பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிங்கப்பூரில் ஏஇஎம் நிறுவனத்தை பிரதமர் பார்வையிட்டார்

Posted On: 05 SEP 2024 10:22AM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடியும், பிரதமர் திரு. லாரன்ஸ் வோங்கும், செமிகண்டக்டர் மற்றும் மின்னணுவியல் துறையில் முன்னணி சிங்கப்பூர் நிறுவனமான ஏஇஎம்-ஐ பார்வையிட்டனர். உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தியில் ஏஇஎம்-ன் பங்களிப்பு, அதன் செயல்பாடுகள் மற்றும் இந்தியாவுக்கான திட்டங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது. சிங்கப்பூர் செமிகண்டக்டர் தொழில்துறை அமைப்பு, சிங்கப்பூரில் செமிகண்டக்டர் வளர்ச்சி மற்றும் இந்தியாவுடன் ஒத்துழைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தது. இந்தத் துறையைச் சேர்ந்த பல்வேறு  சிங்கப்பூர் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 2024 செப்டம்பர் 11-13 தேதிகளில் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறவுள்ள செமிகான் இந்தியா கண்காட்சியில் பங்கேற்குமாறு சிங்கப்பூர் செமிகண்டக்டர் நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.

இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி சூழலை மேம்படுத்துவதற்கான நமது முயற்சிகள் மற்றும் இந்தத் துறையில் சிங்கப்பூரின் வலிமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தரப்பினரும் முடிவு செய்துள்ளனர். இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் நிலையிலான 2-வது வட்டமேஜை கூட்டத்தில், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான அடிப்படையாக செமிகண்டக்டர்களில் கவனம் செலுத்தும் மேம்பட்ட உற்பத்தியை சேர்க்க இரு தரப்பும் ஒப்புக் கொண்டன. இந்தியா-சிங்கப்பூர் செமிகண்டக்டர் சூழல் கூட்டாண்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் இரு தரப்பினரும் இறுதி செய்துள்ளனர்.

சிங்கப்பூரில் பயிற்சி பெற்று வரும், ஒடிசாவின் உலக திறன் மையத்தைச் சேர்ந்த இந்திய பயிற்சியாளர்கள், சிஐஐ-தொழில்துறை சிங்கப்பூர் இந்தியா ஆயத்த அறிவாற்றல் திட்டத்தின் கீழ், இந்தியாவுக்கு வருகை தந்த சிங்கப்பூர் பயிற்சியாளர்கள் மற்றும் ஏஇஎம்-ல் பணிபுரியும் இந்திய பொறியாளர்களுடன் இரு பிரதமர்களும் கலந்துரையாடினர்.

இரு பிரதமர்களின் இந்தப் பயணம், இந்தத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இரு தரப்பினரும் கொண்டுள்ள உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது. இந்தப் பயணத்தில் தம்முடன் இணைந்ததற்காக, பிரதமர் திரு. வோங்கிற்கு, பிரதமர் திரு மோடி பாராட்டு தெரிவித்தார்.

*****
 

IR/KV

 

 



(Release ID: 2052074) Visitor Counter : 47