உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

₹ 88 கோடி மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைன் பறிமுதல் - இம்பால், குவஹாத்தி மண்டலங்களில் சர்வதேச போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது

போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டு

Posted On: 16 MAR 2025 12:02PM by PIB Chennai

போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு கருணை காட்ட மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார். 88 கோடி மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்ததற்காகவும், சர்வதேச போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த 4 பேரைக் கைது செய்ததற்காகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு (என்சிபி) மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதில் சிறந்த செயல்திறனுக்கு இது ஒரு சான்றாகும் என்று கூறியுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

 "போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்குக் கருணை காட்ட மாட்டோம். போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் பயணத்தை விரைவுபடுத்தும் வகையில், ₹ 88 கோடி மதிப்புள்ள மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருள் அடங்கிய பெரிய அளவிலான சரக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் சர்வதேச போதைப்பொருள் கும்பலைச் சேர்ந்த 4 பேர் இம்பால், குவஹாத்தி மண்டலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள்களுக்கு எதிரான சிறந்த அணுகுமுறைக்கும் சிறந்த செயல்திறனுக்கும் இந்த நடவடிக்கை ஒரு சான்றாகும். போதைப்பொருளைத் தடுப்பதற்கான எங்கள் நடவடிக்கை தொடரும். போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலகமான என்சிபி-யின் குழுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்."

 

இவ்வாறு திரு அமித் ஷா கூறியுள்ளார்.

 

செயல்பாடுகளின் விவரம்:

 

முதலாவது நடவடிக்கையாக 13.03.2025 அன்று, தகவலின் அடிப்படையில், என்சிபி குழுவின் இம்பால் மண்டல அதிகாரிகள் லிலாங் பகுதிக்கு அருகே ஒரு லாரியை இடைமறித்து, வாகனத்தை முழுமையாக சோதித்தனர். அதில் இருந்து 102.39 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருள்கறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லாரியில் இருந்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர். குழு உடனடியாக பின்தொடர்தல் நடவடிக்கையை மேற்கொண்டு, லிலாங் பகுதியில் அந்தப் போதைப் பொருளைப் பெற இருந்த நபரையும் கைது செய்தது.

 

மற்றொரு நடவடிக்கையாக, அதே நாளில், உளவுத் தகவலின் அடிப்படையில், என்சிபி-யின் குவஹாத்தி மண்டல அதிகாரிகள் சில்சார் அருகே அசாம்-மிசோரம் எல்லையில் ஒரு சொகுசு காரை இடைமறித்து, அதை முழுமையாக ஆய்வு செய்ததில், வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7.48 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருளைப் பறிமுதல் செய்து அதை ஓட்டி வந்தவரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க விசாரணை நடந்து வருகிறது.

----

PLM/DL


(Release ID: 2111594) Visitor Counter : 32