பிரதமர் அலுவலகம்
அங்கோலா அதிபருடனான கூட்டு ஊடக அறிக்கையின் போது பிரதமரின் உரை (மே 03, 2025)
Posted On:
03 MAY 2025 2:26PM by PIB Chennai
மேதகு அதிபர் ஜனாதிபதி லூரென்சோ அவர்களே,
இரு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும்
ஊடக நண்பர்களே,
வணக்கம்!
பெம் விண்டோ!
இந்தியாவிற்கு அதிபர் லூரென்சோ மற்றும் அவரது குழுவை நான் அன்புடன் வரவேற்கிறேன். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம். 38 ஆண்டுகளுக்குப் பிறகு, அங்கோலா அதிபர் இந்தியாவுக்கு வருகை தருகிறார். அவரது வருகை இந்தியா-அங்கோலா உறவுகளுக்கு ஒரு புதிய திசையையும் உத்வேகத்தையும் தருவது மட்டுமல்லாமல், இந்தியா-ஆப்பிரிக்கா கூட்டாண்மையையும் வலுப்படுத்துகிறது.
நண்பர்களே,
இந்த ஆண்டு, இந்தியாவும் அங்கோலாவும் தங்கள் தூதரக உறவுகளின் 40 -வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றன. ஆனால் நமது உறவுகள் அதை விட மிகவும் பழமையானவை மற்றும் வலுவானவை. அங்கோலா தனது சுதந்திரத்திற்காகப் போராடியபோது, இந்தியா அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் நட்புடன் அதனுடன் துணை நின்றது.
நண்பர்களே,
இன்று, பல்வேறு துறைகளில் நமக்கு நெருக்கமான ஒத்துழைப்பு உள்ளது. அங்கோலாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிகம் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எங்கள் எரிசக்தி கூட்டாண்மையை விரிவுபடுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். அங்கோலாவின் ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக 200 மில்லியன் டாலர் பாதுகாப்பு சார்ந்த கடனுக்கு ஒப்புதல் அளிப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பாதுகாப்புத் தளங்கள் மற்றும் தளவாடப் பொருட்களைப் பழுதுபார்ப்பது மற்றும் மாற்றியமைப்பது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். அங்கோலாவின் ஆயுதப் படைகளின் பயிற்சிக்கு இந்தியா மகிழ்ச்சியுடன் ஒத்துழைக்கும்.
நமது மேம்பாட்டு கூட்டாண்மையை முன்னோக்கி எடுத்துச் சென்று, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாட்டில் அங்கோலாவுடன் எங்கள் திறன்களைப் பகிர்ந்து கொள்வோம். இன்று சுகாதாரம், வைரம் பட்டை தீட்டுதல், உரம் மற்றும் முக்கியமான கனிமங்கள் ஆகிய துறைகளில் எங்கள் உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் முடிவு செய்துள்ளோம். அங்கோலாவில் யோகா மற்றும் பாலிவுட்டின் புகழ் எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான கலாச்சாரத் தொடர்பைப் பிரதிபலிக்கிறது. நமது மக்களுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்த, இளைஞர்களிடையே இளைஞர் பரிமாற்றத் திட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளோம்.
நண்பர்களே,
சர்வதேச சூரிய சக்தி கூட்டணியில் சேர்வதற்கான அங்கோலாவின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இந்தியாவின் முன்முயற்சிகளான பேரிடர் மீள் கட்டமைப்புக்கான கூட்டணி, புலி உள்ளிட்ட ஏழு பெரிய பூனைகளைப் பாதுகாப்பதற்கான கூட்டணி மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியில் சேர அங்கோலாவையும் அழைத்துள்ளோம்.
நண்பர்களே,
பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொள்கிறோம். பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த அதிபர் லூரென்சோ மற்றும் அங்கோலா மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்களுக்கு எதிராக உறுதியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் போராட்டத்தில் அங்கோலா அளித்த ஆதரவிற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.
நண்பர்களே,
1.4 பில்லியன் இந்தியர்களின் சார்பாக, ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்புக்காக அங்கோலாவுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவின் ஜி20 தலைமையின் போது, ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கு ஜி20 -ல் நிரந்தர உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது எங்களுக்கு மிகவும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். காலனித்துவ ஆட்சிக்கு எதிராக இந்தியாவும் ஆப்பிரிக்க நாடுகளும் ஒற்றுமையாகக் குரல் எழுப்பின. இந்தச் செயல்பாட்டில் ஒன்றுக்கு ஒன்று ஊக்கமளித்துக் கொண்டன. இன்று, உலகளாவிய தெற்கின் நலன்கள், நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாஷைகளுக்காக வாதிடுவதில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.
கடந்த பத்தாண்டுகளில் ஆப்பிரிக்க நாடுகளுடனான எங்கள் ஒத்துழைப்பு வேகத்தைப் பெற்றுள்ளது. எங்கள் பரஸ்பர வர்த்தகம் கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம், இந்தியாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான முதல் கடற்படை கடல்சார் பயிற்சியான"அய்கீமி" (AIKEYME) நடத்தப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில், ஆப்பிரிக்கா முழுவதும் 17 புதிய தூதரகங்களை நாங்கள் நிறுவியுள்ளோம். ஆப்பிரிக்காவிற்கு 12 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள கடன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஆப்பிரிக்க நாடுகளுக்கு 700 மில்லியன் டாலர் மானிய உதவி வழங்கப்பட்டுள்ளது. 8 ஆப்பிரிக்க நாடுகளில் தொழில் பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஐந்து ஆப்பிரிக்க நாடுகளுடன் நாங்கள் ஒத்துழைத்து வருகிறோம். பேரிடர் காலங்களில், ஆப்பிரிக்க மக்களுடன் தோளோடு தோள் நின்று 'முதலில் உதவுபவர்களாக' பணியாற்றும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்துள்ளது.
இந்தியாவும் ஆப்பிரிக்க ஒன்றியமும் முன்னேற்றத்தில் பங்காளிகள். நாங்கள் உலகளாவிய தெற்கின் தூண்கள். அங்கோலாவின் தலைமையின் கீழ், இந்தியாவிற்கும் ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கும் இடையிலான உறவு புதிய உச்சங்களை எட்டும் என்று நான் நம்புகிறேன்.
மேன்மைதங்கியவர்களே,
மீண்டும் ஒருமுறை, உங்களையும் உங்கள் குழுவையும் இந்தியாவிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.
மிக்க நன்றி.
ஒப்ரிகாடோ.
****
(Release ID: 2126448)
TS/PKV/RJ
(Release ID: 2126613)
Visitor Counter : 9
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu