பிரதமர் அலுவலகம்
சவுதி அரேபியாவுக்கான பிரதமரின் அரசுமுறைப் பயணம் நிறைவடையும்போதுவெளியிடப்பட்ட கூட்டறிக்கை
Posted On:
23 APR 2025 12:44PM by PIB Chennai
"வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பு; முன்னேற்றத்திற்கான ஒத்துழைப்பு"
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான திரு இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுதின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி ஏப்ரல் 22, 2025 அன்று சவுதி அரேபியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.
சவுதி அரேபிய அரசுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும். ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்கவும், இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு ஒத்துழைப்புக் கவுன்சிலின் முதல் கூட்டத்திற்கு இணைந்து தலைமை தாங்கவும் 2023 செப்டம்பரில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் இந்தியாவுக்கு வருகை புரிந்ததைத் தொடர்ந்து பிரதமரின் இந்தப் பயணம் நடைபெற்றுள்ளது.
ஜெட்டாவில் உள்ள அல்-சலாம் அரண்மனையில் பிரதமர் திரு நரேந்திர மோடியைப் பட்டத்து இளவரசரும், பிரதமருமான திரு இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் வரவேற்றார். இந்தியாவும் சவுதி அரேபியாவும் வலுவான உறவையும், நம்பிக்கை மற்றும் நல்லெண்ணத்தால் மக்களுக்கு இடையேயான நெருக்கமான உறவுகளையும் கொண்டுள்ளன. பாதுகாவல், பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், விவசாயம், கலாச்சாரம், சுகாதாரம், கல்வி. மக்களுக்கு இடையிலான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய உத்திசார் ஒத்துழைப்பின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் உறுதியான அடித்தளம் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இரு தரப்பினரும் குறிப்பிட்டுக் காட்டினர். பரஸ்பர ஆர்வமுள்ள தற்போதைய பிராந்திய, சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
உலகக் கண்காட்சி 2030, ஃபிஃபா உலகக் கோப்பை 2034 ஆகியவற்றை நடத்துவதற்கான அனுமதிகளை சவுதி அரேபியா வெற்றிகரமாக பெற்றுள்ளதற்காக சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான திரு முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்-க்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
இந்தியா- சவுதி அரேபியா இடையேயான உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தினர். இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு ஒத்துழைப்புக் கவுன்சிலின் (எஸ்பிசி) இரண்டாவது கூட்டத்திற்கும் இரு தலைவர்களும் இணைந்து தலைமை தாங்கினர். செப்டம்பர் 2023-ல் நடந்த கடைசி கூட்டத்திற்குப் பிறகு பாதுகாப்பு ஒத்துழைப்புக் கவுன்சிலின் முன்னேற்றத்தை இரு தரப்பினரும் மதிப்பாய்வு செய்தனர். அரசியல், பாதுகாப்பு, சமூக மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான குழு மற்றும் அவற்றின் துணைக் குழுக்கள், பொருளாதாரம் மற்றும் முதலீடு பற்றிய குழு மற்றும் பல்வேறு துறைகளில் அவற்றின் கூட்டுப் பணிக் குழுக்களின் பணிகள் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். இந்தப் பின்னணியில், பாதுகாப்பு ஒத்துழைப்பு, சுற்றுலா மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு மீதான அமைச்சர்கள் குழுக்களைச் சேர்ப்பதன் மூலம் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கவுன்சிலை நான்கு அமைச்சர்கள் குழுக்களாக விரிவுபடுத்துவதை இரு நாடுகளும் வரவேற்றன. பல்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான உயர்மட்ட பயணங்கள் இருதரப்பிலும் நம்பிக்கை, பரஸ்பர புரிந்துணர்வை உருவாக்கியதை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். கூட்டத்தின் முடிவில், இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு ஒத்துழைப்புக் கவுன்சிலின் இரண்டாவது கூட்டத்தின் நடவடிக்கைக் குறிப்புகளில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
சவுதி அரேபியாவில் வசிக்கும் சுமார் 27 லட்சம் இந்தியர்களின் நலனுக்காக சவுதி தரப்புக்கு இந்திய தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வலுவான பிணைப்பு, மக்களிடம் உள்ள அளப்பரிய நல்லெண்ணத்தை பிரதிபலிக்கிறது. 2024-ம் ஆண்டில் ஹஜ் யாத்திரையை வெற்றிகரமாக நடத்தியதற்காக சவுதி அரேபியாவுக்கு இந்திய தரப்பு வாழ்த்து தெரிவித்ததுடன், இந்திய ஹஜ், உம்ரா யாத்ரீகர்களுக்கு வசதி செய்வதில் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த ஒருங்கிணைப்புக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சமீப ஆண்டுகளில் இந்தியா மற்றும் சவுதி அரேபிய அரசுக்கு இடையே பொருளாதார உறவுகள், வர்த்தகம், முதலீட்டு உறவுகள் வளர்ந்து வருவதை இருதரப்பும் வரவேற்றன. தொலைநோக்குத் திட்டம் 2030-ன் கீழ் இலக்குகளை எட்டுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்காக சவுதி தரப்புக்கு இந்தியத் தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கும், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை எட்டவும் சவுதி தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பரஸ்பர நலன்கள் கொண்ட துறைகளில் தத்தமது தேசிய இலக்குகளை நிறைவேற்றவும், பகிரப்பட்ட வளத்தை அடையவும் இணைந்து பணியாற்ற இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையே முதலீட்டை ஊக்குவிப்பதற்காக 2024-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட உயர்மட்ட பணிக்குழுவின் கீழ் நடைபெற்ற விவாதங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். எரிசக்தி, பெட்ரோ ரசாயனம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், நிதிசார் தொழில்நுட்பம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு, மருந்துகள், உற்பத்தி, சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்வதற்கான சவுதி அரேபியாவின் முயற்சியை அடிப்படையாகக் கொண்டு, உயர்மட்ட பணிக்குழு பல துறைகளில் புரிதலுக்கு வந்துள்ளது. இது முதலீட்டுப் பாய்ச்சலை விரைவாக ஊக்குவிக்கும். இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவுவதில் ஒத்துழைக்க உயர்மட்ட பணிக்குழுவில் ஏற்பட்ட உடன்பாட்டை அவர்கள் குறிப்பிட்டனர். வரிவிதிப்பு போன்ற துறைகளில் இந்தப் பணிக்குழு அடைந்துள்ள முன்னேற்றம், எதிர்காலத்தில் ஒத்துழைப்பை அதிகரிக்க ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை விரைவில் முடிக்க இரு தரப்பினரும் விருப்பம் தெரிவித்தனர். பொது முதலீட்டு நிதியத்தில் இந்தியப் பிரிவு தொடங்கப்பட்டதற்கு இந்திய தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பரஸ்பர பொருளாதார வளர்ச்சி, கூட்டு முதலீடுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்தியா - சவுதி அரேபியா இடையே வளர்ந்து வரும் பொருளாதார ஒத்துழைப்பை இந்த உயர்மட்ட பணிக்குழுவின் பணிகள் சுட்டிக் காட்டுகின்றன என்று இரு தரப்பினரும் குறிப்பிட்டனர்.
நேரடி மற்றும் மறைமுக முதலீட்டு பங்களிப்பை வலுப்படுத்த இரு தரப்பினரும் உறுதிபூண்டனர். 2023 செப்டம்பரில் புதுதில்லியில் நடைபெற்ற சவுதி-இந்தியா முதலீட்டு மன்றத்தின் முடிவுகளையும், இரு நாடுகளின் பொது, தனியார் துறைகளுக்கு இடையே அது அடைந்த தீவிர ஒத்துழைப்பையும் அவர்கள் பாராட்டினர். சவுதியில் இந்திய நிறுவனங்களின் முதலீட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதை அவர்கள் பாராட்டியதுடன், பரஸ்பர முதலீடுகளை அதிகரிப்பதில் தனியார் துறையின் பங்களிப்பையும் பாராட்டினர். சவுதி அரேபிய முதலீட்டு அமைச்சகம் இடையே இருதரப்பு முதலீட்டை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு கட்டமைப்பை செயல்படுத்துவதை இரு தரப்பினரும் வேண்டும் மதிப்பிட்டனர். பரஸ்பர வளர்ச்சி மற்றும் புத்தாக்கப் படைப்புகளுக்கு பங்களிக்கும் வகையில் புத்தொழில் சூழலில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
எரிசக்தித் துறையில், உலகளாவிய எண்ணெய் சந்தைகளின் நிலைத்தன்மையை மேம்படுத்தவும், உலகளாவிய எரிசக்தி சந்தை இயக்கவியலை சமநிலைப்படுத்தவும் சவுதி அரேபியாவுடன் இணைந்து பணியாற்ற இந்திய தரப்பு ஒப்புக் கொண்டது. உலகச் சந்தைகளில் உள்ள அனைத்து எரிசக்தி ஆதாரங்களுக்கும் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட அதன் உபரி எண்ணெய் விநியோகம், இந்தியாவின் கையிருப்பு திட்டத்தில் ஒத்துழைப்பு, உற்பத்தி மற்றும் சிறப்பு தொழில்கள் உள்ளிட்ட சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறையில் கூட்டுத் திட்டங்கள், ஹைட்ரோகார்பன்கள், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றின் புதுமையான பயன்பாடுகள், இரு நாடுகளுக்கும் இடையே கூட்டு ஆய்வை முடிப்பது உட்பட எரிசக்தித் துறையில் பல்வேறு பிரிவுகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர்கள் ஒப்புக் கொண்டனர். கிரிட் ஆட்டோமேஷன், கிரிட் இணைப்பு, மின் கட்டமைப்பின் பாதுகாப்பு, விரிதிறன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள், எரிசக்தி சேமிப்பு தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் நிபுணத்துவத்தை பரிமாறிக் கொள்ளுதல், திட்டங்களை செயல்படுத்துவதில் இரு தரப்பு நிறுவனங்களின் பங்களிப்பை மேம்படுத்துதல் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தேவையை ஊக்குவித்தல், ஹைட்ரஜன் போக்குவரத்து, மின் சேமிப்பு தொழில்நுட்பங்களை உருவாக்குதல், சிறந்த நடைமுறைகளை செயல்படுத்த நிபுணத்துவம், அனுபவங்களை பரிமாறிக் கொள்வது உள்ளிட்ட பசுமை / தூய்மையான ஹைட்ரஜன் துறையில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். எரிசக்தித் துறையுடன் தொடர்புடைய விநியோகச் சங்கிலிகள் மற்றும் திட்டங்களை உருவாக்குதல், நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை செயல்படுத்துதல், எரிசக்தி திறன் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் கட்டடங்கள், தொழில்துறை, போக்குவரத்துத் துறைகளில் எரிசக்தி பயன்பாட்டை ஆய்வு செய்தல் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் மேலும் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
பருவநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை, பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு மாநாடு மற்றும் பாரீஸ் ஒப்பந்தம் ஆகியவற்றின் கொள்கைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை இருதரப்பும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டன. மேலும், மூல ஆதார வளஙங்களை விட கார்பன் உமிழ்வை மையமாகக் கொண்டு பருவநிலை ஒப்பந்தங்களை உருவாக்கி அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இருதரப்பும் மீண்டும் உறுதிப்படுத்தின. "சவுதி அரேபிய பசுமை முன்முயற்சி" மற்றும் "மத்திய கிழக்கு பசுமை முன்முயற்சி" ஆகியவற்றை சவுதி தொடங்கியதற்கு இந்திய தரப்பும் பாராட்டு தெரிவித்ததுடன், பருவநிலை மாற்றத் துறையில் சவுதி அரேபியா மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு தனது ஆதரவையும் தெரிவித்தது. கரியமில வாயு வெளியேற்றத்தை நிர்வகிப்பதற்கும், பருவநிலை மாற்ற நோக்கங்களை அடைவதற்கும் ஒரு கருவியாக சுழற்சி கார்பன் பொருளாதாரத்தைப் பயன்படுத்தும் கொள்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் சுழற்சி கார்பன் பொருளாதாரத்தின் பயன்பாடுகளை மேம்படுத்த கூட்டு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். சர்வதேச சூரியசக்தி கூட்டணி, ஒரே சூரியன்-ஒரு உலகம்-ஒரே மின் தொகுப்பு, பேரிடர் நெகிழ்திறன் உள்கட்டமைப்பின் கூட்டணி, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம், உலகளாவிய பசுமை கடன் முன்முயற்சி போன்ற முன்னோடி முன்முயற்சிகள் மூலம் உலகளாவிய பருவநிலை நடவடிக்கைகளில் இந்தியாவின் பங்களிப்பை சவுதி அரேபியா பாராட்டியது.
சமீபத்திய ஆண்டுகளில் இருதரப்பு வர்த்தகத்தில் நிலையான வளர்ச்சி குறித்து இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர், சவுதி அரேபியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக ஒத்துழைப்பு நாடாக இந்தியா உள்ளது; சவுதி அரேபியா 2023-2024-ம் ஆண்டில் இந்தியாவின் ஐந்தாவது பெரிய வர்த்தக ஒத்துழைப்பு நாடாக உள்ளது. இருதரப்பு வர்த்தகத்தை பன்முகப்படுத்துவதற்கான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக, வர்த்தக தூதுக்குழுக்களின் வருகைகளை அதிகரிப்பது, வர்த்தக - முதலீட்டு நிகழ்வுகளை நடத்துவதன் முக்கியத்துவம் ஆகியவை குறித்து இரு தரப்பினரும் ஆலோசனை நடத்தினர். இந்தியா-ஜிசிசி சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான தங்களது விருப்பத்தை இருதரப்பும் மீண்டும் வலியுறுத்தின.
பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கிய தூணாக உள்ள பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்துவதை இரு தரப்பினரும் பாராட்டியதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்புக் கவுன்சிலின் கீழ் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான அமைச்சர்கள் குழு உருவாக்கப்பட்டதையும் வரவேற்றனர். இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக முதலாவது தரைப்படை பயிற்சியான சாடா தான்சீக், இரண்டு சுற்று கடற்படைப் பயிற்சிகள், பல்வேறு உயர்மட்ட பயணங்கள், பயிற்சிப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முதல் கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளின் வளர்ச்சி குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர். 2024 செப்டம்பரில் ரியாத்தில் நடைபெற்ற பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கூட்டுக் குழுவின் 6-வது கூட்டத்தின் முடிவுகளை அவர்கள் வரவேற்றனர். பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.
பாதுகாப்புத் துறைகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒத்துழைப்பை குறிப்பிட்ட இரு தரப்பினரும், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு இந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். சைபர் பாதுகாப்பு, கடல்சார் எல்லைப் பாதுகாப்பு, நாடுகடந்த குற்றங்களை எதிர்த்துப் போராடுதல், போதைப் பொருள் கடத்தல் தடுப்பு ஆகிய துறைகளில் இருதரப்புக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அவர்கள் வலியுறுத்தினர்.
2025 ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி பொதுமக்களின் உயிரைப் பறித்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரு தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்த இரு தரப்பினரும், இது மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்பதையும் எடுத்துரைத்தனர். எந்தக் காரணத்திற்காகவும் பயங்கரவாதச் செயலை நியாயப்படுத்த முடியாது என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டனர். எந்தவொரு குறிப்பிட்ட இனம், மதம் அல்லது கலாச்சாரத்துடன் பயங்கரவாதத்தை இணைக்கும் எந்த முயற்சியையும் அவர்கள் நிராகரித்தனர். பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதைத் தடுப்பதில் இருதரப்புக்கும் இடையேயான சிறந்த ஒத்துழைப்பை அவர்கள் வரவேற்றனர். எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர்கள், மற்ற நாடுகளுக்கு எதிராகப் பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவதை அனைத்து நாடுகளும் நிராகரிக்க வேண்டும் என்றும், பயங்கரவாதம் இருக்கும் இடங்களில் பயங்கரவாதத்தின் கட்டமைப்புகளை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களை விரைந்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். மற்ற நாடுகளுக்கு எதிராக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவதற்கு ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கிடைப்பதை தடுக்க வேண்டியதன் அவசியத்தை இருதரப்பும் வலியுறுத்தின.
சுகாதாரத் துறையில் தற்போதைய ஒத்துழைப்பு, எதிர்கால சுகாதார அபாயங்கள், சுகாதார சவால்களை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் குறித்து இரு தரப்பினரும் ஆலோசனை நடத்தினர். இந்தச் சூழலில், இரு நாடுகளுக்கும் இடையே சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதை அவர்கள் வரவேற்றனர். 2024 நவம்பரில் ஜெட்டாவில் நுண்ணுயிர் எதிர்ப்பு குறித்த அமைச்சர்கள் நிலையிலான நான்காவது மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக சவுதி அரேபிய அரசுக்கு இந்திய தரப்பு பாராட்டு தெரிவித்தது. சவுதி அரேபியாவில் இந்திய மருந்துகளை விரைவாகப் பதிவு செய்தல், விலை நிர்ணயம் செய்தல் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் மேற்கொண்டுள்ள முன்முயற்சிகளை இந்தியத் தரப்பு வரவேற்றது. சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் மற்றும் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இடையே, மருத்துவப் பொருட்கள் ஒழுங்குமுறை துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிப்பதையும் இரு தரப்பும் வரவேற்றன.
செயற்கை நுண்ணறிவு, இணைய பாதுகாப்பு, குறைகடத்திகள் போன்ற புதிய மற்றும் வளர்ந்து வரும் துறைகள் உட்பட தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இருதரப்பும் சுட்டிக் காட்டின. டிஜிட்டல் ஆளுகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த இரு தரப்பினரும், இந்தத் துறையில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த ஒப்புக்கொண்டனர். ஒழுங்குமுறை மற்றும் டிஜிட்டல் துறைகளில் ஒத்துழைப்புக்காக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், சவுதி அரேபியாவின் தகவல் தொடர்பு, விண்வெளி - தொழில்நுட்ப ஆணையம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.
இந்தப் பயணத்தின் போது கையெழுத்தான விண்வெளி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், செலுத்து வாகனங்கள், விண்கலங்கள், தரை அமைப்புகள் ஆகியவற்றை பயன்படுத்துவது உட்பட விண்வெளித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது போன்றவற்றில் இணைந்து செயல்பட வழிவகுக்கும் என்பதை இருதரப்பும் குறிப்பிட்டன. விண்வெளி தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள்; ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு; கல்வி ஈடுபாடு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
பாரம்பரியம், திரைப்படம், இலக்கியம், கலை போன்ற முக்கிய துறைகளில் தீவிர ஈடுபாடு மூலம் சவுதி அரேபிய அரசுக்கும், இந்திய அரசுக்கும் இடையே கலாச்சார ஒத்துழைப்பு வளர்ந்து வருவதை இருதரப்பும் குறிப்பிட்டன. பாதுகாப்பு ஒத்துழைப்புக் கவுன்சிலின் கீழ் சுற்றுலா மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான அமைச்சரவைக் குழுவை உருவாக்குவது, இந்த ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.
திறன் மேம்பாடு, நிலையான சுற்றுலா என்ற இலக்கில் சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையேயும் மக்களுக்கு இடையேயும் வலுவான உறவுகளின் ஆதரவுடன் ஊடகம், பொழுதுபோக்கு, விளையாட்டு ஆகிய துறைகளில் பல்வேறு வாய்ப்புகள் விரிவடைந்திருப்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர்.
விவசாயம், உர வர்த்தகம் உள்ளிட்ட உணவுப் பாதுகாப்பு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நீண்டகால ஒத்துழைப்புக்கு இரு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். விநியோகத்தைப் பாதுகாப்பதற்கான நீண்டகால ஒப்பந்தங்கள், பரஸ்பர முதலீடுகள், இந்தத் துறையில் நீண்டகால உத்திசார் ஒத்துழைப்பை உருவாக்கும் கூட்டுத் திட்டங்கள் ஆகியவற்றைப் பின்பற்றவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையே கல்வி, அறிவியல் ஒத்துழைப்பில் வளர்ந்து வரும் வேகத்தை இரு தரப்பினரும் பாராட்டினர். புதிய கண்டுபிடிப்புகள், திறன் மேம்பாடு மற்றும் நீடித்த வளர்ச்சி ஆகியவற்றை வளர்ப்பதில் அதன் உத்தி சார்ந்த முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டினர். முன்னணி இந்தியப் பல்கலைக்கழகங்கள் சவுதி அரேபியாவில் மையங்களைத் தொடங்குவதற்கான வாய்ப்புகளை சவுதி தரப்பு வரவேற்றது. தொழிலாளர் மற்றும் மனித வளங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் மதிப்பையும், ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை அடையாளம் காண்பதன் முக்கியத்துவத்தையும் இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான திரு முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் 2023 செப்டம்பரில் இந்தியாவுக்கு மேற்கொண்ட அரசுமுறைப் பயணத்தின்போது, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் கொள்கைகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்ற நாடுகளுடன் கையெழுத்தானதை இரு தரப்பினரும் நினைவுகூர்ந்தனர். சரக்குகள் மற்றும் சேவைகள் செல்வதை அதிகரிக்கவும், பங்குதாரர்களிடையே வர்த்தகத்தை அதிகரிக்கவும், தரவு இணைப்பு மற்றும் மின்சார கட்டமைப்புத் தொடர்பை மேம்படுத்தவும் ரயில்வே மற்றும் துறைமுக இணைப்புகளை உள்ளடக்கிய உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இது தொடர்பாக, 2023 அக்டோபரில் கையெழுத்திடப்பட்ட மின்சார இணைப்புகள், தூய்மையான / பசுமை ஹைட்ரஜன் மற்றும் விநியோகச் சங்கிலிகள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இரு தரப்பினரும் வரவேற்றனர். இரு நாடுகளுக்கும் இடையேயான கப்பல் வழித்தடங்கள் அதிகரித்திருப்பது குறித்தும் இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர்.
உலகப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதற்கான முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில், ஜி20, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். ரியாத் உச்சி மாநாடு 2020-ல் ஜி 20 தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட கடன் சேவை முன்முயற்சிக்கு அப்பால் கடன் தொடர்பான பொதுவான கட்டமைப்பிற்குள் தங்களுக்கு இடையே தற்போதுள்ள ஒத்துழைப்பை அவர்கள் வரவேற்றனர். தகுதி வாய்ந்த நாடுகளின் கடன்களை தீர்க்க அதிகாரபூர்வ கடன் வழங்குநர்களுக்கும் (வளரும் நாடுகளுக்கு கடன் வழங்குநர்கள்) மற்றும் தனியார் துறையினருக்கும் இடையே ஒருங்கிணைப்புக்கான முக்கிய மற்றும் மிக விரிவான தளமாக பொது கட்டமைப்பை அமல்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர்கள் வலியுறுத்தினர்.
ஏமன் நெருக்கடிக்கு விரிவான அரசியல் தீர்வை எட்டுவதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச மற்றும் பிராந்திய முயற்சிகளுக்கு இரு தரப்பினரும் தங்கள் முழு ஆதரவை உறுதிப்படுத்தினர். ஏமன் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இடையே பேச்சுவார்த்தையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட சவுதியின் பல்வேறு முன்முயற்சிகளையும், ஏமனின் அனைத்து பகுதிகளுக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும், சவுதி அரேபியா அரசின் பங்களிப்பை இந்திய தரப்பு பாராட்டியது. ஏமனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் இந்தியாவின் முயற்சியை சவுதி தரப்பும் பாராட்டியது. கடல் சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டிற்கு ஏற்ப, நீர்வழிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
இந்தப் பயணத்தின் போது கீழ்க்கண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன:
• அமைதி நோக்கங்களுக்காக விண்வெளி நடவடிக்கைகள் குறித்து இந்தியாவின் விண்வெளித் துறை மற்றும் சவுதி விண்வெளி முகமை இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
• இந்திய அரசின் சுகாதாரம் - குடும்பநல அமைச்சகம் மற்றும் சவுதி அரேபிய முடியாட்சியின் சுகாதார அமைச்சகம் இடையே சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
• வெளிநாட்டு தகவல் தொடர்பு குறித்து இந்திய அஞ்சல் துறை மற்றும் சவுதி தபால் கழகம் இடையே இருதரப்பு ஒப்பந்தம்.
• இந்தியாவின் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை (நாடா) மற்றும் சவுதி அரேபிய ஊக்கமருந்து தடுப்பு கமிட்டி இடையே ஊக்கமருந்து எதிர்ப்பு மற்றும் தடுப்பு துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
அடுத்த பாதுகாப்பு ஒத்துழைப்புக் கவுன்சிலின் அடுத்த கூட்டத்தை பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட தேதியில் நடத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. இரு நாடுகளும் தத்தமது நாடுகளில் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்களுடன் முன்னேறிச் செல்லும் நிலையில், பல்வேறு துறைகளில் தகவல் தொடர்பு, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பைத் தொடரவும் முடிவு செய்தன.
இந்தப் பயணத்தின் முடிவில், பிரதமர் திரு. நரேந்திர மோடி, தமக்கும், தம்முடன் வந்துள்ள குழுவினருக்கும் அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் உபசரிப்புக்காக பட்டத்து இளவரசரும், சவுதி பிரதமருமான முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்துக்கு தமது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். சவுதி அரேபியாவின் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு தமது நல்வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார். தமது பங்கிற்கு, சவுதி இளவரசர், பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் இந்திய மக்களுக்கு மேலும் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
***
(Release ID: 2123722)
TS/PLM/RR/KR
(Release ID: 2123780)
Visitor Counter : 22
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Nepali
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam