குறைக்கடத்தி சூழல் அமைப்பை வலுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.

நண்பர்களே,

எழுச்சி பெறும் வடகிழக்கு என்பது வெறும் முதலீட்டாளர்களின் உச்சி மாநாடு மட்டுமல்ல. இதுவொரு ஒரு  செயல்பாட்டுக்கான அழைப்பு. வடகிழக்கின் பிரகாசமான எதிர்காலத்தின் மூலம் பாரதத்தின் எதிர்காலம் புதிய உச்சஙகளை எட்டும். அனைத்து தொழில் துறைத் தலைவர்களின் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. வாருங்கள், நாம் அனைவரும் சேர்ந்து நமது அஷ்டலட்சுமியை வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு ஒரு உத்வேகமாக மாற்றுவோம். இன்றைய கூட்டு முயற்சிகள், உங்கள் உற்சாகம், உங்கள் அர்ப்பணிப்பு ஆகியவை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இரண்டாவது எழுச்சி பெரும் வடகிழக்கு உச்சிமாநாட்டை நாம் நடத்தும் நேரத்தில், நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருப்போம் என நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி!

***

(Release ID: 2130709)
SG/TS/PLM/RR/KR/DL


(Release ID: 2130859)