பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 08 JAN 2025 8:10PM by PIB Chennai

பாரத் மாதாவுக்கு ஜே!

பாரத் மாதாவுக்கு ஜே!

பாரத் மாதாவுக்கு ஜே!

ஆந்திரப் பிரதேச ஆளுநர் சையத் அப்துல் நசீர் அவர்களே, இந்த மாநிலத்தின் பிரபலமான முதலமைச்சர், எனது நண்பர் திரு சந்திரபாபு நாயுடு அவர்களே, நடிகரும், அரசியல்வாதியும் துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் அவர்களே, மத்திய அரசில் உள்ள எனது சக ஊழியர்களே, மாநில அரசின் அமைச்சர்களே, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களே, இதர சட்டமன்ற உறுப்பினர்களே, மதிப்பிற்குரிய குடிமக்களே, சகோதர சகோதரிகளே,

முதலில் சிம்ஹாசலம் வராஹ லட்சுமி நரசிம்ம சுவாமியை வணங்குகிறேன்.

நண்பர்களே

உங்கள் ஆசீர்வாதங்களுடன், 60 ஆண்டுகளில் முதல் முறையாக, நாடு மூன்றாவது முறையாக ஒரு அரசைத் தேர்ந்தெடுத்துள்ளது, அரசு அமைக்கப்பட்ட பிறகு, ஆந்திராவுக்கு இது எனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாகும். நீங்கள் எனக்கு அளித்த அற்புதமான வரவேற்பு, மரியாதை, மற்றும் பாதை முழுவதும் மக்கள்  வாழ்த்தியது ஆகியன என்னை உணர்ச்சி மயமாக்கியுள்ளன. இன்று சந்திரபாபு அவர்கள் ஆற்றிய உரையில் அவர் அனைத்து முக்கிய விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். அவரது ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் பின்னால் உள்ள உணர்வை நான் மதிக்கிறேன், மேலும் ஆந்திர மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் நான் உறுதியளிக்கிறேன், நாம் ஒன்றிணைந்து, இந்த இலக்குகளை நிச்சயமாக அடைவோம்.

நண்பர்களே,

நமது ஆந்திரப் பிரதேசம் வாய்ப்புகள் நிறைந்த, ஆற்றல் மற்றும் வளர்ச்சியின் மாநிலமாக உள்ளது. ஆந்திராவின் இந்த வாய்ப்புகள் உணரப்படும்போது, ஆந்திரா வளர்ச்சியடையும். அப்போதுதான் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். எனவே, ஆந்திராவின் வளர்ச்சியே எங்களின் தொலைநோக்குப் பார்வை. ஆந்திர மக்களுக்கு சேவை செய்வது எங்கள் கடமை. 2047- க்குள் மாநிலத்தை கிட்டத்தட்ட 2.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற ஆந்திரா இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்க, சந்திரபாபு அவர்களின் அரசு "ஸ்வர்ணா Andhra@2047" முன்முயற்சியைத் தொடங்கியுள்ளது. மத்தியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் ஆந்திராவுடன் தோளோடு தோள் நின்று மாநிலத்தின் ஒவ்வொரு இலக்கையும் அடைய உழைத்து வருகிறது. அதனால்தான் லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களில் மத்திய அரசு ஆந்திரப் பிரதேசத்திற்கு சிறப்பு முன்னுரிமை அளித்து வருகிறது. இன்று, 2 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு இங்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சியை புதிய உச்சத்திற்கு எடுத்துச் செல்லும். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக ஆந்திரப் பிரதேசத்தையும், ஒட்டுமொத்த நாட்டையும் நான் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

ஆந்திரப் பிரதேசம் அதன் புதுமையான தன்மை காரணமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கிய மையமாக உள்ளது. இப்போது, புதிய எதிர்கால தொழில்நுட்பங்களின் மையமாக ஆந்திரா மாற வேண்டிய நேரம் இது. தற்போது உருவாக்கப்பட்டு வரும் தொழில்நுட்பங்களில் ஆரம்பத்தில் இருந்தே நாம் முன்னிலை வகிக்க வேண்டும். இன்று, பசுமை ஹைட்ரஜனின் பயன்பாடு வளர்ந்து வரும் துறையாகும்.  2023-ம் ஆண்டில், நாடு தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷனை அறிமுகப்படுத்தியது. 2030- க்குள் 5 மில்லியன் மெட்ரிக் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதே எங்கள் இலக்கு! ஆரம்பக் கட்டத்தில், இரண்டு பசுமை ஹைட்ரஜன் மையங்கள் நிறுவப்படும், அவற்றில் ஒன்று நமது விசாகப்பட்டினம். எதிர்காலத்தில், இதுபோன்ற பெரிய அளவிலான பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி வசதியைக் கொண்ட உலகின் சில நகரங்களில் விசாகப்பட்டினமும் ஒன்றாக இருக்கும். இந்த பசுமை ஹைட்ரஜன் மையம் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும். கூடுதலாக, ஆந்திராவில் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பும் உருவாகும்.

நண்பர்களே,

இன்று, நக்கப்பள்ளியில் மருந்துப் பூங்கா அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்துள்ளது. நாட்டில் இதுபோன்ற பூங்கா அமைக்கப்பட்டு வரும் மூன்று மாநிலங்களில் ஆந்திராவும் ஒன்று. இந்தப் பூங்காவானது உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிக்கான சிறந்த உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கும். இது முதலீட்டாளர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும். இது இங்குள்ள மருந்து நிறுவனங்களுக்கு பயனளிக்கும்.

நண்பர்களே,

நகரமயமாக்கலை நமது அரசு ஒரு வாய்ப்பாகப் பார்க்கிறது. புதுயுக நகரமயமாக்கலுக்கு ஆந்திராவை முன்மாதிரியாக மாற்ற விரும்புகிறோம். இந்தத் தொலைநோக்கை நனவாக்கும் வகையில், கிரிஸ் நகரம் என்றும் அழைக்கப்படும் கிருஷ்ணபட்டினம் தொழில்துறை பகுதிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் சிட்டி, சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இதன் மூலம் ஆந்திராவுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என்பதுடன், லட்சக்கணக்கான தொழில் வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

நண்பர்களே,

ஸ்ரீ சிட்டியுடன் உற்பத்தி மையமாக இருப்பதன் மூலம் ஆந்திரப் பிரதேசம் ஏற்கனவே பயனடைந்து வருகிறது. தொழில் மற்றும் உற்பத்தித் துறைகளில் ஆந்திராவை நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவதே எங்கள் முயற்சியாகும். உற்பத்தியை மேம்படுத்த, எங்கள் அரசு பி.எல்.ஐ போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, இன்று இந்தியா பல்வேறு பொருட்களின் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உள்ளது.

நண்பர்களே,

இன்று, புதிய விசாகப்பட்டினம் நகரில் தெற்கு கடற்கரை ரயில்வே மண்டல தலைமையகத்திற்கும் அடிக்கல் நாட்டப்படுகிறது. இது ஆந்திராவின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. நீண்ட காலமாக, தனி ரயில்வே மண்டலத்திற்கான கோரிக்கை இருந்து வருகிறது, இன்று, இந்தக் கனவு நனவாகிறது.  தெற்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தின் தலைமையகம் நிறுவப்படுவதால் விவசாயம் மற்றும் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் பிராந்தியம் முழுவதும் விரிவடையும். கூடுதலாக, சுற்றுலாத் துறை மற்றும் உள்ளூர் பொருளாதாரமும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளைப் பெறும். இன்று, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இணைப்பு தொடர்பான திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் இங்கு நடைபெற்றுள்ளது. ரயில்வே துறையில், 100% மின்மயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஆந்திராவும் ஒன்றாகும். அமிர்த பாரத் ரயில் நிலையத் திட்டத்தின் கீழ் ஆந்திரப் பிரதேசத்தில் எழுபதுக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆந்திரப் பிரதேச மக்களின் பயணத்தை எளிதாக்குவதற்காக ஏழு வந்தே பாரத் ரயில்களும், அமிர்த பாரத் ரயில்களும் இயக்கப்படுகின்றன.

நண்பர்களே,

சிறந்த இணைப்பு மற்றும் மேம்பட்ட வசதிகளுடன் கூடிய ஆந்திராவின் இந்த உள்கட்டமைப்புப் புரட்சி, மாநிலத்தின் ஒட்டுமொத்த நிலப்பரப்பையும் மாற்றியமைக்கும். இது வாழ்க்கையை எளிதாக்குவதுடன், தொழில் செய்வதையும் எளிதாக்கும். இது 2.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவதற்கான ஆந்திராவின் இலக்குக்கு அடித்தளமாக அமையும்.

நண்பர்களே,

பல நூற்றாண்டுகளாக, விசாகப்பட்டினம் மற்றும் ஆந்திராவின் கடற்கரை இந்தியாவின் வர்த்தகத்தின் நுழைவாயிலாக இருந்து வருகிறது. இன்றும் விசாகப்பட்டினம் அதே அளவிலான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. கடல் தொடர்பான வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நீலப் பொருளாதாரத்தை தீவிரமான முறையில் நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். இதற்காக, விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள நமது சகோதர சகோதரிகளின் வருமானம் மற்றும் வணிகம் அதிகரிப்பதை உறுதி செய்ய  உணர்வுப்பூர்வமாக நாங்கள் பணியாற்றி வருகிறோம். மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டை போன்ற வசதிகளை வழங்கியுள்ளோம். கடலில் பாதுகாப்புக்காக முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

நண்பர்களே,

வளர்ச்சியின் பயன்கள் சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் சென்றடையும் வகையில், நாட்டின் ஒவ்வொரு துறையிலும் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் ஒட்டுமொத்தமான வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதே எங்கள் முயற்சியாகும். இதை அடைவதற்காக, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசானது வளமான மற்றும் நவீனமான ஆந்திரப் பிரதேசத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளது. இன்று தொடங்கி வைக்கப்படும் திட்டங்கள் ஆந்திர மக்களின் வளத்தை உறுதி செய்யும். இந்தத் திட்டங்களுக்காக உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன்.

உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!

***

TS/PKV/KV/KR

 


(Release ID: 2091444) Visitor Counter : 8