பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிலி அதிபருடனான கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதமர் வெளியிட்ட அறிக்கையின் தமிழாக்கம்

Posted On: 01 APR 2025 8:23PM by PIB Chennai

மேதகு அதிபர் போரிக் அவர்களே,

 

இரு நாடுகளின் பிரதிநிதிகளே,

 

ஊடக நண்பர்களே,

 

வணக்கம்!

அதிபர் போரிக் இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். இந்தியாவுடனான அவரது வலுவான நட்புறவு மற்றும் நமது உறவுகளை வலுப்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பு உண்மையிலேயே வியக்கத்தக்கது. இதற்காக, நான் அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரையும், அவரது மதிப்புமிக்க குழுவினரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

 

நண்பர்களே,

லத்தீன் அமெரிக்காவில், சிலி, இந்தியாவின் மதிப்புமிக்க நண்பராகவும், பங்குதாரர் நாடாகவும் உள்ளது. இன்றைய கலந்துரையாடல்களில், வரும் தசாப்தத்தில் நமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த பல புதிய முன்முயற்சிகளை அடையாளம் கண்டோம்.

 

பரஸ்பர வர்த்தகம் மற்றும் முதலீட்டின் விரிவாக்கத்தை நாங்கள் வரவேற்கிறோம், மேலும் ஒத்துழைப்புக்கான பயன்படுத்தப்படாத வாய்ப்புகள் உள்ளன என்பதையும் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். பரஸ்பரம் பயனளிக்கும் விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் குறித்த விவாதங்களைத் தொடங்குமாறு இன்று எங்கள் குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

முக்கிய கனிமங்கள் துறையில் கூட்டாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். நெகிழ்திறன் கொண்ட விநியோகம் மற்றும் மதிப்புச் சங்கிலிகளை நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வேளாண் துறையில், எங்களது பரஸ்பர வலிமையை அதிகரித்து, உணவுப் பாதுகாப்பை மேம்படுத்த இணைந்து செயல்படுவோம்.

டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, ரயில்வே, விண்வெளி மற்றும் பல துறைகளில் சிலியுடன் தனது நேர்மறையான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது.

அண்டார்டிகாவின் நுழைவாயிலாக சிலியைப் பார்க்கிறோம். இந்த முக்கிய பிராந்தியத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான நோக்க ஆவணம் மீதான இன்றைய ஒப்பந்தத்தை நாங்கள் வரவேற்கிறோம்.

சிலியின் சுகாதாரப் பாதுகாப்புக்கு ஆதரவளிப்பதில் இந்தியா நம்பகமான பங்குதாரராக இருந்து வருகிறது. இந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் நாங்கள்  இசைவு தெரிவித்துள்ளோம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக, சிலி மக்கள் யோகாவை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். சிலியில் நவம்பர் 4ஆம் தேதி தேசிய யோகா தினமாக அறிவிக்கப்பட்டிருப்பது உண்மையிலேயே கருத்தூக்கம் அளிப்பதாக இருக்கிறது. சிலியில் ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் நாங்கள் ஆராய்ந்தோம். பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு அதிகரித்து வருவது நமது ஆழமான பரஸ்பர நம்பிக்கையின் அடையாளமாகும். இந்தத் துறையில், ஒவ்வொருவரின் தேவைகளுக்கு ஏற்ப பாதுகாப்பு தொழில்துறை உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகளை உருவாக்க நாங்கள் முன்னேறிச் செல்வோம். திட்டமிட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் போன்ற பொதுவான சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளின் முகமைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்க உள்ளோம்.

உலகளவில், அனைத்து பதட்டங்களும் சர்ச்சைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதை இந்தியாவும் சிலியும் ஒப்புக் கொண்டுள்ளன. உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பிற அமைப்புகளில் சீர்திருத்தங்கள் அவசியம் என்பதை நாங்கள் ஒருமித்த கருத்துடன் வலியுறுத்துகிறோம். உலக அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு நாங்கள் தொடர்ந்து பங்களிப்போம்.

நண்பர்களே,

இந்தியாவும் சிலியும் உலக வரைபடத்தின் வெவ்வேறு முனைகளில் இருந்தாலும், பரந்த பெருங்கடல்களால் பிரிக்கப்பட்டிருந்தாலும், நாங்கள்  இன்னும் சில தனித்துவமான இயற்கை ஒற்றுமைகளைப் பகிர்ந்து கொள்கிறோம்.

இந்தியாவின் இமயமலை மற்றும் சிலியின் ஆண்டிஸ் மலைத்தொடர் ஆகியவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இரு நாடுகளின் வாழ்க்கை முறையை வடிவமைத்துள்ளன. பசிபிக் பெருங்கடலின் அலைகள் சிலியின் கரையைத் தொடும் அதே ஆற்றலுடன் இந்தியப் பெருங்கடலின் அலைகள் இந்தியாவில் பாய்கின்றன. இரு நாடுகளும் இயற்கையால் இணைக்கப்பட்டவை மட்டுமல்ல, நமது கலாச்சாரங்களும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருந்து, இந்த பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டுள்ளன.

சிலி நாட்டின் சிறந்த கவிஞரும், நோபல் பரிசு பெற்றவருமான "கேப்ரியேலா மிஸ்ட்ரல்", ரவீந்திரநாத் தாகூர் மற்றும் அரவிந்த கோஷ் ஆகியோரின் கருத்துக்களில் உத்வேகம் பெற்றார். அதேபோல், இந்தியாவிலும் சிலி இலக்கியம் பாராட்டப்பட்டது. இந்திய திரைப்படங்கள், உணவு வகைகள், பாரம்பரிய நடனங்கள் மீது சிலி மக்களிடையே வளர்ந்து வரும் ஆர்வம், நமது கலாச்சார உறவுகளுக்கு சிறந்த உதாரணமாகும்.

இன்று சிலியை தங்கள் தாயகமாகக் கருதும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுமார் 4,000 பேர் நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தின் பாதுகாவலர்களாக உள்ளனர். அக்கறை மற்றும் ஆதரவுக்காக அதிபர் போரிக் மற்றும் அவரது அரசுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார பரிமாற்ற திட்டம் குறித்து இன்று எட்டப்பட்ட ஒருமித்த கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையேயான விசா நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இந்தியா மற்றும் சிலி இடையே மாணவர் பரிமாற்றங்களை அதிகரிக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்.

மேதகு அதிபர் அவர்களே,

உங்களது வருகை நமது உறவுகளுக்கு புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும்  வணங்கியுள்ளது. இந்த ஆற்றல் நமது இருதரப்பு உறவுகளுக்கும், ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் நமது ஒத்துழைப்புக்கும் புதிய உத்வேகத்தையும்பாதையையும் அளிக்கும்.

உங்கள் பயணம் இனிதாக  அமைய வாழ்த்துகிறேன்.

மிகவும் நன்றி!

பொறுப்புத் துறப்பு - இது பிரதமர் வெளியிட்ட கருத்துக்களின் தோராயமான மொழிபெயர்ப்பு. பிரதமரின் கருத்துக்கள் இந்தியில்  வழங்கப்பட்டிருந்தன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2117507

*****

RB/DL


(Release ID: 2117565) Visitor Counter : 20