மத்திய அமைச்சரவை தலைமைச் செயலகம்
azadi ka amrit mahotsav

வங்காள விரிகுடாவில் வரவிருக்கும் புயலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தேசிய நெருக்கடி மேலாண்மை குழு ஆலோசனை

Posted On: 21 OCT 2024 5:44PM by PIB Chennai

வங்காள விரிகுடாவில் உருவாகவிருக்கும் புயலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுவின் (என்.சி.எம்.சி) கூட்டத்திற்கு அமைச்சரவை செயலாளர் டாக்டர் டி.வி.சோமநாதன் தலைமை தாங்கினார். 

கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில், உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் தற்போதைய நிலை குறித்து, இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தலைமை இயக்குநர் குழுவினருக்கு விளக்கினார். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அக்டோபர் 22-ம் தேதி காலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 2024 அக்டோபர் 23-ம் தேதி காலை கிழக்கு மத்திய வங்காள விரிகுடாவில் புயலாகவும் தீவிரமடையக்கூடும். அதன்பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 24 காலையில் ஒடிசா-மேற்கு வங்க கடற்கரையில் இருந்து வடமேற்கு வங்காள விரிகுடாவை அடையக்கூடும். தொடர்ந்து வடமேற்கு நோக்கி நகரும் இந்த புயல் 24-ம் தேதி இரவு மற்றும் அக்டோபர் 25 அதிகாலையில் பூரி மற்றும் சாகர் தீவுக்கு இடையில் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரைகளை கடக்க வாய்ப்புள்ளது.

ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் தலைமைச் செயலாளர்கள் சூறாவளி புயலின் எதிர்பார்க்கப்படும் பாதையில் உள்ள மக்களைப் பாதுகாக்க எடுக்கப்பட்டு வரும் ஆயத்த நடவடிக்கைகள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து குழுவிடம் விளக்கினர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், கடலில் இருப்பவர்கள் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறைகளும் முடுக்கிவிடப்பட்டு, நிலைமையை கண்காணித்து வருகின்றன. போதுமான தங்குமிடங்கள், மின்சாரம், மருந்து மற்றும் அவசர சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்படுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) மேற்கு வங்கத்தில் 14 அணிகளையும், ஒடிசாவில் 11 அணிகளையும் நிறுத்துவதற்காக தயார் நிலையில் வைத்துள்ளது. ராணுவம், கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள், கப்பல்கள் மற்றும் விமானங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாரதீப் மற்றும் ஹால்டியா துறைமுகங்களுக்கு வழக்கமான எச்சரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் அனுப்பப்படுகின்றன. உடனடியாக சீரமைக்க மின்துறை அமைச்சகம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை மூலம் அவசர குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மத்திய முகமைகள் மற்றும் ஒடிசா மற்றும் மேற்குவங்க அரசின் தயார்நிலை நடவடிக்கைகளை ஆய்வு செய்த அமைச்சரவை செயலாளர், தேவையான அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில அரசுகள் மற்றும் மத்திய முகமைகள் எடுக்கலாம் என்று அறிவுறுத்தினார். உயிர் இழப்பை பூஜ்ஜியமாக வைத்திருப்பது மற்றும் சொத்து மற்றும் உள்கட்டமைப்புக்கு ஏற்படும் சேதத்தை குறைப்பதே இதன் நோக்கமாக இருக்க வேண்டும். சேதங்கள் ஏற்பட்டால், அத்தியாவசிய சேவைகளை குறுகிய காலத்தில் மீட்டெடுக்க வேண்டும்.

கடலில் உள்ள மீனவர்கள் திரும்ப அழைக்கப்படுவதையும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளிலிருந்து மக்கள் சரியான நேரத்தில் வெளியேற்றப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சரவை செயலாளர் கூறினார். அனைத்து மத்திய ஏஜென்சிகளும் முழு ஆயத்த நிலையில் இருப்பதாகவும், உதவிக்கு தயாராக இருப்பதாகவும் ஒடிசா மற்றும் மேற்குவங்க அரசுக்கு அவர் உறுதியளித்தார். ஆந்திரா, சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களும் கனமழை காரணமாக எந்தவொரு சூழ்நிலையையும் கையாள தயாராக இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.  வெள்ளப் பாதிப்புகளை தவிர்க்க, பாதிக்கப்படக்கூடிய பகுதியில் உள்ள அணை தளங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவது அளவீடு செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சரவை செயலாளர் வலியுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின்  தலைமைச் செயலாளர்கள், மத்திய உள்துறை செயலாளர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு,  மீன்வளம், மின்சாரம், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகங்களின் செயலாளர்கள்,  ஆந்திரப் பிரதேச கூடுதல் தலைமைச் செயலாளர், தொலைத் தொடர்புத் துறை உறுப்பினர் (தொழில்நுட்பம்), ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் தலைவர் (சிஐஎஸ்சி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர், தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குநர், இந்திய கடலோரக் காவல்படை தலைமை இயக்குநர் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

****

MM/KPG/DL


(Release ID: 2066820) Visitor Counter : 38