தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
படைப்பாற்றல், ஊடகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் சந்திப்பு, உலகின் ஊடக சூழலை மாற்றியமைக்கிறது; உயர் மதிப்பு உள்ளடக்கத்தை உருவாக்க படைப்பாளர்களுக்கான தளத்தை வேவ்ஸ் வழங்கும்: மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ்
உலகளாவிய ஊடக நிறுவனங்கள், இந்தியாவின் படைப்புத் துறையில் ஈடுபட வேவ்ஸ் உதவும்: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்
Posted On:
13 MAR 2025 7:44PM by PIB Chennai
ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு பெரிய முன்முயற்சியாக, இந்திய அரசு புதுதில்லி, சாணக்கியபுரியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் வேவ்ஸ் 2025 குறித்த உயர்மட்ட அமர்வை இன்று நடத்தியது. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, 2025 மே 1 முதல் 4 வரை மும்பையில் நடைபெறவுள்ள உலக ஆடியோ விஷுவல் & பொழுதுபோக்கு உச்சிமாநாடு (வேவ்ஸ்) 2025 க்கு முன்னதாக சர்வதேச சமூகத்தை ஈடுபடுத்த முயன்றது.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், மகாராஷ்டிர அரசின் தலைமைச் செயலாளர் திருமதி சுஜாதா சவுனிக் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சுமார் 100 தூதர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக, ஊடகம், பொழுதுபோக்கு மற்றும் டிஜிட்டல் தொடர்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கும் மகாராஷ்டிர அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், படைப்பாற்றல், ஊடகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் சந்திப்பு, உலகின் ஊடக சூழலை மாற்றி ஒரு புதிய எல்லையை எட்டுகிறது என்று கூறினார். அனைத்து படைப்பாளிகளாலும் அதிக மதிப்புள்ள உள்ளடக்கத்தை உருவாக்க முடியும் என்றும், இதுவே வேவ்ஸ் 2025 இன் அடிப்படைக் கருத்தாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். “2025 மே 1 முதல் 4 வரை மும்பையில் நடைபெறவுள்ள வேவ்ஸ் 2025 இல் கலந்து கொள்ளுமாறு தொழில்நுட்பம், ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைகளின் நிறுவனங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்”, என்று அவர் தெரிவித்தார். உலக அரங்கில் இந்தியாவின் பல்வேறு முயற்சிகளை விவரித்த அமைச்சர், வேவ்ஸ் 2025 இல் பங்கேற்கவும், உலகளாவிய படைப்பாளர் பொருளாதாரத்தை உயர்த்தவும் அனைத்து பங்குதாரர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
தனது உரையில், மத்திய அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர், "ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கான விவாதங்கள், ஒத்துழைப்பு மற்றும் புதுமைகளை வளர்ப்பதற்கான ஒரு முக்கிய தளமாக வேவ்ஸ் செயல்படும். இந்த நிகழ்வு வாய்ப்புகளை ஆராயவும், சவால்களை எதிர்கொள்ளவும், துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கவும் தொழில்துறை தலைவர்கள், பங்குதாரர்கள் மற்றும் புதுமையாளர்களை ஒன்றிணைக்கும்", என்று குறிப்பிட்டார்.
தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தனது நிறைவுரையில், வேவ்ஸ் உச்சிமாநாடு 2025, கூட்டு முயற்சிகள், இணை தயாரிப்புகள் மற்றும் வணிக விரிவாக்கத்திற்கான வாய்ப்புகளுக்கு வித்திடுகிறது, உலகளாவிய ஊடக நிறுவனங்கள் இந்தியாவின் படைப்புத் துறையுடன் ஈடுபட உதவுகிறது என்று கூறினார். " ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் தொழில்துறைக்கு உகந்த சூழலை உருவாக்குவதில் இந்திய அரசு உறுதியாக உள்ளது, வணிகத்தை எளிதாக்குதல், உள்ளடக்க உள்ளூர்மயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றை ஆதரிக்கிறது" என்று மத்திய இணையமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2111300
***
RB/DL
(Release ID: 2111322)
Visitor Counter : 22
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Nepali
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam