உள்துறை அமைச்சகம்
ஒற்றுமைக்கான ஓட்டம் புதுதில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்
Posted On:
29 OCT 2024 11:54AM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (29.10.2024) புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'ஒற்றுமைக்கான ஓட்டத்தை' கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தேசிய ஒற்றுமை தினத்தின் ஒரு பகுதியாக ஒற்றுமைக்கான ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் மாதம் 31-ம் தேதியன்று கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 31-ம் தேதி தீபாவளிப் பண்டிகை வருவதால், இன்று இந்த ஓட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் திரு மனோகர் லால் கட்டார், திரு மன்சுக் மாண்டவியா, மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய், தில்லி துணைநிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தமது உரையில், மாபெரும் தலைவர் சர்தார் வல்லபாய் படேலின் நினைவாக 2015-ம் ஆண்டில் 'ஒற்றுமைக்கான ஓட்டத்தை' ஏற்பாடு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி முடிவு செய்திருந்தார் என்றும் அப்போதிலிருந்து, ஒட்டுமொத்த நாடும் 'ஒற்றுமைக்கான ஓட்டம்' வாயிலாக, ஒட்டுமொத்த நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் உறுதிமொழி எடுத்து வருவது மட்டுமின்றி, பாரத அன்னையின் சேவைக்கு தன்னை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
2047-ம் ஆண்டுக்குள் முழுமையான வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவோம் என்ற உறுதிமொழியை நாட்டு மக்கள் அனைவர் முன்னிலையிலும் பிரதமர் திரு நரேந்திர மோடி முன்வைத்துள்ளார் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இன்று இந்தியா ஒரு செழிப்பான, வளரும், வலிமையான தேசமாக உலகத்தின் முன் நிற்கிறது என்று திரு அமித் ஷா கூறினார். சுதந்திரத்திற்குப் பிறகு வரலாற்றை நாம் திரும்பிப் பார்த்தால், 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைத்து இன்றைய இந்தியாவை உருவாக்க சர்தார் படேல்தான் காரணம் என்றும் அவர் கூறினார். சர்தார் படேலின் வலுவான உறுதியின் காரணமாகவே இந்தியா ஒன்றுபட்டதாக அவர் தெரிவித்தார்.
சர்தார் பட்டேலின் மகத்தான சிந்தனைகள் நாட்டின் இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக உள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். ஒற்றுமைக்கான ஓட்டத்தின் மூலம் இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தவும், 2047-ம் ஆண்டுக்குள் முழுமையான வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்கவும் நாட்டு மக்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
---
(Release ID 2069106)
TS/PLM/KPG/RR
(Release ID: 2069136)
Visitor Counter : 26