பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வேலைவாய்ப்புத் திருவிழாவின்கீழ் மத்திய அரசுத் துறைகள், நிறுவனங்களில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 71,000 -க் கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வழங்கினார்

வேலைவாய்ப்பு திருவிழாக்கள் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் திறன்களை வெளிக்கொண்டு வருகின்றன. புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்: பிரதமர்

இன்று நாட்டில் உள்ள இளைஞர்கள் புதிய நம்பிக்கையுடன் ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெற்றுள்ளனர்: பிரதமர்

புதிய இந்தியாவை கட்டமைக்க நவீன கல்வி முறையின் அவசியத்தை நாடு பல தசாப்தங்களாக உணர்ந்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கையின் மூலம், நாடு தற்போது முன்னேறியுள்ளது: பிரதமர்

இன்று, மத்திய அரசின் கொள்கைகள், முடிவுகள் காரணமாக, கிராமப்புற இந்தியாவிலும் கூட வேலைவாய்ப்பு, சுயவேலைவாய்ப்புக்கான புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. விவசாயத் துறையில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்கள் விரும்பும் பணியைச் செய்வதற்கான வாய்ப்பையும் அவர்கள் பெற்றுள்ளனர்: பிரதமர்

ஒவ்வொரு துறையிலும் பெண்களை தற்சார்புடையவர்களாக உருவாக்குவதே மத்திய அரசின் முயற்சியாகும்: பிரதமர்

Posted On: 23 DEC 2024 12:54PM by PIB Chennai

அரசுத் துறைகள், அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 71,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம்  இன்று வழங்கினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் பிரதமரின் உறுதிப்பாட்டை இந்த வேலைவாய்ப்புத் திருவிழா எடுத்துக் காட்டுவதாக உள்ளது. நாட்டைக் கட்டமைப்பது, சுய அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கு பங்களிப்பதற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும்.

வேலைவாய்ப்புத் திருவிழாவில் உரையாற்றிய பிரதமர் , குவைத் நாட்டிலிருந்து நேற்றிரவு தாயகம் திரும்பியதாகவும், அங்கு இந்திய இளைஞர்கள், தொழில்துறை வல்லுனர்களுடன் விரிவான விவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறினார்.  குவைத் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிறகு, தனது முதல் நிகழ்ச்சியாக நாட்டின் இளைஞர்களுடன் இருப்பது ஒரு இனிமையான தற்செயல் நிகழ்வாகும். "இன்று நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. உங்களது பல ஆண்டு கனவுகள் நனவாகிவிட்டன. பல ஆண்டு கடின உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. இந்த 2024 - ம் ஆண்டு உங்களுக்கு புதிய மகிழ்ச்சியைத் தருகிறது. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பிரதமர் கூறியுள்ளார்.

வேலைவாய்ப்பு திருவிழாக்கள் போன்ற முன்முயற்சிகள் மூலம் நாட்டில் உள்ள இளைஞர்களின் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருவதாகப் பிரதமர் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில், பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் அரசுப் பணிகளை வழங்குவதற்கான ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று 71,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். கடந்த ஒன்றரை ஆண்டுகளில், சுமார் 10 லட்சம் நிரந்தர அரசுப் பணிகள் வழங்கப்பட்டு, குறிப்பிடத்தக்க சாதனை படைக்கப்பட்டுள்ளதாக திரு மோடி எடுத்துக் கூறினார். இதற்கான பணிகள் அனைத்தும் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்படுகின்றன, மேலும் புதிதாக நியமிக்கப்படுபவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடனும், நேர்மையுடன் நாட்டிற்கு சேவை செய்கிறார்கள்.

ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது இளைஞர்களின் கடின உழைப்பு, திறன், தலைமைப் பண்பு ஆகியவற்றைச் சார்ந்துள்ளது என்று பிரதமர் சுட்டிக் காட்டினார். நாட்டின் கொள்கைகள், முடிவுகள், திறமையான இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்துவதால், 2047 - ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற உறுதிபூண்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில், இந்தியாவில் உற்பத்தி செய்வோம், தற்சார்பு இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற பல்வேறு முன்முயற்சிகள் இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்கின்றன என்று அவர் கூறினார்.

இந்தியா தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாகவும், மூன்றாவது பெரிய புத்தொழில் சூழல் சார் அமைப்பு கொண்ட நாடாகவும் உள்ளது என்று திரு மோடி குறிப்பிட்டார். இன்று, இந்திய இளைஞர்கள் புதிய நம்பிக்கையுடன் உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குகிறார்கள். இன்று புத்தொழில் நிறுவனங்களைத் தொடங்கும் இளம் தொழில்முனைவோர் வலுவான சூழல் அமைப்பினால் பயனடைகிறார்கள். அதேபோல், நவீன பயிற்சி வசதிகள், போட்டிகள் நிறைந்திருப்பதால், விளையாட்டு துறையில் வாழ்க்கையைத் தொடரும் இளைஞர்கள் தோல்வியடைய மாட்டோம் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். நாடு பல்வேறு துறைகளில் மாற்றத்தை சந்தித்து வருவதாகவும், மொபைல் சாதன உற்பத்தியில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துவருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இயற்கை விவசாயம், விண்வெளி, பாதுகாப்பு, சுற்றுலா, சுகாதாரம் ஆகியவற்றிலும் இந்தியா முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், புதிய வாய்ப்புகளை உருவாக்கி ஒவ்வொரு துறையிலும் புதிய உச்சங்களை எட்டுவதாகவும் கூறினார்.

நாட்டை  முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், புதிய இந்தியாவை கட்டமைக்கவும், இளம் திறமையாளர்களை உருவாக்குவது மிகவும் முக்கியமானது என்றும், இந்தப் பொறுப்பு கல்வி நிறுவனங்களிடம் உள்ளது என்றும் பிரதமர் கூறினார். தேசிய கல்விக் கொள்கை  மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை வழங்கும் நவீன கல்வி முறையை நோக்கி இந்தியாவை வழிநடத்தி செல்கிறது. ஆனால் தற்போது அடல் சிந்தனை ஆய்வகங்கள், பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் போன்ற முன்முயற்சிகள் மூலம் புதுமைகளுக்கு உத்வேகம்  அளிக்கிறது என்று திரு மோடி கூறினார். "தாய்மொழியில் கற்கவும் தேர்வுகளை  எழுதவும் அனுமதிப்பதன் மூலம், 13 மொழிகளில் கிராமப்புற இளைஞர்கள், விளிம்புநிலையில் உள்ள  சமூகங்களுக்கான மொழி தொடர்பான தடைகளை மத்திய அரசு  நீக்கியுள்ளது. கூடுதலாக, எல்லைப் பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கான இடஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நிரந்தர அரசுப்பணிகளுக்கான சிறப்பு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இன்று, 50,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மத்திய ஆயுதக் காவல் படைகளுக்கு தேர்வு செய்யப்பட்டு, பணி  நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர். இது குறிப்பிடத்தக்க சாதனையாகும் என்று   பிரதமர் மேலும் கூறினார்.

இன்று சவுத்ரி சரண் சிங் அவர்களின் பிறந்த தினம்  கொண்டாடப்படுவது குறித்து பேசிய பிரதமர், இந்த ஆண்டு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிப்பதைத் தாம் பெருமையாக கருதுவதாகத் தெரிவித்தார். "உணவு வழங்கும் விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த தினத்தை விவசாயிகள் தினமாக கொண்டாடுகிறோம் என்று கூறினார். இந்தியாவின் முன்னேற்றம் கிராமப்புறங்களின் வளர்ச்சியைப் பொறுத்தது என்று சவுத்ரி சாஹிப் நம்பிக்கை கொண்டிருந்தார்.  மத்திய அரசின் கொள்கைகள் ஊரகப் பகுதிகளில், குறிப்பாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளையும், சுயவேலை வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன" என்று  பிரதமர் கூறினார்.

உயிரி எரிவாயு  உற்பத்தி ஆலைகளை நிறுவிய கோபார்-தன் திட்டம் போன்ற முன்முயற்சிகள் எரிசக்தியை உற்பத்தி செய்வதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன என்று திரு மோடி குறிப்பிட்டார். வேளாண் சந்தைகளை இணைக்கும் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் புதிய வேலைவாய்ப்புகளை  உருவாக்கியுள்ளதுடன்,  பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு அதிகரிப்பு விவசாயிகளுக்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது.  இதன் காரணமாக சர்க்கரை உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. சுமார் 9,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டதன் மூலம் சந்தை வாய்ப்புகள் மேம்பட்டுள்ளது என்றும், ஊரகப்பகுதிகளில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் பிரதமர் கூறினார். மேலும், ஆயிரக்கணக்கான தானிய சேமிப்பு கிடங்குகளை உருவாக்குவதற்கான பெரிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாகவும், இது குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளையும், சுய வேலை வாய்ப்புகளையும்  உருவாக்கும் என்று  அவர் கூறினார்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் காப்பீட்டுப் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு பீமா சகி காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கியுள்ளதாகவும், இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகவும் பிரதமர் தெரிவித்தார் . பெண்கள் ஆளில்லா விமானங்களை(ட்ரோன் )இயக்குவது, லட்சாதிபதி சகோதரி போன்ற பல்வேறு முயற்சிகள் விவசாயம், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. "இன்று, ஆயிரக்கணக்கான பெண்கள் பணி நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர், அவர்களின் வெற்றி மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும். ஒவ்வொரு துறையிலும் பெண்களைத் தற்சார்புடையவர்களாக மாற்ற மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. 26 வார கால மகப்பேறு விடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது  லட்சக்கணக்கான பெண்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துள்ளது என்று  திரு மோடி மேலும் கூறினார்.

பெண்களின் முன்னேற்றத்தில் இருந்த தடைகளை தூய்மை இந்தியா திட்டம் எவ்வாறு நீக்கியது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், தனி கழிப்பறைகள் இல்லாததால் பல மாணவிகள் பள்ளியை விட்டு பாதியில்  நின்றுவிட வேண்டியிருந்தது. சுகன்யா சம்ரிதி திட்டம், பெண் கல்விக்கு நிதி உதவி அளிப்பதை உறுதி செய்துள்ளது என்று அவர் கூறினார். மேலும், 30 கோடி பெண்களுக்கான ஜன்தன் வங்கி கணக்குகள், அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களின் நேரடி பலன்களை அவர்களது வங்கி கணக்குகளுக்கு வழங்கியுள்ளன. "முத்ரா திட்டத்தின் மூலம், பெண்கள் தற்போது அடமானம் இல்லாத கடன்களைப்  பெற முடியும். பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் பெரும்பாலான வீடுகள் பெண்களின் பெயர்களில்   பதிவு செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து இயக்கம், சுரக்ஷித் மகப்பேறு இயக்கம், ஆயுஷ்மான் பாரத் சுகாதார இயக்கம் போன்ற முன்முயற்சிகள் பெண்களுக்கு சிறந்த சுகாதார சேவையை வழங்குகின்றன" என்று திரு மோடி கூறினார்.

பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் சட்டப்பேரவைகளிலும்,  மக்களவையிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்துள்ளது என்று பிரதமர் திரு மோடி தெரிவித்துள்ளார்.

இன்று  பணி நியமனக் கடிதங்களைப் பெறும் இளைஞர்கள் புதியதாக உருமாற்றம் பெற்றுள்ள அரசு அமைப்புகளில் இணைகின்றனர் என்று பிரதமர்  குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளில், அரசுப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வு, கடின உழைப்பு ஆகியவற்றின் காரணமாக அரசு அலுவலகங்களில்  செயல்திறனானது குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது.

புதிதாகப் பணி நியமனம் பெற்றவர்கள் பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டு , ஆர்வத்துடன் இலக்கை  எட்டியுள்ளனர் என்றும், இந்த நடைமுறையை தங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்கள் பராமரிப்பது முக்கியம் என்றும் பிரதமர் கூறினார். ஒருங்கிணைந்த அரசு ஆன்லைன் பயிற்சிக்கான கர்மயோகி இணைய தளத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு படிப்புகள் கிடைப்பதை எடுத்துரைத்த பிரதமர், இந்த டிஜிட்டல் பயிற்சி தொகுதியை தங்கள் வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளுமாறு ஊக்குவித்தார். "இன்று பணிநியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறி, பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

பின்னணி

வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் வேலைவாய்ப்பு திருவிழா அமைந்துள்ளது. நாட்டை கட்டமைப்பது, சுய அதிகாரமளித்தல் ஆகியவற்றில் இளைஞர்களின் பங்கேற்புக்கு அர்த்தமுள்ள வாய்ப்புகளை இது வழங்கும்.

நாடு முழுவதும் 45 இடங்களில் வேலைவாய்ப்பு திருவிழா நடைபெறுகிறது .மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஊழியர்கள் உள்துறை அமைச்சகம், அஞ்சல் துறை, உயர் கல்வித் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நிதி சேவைகள் துறை உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் / துறைகளில் பணியில் அமர்த்தப்படுகின்றனர்

***

(Release ID: 2087193)

TS/SV/AG/KR

 


(Release ID: 2087257) Visitor Counter : 41