பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

17-வது குடிமைப் பணிகள் தினம் 2025-ஐ முன்னிட்டுப் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2025 ஏப்ரல் 21 அன்று குடிமைப் பணி அதிகாரிகளிடையே உரையாற்றுகிறார்

இந்த நிகழ்ச்சியின்போது, பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்களுக்கான பிரதமரின் விருதுகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்குகிறார்

குடிமைப் பணிகள் தினம் என்பது இந்தியா முழுவதும் உள்ள குடிமைப் பணி ஊழியர்கள், மக்கள் நலனுக்காகத் தங்களை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்ளவும், பொது சேவையிலும் அவர்களின் பணியிலும் சிறந்து விளங்குவதற்கான உறுதிப்பாட்டைப் புதுப்பிக்கவும் ஒரு நாளாகக் கொண்டாடப்படுகிறது

Posted On: 20 APR 2025 12:39PM by PIB Chennai

17-வது குடிமைப் பணிகள் தினமான நாளை (2025 ஏப்ரல் 21) பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டின் குடிமைப் பணி அதிகாரிகளிடையே உரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சியில், தேர்ந்தெடுக்கப்பட்ட  முன்னுரிமைத் திட்டங்களையும் புதுமை செயல்பாடுகளையும்  திறம்பட செயல்படுத்தியதற்காக வழங்கப்படும்  பிரதமரின் விருதுகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்குகிறார். அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைத் திட்டங்கள், புதிய செயல்பாடுகளை அமல்படுத்துவதில் வெற்றிக் கதைகள் அடங்கிய முழுமையான வளர்ச்சி, புதுமைப் படைப்புகள் குறித்த மின்னணு புத்தகங்களையும் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிடவுள்ளார். விருது வழங்கும் முன் விருது பெறுபவர்கள் செயல்படுத்திய திட்டங்கள் குறித்த விளக்கக் காட்சி திரையிடப்படும். தேசிய குடிமைப் பணிகள் தின நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி 7-வது முறையாக உரையாற்றவுள்ளார்.

குடிமைப் பணிகள் தினம் என்பது நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மக்களின் நலனுக்காக தங்களை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்ளவும், பொது சேவையிலும் அவர்களின் பணியிலும் சிறந்து விளங்குவதற்கான உறுதிப்பாட்டை புதுப்பிக்கவும் ஒரு தருணமாகும். 1947-ம் ஆண்டில் தில்லி மெட்காஃப் ஹவுஸில் சர்தார் வல்லபாய் படேல், நிர்வாக சேவை அதிகாரிகளின் தகுதிகாண் பருவத்தில் உரையாற்றிய நாளை நினைவுகூரும் வகையில் இந்த தினத்தைக் கொண்டாட இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. குடிமைப் பணிகள் தினத்தை முன்னிட்டு, புதுதில்லியில் உள்ள விக்யான் பவனில் ஒரு நாள் குடிமைப் பணி மாநாட்டை அரசு ஏற்பாடு செய்துள்ளது.

சாதாரண மக்களின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், பல்வேறு அரசு அமைப்புகள் மேற்கொண்ட புதுமையான பணிகளை அங்கீகரிப்பதற்காக பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கியதற்கான பிரதமரின் விருதுகள் வழங்கும் திட்டம் நிறுவப்பட்டுள்ளது. பிரதமரின் விருதுகள் திட்டம் 2024-க்காக, 2025 குடிமைப் பணிகள் தினத்தன்று வழங்கப்படவுள்ள விருதுகளுக்கு பின்வரும் முன்னுரிமை திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:

() வகை 1 - மாவட்டங்களின் முழுமையான வளர்ச்சி

() வகை 2- முன்னேற்றத்தை எட்டும் வட்டாரங்கள  திட்டம்

 () வகை 3 - புதுமை.

விரிவான மதிப்பீட்டிற்குப் பிறகு 1588 பரிந்துரைகளிலிருந்து 14 பேர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 பிரதமரின் விருதுகளில் கீழ்க்கண்டவை அடங்கும்:

(i) கோப்பை

(ii) பாராட்டுப் பத்திரம்

(iii) விருது பெற்ற மாவட்டம் / அமைப்புக்கு ஊக்கத்தொகையாக 20 லட்சம். இந்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்த அல்லது பொது நலத்துறையின் எந்தவொரு பகுதியிலும் உள்ள வள இடைவெளிகளை நிரப்ப பயன்படுத்தப்படும்.

 விருது வழங்கும் விழாவைத் தொடர்ந்து, அமைச்சரவை செயலாளர் டாக்டர் டி.வி.சோமநாதன் தலைமையில் "குடிமைப் பணிகளில் சீர்திருத்தங்கள் - சவால்கள், வாய்ப்புகள்" என்ற முழுமையான விவாத அமர்வு நடைபெறும். நகர்ப்புற போக்குவரத்தை வலுப்படுத்துதல், ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம், ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் மூலம் சுகாதாரமான இந்தியாவை ஊக்குவித்தல், ஊட்டச்சத்து இயக்கம் மூலம் பெண்கள், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை ஊக்குவித்தல், முன்னேற்றத்தை விரும்பும் வட்டாரங்கள் திட்டம் குறித்த நான்கு அமர்வுகள் ஆகியவை இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நடத்தப்படும்.

வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள், மின்திறை அமைச்சர் திரு மனோகர் லால், நகர்ப்புற போக்குவரத்தை வலுப்படுத்துவது குறித்த அமர்வுக்கு தலைமை வகிப்பார். மத்திய சுகாதாரம், குடும்ப நலம், ரசாயனம், உரங்கள் துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் குறித்த அமர்வுக்குத் தலைமை வகிப்பார். ஊட்டச்சத்து இயக்கம் மூலம் பெண்கள், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை மேம்படுத்துவது குறித்த அமர்வுக்கு மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி தலைமை வகிப்பார். நித்தி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி திரு. பி.வி.ஆர். சுப்பிரமணியம் முன்னேற்றத்தை விரும்பும் வட்டாரங்கள் திட்டம் குறித்த அமர்வுக்குத் தலைமை வகிப்பார்.

ஒருநாள் முழுவதும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள், மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள், மாநில அரசுகளின் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், மத்திய பயிற்சி நிறுவனங்களின் தலைவர்கள், ஆணையர்கள், மத்திய சேவை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

*****

 

(Release ID: 2123011)

PLM/SG

 


(Release ID: 2123017) Visitor Counter : 59