பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

7-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் காணொளிக் காட்சி வாயிலாக பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 04 MAY 2025 8:16PM by PIB Chennai

பீகார் முதலமைச்சர் திரு நிதிஷ் குமார் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான மன்சுக் அவர்களே, சகோதரி ரக்ஷா காட்சே அவர்களே, திரு ராம் நாத் தாக்கூர் அவர்களே, பீகார் துணை முதலமைச்சர்கள், திரு சாம்ராட் சவுத்ரி அவர்களே, திரு விஜய் குமார் சின்ஹா அவர்களே மற்றும் பிற சிறப்பு விருந்தினர்களே, அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள், மற்றும் பணியாளர்களே எனது அன்பான இளம் நண்பர்களே!

நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வருகை தந்துள்ள  அனைத்து விளையாட்டு வீரர்களையும் நான் அன்புடன் வரவேற்கிறேன் - ஒவ்வொருவரும் ஒருவரைவிட ஒருவர் சிறந்தவர்கள், ஒவ்வொருவரும் ஒருவரைவிட ஒருவர்  திறமையானவர்களாவர்.

நண்பர்களே,

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் பீகாரில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளன.  பாட்னாவிலிருந்து ராஜ்கிர் வரை, கயாவிலிருந்து பாகல்பூர் மற்றும் பெகுசராய் வரை, 6,000-க்கும் மேற்பட்ட இளம் விளையாட்டு வீரர்கள், 6,000-க்கும் மேற்பட்ட கனவுகள் மற்றும் தீர்மானங்களுடன், அடுத்த சில நாட்களில் பீகாரின் இந்தப் புனித பூமியில் தங்கள் முத்திரையைப் பதிப்பார்கள். அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

எந்தவொரு விளையாட்டு வீரரும் தங்கள் செயல்திறனை மேம்படுத்திக் கொள்ளவும் தொடர்ந்து தங்களைச் சோதித்துப் பார்த்துக் கொள்ளவும் அதிக போட்டிகளில் விளையாடுவது அவசியமாகும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு  என்றும் இதற்காக முன்னுரிமை அளித்துள்ளது. தற்போது, கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள், கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுகள், கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுகள் மற்றும் கேலோ இந்தியா பாரா விளையாட்டுகள் உள்ளன. அதாவது, தேசிய அளவிலான போட்டிகள் ஆண்டு முழுவதும், நாடு முழுவதும், வெவ்வேறு நிலைகளில் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. இது நமது விளையாட்டு வீரர்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது மற்றும் அவர்களின் திறமை பிரகாசிக்க உதவுகிறது. கிரிக்கெட் உலகத்திலிருந்து ஒரு உதாரணம் தருகிறேன். சமீபத்தில், பீகார் மண்ணைச் சேர்ந்த வைபவ் சூரியவன்ஷியின்

அற்புதமான ஆட்டத்தை  ஐபிஎல்-இல் நாம் கண்டோம். இவ்வளவு இளம் வயதிலேயே, வைபவ் ஒரு மகத்தான சாதனையைப் படைத்தார். அவரது அற்புதமான ஆட்டத்திற்குப் பின்னால், நிச்சயமாக, அவரது கடின உழைப்பு உள்ளது. அதே போல் பல்வேறு நிலைகளில் ஏராளமான போட்டிகளும் அவரது திறமை வெளிப்பட வாய்ப்பளித்தன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் செழிக்கிறீர்கள்.

நண்பர்களே,

தற்போது 2036-ம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு இந்தியா முயற்சித்து வருகிறது. சர்வதேச விளையாட்டுகளில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்தவும், பள்ளி அளவில் விளையாட்டுத் திறமைகளை அடையாளம் காணவும், அரசு விளையாட்டு வீரர்களுக்கு பள்ளி நிலையிலேயே பயிற்சி அளித்து வருகிறது. கேலோ இந்தியா முயற்சி முதல் ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டம் வரை, இந்த நோக்கத்திற்காக ஒரு முழு சூழல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது பீகார் உட்பட நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் இதன் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

நண்பர்களே,

நாட்டில் விளையாட்டு உள்கட்டமைப்பை நவீன மயமாக்குவதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது. கடந்த பத்தாண்டுகளில், விளையாட்டு துறைக்கான பட்ஜெட் மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, விளையாட்டுத்துறைக்கென சுமார் 4,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க அளவிலான தொகை விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக செலவிடப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேலோ இந்தியா மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

தற்போது விளையாட்டுத்துறையானது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளுக்கான புதிய வழிகளை உருவாக்கி வருகிறது. பிசியோதெரபி, தரவு பகுப்பாய்வு, விளையாட்டுத் தொழில்நுட்பம், ஒளிபரப்பு, மின் விளையாட்டு மற்றும் மேலாண்மை போன்ற துறைகள் முக்கியமான துணைத் துறைகளாக உருவாகி வருகின்றன. நமது இளைஞர்கள் இன்றைய சூழலில் பயிற்சியாளர்கள், உடற்பயிற்சி பயிற்றுநர்கள், ஆட்சேர்ப்பு முகவர்கள், நிகழ்வு மேலாளர்கள், மற்றும் விளையாட்டு ஊடக நிபுணர்கள் போன்ற தொழில்களையும் கருத்தில் கொள்ளலாம். நாட்டில் நிறுவப்பட்டு வரும் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் விளையாட்டை பிரதான கல்வியின் ஒரு பகுதியாக மாற்றிய புதிய தேசிய கல்விக் கொள்கை இரண்டும் சிறந்த விளையாட்டு வீரர்களை மட்டுமல்ல, நாட்டில் உயர்மட்ட விளையாட்டு நிபுணர்களையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

எனது இளம் நண்பர்களே,

வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் விளையாட்டுத்திறன் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். குழுப்பணி மற்றும் விளையாட்டுத் துறையில் மற்றவர்களுடன் இணைந்து எவ்வாறு முன்னேறுவது என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம். நீங்கள் களத்தில் உங்களின் சிறந்ததை வழங்க வேண்டும், மேலும் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையின் தூதர்களாக உங்கள் பங்கை வலுப்படுத்த வேண்டும். நீங்கள் பல அற்புதமான நினைவுகளுடன் பீகாரிலிருந்து திரும்புவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளின் மூலம் உயர்ந்த விளையாட்டுத் திறன் மற்றும் தேசபக்தியின் உணர்வைக் கொண்டு, 7-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்படுவதாக இதன் மூலம் அறிவிக்கிறேன்.

***

(Release ID: 2126858)

TS/IR/AG/KR


(Release ID: 2126968) Visitor Counter : 11