பிரதமர் அலுவலகம்
இலங்கை அதிபருடன் இணைந்து, கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்த கருத்துகள்
Posted On:
05 APR 2025 1:51PM by PIB Chennai
இலங்கை அதிபர் திசாநாயகா அவர்களே,
இரு நாடுகளின் பிரதிநிதிகளே,
ஊடக நண்பர்களே,
வணக்கம்!
இன்று அதிபர் திசநாயகாவால் 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷண' விருது வழங்கப்பட்டிருப்பது எனக்கு மிகவும் பெருமை அளிப்பதாகும். இந்த விருது என்னை மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களையும் கவுரவப்படுத்துகிறது. இது இந்திய - இலங்கை மக்களுக்கு இடையேயான வரலாற்று உறவுகள், ஆழமான நட்புறவுக்கு செலுத்தும் மரியாதையாகும்.
இந்த கௌரவத்திற்காக இலங்கை அதிபர், இலங்கை அரசு, இலங்கை மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
பிரதமர் என்ற முறையில் இலங்கைக்கு நான் மேற்கொள்ளும் நான்காவது பயணம் இதுவாகும். 2019-ம் ஆண்டில் எனது முந்தைய வருகை மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. அந்த நேரத்தில் இலங்கை எழுச்சி பெற்று வலுவாக உயரும் என்பது எனது உறுதியான நம்பிக்கையாக இருந்தது.
இலங்கை மக்களின் தைரியத்தையும் பொறுமையையும் நான் பாராட்டுகிறேன். இன்று, இலங்கை மீண்டும் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையான நட்பு அண்டை நாடு என்ற முறையில் தனது கடமைகளை நிறைவேற்றியதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. 2019-ம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலாக இருந்தாலும், கொவிட் தொற்றுநோயாக இருந்தாலும் அல்லது சமீபத்திய பொருளாதார நெருக்கடியாக இருந்தாலும், ஒவ்வொரு சிரமத்தின் போதும் இலங்கை மக்களுடன் நாங்கள் உறுதியாக நின்றோம்.
தமிழின் மாபெரும் தெய்வப் புலவர் திருவள்ளுவரின் வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன. அவர் சொன்னார்:
"செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு" என்று..
அதாவது, சவால்கள், எதிரிகளை எதிர்கொள்வது ஆகியவற்றில், ஒரு உண்மையான நண்பரது நட்பின் கேடயத்தை விட வலுவான உத்தரவாதம் எதுவும் இல்லை.
நண்பர்களே,
திசநாயகா அதிபராக பதவியேற்ற பின்னர் தமது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு இந்தியாவைத் தேர்ந்தெடுத்தார். இது நமது சிறப்பு உறவுகளின் ஆழத்தின் அடையாளமாகும்.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை, தொலைநோக்கு 'மகாசாகர்' ஆகிய இரண்டிலும் இலங்கைக்கு சிறப்பான இடம் உண்டு. அதிபர் திசநாயகா அவர்கள் இந்தியாவுக்கு பயணம் செய்ததன் பின்னர் கடந்த நான்கு மாதங்களில் நமது ஒத்துழைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையம் இலங்கையின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும். திருகோணமலையை எரிசக்தி மையமாக வளர்ச்சி அடையச் செய்வதற்கும் குழாய் இணைப்பை நிர்மாணிப்பதற்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான மின் கட்டமைப்புக்கிடையிலான இணைப்பு உடன்படிக்கையானது இலங்கைக்கு மின்சாரத்தை வழங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்.
இலங்கையில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் 5,000 சூரிய மேற்கூரை அமைப்பு இன்று தொடங்கி வைக்கப்படுவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இலங்கையின் தனித்துவமான டிஜிட்டல் அடையாள திட்டத்திற்கும் இந்தியா ஆதரவை வழங்கும்.
நண்பர்களே,
'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்ற தொலைநோக்குப் பார்வையை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. நட்பு நாடுகளின் முன்னுரிமைகளையும் நாங்கள் மதிக்கிறோம்.
கடந்த 6 மாதங்களில் மட்டும், 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான கடன்களை நாங்கள் மானியங்களாக மாற்றியுள்ளோம். எமது இருதரப்பு 'கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம்' இலங்கை மக்களுக்கு உடனடி உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்கும். இன்று வட்டி விகிதங்களையும் குறைக்க முடிவு செய்துள்ளோம். இன்றும் கூட இலங்கை மக்களுடன் இந்தியா நிற்கிறது என்பதை இது குறிக்கிறது.
கிழக்கு மாகாணங்களின் சமூக - பொருளாதார வளர்ச்சிக்காக சுமார் 2.4 பில்லியன் இலங்கை ரூபாய் ஆதரவுத் தொகுப்பு வழங்கப்படும். விவசாயிகளின் நலனுக்காக இலங்கையின் மிகப்பெரிய கிடங்கை இன்று திறந்து வைத்தோம்.
நாளை 'மஹோ-ஓமந்தாய்' ரயில் பாதையை தொடங்கி வைப்பதுடன், 'மஹோ – அனுராதபுரம்' பிரிவில் சமிக்ஞை முறைக்கு அடிக்கல் நாட்டவுள்ளோம். காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்படும்.
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்தினருக்காக 10,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்படும். 700 இலங்கை நபர்களுக்குப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. அவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதித்துறையுடன் தொடர்புடைய நபர்கள், தொழில் முயற்சியாளர்கள், ஊடகவியலாளர்கள், இளம் தலைவர்கள் அடங்குவர்.
நண்பர்களே,
நாங்கள் பகிரப்பட்ட பாதுகாப்பு நலன்களைக் கொண்டுள்ளோம் என்று நம்புகிறோம். இரு நாடுகளின் பாதுகாப்பு ஒன்றோடொன்று தொடர்புடையது, ஒன்றைச் சார்ந்தது.
இந்தியாவின் நலன்கள் குறித்த அவரது உணர்திறனுக்காக அதிபர் திசநாயகாவுக்கு நான் நன்றி கூறுகிறேன். பாதுகாப்பு ஒத்துழைப்புத் துறையில் செய்யப்பட்ட முக்கிய ஒப்பந்தங்களை நாங்கள் வரவேற்கிறோம். கொழும்பு பாதுகாப்பு மாநாடு, இந்தியப் பெருங்கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றில் இணைந்து பணியாற்றவும் நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம்.
நண்பர்களே,
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பல நூற்றாண்டுகள் பழமையான ஆன்மீக உறவுகள் உள்ளன.
எனது சொந்த மாநிலமான குஜராத்தின் ஆரவல்லி பகுதியில் 1960-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட புத்தரின் புனித நினைவுச்சின்னங்கள் கண்காட்சிக்காக இலங்கைக்கு அனுப்பப்படுகின்றன என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலய புனரமைப்பு பணிகளுக்கு இந்தியா உதவி செய்யும். அனுராதபுரம் மகாபோதி ஆலய வளாகத்தில் புனித நகரம், நுவரெலியாவில் உள்ள சீதா எலியா விகாரை நிர்மாணிப்பதற்கும் இந்தியா ஆதரவளிக்கும்.
நண்பர்களே,
மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தோம். இதில் மனிதாபிமான அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என்பதை நாம் கூறினேன். மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினேன்.
இலங்கையில் புனரமைப்பு, நல்லிணக்கம் குறித்தும் பேசினோம். அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை குறித்து அதிபர் திசநாயகா என்னைப் பாராட்டினார். இலங்கை அரசு, தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் என்றும் இலங்கை அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கும் அதன் வாக்குறுதியை நிறைவேற்றும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
நண்பர்களே,
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ணத்தை அடிப்படையாகக் கொண்டவை. எமது மக்களின் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாம் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்.
அதிபர் திசநாயகா வழங்கிய அன்பான வரவேற்புக்காக மீண்டும் ஒரு முறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரும் காலங்களில் நமது ஒத்துழைப்பைப் புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்வோம் என்று நான் நம்புகிறேன்.
மிக்க நன்றி!
***
(Release ID: 2119187)
PLM/RJ
(Release ID: 2119279)
Visitor Counter : 25
Read this release in:
Odia
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada