பிரதமர் அலுவலகம்
வேலைவாய்ப்பு விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரை
Posted On:
26 APR 2025 12:13PM by PIB Chennai
தேச நிர்மாணத்தில் இளைஞர்கள் தீவிரமாக பங்களிக்கும்போது, நாடு விரைவான வளர்ச்சியை எட்டுவதுடன், உலக அரங்கில் அங்கீகாரத்தையும் பெறுகிறது: பிரதமர்
இன்று இந்திய இளைஞர்கள் தங்களது அர்ப்பணிப்பு மற்றும் புதுமைப் படைப்பு மூலம் நம்மிடம் உள்ள அளப்பரிய ஆற்றலை உலகிற்கு நிரூபித்துள்ளனர்: பிரதமர்
இந்த பட்ஜெட்டில், 'மேக் இன் இந்தியா' முன்முயற்சியை ஊக்குவிக்கவும், இந்திய இளைஞர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்கும் வாய்ப்பை வழங்கவும் உற்பத்தி இயக்கத்தை அரசு அறிவித்துள்ளது: பிரதமர்
உற்பத்தித் திட்டம் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும், சிறு தொழில்முனைவோர்களுக்கும் ஆதரவளிப்பதோடு, நாடு முழுவதும் புதிய வேலைவாய்ப்புகளையும் வழங்கும்: பிரதமர்
உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாடு (வேவ்ஸ்) 2025-ஐ மும்பை விரைவில் நடத்தவுள்ளது. இந்த நிகழ்வு நாட்டின் இளைஞர்களை அதன் மையத்தில் கொண்டுவருவதுடன், முதல் முறையாக இளம் படைப்பாளர்களுக்கு இதுபோன்ற மேடையை வழங்குகிறது: பிரதமர்
ஊடகம், கேமிங், பொழுதுபோக்கு ஆகியவற்றில் புதுமையாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ளுக்கு, வேவ்ஸ் முன்பு காணப்படாத வாய்ப்பாக அமையும்: பிரதமர்
அதிகாரத்துவம் முதல் விண்வெளி மற்றும் அறிவியல் வரையிலான துறைகளில் இந்தியாவின் பெண்கள் சக்தி புதிய உயரங்களை எட்டியுள்ளது. கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது: பிரதமர்
வேலைவாய்ப்பு மேளாவில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காணொலிக் காட்சி மூலம் பணி நியமன ஆணைகளை இன்று வழங்கினார். திரண்டிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இந்த இளைஞர்களுக்கான புதிய பொறுப்புகளின் தொடக்கத்தை இன்று குறிக்கிறது என்று குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துதல், உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்துதல், நவீன உள்கட்டமைப்பை நிர்மாணிப்பதில் பங்களிப்பு செய்தல், தொழிலாளர்களின் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வருவது ஆகியவை அவர்களின் கடமைகளில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார். அவர்கள் தங்கள் பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்றும் தன்மை, வளர்ந்த நாடாக மாறுவதை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் தெரிவித்தார். இந்த இளைஞர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் தங்கள் கடமைகளை மேற்கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
"எந்தவொரு நாட்டின் முன்னேற்றம் மற்றும் வெற்றிக்கான அடித்தளம் அதன் இளைஞர்களின் கையில் உள்ளது, தேச நிர்மாணத்தில் இளைஞர்கள் தீவிரமாக பங்கேற்கும்போது, தேசம் விரைவான வளர்ச்சியை அனுபவித்து, உலக அரங்கில் அதன் அடையாளத்தை நிறுவுகிறது" என்று திரு மோடி கூறினார். "இந்தியாவின் இளைஞர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் மூலம் தங்கள் மகத்தான திறனை உலகிற்கு வெளிப்படுத்தி வருகின்றனர்" என்று அவர் மேலும் கூறினார். நாட்டின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்புகள் தொடர்ந்து வளர்ந்து வருவதை ஒவ்வொரு அடியிலும் அரசு உறுதி செய்கிறது என்றார் அவர். திறன் இந்தியா, புத்தொழில் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற முன்முயற்சிகள் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இந்தப் பிரச்சாரங்கள் மூலம், இந்திய இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஒரு திறந்த தளத்தை அரசு வழங்குகிறது. இந்த முயற்சிகளின் விளைவாக, இந்தத் தசாப்தத்தில், தொழில்நுட்பம், தரவு, கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் இந்திய இளைஞர்கள் நாட்டை முன்னணிக்கு கொண்டு வந்துள்ளனர் என்று திரு மோடி குறிப்பிட்டார். யுபிஐ, அரசு இ-சந்தை போன்ற டிஜிட்டல் தளங்களின் வெற்றியை அவர் எடுத்துரைத்தார், இது டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களை இளைஞர்கள் எவ்வாறு வழிநடத்துகிறார்கள் என்பதை நிரூபிக்கிறது. நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா தற்போது உலகிலேயே முன்னணியில் உள்ளது என்றும், இந்த சாதனையில் கணிசமான பங்கு இளைஞர்களையே சாரும் என்றும் அவர் மேலும் கூறினார்.
"இந்தப் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உற்பத்தி இயக்கம், 'மேக் இன் இந்தியா' முன்முயற்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், இந்தியாவின் இளைஞர்களுக்கு உலகளவில் தரமான தயாரிப்புகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளையும் வழங்குகிறது. இந்த முயற்சி நாடு முழுவதும் உள்ள கோடிக் கணக்கான எம்.எஸ்.எம்.இ மற்றும் சிறு தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பது மட்டுமல்லாமல், நாடு முழுவதும் புதிய வேலை வாய்ப்புகளையும் வழங்கும்" என்று குறிப்பிட்ட பிரதமர், இது இந்தியாவின் இளைஞர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வாய்ப்புகளின் நேரம் என்று கூறினார். உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் கூறியதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த வளர்ச்சி பல அம்சங்களைக் கொண்டுள்ளது என்று கூறிய அவர், வரவிருக்கும் நாட்களில் அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பு மிக முக்கியமானது என்று வலியுறுத்தினார். சமீப காலங்களில், மோட்டார் வாகனம் மற்றும் காலணித் தொழில்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் புதிய சாதனைகளை எட்டியுள்ளன, இளைஞர்களுக்கு கணிசமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். முதல் முறையாக, காதி மற்றும் கிராமத் தொழில்கள் சார்ந்த பொருட்கள் ரூ.1.70 லட்சம் கோடி வருவாயைத் தாண்டியுள்ளன. குறிப்பாக ஊரகப் பகுதிகளில் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்பதையும் அவர் எடுத்துரைத்தார். உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தின் சமீபத்திய சாதனை குறித்து குறிப்பிட்ட அவர், 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு, உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மூலம் ஆண்டுக்கு 18 மில்லியன் டன் சரக்குகள் மட்டுமே கொண்டு செல்லப்பட்டன என்று குறிப்பிட்டார். இந்த ஆண்டு, சரக்கு போக்குவரத்து 145 மில்லியன் டன்களைத் தாண்டியுள்ளது. இந்த திசையில் இந்தியாவின் தொடர்ச்சியான கொள்கை வகுப்பது மற்றும் முடிவுகளை எடுப்பதே இந்த வெற்றிக்கு காரணம் என்று அவர் கூறினார். நாட்டில் தேசிய நீர்வழிகளின் எண்ணிக்கை வெறும் 5 சதவீதத்திலிருந்து 110 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும், இந்த நீர்வழிகளின் செயல்பாட்டு நீளம் சுமார் 2,700 கிலோ மீட்டரிலிருந்து கிட்டத்தட்ட 5,000 கிலோ மீட்டராக உயர்ந்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த சாதனைகள் நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
"மும்பை விரைவில் உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (வேவ்ஸ்) 2025- ஐ நடத்தும். இந்த நிகழ்வு இளைஞர்களை அதன் மையத்தில் வைக்கிறது, இளம் படைப்பாளர்களுக்கு முதல் முறையாக அத்தகைய தளத்தை வழங்குகிறது. இந்த உச்சிமாநாடு ஊடகம், கேமிங் மற்றும் பொழுதுபோக்கு துறைகளில் புதுமையாளர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பை வழங்குகிறது" என்று திரு மோடி கூறினார். பொழுதுபோக்கு புத்தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுடன் இணைவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள், இது அவர்களின் யோசனைகளை உலகிற்கு வழங்குவதற்கான மிகப்பெரிய தளமாக மாறும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்வின் போது ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு பயிலரங்குகள் மூலம் இளைஞர்கள் பெரும் பயனடைவார்கள் என்று அவர் கூறினார். " வேவ்ஸ் இந்தியாவின் டிஜிட்டல் உள்ளடக்க எதிர்காலத்தை உற்சாகப்படுத்தும்" என்று அவர் மேலும் கூறினார். இந்தியாவின் இளைஞர்களின் உள்ளடக்கிய தன்மையைப் பாராட்டிய அவர், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் நாட்டின் சாதனைகளுக்கு பங்களித்து வருவதை எடுத்துரைத்தார். சமீபத்திய யுபிஎஸ்சி முடிவுகளை மேற்கோள் காட்டி, இந்தியாவின் மகள்கள் முன்னணியில் உள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், அங்கு முதல் இரண்டு இடங்களை பெண்கள் பெற்றுள்ளனர் என்றும், முதல் ஐந்து இடங்களில் மூன்று பெண்கள் உள்ளனர் என்றும் குறிப்பிட்டார். "அதிகாரத்துவம் முதல் விண்வெளி மற்றும் அறிவியல் வரையிலான துறைகளில் பெண்கள் புதிய உயரங்களை எட்டி வருகின்றனர். புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ள சுய உதவிக் குழுக்கள், காப்பீடு, வங்கி, வேளாண் ஆகிய துறைகளில் உதவும் தோழிகள் முன்முயற்சிகள் மூலம் கிராமப்புற பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் எங்கள் அரசு கவனம் செலுத்தி வருகிறது" என்று திரு. மோடி கூறினார். ஆயிரக்கணக்கான பெண்கள் தற்போது ட்ரோன் சகோதரிகளாகப் பணியாற்றி வருவதாகவும், தங்கள் குடும்பங்கள் மற்றும் கிராமங்களின் வளத்தை உறுதி செய்வதாகவும் குறிப்பிட்ட அவர், நாட்டில் 90 லட்சத்துக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருவதாகவும், இதில் 10 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தக் குழுக்களை வலுப்படுத்த, அரசு அவர்களின் பட்ஜெட்டை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் ரூ 20 லட்சம் வரை பிணையில்லா கடன்களுக்கான ஏற்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது என்றார். முத்ரா திட்டத்தின் மூலம் அதிக அளவில் பயனடைவது பெண்கள்தான் என்று குறிப்பிட்ட திரு மோடி, நாட்டில் 50,000-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்களில் பெண்கள் இயக்குநர்களாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டார். துறைகளில் இத்தகைய மாற்றத்தக்க மாற்றங்கள் வளர்ச்சிக்கான இந்தியாவின் தீர்மானத்தை வலுப்படுத்துவதுடன், வேலைவாய்ப்பு மற்றும் சுயவேலைவாய்ப்புக்கான அதிக வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
இன்று பணி நியமன ஆணைகளைப் பெற்ற இளைஞர்களிடையே உரையாற்றிய பிரதமர், தனிநபர்கள் அடைந்துள்ள பதவிகள் அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் விளைவாக உருவானவை என்பதை சுட்டிக்காட்டினார். அவர்களின் வாழ்க்கையின் அடுத்த கட்டங்களைத் தங்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டிற்கும் அர்ப்பணிக்க வேண்டிய நேரம் இது என்று அவர் வலியுறுத்தினார். மக்கள் சேவை உணர்வு முதன்மையானதாக இருக்க வேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார். ஒருவர் தங்கள் சேவைக்கு மிக உயர்ந்த மரியாதையுடன் பணியாற்றும்போது, அவர்களின் முயற்சிகள் நாட்டை ஒரு புதிய திசையில் வழிநடத்தும் வலிமையைப் பெறுகின்றன என்று பிரதமர் கூறினார். கடமைகளை நிறைவேற்றுதல், தனிநபர்களின் புத்தாக்கம், அர்ப்பணிப்பு ஆகியவை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கையையும் மேம்படுத்த நேரடியாக பங்களிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
தனிநபர்கள் பொறுப்பான பதவிகளை அடையும்போது, குடிமக்கள் என்ற முறையில் அவர்களின் கடமைகள் மற்றும் பங்களிப்புகள் மேலும் முக்கியத்துவம் பெறுகின்றன என்று குறிப்பிட்ட திரு மோடி, இந்தத் திசையில் விழிப்புணர்வின் அவசியத்தை வலியுறுத்தினார். தாயின் பெயரில் ஒருமரக்கன்று நடும் பிரச்சாரத்தை எடுத்துரைத்த அவர், நன்றியுணர்வு மற்றும் இயற்கைக்கு சேவை செய்யும் அடையாளமாக ஒவ்வொருவரும் தங்கள் தாயின் பெயரில் ஒரு மரத்தை நடவு செய்ய ஊக்குவித்தார். தனிநபர்கள் தங்கள் பணியிடங்களில் இந்தப் பிரச்சாரத்தில் அதிகமானவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஜூன் மாதம் வரவிருக்கும் சர்வதேச யோகா தினம், வெற்றிகரமான வாழ்க்கையுடன் ஆரோக்கியமான வாழ்க்கையைத் தொடங்குவதற்கான சிறந்த வாய்ப்பாகும் என்று குறிப்பிட்ட அவர், ஆரோக்கியம் என்பது தனிநபர்களுக்கு இன்றியமையாதது மட்டுமல்ல, வேலைத் திறன் மற்றும் நாட்டின் உற்பத்தித்திறனுக்கும் முக்கியமானது என்று வலியுறுத்தினார். தனிநபர்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்ள மிஷன் கர்மயோகி முன்முயற்சியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பிரதமர் ஊக்குவித்தார். அவர்களின் பங்களிப்பின் நோக்கம் பதவிகளை வகிப்பது மட்டுமல்ல, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சேவை செய்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பது என்று அவர் கூறினார். குடிமைப் பணிகள் தினத்தன்று பகிர்ந்து கொள்ளப்பட்ட குடிமக்களுக்கு சேவை செய்வது தெய்வீக வழிபாட்டிற்கு ஒப்பானது என்பதை வலியுறுத்திய திரு. மோடி, நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன் இந்தியா வளர்ந்த மற்றும் வளமான நாடாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 140 கோடி இந்தியர்களின் கனவுகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற இளைஞர்கள் பாடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பின்னணி
வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டுக்கு ஏற்ப, 15-வது வேலைவாய்ப்பு திருவிழா நாடு முழுவதும் 47 இடங்களில் நடைபெறுகிறது. இது இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தேசிய வளர்ச்சிக்கு திறம்பட பங்களிப்பதற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும்.
நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பணியாளர்கள் மத்திய அரசின் வருவாய்த் துறை, பணியாளர் மற்றும் பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகம், உள்துறை அமைச்சகம், அஞ்சல் துறை, உயர் கல்வித் துறை, ரயில்வே அமைச்சகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளில் சேருவார்கள்.
*****
(Release ID: 2124471)
PKV/SG
(Release ID: 2124498)
Visitor Counter : 26
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam